முடிதும்பை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முடிதும்பை
Leucas aspera at Gandipet, Hyderabad, AP W2 IMG 9054.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: மெய்யிருவித்திலையி
வரிசை: Lamiales
குடும்பம்: Lamiaceae
பேரினம்: Leucas
இனம்: L. aspera
இருசொற் பெயரீடு
Leucas aspera
இந்தியாவின் ஐதராபாத்தில் தும்பைப் பூ.

முடிதும்பை என்றழைக்கப்படும் தும்பை (லூகசு அசுபெரா -Leucas aspera) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இச்செடி லேபியேடேசியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. 50 செ. மீ. வரை உயரமாக வளரும் இதன் இலையும் பூவும் மருத்துவக் குணமுடையன. தும்பைச் செடி மற்ற செடிகளுடன் தோட்டங்களிலும் வயல், வரப்புகளிலும், கிராமப்புறங்களின் சாலையின் இருமருங்குகளிலும், புதர்களின் ஓரங்களிலும் வளரும் தன்மை உடையது. இந்தச் செடி 20 செ.மீட்டர் உயரத்தில் 10 செ.மீ. அகலம் வரை தரையோடு குத்துச்செடி போல வளரும். தும்பை நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஓர் அரிய மூலிகைத் தாவரமாகும். இது ஒரு அடி முதல் மூன்று அடி உயரம் வரை வளரும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது.

இயல்பு

தும்பைச் செடி அடித் தண்டிலிருந்தே, மூன்று நான்கு கிளைகளுடன் வளரும் தன்மை கொண்டது. கிளைகளில் பல சிறு கிளைகள் தோன்றி, அந்தக் கிளைகளில் பல இலைகள் நீண்ட காம்புகளுடன் அடர்த்தியாகப் பற்றி இருக்கும். ஒவ்வொரு சிறு கிளையின் நுனியிலும் சிறிய பந்து போன்று ஒரு பிரிவு வளர்ந்து அதன் துளைகளிலிருந்து மொக்கு வெளிவந்து அழகான வெண்மைநிற பூக்கள் பூக்கும் விதம் பார்வைக்கு மிக்க அழகாக தோற்றமளிக்கும். இதன் இலை அடி அகன்றும், நுனி குறுகியும் காணப்படும்.சுமார் 4 செ.மீ. நீளத்தில் ஒரு செ.மீ அகலத்திலிருக்கும். இலை சற்று கனமாக இருக்கும். இலையை கசக்கி முகர்ந்து பார்த்தால் ஒரு காரமான வாடை இருக்கும்.[1]

உவமை

தும்பைப்பூ போன்ற வெளுத்த வேட்டி

இலக்கியங்களில் தும்பை

கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே

தும்பை மாலை இளமுலை நுண்பூண் ஆகம் விலங்கு வோளே.[2]

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்,[3]

வேங்கை மார்பின் இரங்க வைகலும்

ஆடுகொளக் குழைந்த தும்பைப், புலவர் பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே![4]

தொல்காப்பியத்தில் தும்பை ஒரு திணையாகக் கொள்ளப்பட்டு தும்பைப் போருக்கு என்று தனி இலக்கணம் கூறுவர் . இதனடிப்படையில் இராவணன் போருக்குப் புறப்பட்ட போது தும்பை மாலை அணிந்ததாகக் கம்பர் காட்டுகிறார்.

மற்றும் வான்படை வானவர் மார்பிடை

இற்று இலாதன எண்ணும் இலாதன பற்றினான்; கவசம் படர் மார்பிடைச சுற்றினான்; நெடுந் தும்பையும் சூடினான்.[5]

இவனுக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்ட இராமன் துளசி மாலை அணிந்து, அதனுடன் தும்பைப்பூ மாலையும் சூட்டிக்கொண்டான் என்கிறார் கம்பர்.

அளவு அரு செஞ்சுடர்ப் பட்டம் ஆர்த்தனன்;

இளவரிக் கவட்டு இலை ஆரொடு ஏர் பெறத் துளவொடு தும்பையும் சுழியச் சூடினான்.[6]

இவ்வாறு சங்க இலக்கியங்களிலும் தும்பைப்பூச் சூடிப் போருக்குச்சென்ற மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன .

வகைகள்

  • பெருந்தும்பை
  • சிறுதும்பை
  • கருந்தும்பை
  • மலைத்தும்பை
  • கவிழ்தும்பை
  • காசித் தும்பை

என்று பல வகைகளுண்டு.

பயன்கள்

சித்த மருத்துவத்தில் நச்சு முறிவில் தும்பை தனித்த ஒரு இடம் பெறுகிறது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதனை துரோன புஸ்பி என்று அழைப்பர்.

மேற்கோள்கள்

  1. http://www.thangampalani.com/2011/03/do-you-know-about-thumbai-sedi.html
  2. அம்மூவனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது. ஐங்குறுநூறு 127
  3. ஔவையார், பாடப்பட்டோன் அதியமான் மகன் பொகுட்டெழினி, பாடாண் – திணை. புறநானூறு 96
  4. பாடியவர் – ஐயூர் மூலங்கிழார், பாடப்பட்டோன் – கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி.புறநானூறு -21.
  5. கம்பராமாயணம், யுத்தகாண்டம்;பாடல்; 1054
  6. கம்பராமாயணம், யுத்தகாண்டம் பாடல்-.1072

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=முடிதும்பை&oldid=11315" இருந்து மீள்விக்கப்பட்டது