பித்திகம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பித்திகம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Lamiales
குடும்பம்: Oleaceae
பேரினம்: Jasminum
இனம்: J. angustifolium
இருசொற் பெயரீடு
Jasminum angustifolium
Willd.

பித்திகம் (காட்டு மல்லிகை) என்னும் மலரைப் பித்திகை என்றும் வழங்கினர். அந்தப் பூவின் வெரிந் (முதுகு) பகுதி சிவப்பாக இருக்கும். இந்தப் பூ மாலையில் மலரும். ஆடவர் பித்திக மாலையைச் சூடிக்கொள்வர்.

பித்திகம் மலர் பி.எல்.சாமி போன்ற அறியர்கள் காட்டும் படம்.

சங்கப்பாடல்கள் இந்தச் செய்திகளை நமக்குத் தருகின்றன.

  • பித்திகைப்பூ அரும்பு சிவப்பாக இருக்கும்.[1]
  • மகளிரின் கடைக்கண் மழையில் நனைந்த பித்திக மலரின் முதுகுப் பகுதி சிவந்திருப்பது போல இருக்குமாம்.[2][3][4]
  • வானம் மூட்டமாக இருந்த காலத்தில் பித்திகப்பூ மணம் விசுவதைக் கொண்டு விளக்கேற்றும் தேரம் வந்துவிட்டது எனத் தெரிந்துகொண்டார்களாம்.[5]
  • குறிஞ்சிநிலத் தலைவி தன் ஆயத்தாருடன் மலர்களைக் குவித்து விளையாடிய 99 மலர்களில் பித்திகமும் ஒன்று.[6]
  • பித்திக மலர் பசுமையான காம்பு கொண்டது. மலர் குவிந்து விளையாடிய தலைவியைக் கண்ட தலைவன் மார்பில் முத்துமாலையோடு பித்திக மாலையையும் அணிந்திருந்தான்.[7]
  • ஆண்மகன் மார்பில் வைரமாலையோடு குளுமையான பித்திகைப்பூ மாலேயையும் அணிவது வழக்கம்.[8]
  • பித்திக மலரைப் பறித்து பனையின் பச்சைமடலால் பின்னிய பூக்கூடையில் சேகரிப்பர்.[9]
  • உழத்தியர் குருக்கத்திப் பூவையும், பித்திகைப் பூவையும் கலந்து கட்டி அகன்ற வாயுள்ள வட்டி ஏனத்தில் வைத்துக்கொண்டு தெருவில் கூவி விற்பனை செய்வர்.[10]
  • இந்திர விழாவில் மாதவி பாடிய கானல்வரிப் பாடலைக் கேட்டுக் கோவலன் பிரிந்தான். நகர நம்பியரோடு திரிந்துகொண்டிருந்தான். இல்லம் திரும்பிய மாதவி கோவனுக்குக் கடிதம் எழுதித் தன் தோழி வயந்தமாலையிடம் கொடுத்து அனுப்பினாள். அந்தக் கடிதத்தை அவள் பித்திகை அரும்பை எழுத்தாணியாகக் கொண்டு தன் மேனியில் பூசியிருந்த செம்பஞ்சுக் குழம்பு மையால் எழுதி அனுப்பினாளாம்.[11]

இவற்றையும் காண்க

சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு

  1. பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே - குறுந்தொகை 94
  2. மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் செவ் வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண் - குறுந்தொகை 222
  3. மலிபெயல் கலித்த மாரிப் பித்திகத்துக் கொயலரு நிலைய பெயலேர் மணமுகைச் செவ் வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண் - அகநானூறு 42
  4. மாரிப் பித்துகத்து ஈரிதழ் புரையும் அங்கலுழ் கொண்ட செங்கடை மழைக்கண் - அகநானூறு 295
  5. செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுது அறிந்து - நெடுநல்வாடை 40
  6. குறிஞ்சிப்பாட்டு 89
  7. பைங்கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி அம்தொடை ஒருகாழ் வளைஇ – குறிஞ்சிப்பாட்டு 117
  8. மாரிப் பித்திகத்து ஈரிதழ் அலரி நறுங்காழ் ஆரமொடு மிடைந்த மார்பு - நற்றிணை 314
  9. மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து பெரும்பெயல் விடியல் விரித்துவிட்டு அன்ன நறுந் தண்ணியள் - குறுந்தொகை 168
  10. துய்தலை இதழ பைங் குருக்கத்தியொடு பித்திகை விரவுமலர் கொள்ளீரோ என வண்டு சூழ் வட்டியள் திரிதரும் தண்டலை உழவர் தனி மடமகளே - நற்றிணை 97
  11. சிலப்பதிகாரம் 8-55
"https://tamilar.wiki/index.php?title=பித்திகம்&oldid=11405" இருந்து மீள்விக்கப்பட்டது