அல்லி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அல்லி இனம்
Nymphaeaceae
Weiße Seerose 8 Juni 2003.JPG
அல்லி
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு: மக்னோலியோப்சிடா
வரிசை: அல்லிப் பேரினம்Nymphaeales
குடும்பம்: அல்லிகள் Nymphaeaceae
பேரினம்: அல்லி
இனம்: Nymphaea'
இருசொற் பெயரீடு
'
Gaertn.

அல்லி அல்லது ஆம்பல் என்பது (சங்க காலத்தில் ஆம்பல்) நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடியை குளம், பொய்கை, நீர்ச்சுனைகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.

சங்கப்பாடல்கள் தரும் செய்தி

அல்லி மலர்

அல்லி வையையில் மிதந்து வந்தது. பரிபாடல் 12-78

அல்லியின் நிறம் சிவப்பு
மெல்லியல் மகளிரின் காலடி தாமரை போல் மென்மையானதாம். கல்லில் நடந்தால் அது கறுத்துப் போகுமாம். அந்தக் கறுப்பு அரக்கில் தோய்த்து எடுத்த நிறத்தில் காணப்படும் அல்லி போன்றதாம். [1]
மகளிர் கை
மகளிர் உள்ளங்கை தாமரைத் தாது உதிர்ந்து மலர்ந்த அல்லி போன்றதாம். [2]
கைம்பெண் சோறு போட்டுத் தின்னும் இலை
ஆம்பல்-அல்லி என்பது வெள்ளாம்பல். சிறிய வெள்ளாம்பல் இதழையும், இலையையும் அல்லி என்பர். கணவனோடு வாழ்ந்தபோது ஆம்பல் அவன் தைத்துத் தந்த தழையாடைக்குப் பயன்பட்டது. அவன் மாய்ந்தபின் புல்லின்மேல் சோறுவைத்து உண்ணும் உண்கலமாக மாக ஆம்பல்-அல்லி மாறிவிட்டது. [3] [4] [5]
அல்லி காட்சி
பகன்றை மேல் படர்ந்திருந்த பாகல், கூதளம் ஆகிய மலர்கள் அல்லியைத் தொட்டுக்கொண்டு தொங்கினவாம். [6]
ஒப்பனைப் பொருள்
நெற்றியில் திலகம், நெஞ்சில் அல்லிச்சாந்து, தோளில் தொய்யில், காலடியில் பஞ்சிக் குழம்பு, ஆகியவற்றைத் தலைவன் தலைவிக்கு இட்டு நலம் பாராட்டுவான். [7]
அல்லிய மாலை
அல்லிப்பூ மாலை தொடுக்க உதவும். [8]
  • மணிமேகலை ‘அல்லியங்கோதை’ என்று அன்மொழித் தொகையாகக் குறிப்பிடப்படுகிறாள். [9] [10]
  • மணிமேகலை மேல் காதல் கொண்ட உதயகுமரன் ‘அல்லியந்தாரோன்’ எனக் குறிப்பிடப்படுகிறான். [11]
அல்லிக்கூத்து
அல்லிப்பாவை என்பது தோல்பொம்மை விளையாட்டு. [12]
அல்லி, தாமரை, திருமகள்
திருமால் மார்பில் மறுவாக இருப்பது அல்லி (திரு, தாமரையாள்) [13]
திருமால் ஆடல்
கண்ணபிரான் ஆடல்களில் ஒன்று அல்லியம் [14]

திருவாசகத்தில் அல்லி

சிவபெருமான் பெருமைகளைப் பாடி, 'பூ அல்லி கொய்யாமோ' என்று மாணிக்கவாசகர் 20 பாடல்கள் பாடியுள்ளார். [15]

பேயாழ்வார் பிறப்பு

திருவல்லிக்கேணி (திரு அல்லிக் கேணி) என்னும் பெயர் கொண்ட ஊர் இன்று சென்னையில் உள்ளது. இங்கிருந்த கிணற்றில் மலர்ந்திருந்த அல்லி மலரில் முதலாழ்வார் மூவருள் ஒருவராகிய பேயாழ்வார் தோன்றினார் என்பர்.
இவர் தோன்றிய அல்லி மலரைச் செங்கழுநீர் என்றும், செவ்வல்லி என்றும் குறிப்பிடுகின்றனர்.
அல்லிப் பூவைக் குறிப்பிடும் இந்தப் பாடல் கழுநீர்ப் பூவை வேறு பூ எனக் காட்டுகிறது.

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

  1. மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை அல்லிசேர் ஆய்இதழ் அரக்கு தோய்ந்தவை போலக் கல் உறின் அவ்வடி கறுக்கும் அல்லவோ - கலித்தொகை 13-12,
  2. தாமரைத் தாதின் அல்லி அவிர் இதழ் புரையும் மாசு இல் அம் கை - அகநானூறு 16-2,
  3. புறநானூறு 248-5,
  4. அல்லி உணவின் மனைவி - புறநானூறு 250-5,
  5. சிறுவெள் ஆம்பல் அல்லி ஊண்ணும் கழிகல மகடூஉ - புறநானூறு 280-13
  6. கருவிளை முரணிய தண்புதல் பகன்றை பெருவளம் மலர அல்லி தீண்டி .. பாகல் கூதளம் மூதிலைக் கொடி நிரைத் தூங்க - அகநானூறு 255-11,
  7. பல்லிதழ் எதிர்மலர் கிள்ளி வேறுபட நல்லிள வனமுலை அல்லியோடு அப்பி - அகநானூறு 389-5,
  8. கலித்தொகை 91-1
  9. மணிமேகலை 10-78,
  10. மணிமேகலை 21-102
  11. மணிமேகலை 21-28,
  12. வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற அல்லிப்பாவை ஆடு வனப்பு ஏய்ப்பக் காம இருவர் ஆடல் - புறம் 33-17
  13. அல்லியம் திருமறு மார்ப - பரிபாடல் 1-38,
  14. சிலப்பதிகாரம் 6-48
  15. திருவாசகம் - திருப்பூவல்லி
"https://tamilar.wiki/index.php?title=அல்லி&oldid=11078" இருந்து மீள்விக்கப்பட்டது