அழகர் கோவில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திருமாலிருஞ்சோலை (அ) அழகர் கோவில்
ஆள்கூறுகள்:10°04′29″N 78°12′47″E / 10.0748°N 78.2131°E / 10.0748; 78.2131
பெயர்
வேறு பெயர்(கள்):சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாலிருங்குன்றம்
பெயர்:அழகர் பெருமாள்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ் நாடு
மாவட்டம்:மதுரை
அமைவு:தமிழ் நாடு, இந்தியா
ஏற்றம்:285 m (935 அடி)
கோயில் தகவல்கள்
சிறப்பு திருவிழாக்கள்:ஆடி மாத தேரோட்டம்
உற்சவர்:கள்ளழகர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழர் கட்டிடக்கலை

அழகர் கோயில் (English: Alagar Koil) திருமாலிருஞ்சோலை என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற (பாடப்பெற்ற) அழகர் பெருமாள் கோயில் மதுரை மாநகரின் மையத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலை ஆகிய திருமால் கோவிலாகும். 108 வைணவ திவ்யதேச திருப்பதிகளுள் அதிகமாகப் பாடல்கள் (129) பெற்ற மூன்றாம் திவ்யதேசம் ஆகும்.

தமிழ் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் போற்றும் இத்திருத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாலிருங்குன்றம் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. நங்கள் குன்றம் என்று அழைக்கப்படும் வட்ட வடிவ கருவறையில் (கேரள கோவில்கள் போன்ற அமைப்பு) இறைவனாகிய பெருமாள் ஸ்ரீபரமசுவாமி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். உற்சவ மூர்த்தி அழகர் பெருமாள், அல்லது சுந்தரராஜ பெருமாள் எனப்படுகிறார்.

பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆகிய பல மன்னர்கள் இத்திருக்கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளனர்.

மலைக்குன்றுகளில் வாழும் சமணர்கள் (ஜைனர்கள்) மதுரையைச் சுற்றிலும் இருந்த யானைமலை, கீழவளவு, அரிட்டாபட்டி, பெருமாள் மலை (நாகமலை புதுக்கோட்டை அருகில் முத்துப்பட்டி) எனப் பல இடங்களில் வாழ்ந்தது போன்று அழகர் மலையில் இருந்து 3 மைல் தொலைவிலும் சிறிய அளவில் வாழ்ந்துள்ளனர்.[1]

கோயில் கலைச் சிறப்புகள்

முழுமை அடையாத இராஜ கோபுரம்
  • மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது.
  • ஆர்யன் மண்டபத்தில் கொடுங்கைகள் மற்றும் இசைத் தூண்கள் உள்ளன. இசைத் தூணின் உச்சியிலுள்ள சிங்கத்தின் வாயில், சுழலும் நிலையில் ஆனால் வெளியே எடுக்க முடியாதபடி உள்ளது.
  • கல்யாண சுந்தரவல்லி தாயாரின் சன்னதி கலைநயத்துடன் உள்ளது.
  • திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம், இலக்குமி வராகமூர்த்தி ஆகிய பெயர்களைக் கொண்ட கற்றூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிறந்த படைப்புகளாகும்.
  • வசந்த மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் அழகிய ஓவியங்கள் உள்ளன.
  • கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பசாமி சந்நிதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது.
  • இராயகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது. சிதைந்த நிலையிலும் இக்கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் சிற்பிகளின் உன்னத உளி வேலைப்பாட்டினை வெளிப்படுத்துகிறது.
  • கோவிலைச் சுற்றி உள்கோட்டை மற்றும் வெளிக்கோட்டை எனப்படும் இரணியன் கோட்டை, அழகாபுரிக் கோட்டை அமைந்துள்ளது.

அமைவிடம்

மதுரை மாநகரிலிருந்து 21 கி.மீ. தொலைவில் அழகர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

அருகில் அமைந்த கோயில்கள்

மதுரை சித்திரைத் திருவிழா

புராண அடிப்படையில் கள்ளழகர், மீனாட்சியம்மனின் உடன்பிறந்தவர். சித்திரைத் திருவிழாவின்பொழுது, கள்ளழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு மதுரை நகருக்கு வருகிறார்.[2] கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (வளரி), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர்.[3] அழகர் கள்ளர் வேடத்தில் வருவதால், அழகர் என்ற பெயர் கள்ளழகர் என மாறியது. இதனால் கள்ளர் இனத்திற்கு தலைவராகவும் குல தெய்வமாகவும் அழகர் இருக்கிறார்.[4] வைகை ஆறு வரை வந்து பின் வண்டியூர் சென்று, அழகர்மலை திரும்புகிறார். திருமலை மன்னர் காலத்திற்கு முன் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா சித்திரை மாதத்தில் முழு நிலவன்று மதுரையை அடுத்துள்ள தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர், கள்ளழகரை மதுரை வைகையாற்றில் எழுந்தருளச் செய்து, மதுரை சித்திரைத் திருவிழாவாக நடத்தியவர்.

சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் மதுரைக்கு வரும் நிகழ்வு எதிர் சேவை[5] என்று கொண்டாடப்படுகிறது. முக்கிய விழாவாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

கள்ளழகருக்கு செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபினர்கள் தொன்று தொட்டு சீர்பாத சேவை செய்து வருகின்றனர்.[6][7]

தேரோட்டம்

ஆண்டுதோறும் ஆடி மாதம் பௌர்ணமி அன்று நடைபெறும் அழகர் கோயில் தேரோட்டம் புகழ் பெற்றது.

தலவரலாறு

சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும்போது எதிர்பட்ட துர்வாசர் முனிவரை கவனியாது இருக்கக்கண்டு கோபமுற்ற துர்வாசர் சுதபமுனிவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார். சாபம் நீங்க சுதபமுனிவர் வைகை ஆற்றில் மண்டூக வடிவில் நீண்டகாலம் தவமியற்றி திருமாலால் சாபம் நீங்கப்பெற்றார். முனிவர் கண்டு வணங்கிய அவ்வுருவே சுந்தரபாஹூ என்று வடமொழியிலும் அழகர், மாலிருஞ்சோலைநம்பி என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார்.

சிலப்பதிகாரத்தில்

"அவ்வழி படரீர் ஆயின், இடத்து செவ்வழி பண்ணிற் சிறைவண்டு அரற்றும் தடந்தால் வயலொடு தண்பூங் காவொடு கடம்பல கிடந்த காடுடன் கழிந்து திருமால் குன்றத்து செல்குவிர் ஆயின் பெருமால் கெடுக்கும் பிலமுண்டு" என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அழகர் கோவிலின் சிறப்பு பற்றி கூறுகிறார்.

மேலும், "விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபில் புண்ணிய சரவணம், பவகாரணி யோடு இட்டசித்தி எனும் பெயர் போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை முட்டாச் சிறப்பின் மூன்றுள ஆங்கு" என்று மூன்று பொய்கைகள் இருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் நாம் அறிந்தது நூபுர கங்கை என அழைக்கப்படும் ஒரே ஒரு பொய்கை. இதன் மூலம் சிலப்பதிகாரத்திற்கு முன்பே அழகர் கோவில் அமைக்கப்பட்டது என தெரியவருகிறது. ஆழ்வார்களின் காலத்திற்கு பிறகும் கோட்டைகள் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

ஜ்வாலா நரசிம்மர்

கோவிலின் பிரகாரத்தில் உள்ள ஜ்வாலா யோக நரசிம்மர் பிரசித்தி பெற்றதாகும். இவர் உக்கிர ரூபத்தில் உள்ளதால் நரசிம்மரின் உக்கிரத்தை தணிப்பதற்காக தினமும் நூபுர கங்கை நீர், தயிர், வெண்ணெய், தேன் முதலியவை கொண்டு திருமஞ்சனம் நடைபெறுகிறது. யோக நரசிம்மரின் கோபத்தைத் தணித்து சாந்தி அடைவதற்காக சன்னதிக்கு மேல் காற்று வருவதற்காக அடிக்கூரை திறந்த நிலையில் உள்ளது. மற்ற விஷ்ணு கோயிலில் நரசிம்மர் மூலவரின் இடது ஓரத்தில் இருப்பார். இங்கு நரசிம்மர் மூலவர்க்கு நேர் பின்புறம் உள்ளார்.

தலத் தகவல்

  • மூலவர் - அழகர் அல்லது அழகியத்தோளுடையான் (தமிழில்), சுந்தரபாஹூ (வடமொழியில்)
  • தாயார் - சுந்தரவல்லி (தனிக்கோயில் நாச்சியார்)
  • காட்சி - சுதபமுனி, தர்மதேவன், மலையத்வஜ பாண்டியன்
  • திசை - கிழக்கே திருமுக மண்டலம்
  • தீர்த்தம் - நூபுர கங்கை எனும் சிலம்பாறு
  • விமானம் - சோமசுந்தர விமானம்
  • உற்சவர் - கள்ளழகர்

மூலவர் சிறப்பு

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மூலவர் சுந்தரராஜபெருமாளுக்கு நடத்தப்படும் தைலப்பிரதிஷ்டை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இந்தப் பிரதிஷ்டை உற்சவம் தை அமாவாசை தொடங்கி ஆடி அமாவாசை வரை ஆறுமாதக் காலத்துக்கு நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் உற்சவரை மட்டும் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்.[8]

நைவேத்தியம்

அழகர் மலை அழகருக்கு வித்தியாசமாக தோசை நைவேத்தியம் செய்யப்படுகின்றது. அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், நெய் கலந்த சிறப்பு தோசை தயாரிக்கப்படும்.[9]

பாடல்கள்

உதாரணமாக

சிந்துரச் செம்பொடிப் போல்

திருமாலிருஞ்சோலை எங்கும்

இந்திர கோபங்களே

எழுந்தும் பரந்திட்டனவால்

மந்தரம் நாட்டி அன்று

மதுரக் கொழுஞ்சாறு கொண்ட

சுந்தரத்தோளுடையான்

சுழலையினின்று உய்துங் கொலோ!

ஆக மொத்தம் 108 பாடல்கள். இவைத்தவிர உடையவர் இராமானுசர், கூரத்தாழ்வார், மணவாள மாமுனிகளும் இவரை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

சங்க இலக்கியத்தில்

இக்காலத்தில் இம்மலையடி திருமாலை கள்ளழகர் என்கின்றனர். இதற்கு அடிப்படையாக அமைந்த பரிபாடல் அடிகள்

பாடல் (மூலம்) செய்தி
கள்ளணி பசுந்துளவினவை கருந்துளசி மாலை அணிந்தவன்
கருங்குன்று அனையவை கருங்குன்றம் போன்றவன்
ஒள்ளொளியவை ஒளிக்கு ஒளியானவன்
ஒரு குழையவை ஒரு காதில் குழை அணிந்தவன்
புள்ளணி பொலங்கொடியவை பொலிவுறும் கருடக்கொடி உடையவன்
வள்ளணி வளைநாஞ்சிலவை மேலும் கீழும் வளைந்திருக்கும் கலப்பை கொண்டவன்
சலம்புரி தண்டு ஏந்தினவை சிலம்பாறு என்னும் நீர் வளைந்தோடும் வில்லை உடையவன்
வலம்புரி வய நேமியவை சங்கும், சக்கரமும் கொண்டவன்
வரிசிலை வய அம்பினவை வரிந்த வில்லில் வலிமை மிக்க அம்பு கொண்டவன்
புகர் இணர் சூழ் வட்டத்தவை புள்ளி புள்ளியாக அமைந்த பூங்கொத்து விசிறி கொண்டவன்
புகர் வாளவை புள்ளி போட்ட வாள் ஏந்தியவன்

மேற்கோள்கள்

  1. "நாகமலை", தமிழ் விக்கிப்பீடியா, 2019-06-12, பார்க்கப்பட்ட நாள் 2024-11-21
  2. https://www.vikatan.com/news/spirituality/155371-this-story-about-chithirai-thiruvizha-festival.html
  3. "அழகர் ஆற்றில் இறங்குவது". ஆனந்த விகடன். 21-04-2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. "கள்ளழகர் தரிசனம்". குங்குமம். 2013-04-01.
  5. "Etir Sevai". The Hindu (Chennai, India). 18 April 2011 இம் மூலத்தில் இருந்து 10 ஆகஸ்ட் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110810233742/http://www.hindu.com/2011/04/18/stories/2011041861280400.htm. 
  6. https://m.dinamalar.com/detail.php?id=833
  7. அழகர் கோயில், பக்கம் 216
  8. https://www.vikatan.com/news/spirituality/148977-thaila-pradistai-in-madurai-alagarmalai-temple.html
  9. http://temple.dinamalar.com/news_detail.php?id=21350

இவற்றையும் காண்க

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அழகர்_கோவில்&oldid=141736" இருந்து மீள்விக்கப்பட்டது