வைகை
வையை அல்லது வைகை | |
ஆறு | |
சித்திரைத் திருவிழாவின் போது ஒளியலங்காரத்துடன் வைகை
| |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலம் | தமிழ்நாடு |
நகரங்கள் | தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் |
உற்பத்தியாகும் இடம் | |
- அமைவிடம் | தேனி, இந்தியா |
- ஆள்கூறு | 9°15′N 10°20′E / 9.250°N 10.333°E |
கழிமுகம் | |
- அமைவிடம் | இராமநாதபுரம், இந்தியா |
- elevation | 0 மீ (0 அடி) |
- ஆள்கூறு | 77°10′N 79°5′E / 77.167°N 79.083°E |
நீளம் | 258 கிமீ (160 மைல்) |
வைகை அல்லது வைகையாறு என்பது தென் இந்தியாவின் தமிழகத்தில் பாயும் ஆறுகளுள் ஒன்று.
தமிழகத்திலேயே உற்பத்தியாகி இங்கேயே கடல் சேர்கிற வைகை ஆற்றின் நீளம் 258 கி.மீ. ஆகும். இந்நதியின் பாசனப் பரப்பு 7031 ச.கி.மீ. ஆகும். இது தமிழகத்தின் நான்காவது பெரிய ஆறு ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலைதான் வைகை உற்பத்தியாகிற இடம். வருசநாடு, மேகமலை பகுதிதான் வைகையின் பிறப்பிடம். கடல் மட்டத்திலிருந்து 5,333 அடி உயரத்தில் இருக்கிற மேகமலையில் உள்ள ஒரு சிகரமான வெள்ளிமலையில்தான் அது உற்பத்தியாகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தை ஒட்டியுள்ள மேகமலையின் விளம்பிலிருந்து இறங்கும் அம்மா கஜம் ஆறு வெள்ளிமலையாறுடன் இணைகிறது. இதனுடன் கூட்டாறு என்ற இடத்தில் உடங்கலாறும் சேர்ந்த பிறகுதான் வைகை, பெரிய ஆறாகிறது.[1] மலையில் இருந்து இறங்கிய வைகையானது, வடக்கே பழனி குன்றுகளாலும் தெற்கே வருசநாடு குன்றுகளாலும் அரண் செய்யப்பட்டுள்ள கம்பம் பள்ளத்தாக்கை அடைகிறது. பின்னர் வருசநாடு குன்றுகளின் கிழக்கு மூலையை அடைந்ததும் தென் கிழக்காகத் திரும்பி மதுரை மாநகர் வழியாகப் பாய்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் பாக்கு நீரிணையில் கலக்கிறது.[2]
பொதுவாக மழைக்காலத்தில் குறிப்பாக வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் மட்டும் இவ்வாற்றில் நீர்ப்பெருக்கு ஏற்படும். பிற காலங்களில் பொதுவாக வறண்டே காணப்படும். இதன் வறட்சிக்குக் காரணமாக வெள்ளி மலையில் ஏற்படுத்தப்பட்ட அணையும் அதிலிருந்து நீர் மேற்காக கேரள எல்லையை நோக்கி திருப்பப்பட்டு பெரியாறு நீர் தேக்கத்தில் (தேக்கடி) தேக்கப் படுவதால் மழைக்காலங்கள் தவிர பிற காலங்களில் தண்ணீர் வரத்து வராதபடி செயற்கையாக வறட்சி ஏற்படுத்தப்பட்டு உள்ளது எனலாம்.
வைகை ஆற்றுப்படுகை
இவ்வாற்றுப் படுகை 9º 15’ மற்றும் 10º 20’ வடக்கு அட்ச ரேகைக்கு இடையிலும், 77º 10’ மற்றும் 79º 05’ கிழக்கு தீர்க்க ரேகைக்கு இடையிலும் அமைந்துள்ளது. மேலும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் என மொத்தம் 7031 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. பெரியாறு அணை, வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, மருதநதி அணை, சாத்தையாறு அணை ஆகியவை இந்தப்படுகையில் உள்ள அணைகளாகும்[3]
துணை ஆறுகள்
சுருளியாறு, கொட்டகுடியாறு, வரட்டாறு, வராகநதி, மஞ்சளாறு, நாகலாறு, மருதநதி, சிறுமலையாறு, சாத்தையாறு முதலியவை வைகையின் துணை ஆறுகளாகும்.
பழனி மலையில் உற்பத்தியாகும் வராகநதி கொடைக்கானல் மலையிலிருந்து வரும் பாம்பாற்றுடன் (வெள்ளி அருவி உள்ள ஆறு) இணைந்து தேனிக்குக் கிழக்கே குன்னூருக்குத் தெற்கில் வைகையுடன் கலக்கிறது.
பெரியாற்று நீர் வைரவன் ஆற்றுடன் இணைந்து பின்னர் முல்லையாராக பயணிக்கிறது. இவ்வாறு பயணிக்கும் பொழுது சுருளியாறு இதனுடன் கலக்கிறது. பின்னர் வள்ளல் நதி என்று சொல்லப்படும் வருசநாட்டு பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் வள்ளல் நதியுடன் கலந்து வைகையாராக வைகை அணையைச் சென்று அடைகிறது.
மேலும் கொடைக்கானல் மலையிலிருந்து உருவாகும் ஆறுகளும் பெரியகுளம் வழியாக சென்று வைகை அணை முன்பு இந்த ஆற்றில் கலக்கிறது. இவ்வாறு கலக்கும் ஆறுகளில் மஞ்சளாறு, வராக நதி குறிப்பிடத்தக்கது ஆகும்.
1895ல் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின்படி, கேரள, தமிழக எல்லையில் உற்பத்தியாகும் பெரியாற்றின் குறுக்கே முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டு ஒரு பகுதி நீர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு குடைவின் மூலம் வைகையில் திருப்பிவிடப்படுகிறது. இந்த அணை ஆங்கிலப் பொறியாளரான பென்னி குக் என்பவரால் தனது சொந்தப் பணத்தால் கட்டப்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது
அணைகள்
இதன் ஆரம்பம் கேரளா தமிழ்நாடு எல்லையில் உள்ள தேக்கடி என்னும் பெரியாறு தேக்கத்தில் தேக்கப்படுகிறது. இது கேரள தமிழ்நாடு எல்லையில் இருப்பதால் இரு மாநிலங்களுக்கிடையே முல்லைப் பெரியாறு பிரச்சனைத் தொடர்கிறது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து 7கி.மீ தொலைவில் உள்ள நரசிங்கபுரத்தில் வைகை அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் ஆழம் 21.64மீ (71அடி). மொத்த கொள்ளளவு 6091 மில்லியன் கன மீட்டர் (172 மில்லியன் கன அடி). நிலக்கோட்டை அருகில் உள்ள பேரணை, மதுரை விரகனூர் மதகு அணை, பார்த்திபனூர் அணைக்கட்டு போன்றவை வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குறிப்பிடத்தகுந்த பிற அணைகளாகும்.
நதிக்கரையில் அமைந்துள்ள நகரங்கள் மற்றும் ஊர்கள்
- சோழவந்தான்
- மதுரை
- திருப்புவனம்
- திருப்பாச்சேத்தி
- மானாமதுரை
- பார்த்திபனூர்
- பரமக்குடி
- போகலூர்
- இராமநாதபுரம்
- அழகன்குளம்
பண்பாட்டு முக்கியத்துவம்
தமிழ் இலக்கியத்தில் வெகுவாக வைகை புகழப்பட்டுள்ளது."வையை என்னும் பொய்யாக் குலக்கொடி", "ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையை" என்பன போன்ற தொடர்கள் நிலவுகின்றன.
இந்து சமயப் புராணங்கள் சிவபெருமானின் திருவிளையாடல்கள் வைகை ஆற்றங்கரையில் நிகழ்ந்ததாகக் கூறும்.வடமொழி நூல்கள் வைகையை ""க்ருதமாலா" நதி என்று குறிக்கின்றன.
இபின் பட்டுடாவாலும் மார்க்கோபோலோவாலும் வைகை குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏராளமான தமிழ் திரைப்படப் பாடல்களிலும் வைகையாறு குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணமுடியும்.
ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் "வைகை ஆற்றில் இறங்குதல்" பல்லாயிரக் கணக்கானோரை ஈர்க்கிறது.
தனிநபர்களின் இயற்பெயர்களிலும், புனைபெயர்களிலும் மேலும் அங்காடிகள், தொழில் நிறுவனங்கள் போன்றவற்றின் பெயர்களிலும் "வைகை" இடறுவது கண்கூடு.
வைகையுடன் தொடர்புடைய திருவிழா - சித்திரைத் திருவிழா
மதுரையில் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழாவிற்கும், வைகை ஆற்றிற்கும் மிகுந்த தொடர்புண்டு. மதுரை மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத்தைக் காண வரும் அழகர் வைகை ஆற்றில் இறங்கி வரும்போது திருமணம் முடிந்துவிட்டது எனக் கேட்டு வைகை ஆற்றிலிருந்த படியே மீண்டும் தன் இருப்பிடம் சென்று விடுவார். அப்போது அங்கே அவருக்கு பல்வேறு ஆராதனைகளும், பக்தர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் அரங்கேறும். அதே மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு, உணவு உண்ண வந்த குண்டோதரனின் தாகத்தை அடக்க, சிவபெருமான் வைகை யைப்ப யன்படுத்தியதாகவும் கூறுவர்.
சந்திக்கும் பிரச்சனைகள் மணல் கொள்ளை
வைகை ஆற்றுக்கு இரண்டு வழிகளில் இருந்து நீர் ஆதாரங்கள் கிடைக்கின்றது. அவற்றில் ஒன்று முல்லைப் பெரியாறு அணை. மற்றொன்று வருசநாடு பள்ளத்தாக்கிளிருந்து உருவாகும் வள்ளல் நதி (இது அரசின் பேரேட்டில் மட்டுமே இவ்வாறு உள்ளது ஆனால் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த ஆற்றையும் வைகை ஆறு என்றே அழைக்கின்றனர்). இந்தப் பகுதி மக்களுக்கு ஆறும் ஆற்றைச் சார்ந்த பகுதியும் (விவசாய நிலங்களின் விளைபொருள்கள்) இவர்களின் வாழ்வாதரங்கள். ஆனால் மணல் கொள்ளை நிலத்தடி நீரை இல்லாமல் செய்து உள்ளது. இதனால் பல நூற்றுக்கணக்க்கான நிலங்கள் பாழ்பட்டு உள்ளன.
- அழிந்து விட்ட தென்னை மரங்கள்:
- இந்தப் பகுதியில் ஆற்று ஓரங்களில் இருக்கும் தென்னை மரங்கள் தங்களையே அழித்துக் கொண்டன. மணல் திட்டுக்கள் திருடப்படும் போது நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. தென்னை மரங்கள் என்பவை சல்லிவேர்த் தொகுப்பைக் கொண்டவை. அவற்வைறின் வேர்கள் ஆழமாகச் செல்லாது. எனவே நீர் மட்டம் குறையும் பொழுது அவற்றுக்குத்ஒ தேவையான தண்ணீர் கிடைக்காமல் பல ஆயிரக்கணக்கான மரங்கள் அழிந்து விட்டன.
- அழிக்கப்பட்ட ஆற்றோர நிலங்கள்:
- மணல் இருந்த வரை ஆற்றின் மணல் வழியே பயணித்துக் கொண்டு இருந்த ஆற்று நீர், மணல் இல்லாமல் வெறும் கற்களிலும், பாறைகளிலும் பயணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. எனவே ஆற்றின் போக்கு மாறி அருகே இருந்த நிலங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. பல நூற்றுக்கணக்கான நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
- அழிக்கப்பட்ட விவசாய பயிர்கள்:
- ஆற்றோர விவசாய நிலங்கள் அனைத்தும் தற்போது பாழ் நிலங்களாக ஆக்கப்பட்டு உள்ளன. இங்கு உள்ள விவசாய நிலங்கள் 90% கிணற்று-ஆற்றுப் பாசனத்தையும், 10% ஆற்றுப்பாசனத்தையும் நம்பி இருக்கின்றன. கிணற்று-ஆற்றுப்பாசனம் என்றால் எப்போதும் தண்ணீர் இருக்கும் என எண்ண வேண்டாம். எப்பொழுதெல்லாம் ஆற்றில் தண்ணீர் செல்கிறதோ அப்போதுதான் இந்தக் கிணறுகளில் தண்ணீர் கிடைக்கும். வருடத்திற்கு முப்போகம் விளைந்தது இந்த மணல் கொள்ளையால் ஒரு போகமும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. தற்போது ஆற்றின் மணல் மட்டம் ஐம்பது அடிக்கும் கீழே சென்று விட்டதாலும், ஆற்றின் படுகை பாறையைத் தொட்டு விட்டதாலும், கிணற்றில் நீர் கிடைக்கவில்லை; எனவே பல ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரின்றி கிடக்கின்றன.
நகரங்களின் கழிவுநீர் ஆற்றில் கலக்கல்
இந்த ஆற்றின் ஆரம்பம் முதல் இறுதிவரை அனைத்து நகரங்களின் கழிவு நீரும் இந்த ஆற்றுடன் கலக்கும் படியான கழிவு நீர் வடிகால்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதுவே இந்த ஆற்றின் மாசுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
- ↑ கே.கே.மகேஷ் (5 ஆகத்து 2018). "தாவியோடுகிறது தாமிரபரணி... கரைபுரள்கிறது காவிரி... வறண்டு கிடக்கிறதே வைகை!- ஆக்கிரமிப்புகளால் அழிந்துவரும் ஒரு நதியின் மூலம்..." கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 6 ஆகத்து 2018.
- ↑ வைகை ஆறு - தமிழ் இணையக் கல்விக் கழகம்
- ↑ "ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மை (IAMWARM)" (PDF). Archived from the original (PDF) on 2010-12-26. பார்க்கப்பட்ட நாள் 2012-05-14.
வெளி இணைப்புகள்