வடமொழி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வடமொழி என்பது பிராகிருதத் (Prakrits) திரிபுகளாகிய வடபுல இயல் மொழிகளாகிய அவப்பிரஞ்சனங்களுக்கு[1] (Apabhramsa) கொடுக்கப்பட்ட பொதுப்பெயர். பிராகிருதம் பாகதம் எனவும், சமற்கிருதம் சங்கதம் என்றும் வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளன. என்றும் தமிழகத்திற்கு வடக்கில் இவை பேசப்பட்டதால் அவப்பிரஞ்சனங்களை வடமொழி என்று தமிழில் பொதுவாகக் குறித்தனர். தொல்காப்பிய உரை ஆசிரியர்களுள் ஒருவரான தெய்வச்சிலையார் தொல்காப்பியத்தில் குறிக்கப்படும் வடசொல்லுக்கு உரை எழுதுகையில் பாகத மொழிகளை வடசொல்லுக்குரிய மொழிகள் என வலியுறுத்துகிறார்.[2] இன்னும் சில ஆய்வாளர்கள் தொல்காப்பியம் கூறும் வடசொல் என்பது பாகத மொழிகளையே குறிக்கும் எனவும் கூறியுள்ளனர்.[3]

தொல்காப்பிய உரையாசிரியர்களில் மற்றொருவரான இளம்பூரணரும், நன்னூல் உரையாசிரியர்களும் தமிழ் பேசப்பட்ட நிலத்தை அடிப்படையாக அமைத்துப் பாகுபடுத்தப்பட்டுள்ள நான்கு வகைப்பட்ட சொற்களில் ஒன்றான வடசொல்லுக்கு இலக்கணம் கூறும்போது ஆரிய மொழி என்றும், அதனைக் குறிக்கும் மற்றொரு சொல்லாக வடமொழி என்றும் குறிப்பிட்டு விளக்கம் கண்டுள்ளனர்.[4] ஆரியர் பேசிய மொழி ஆரியம். அதன் சொல் தமிழில் கலக்கும்போது அந்தச் சொல் தமிழருக்கு வடமொழி.[5][6][7] ஆரியம் பேசும் மக்களுக்கு அவர்கள் குறியீட்டின்படி சமசுகிருதம்.[சான்று தேவை] ஆரியம் என்றாலோ, வடமொழி என்றாலோ அது பாணினி இலக்கணம் எழுதிய சமற்கிருதத்தைக் குறிக்காது.[சான்று தேவை] அவருக்கு முன்பு ஆரியர்களால் பேசப்பட்டதும், 'ஐந்திரம்' முதலான இலக்கண நூல்களைக் கொண்டிருந்ததுமான வேத கால மொழியை உணர்த்தும்.[சான்று தேவை]

வேறுபாடு

  • வேத மொழி - வேதகாலம் என ஆய்வாளர்களால் சொல்லப்படும் காலத்தில் பேசப்பட்டதாகக் கருதப்படும் மொழி.
  • ஆரியம் - ஆரியரால் பேசப்பட்ட வேதகால மொழி.
  • சமற்கிருதம் - வேத மொழியாகிய ஆரியமொழியின் வளர்ச்சிப் பாதையில் இலக்கணம் உருவாகி வளர்ந்த மொழி.
  • வடமொழி - தமிழ் எழுத்துகளின் ஆக்கம் பெற்றுத் தமிழில் கலந்துள்ள சங்ககால வட இந்திய மொழிகளின் சொற்கள்.

அடிக்குறிப்புகள்

  1. "Tamil Virtual University". https://www.tamilvu.org/library/l0I00/html/l0I00a16.htm. 
  2. எல்லா நாட்டிற்கும் பொதுவாயினும், வடநாட்டிற் பயில வழங்குதலின் வடசொல் ஆயிற்று. வடசொல்லென்றதனால் தேய வழக்காகிய பாகதச் சொல்லாகி வந்தனவுங் கொள்க. - தொல்காப்பியம் - 397 நூற்பாவுக்கான தெய்வச்சிலையார் உரை
  3. http://www.tamilvu.org/courses/degree/a051/a0514/html/a051452.htm
  4. வடசொற் கிளவி வட எழுத்து ஒரீஇ,
    எயுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே
    என்னும் தொல்காப்பிய நூற்பாவுக்கு (எச்சவியல் 5) உரை எழுதும் இளம்பூரணர் "வடசொற் கிளவி என்று சொல்லப்படுவன; ஆரியத்திற்கே உரிய எழுத்தினை ஒரீஇ, இருதிறத்தார்க்கும் பொதுவாய எழுத்தினை உறுப்பாக உடையனவாகும் சொல் என்றவாறு" - என்று எழுதுகிறார்.
  5. ஆரியமொழியுள் அச்சு என்று வழங்கும் உயிர் பதினாறனுள்ளும் இடையில் நின்ற ஏழாம் உயிர் முதல் நான்கும் ஈற்றில் நின்ற இரண்டும் ஆன ஆறும் ஒழிந்து நின்ற அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்னும் பத்தும் அல் என வழங்கும் முப்பத்தேழு மெய்யுள்ளும் க, ச, ட, த, ப என்னும் ஐந்து வருக்கத்தின் இடையில் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் சொல்லப்பட்டு நிற்கும் மூன்றும் ஒழிந்த க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம என்னும் பத்தும் ய, ர, ல, வ என்னும் நான்கும் ளவ்வும் ஆகும் இருபத்தைந்தும் தமிழிற்கும் ஆரியத்திற்கும் பொதுவெழுத்தாம். இவையன்றி மேல் உயிருள் ஒழிந்த ஆறும் ஐந்து வருக்கங்களினும் இடைகளின் ஒழிந்த பதினைந்தும் முப்பதாம் மெய் முதலான எட்டனுள் ளகரம் ஒழிந்த ஏழும் ஆன இருபத்தெட்டும் ஆரியத்திற்குச் சிறப்பெழுத்தாய்த் தமக்கு ஏற்ற பொதுவெழுத்தாகத் திரிந்து வடமொழி ஆம் என்றவாறு
    நன்னூல் 146 சங்கர நமச்சிவாயர் உரை
  6. வடமொழியுள் அச்சென்றுவழங்கும் உயிர்பதினாறனுள்ளும் இடையினின்ற ஏழாமுயிர் முதனான்கும் ஈற்றினின்ற இரண்டுமான ஆறும் ஒழிந்துநின்ற அஆ இஈ உஊ ஏ ஐ ஓ ஔ என்னும் பத்தும், அல்லென்று வழங்குமெய் முப்பத்தேழனுள்ளும் கசடதப வென்னும் ஐந்தன்வருக்கத்துள் இடையில் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் சொல்லப்பட்டுநிற்கும் மூன்று மொழிந்த கங, சஞ, டண, தந, பம என்னும் பத்தும், யரலவ என்னும் நான்கும் ளவ்வுமான இருபத்தைந்தும் தமிழ்மொழிக்கும் வடமொழிக்கும் பொதுவாம்; இவையன்றி, மேல்உயிரிலொழிந்த ஆறும், ஐந்துவருக்கங்களிலும் இடைகளிலொழிந்த பதினைந்தும், முப்பதாமெய் முதலான எட்டனுள் ளகரமொழிந்த ஏழுமான இருபத்தெட்டும் வடமொழிக்கே உரியவாய்த் தமிழ்மொழிக்குவருங்கால் தமக்கேற்ற பொதுவெழுத்துக்களாகத் திரிந்து வரும் என்றவாறு.
    நன்னூல் 146 மயிலைநாதர் உரை
  7. ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொது எழுத்தாலாகி விகாரமின்றித் தமிழில் வந்து வழங்கும் வடமொழி தற்சமம் எனப்படும்.
    நன்னூல் நூற்பா 146 ஆறுமுக நாவலர் காண்டிகை உரை
"https://tamilar.wiki/index.php?title=வடமொழி&oldid=9777" இருந்து மீள்விக்கப்பட்டது