கல்லணை
கல்லணை Kallanai | |
---|---|
கல்லணையின் தற்போதையத் தோற்றம் | |
நாடு | இந்தியா |
அமைவிடம் | திருச்சிராப்பள்ளியில் இருந்து 15 கி.மீ, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு |
நோக்கம் | நீர்ப்பாசனம் |
நிலை | செயல்படுகிறது |
திறந்தது | 1 ஆம் நூற்றாண்டு[1][2][3] |
கட்டியவர் | கரிகால் சோழன் |
இயக்குனர்(கள்) | தமிழ்நாடு அரசு |
அணையும் வழிகாலும் | |
வகை | நீர்த்தேக்கம் |
தடுக்கப்படும் ஆறு | ஆறு |
உயரம் (அடித்தளம்) | 5.4 மீட்டர்கள் (18 அடி) |
நீளம் | 329 மீட்டர்கள் (1,079 அடி) |
அகலம் (அடித்தளம்) | 20 மீட்டர்கள் (66 அடி) |
கல்லணை (Kallanai, English: Grand Anicut) இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இந்த அணை கரிகால் சோழனால் பொ.ஊ. முதலாம் நூற்றாண்டில் காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. இந்த அணை தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர் வட்டத்தில் உள்ள கல்லணை - தோகூர் கிராமத்தில் அமைந்துள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி ஆறு முக்கொம்பில் வடபுறமாக கொள்ளிடம், தென்புறமாக காவிரி என இரண்டாகப் பிரிகிறது. இவ்விடத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் மேலணை கட்டப்பட்டுள்ளது. காவிரிக்கும், கொள்ளிடத்துக்கும் இடையில் திருவரங்கம் ஆற்றுத்தீவு உள்ளது. அங்கிருந்து காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. அங்கு காவிரி ஆறானது உள்ளாறு (கொள்ளிடம்), காவிரி, வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரிகிறது. உள்ளாறு (கொள்ளிடம்) மீண்டும் கொள்ளிடத்தில் இணைகிறது. காவிரி இவ்வாறு பிரியுமிடத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது.
பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ளக் காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணீர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும். அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் (முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்த கிளை ஆறு) திருப்பி விடப்படும். எனவே தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல இலட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பற்றப்படுகிறது.
வரலாறு
இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் பொ.ஊ. முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.[1][2][3][4][5][6][7] தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போதும் புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.[சான்று தேவை] மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது.[8]
கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி, மற்றும் உயரம் 18 அடியாகும். இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
அணை கட்டப்பட்ட தொழில்நுட்பம்
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால் சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான். ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டையும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும்.[9]
சர் ஆர்தர் காட்டன் பங்களிப்பு
இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார்.
கல்லணை பலகாலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும், வறட்சியாலும் வளமை குன்றியது. இந்த சூழலில் 1829 இல் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார்.
இவர்தான் பயனற்று இருந்த கல்லணையில் தைரியமாக சிறு சிறு பகுதியாய் பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார். அப்போது, கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறினார். கல்லணைக்கு கிரான்ட் அணைகட் என்ற பெயரையும் சூட்டினார்.[10]
அணை பற்றிய பொறியியல் ஆய்வு
முதல் முறையாக இந்த ஆய்வறிக்கை தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Delhi) மேற்கொண்ட பண்டைய நூல்கள் மற்றும் கல்வெட்டுகளின் விரிவான பொறியியல் ஆய்வு மற்றும் ஆய்வுகூடத்தில் உருவகப்படுத்துதல் பற்றி தெரிவித்துள்ளது. காப்பகத் தேடல், கள ஆய்வுகள், நேரடி நில அளவை மற்றும் நீரோட்டம் பற்றிய தரவுகள் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. விநோதமான வடிவத்தில் கட்டப்பட்ட இந்தக் கல்லணை வண்டல் மண் அணையில் படிந்து விடாமல் கிளை ஆறான கொள்ளிடத்தில் நீரோட்டத்தில் அடித்துக்கொண்டு ஓடுவது அதிகரிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.
இப்பகுதியில் பாசனத்துக்கு முதன்மையான ஆறு காவிரி. பொ.ஊ. 1800-லேயே 6 லட்சம் ஏக்கர்களுக்கு பாசனம் செய்து கொண்டிருந்தது. சாதாரண காலங்களில் காவிரி நீரை ஆழமாகவும் வேகமாகவும் ஓடும் கொள்ளிடத்தில் இருந்து தடுத்து வைப்பதுதான் கல்லணையின் முக்கிய செயல்பாடு. ஆனால் வெள்ளம் வந்தால் அதைப் பாதுகாப்பாக காவிரியில் இருந்து கொள்ளிடத்தில் திருப்பி கடலில் கொண்டு சேர்க்க வழி செய்வதுவும்தான். அதன் அருகே வேறு எந்தக் கட்டமைப்பின் உதவியும் இல்லாமல் கல்லணை இந்த செயல்பாட்டை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகச் செய்து கொண்டிருந்தது.
ஆங்கிலேயப் பொறியாளர்கள் மூலத்திட்டத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் பல மாற்றங்களை மேற்கொண்டனர். பல தசாப்தங்களாக வண்டல் மண் பிரச்சினையுடன் போராடினர். ஒரு ஆங்கிலேயப் பொறியாளர் எழுதுகிறார் (Baird Smith, 1856); "கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வண்டல் மண்ணுடன் ஒரு இடைவிடாத போராட்டம் இருந்தது. ஆற்றின் பல பகுதிகளில் இருந்து ஆட்களை வைத்து தூர் வாரப்பட்டது. அதிக செலவில் நீண்ட கரைகள் கட்டப்பட்டன. எனினும் எல்லா முயற்சிகளும், பலனற்றுப் போய்விட்டன. ஆற்றின் படுகை தொடர்ந்து ஏற்றம் கண்டது."
நல்ல காலமாக மாற்றங்களுக்கு முன்பிருந்த கல்லணையை 1776 இல் செய்யப்பட்ட ஒரு பதிவில் இருந்து உய்த்துணர இயலும். இப்பதிவு அணைக்கட்டின் விசித்திரமான சிறப்பியல்புகளைக் குறிப்பிட்டுள்ளது. கல்லணை ஒரு முனையில் இருந்து மறு முனை வரை இரண்டு அல்லது மூன்று வளைவுகளுடன் காணப்பட்டது. அதன் முகடு மட்டமாக இல்லாமல் சாய்வாக இருந்தது - கிழக்கு முனையை விட மேற்கு முனை அதிக உயரம். அது குறுக்கிலும் சாய்வாக இருந்தது - சில பகுதிகளில் இது ஓர் ஒழுங்கான மற்றும் சீரான சாய்வாக இருந்தது, மற்ற பகுதிகளில் ஒழுங்கற்ற 3 அல்லது 4 படிகள். இறுதியாக, அணை நெடுகிலும் சுமார் ¾ அங்குல கனத்துக்கு வழுவழுப்பான சுண்ணாம்புக் கலவை பூசப்பட்டிருந்தது. இந்தப் பூச்சு பெரும்பாலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது மாற்ற வேண்டும். மேலும், முன்பக்கம் கரடுமுரடாக சமநிலையற்று இருந்தது. ஆனால் இதுவே மிக அனுகூலமாக இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இடையறாமல் வண்டல் மண் நீர்மக்குழம்பாகி அணையின் முன்பக்கச் சுவரை அரிக்காமல் பாதுகாப்பாக இருந்தது.
கரிகால சோழன் மணிமண்டபம்
பல நூற்றாண்டுகளை கடந்தும் உறுதியோடு நிற்கும் கல்லணை தமிழர்களின் கட்டுமான திறனை பறை சாற்றி கொண்டிருக்கிறது. பழமையான இந்த அணையை கட்டிய கரிகால சோழனை கெளரவிக்க கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் இடது கரை ஓரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் யானை மீது கரிகால சோழன் அமர்ந்த நிலையில் சிலை வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.[11]
கல்லணை பற்றி சங்க கால சான்றுகள்
சங்ககாலத்தில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளிற் பாய்ச்சிச் செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை,[சான்று தேவை] பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக் கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 DelhiAugust 26, India Today Online New; August 26, 2013UPDATED:; Ist, 2013 16:49. "Incredible India! A 2,000-year-old functional dam" (in en). https://www.indiatoday.in/world/story/incredible-india-2000-year-old-functional-dam-india-today-175057-2013-08-26.
- ↑ 2.0 2.1 "Karikalan cholan memorial inaugurated - Times of India". https://timesofindia.indiatimes.com/city/trichy/Karikalan-cholan-memorial-inaugurated/articleshow/30300318.cms.
- ↑ 3.0 3.1 Syed Muthahar Saqaf (10 March 2013). "A rock solid dam that has survived 2000 years". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/a-rock-solid-dam-that-has-survived-1800-years/article4494161.ece. பார்த்த நாள்: 13 November 2013.
- ↑ Syed Muthahar Saqaf (10 March 2013). "A rock solid dam that has survived 2000 years". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/a-rock-solid-dam-that-has-survived-1800-years/article4494161.ece. பார்த்த நாள்: 13 November 2013.
- ↑ Singh, Vijay P.; Ram Narayan Yadava (2003). Water Resources System Operation: Proceedings of the International Conference on Water and Environment. Allied Publishers. பக். 508. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7764-548-X. http://books.google.com/books?id=Bge-0XX6ip8C&pg=PA508&dq=kallanai&sig=_bvXlOQqAftum2T7p_6McQJHgUk#PPA508,M1.
- ↑ "Flowing waters for fertile fields". The Hindu (India). 29 August 2011 இம் மூலத்தில் இருந்து 17 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120717220026/http://www.thehindu.com/life-and-style/kids/article2408778.ece.
- ↑ Rita 2011, chpt. Small Field Big Crop.
- ↑ "This is the oldest stone water-diversion or water-regulator structure in the world" இம் மூலத்தில் இருந்து 2007-02-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070206130842/http://www.hindunet.org/saraswati/traditionwater.pdf. பார்த்த நாள்: 2007-05-27.
- ↑ "கல்லணை எனும் மகத்தான அணை". பிபிசி(தமிழ்). https://www-bbc-com.cdn.ampproject.org/v/s/www.bbc.com/tamil/india-53826135.amp?amp_js_v=a3&_gsa=1&usqp=mq331AQFKAGwASA%3D#aoh=15998184952449&referrer=https%3A%2F%2Fwww.google.com&_tf=From%20%251%24s&share=https%3A%2F%2Fwww.bbc.com%2Ftamil%2Findia-53826135.
- ↑ பக் 38, ப.கோமதிநாயகம் (மார்ச், 2000). தமிழகப் பாசன வரலாறு. ஸ்நேகா பதிப்பகம். பக். 87. ISBN 81-87371-07-2.
- ↑ "கல்லணையில் மணிமண்டபம் : முதல்வர் ஜெ., திறந்து வைத்தார்". தினமலர். http://www.dinamalar.com/news_detail.asp?id=915183. பார்த்த நாள்: 18 சனவரி 2015.