ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில்
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில் | |
---|---|
படிமம்:Adhanoor (7).jpg | |
அமைவிடம் | |
ஊர்: | ஆதனூர் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஆண்டளக்கும் ஐயன் |
தாயார்: | அரங்க நாயகி |
தல விருட்சம்: | பாடலி மரம் |
தீர்த்தம்: | சூரியபுஷ்கரணி, தாமரைத் தடாகம் |
மங்களாசாசனம் | |
பாடல் வகை: | நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் |
மங்களாசாசனம் செய்தவர்கள்: | திருமங்கை ஆழ்வார் |
ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோவில், 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு பதினென்றாவது திருத்தலம். இக்கோவில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள ஆதனூரில் அமைந்துள்ளது.
மரபுவழி வரலாறு
தல வரலாறு
பாற்கடலில் சயனித்திருந்த பெருமாளைத் தரிசிக்க வந்த பிருகு முனிவருக்கு மகாலட்சுமி மாலை ஒன்றைத் தருகிறார். பிருகு முனிவர் அம்மாலையை இந்திரனுக்குத் தர அவனோ அதை தனது யானை ஐராவதித்தின் மீது வைக்க யானை அம்மாலையைத் தூக்கி வீசியெறிந்து விடுகிறது. பிருகு முனிவர் கோபங்கொண்டு இந்திரனை பூமியில் மானுடனாகப் பிறப்பான் எனச் சபித்து விடுகிறார். பின் அவரது ஆலோசனைப்படி, தனது சாபம் நீங்க மகாலட்சுமியை இந்திரன் வேண்ட, பூலோகத்தில் பிருகு முனிவரின் மகளாகத் தான் அவதரிக்கப் போவதாகவும், அந்த அவதாரத்தில் பெருமாளுடன் தனக்கு நடக்கும் திருமணத்தைக் காணும்போது இந்திரனின் சாபம் நீங்கும் எனவும் மகாலட்சுமி கூறுகிறாள். பிருகு முனிவரின் மகளாக பிறந்து வளர்ந்த மகாலட்சுமியின் திருமணக் கோலத்தை இத்தலத்தில் காணும் இந்திரன் சாபம் நீங்கப்பெற்றான் என மரபுவழி வரலாறு கூறுகிறது.
தல சிறப்பு
திருவரங்கத்தில் அரங்கநாதருக்குத் திருமதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த திருமங்கையாழ்வாருக்குப் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. அவர் பெருமாளை வேண்ட பெருமாள் அவர் கனவில் தோன்றி கொள்ளிடக்கரையில் வந்து பணம் வாங்கிக்கொள்ளும்படிக் கூறினார். திருமங்கையாழ்வாரும் அவ்விதமே கொள்ளிடக்கரைக்குச் செல்ல அங்கு தலைப்பாகையுடன் இருந்த ஒரு வணிகரைச் சந்தித்தார். அவ்வணிகரிடம் ஒரு காலி மரக்கால், ஏடு, எழுத்தாணி இருந்தது. அவர் ஆழ்வாரிடம் அரங்கநாதன் அவருக்கு உதவ தன்னை அனுப்பியிருப்பதாகக் கூறி, பணியாளர்களுக்கு கூலியாக அக்காலி மரக்காலால் மணலை அளந்து கொடுத்தால், உண்மையாக உழைத்தவர்களுக்கு அது பொன்னாகவும் உழைக்காமல் ஏமாற்றியவர்களுக்கு மணலாகவும் தோன்றும் என்றார்.
அவ்விதமே கூலியாக மரக்காலால் மணலை அளந்து கொடுத்தபோது பெரும்பான்மையோருக்கு அது மணலாகவும் சிலருக்குப் பொன்னாகவும் இருந்தது. மணலைப் பெற்றவர்கள் வணிகரை அடிக்க வர வணிகரோ ஓடினார். ஆழ்வாரும் அவர் பின்னே ஓடினார். வணிகர் இத்தலத்தில் வந்து நின்று வணிகராக வந்தது தானே என்று உணர்த்தி எழுத்தாணியால் ஏட்டில் எழுதி ஆழ்வாருக்கு உபதேசித்தருளினார்.
இதனைக் குறிக்கும் விதமாக இத்தலப் பெருமாள் மரக்காலை தலைக்குக்கீழ் வைத்து ஏடு, எழுத்தாணியைக் கையில் கொண்டவாறு பள்ளிகொண்ட கோலத்தில் உள்ளார்.
இலங்கைக்கு செல்லும் போது ஸ்ரீராமரும் ஆஞ்சநேயரும் இங்கு வந்து தங்கிசென்ற இடம்.
மூலவர்
இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தரும் பெருமாள் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் என அழைக்கப்படுகிறார். கருவறையில் பெருமான், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன், தமது நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மா மேல் எழ, பள்ளி கொண்ட தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். மரக்காலைத் தலைக்கு வைத்து இடதுகையில் எழுத்தாணியும் ஏடும் கொண்டுள்ளதால் பெருமாளின் இத்தோற்றம் உலகுக்குப் படியளந்த பெருமாள் ஓய்வாகப் பள்ளிகொண்ட கோலம் என அழைக்கப்படுகிறது.
தாயார்
இக்கோவிலில் அரங்கனின் நாயகி, தாயார் பார்கவியாக எழுந்தருளியுள்ளார்.
பெயர்க் காரணம்
இத்தலத்தில் மகாவிஷ்ணுவை நோக்கி காமதேனு தவம் இருந்ததுதான் ஆதனூர் என்ற பெயர் வரக் காரணம் எனக் கூறப்படுகிறது.
- காமதேனு -ஆ;
ஆதனூர் -ஆ/தன்/ஊர்
3 நிலை ராஜகோபுரத்தையுடைய இக்கோவிலில் காமதேனுவுக்கும் காமதேனுவின் மகள் நந்தினிக்கும் பெருமாளின் சந்நிதியில் சிற்பங்கள் உள்ளன.
மோட்சத் தூண்கள்
பரமபதத்தில் மகாவிஷ்ணுக்கு முன்பாக இரு தூண்கள் இருக்கும். மனித உடலிலிருந்து விடுபடும் ஆன்மா இவ்விரு தூண்களையும் தழுவ மோட்சம் பெறும் என்பது ஐதீகம். இதே போன்ற இரு தூண்கள் இத்தலத்தில் கருவறைக்கு எதிரில் உள்ள அர்த்தமண்டபத்தில் பெருமாளின் பாதம் மற்றும் தலைக்கு எதிரில் உள்ளன.
இரட்டைப்படை எண்ணிக்கையில் வலம் வந்து இத்தூண்களைப் பற்றிக்கொண்டு பெருமாளின் பாதத்தையும் திருமுகத்தையும் தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்றும் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் ஆகும் என்ற நம்பிக்கையும் வழக்கத்தில் உள்ளது.
மங்களாசாசனம்
இத்தலத்திற்கெனத் தனிப்பாசுரம் இல்லை. திருமங்கையாழ்வார் பெரிய திருமடலில் ”ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன்” என்று பெரிய திருமடலில் ஒரு வரியில் குறிப்பிடுகிறார்.
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐயனை …
என ஆண்டளக்கும் ஐயனைத் திருமங்கையாழ்வார் குறிப்பிடுகிறார்.
ஆதாரம்
- பலன்தரும் பரிகாரத் தலம், தினமணி, அக்டோபர் 26, 2012