திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற அரங்கநாத சுவாமி கோயில் | |
---|---|
திருவரங்கப் பெருமாள் கோபுரம் | |
புவியியல் ஆள்கூற்று: | 10°51′45″N 78°41′24″E / 10.862521°N 78.689899°E |
பெயர் | |
பெயர்: | அரங்கநாத சுவாமி கோயில் |
ஆங்கிலம்: | Srirangam Aranganathar Temple |
அமைவிடம் | |
ஊர்: | திருவரங்கம் |
மாவட்டம்: | திருச்சிராப்பள்ளி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அரங்கநாதர் |
உற்சவர்: | நம்பெருமாள் |
தாயார்: | அரங்கநாயகி |
உற்சவர் தாயார்: | அரங்கநாயகி |
தல விருட்சம்: | புன்னை மரம் |
தீர்த்தம்: | சந்திர தீர்த்தம், காவிரி தீர்த்தம் உட்பட எட்டு தீர்த்தங்கள் |
ஆகமம்: | பாஞ்சராத்திரம் |
சிறப்பு திருவிழாக்கள்: | வைகுண்ட ஏகாதேசி, பிரம்மோட்சவம் |
மங்களாசாசனம் | |
பாடல் வகை: | நாலாயிர திவ்வியப் பிரபந்தம் |
மங்களாசாசனம் செய்தவர்கள்: | பெரியாழ்வார் ஆண்டாள் குலசேகர ஆழ்வார் திருமழிசையாழ்வார் தொண்டரடிப்பொடியாழ்வார் திருப்பாணாழ்வார் திருமங்கையாழ்வார் பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் (ஆழ்வார்) |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | தமிழர் கட்டிடக்கலை [1] |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழ மன்னர்கள் |
வலைதளம்: | http://www.srirangam.org/ |
திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும், திருவரங்கம் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராசகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987-ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. சோழ நாட்டு காவிரி ஆற்று கரையில் அமைந்துள்ள முதல் திவ்விய தேச தலம்.
திருவரங்கம் கோவிலைப் பாதுகாத்து, திருப்பணிகள் புரிய 1966-இல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) இக்கோயிலுக்குத் தொழிநுட்ப உதவி அளிக்க முடிவு செய்தது. இந்த நிறுவனம் பாட்ரிக் பால்க்னர், சார்ச்ரைட், சுனைன் அபோயர் ஆகிய நிபுணர்களின் சேவையை அளித்தது. இவர்களுள் சுனைன் அபோயர் என்ற பெண்மணி இக்கோயிலின் வரலாற்றையும், அமைப்பையும் நன்கு ஆராய்ந்து பல ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
தல வரலாறு
திருவரங்கம் கோயில் சிலை பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த சிலையை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். இராமர் அச்சிலையை இலங்கையிலிருந்து தனது பட்டாபிசேகத்துக்கு வந்த விபீடணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீடணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். அங்கு சிலையை கீழே இறக்கி வைக்க கூடாது என்று என்னினான். அப்போது ஒரு சிறுவன் அங்கு ஆட்டு மந்தையை மேய்த்து கொண்டிருந்தான், அச்சிறுவனிடம் அச்சிலையை கொடுத்து விட்டு கீழே வைக்க கூடாது என்று சொல்லி விட்டு இளைப்பாறினான். அச்சமயம் சிறுவன் சிலையை கீழே வைத்து விட்டான், பின்னர் விபீடணன் அவன் மீண்டும் புறப்பட வந்தான், சிறுவன் சிலையை கீழே வைத்ததை கண்டு, சிறுவன் என்ன காரியம் செய்தாய் என்று கூறி சிலையை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். பின் சிறுவனாக வந்தது விநாயக பெருமான் சிலையை கீழே வைத்தது நான் தான் என்று கூறி மறைந்தார். அவ்விநாயகற்கு காவிரி ஆற்றின் மற்றொரு கரையில் கோவில் உள்ளது, அதுவே மலை மீது இருக்கும் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் ஆகும், திருவரங்கம் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளது. பின் வைகுண்ட பெருமாள் அரங்கநாதராக காட்சியளித்து காவிரிக்கரையிலேயே தங்கி இருக்க விருப்பம் என்று தெரிவித்தார். அங்கு சோழ நாட்டை ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினார். விபீடணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அச்சிலையைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தார். பின் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவில் மணலால் மூடப்பட்டது. பின் வந்த சோழ மன்னர் ஒருவர் மணலால் மூடிய கோவிலை ஒரு கிளியின் உதவியுடன் கோவிலை கண்டுபிடித்ததால் கிளி சோழன் என்றும் சோழன் கிள்ளிவளவன் என்றும் அழைக்கப் பெற்றார், அக்கோவிலை புரணமைத்து, பின்பு அரங்கநாதருக்கு பிரம்மாண்டமான பெரிய கோவிலை கட்டினார் சோழன் கிள்ளிவளவன். அக்கோயிலே தற்போதைய வழிபடும் அரங்கநாதர் கோவிலாக உள்ளது.
குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி
வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலிமாகண்டு
உடலொனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே.
சிரீ தொண்டரடிப் பொடி ஆழ்வார் முதலாயிரம் திருமாலை 19 வது பாட்டு.
பஞ்சரங்க தலங்கள்
கோவில் | அமைவிடம் |
சிரீரங்கநாதசுவாமி திருக்கோவில் | சிரீரங்கப்பட்டணம் |
திருஅரங்கநாதசுவாமி திருக்கோவில் | திருவரங்கம் |
சாரங்கபாணி திருக்கோவில் | கும்பகோணம் |
அப்பால ரெங்கநாதர் கோயில் | திருப்பேர் நகர் என்ற கோவிலடி (தஞ்சாவூர்) |
பரிமள ரங்கநாதபெருமாள் திருக்கோவில் | மயிலாடுதுறை |
கோயில் ஒழுகு
கோயில் ஒழுகில் (Chronicle) தர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் ("வைகுந்தத்திலுள்ள விட்டுணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்" என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது) மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.
கோயில் அமைப்பு
இக்கோயிலானது ஏறத்தாழ 156 ஏக்கர் அதாவது 6,31,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக, நாட்டிலேயே மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக உள்ளது. இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. அரங்கநாதரின் கருவறை விமானம் நீள்வட்ட வடிவில் தங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கிறது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. இராசகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது.
திருச்சுற்றுகள்
இதன் ஏழு மதில் சுற்றுக்களையும் ஏழு உலகங்கள் என்று கூறுவர்.
நவ தீர்த்தம்
- சந்திர புசுகரணி
- வில்வ தீர்த்தம்
- சம்பு தீர்த்தம்
- பகுள தீர்த்தம்
- பலாச தீர்த்தம்
- அசுவ தீர்த்தம்
- ஆம்ர தீர்த்தம்
- கதம்ப தீர்த்தம்
- புன்னாக தீர்த்தம்
தெற்கு இராசகோபுரம்
கோயில் தென்புறத்தில் 400 ஆண்டுகளுக்கு முன், நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப்பெறாத தெற்கு இராசகோபுரம், அகோபில மடத்தின் 44 வது சீயர் அழகிய சிங்கரின் முயற்சியால் கட்டுமான பணிகள் 1979ல் தொடங்கி 8 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.[2]
இராசகோபுரம் கட்டுமானம்
கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள்:
- 1.7 கோடி செங்கற்கள்
- 20,000 டன் மணல்
- 1,000 டன் கருங்கல்
- 12 ஆயிரம் டன் சிமெண்ட்
- 130 டன் இரும்பு கம்பிகள்
- 8,000 டன் வர்ண பூச்சு
இராசகோபுரத்தின் மொத்த எடை 128 ஆயிரம் டன்கள்
சங்க இலக்கியங்களில் திருவரங்கம் கோயில்
சங்க காலத்திலிருந்தே திருவரங்கம் கோயில் புகழ் பெற்றது. அதனால் 2000 ஆண்டுகளாக திருவரங்கம் விண்ணகரத்தில் வழிபாடு நடப்பது தெரிகிறது. சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் காடுகண் காதையில் "விரிந்த அலைகளோடு கூடிய மிகப் பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில் திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவரும், நீல நிறம் கொண்டவருமாகிய திருமால், ஆயிரம் தலைகளுடைய ஆதிசேசன் என்னும் பாம்பணையாகிய பள்ளியின் மீது அழகுறச்சாய்ந்து கொண்டிருக்கும் தன்மை, நீல நிறமுடைய ஒரு மேகமானது பொன்மலையினைச் சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கின்றது" என வர்ணிக்கப்படுகிறது.
“ | மாமுது மறையோன் வந்திருந் தோனை
யாது நும்மூர் ஈங்கென் வரவெனக் கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின் மாமறை யாளன் வருபொருள் உரைப்போன் நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப் பால்விரிந் தகலாது படிந்தது போல ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற் பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும் வீங்குநீ ரருவி வேங்கட மென்னும் ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையி னேந்தி. நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் |
” |
அகநானூறிலும் (அகம் 137 பாலை உறையூர் முதுகூத்தன்னார்) திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் திருவிழா பற்றி குறிப்புள்ளது.
“ | ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட
சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ, களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம் சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர் இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண், வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற் பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள், வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில் தீ இல் அடுப்பின் அரங்கம் போல, பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும், தோளா முத்தின் தெண் கடற் பொருநன் திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன் நல் எழில் நெடு வேய் புரையும் தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே. |
” |
சங்கம் மறுவிய காலத்தில், மதுரகவி ஆழ்வார் நீங்கலாக அனைத்து ஆழ்வார்களும் (பொ.ஊ. 5ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வரை) திருவரங்கத்தானை பற்றி பாடியுள்ளனர். நாலாயிய திவ்விய பிரபந்தத்தில், 247 பாசுரங்கள் திருவரங்கத்தான் மேல்தான்.
திருவரங்கத்தானை பாடிய ஆழ்வார் | பாடியப் பாசுரங்களின் எண். |
திருமங்கை ஆழ்வார் | 73 பாசுரங்கள் |
தொண்டரடிப்பொடி ஆழ்வார் | 55 பாசுரங்கள் |
பெரியாழ்வார் | 35 பாசுரங்கள் |
குலசேகராழ்வார் | 31 பாசுரங்கள் |
திருமழிசையாழ்வார் | 14 பாசுரங்கள் |
நம்மாழ்வார் | 12 பாசுரங்கள் |
திருப்பாணாழ்வார் | 10 பாசுரங்கள் |
ஆண்டாள் | 10 பாசுரங்கள் |
பூதத்தாழ்வார் | 4 பாசுரங்கள் |
பேயாழ்வார் | 2 பாசுரங்கள் |
பொய்கையாழ்வார் | 1 பாசுரம் |
மொத்தம் | 247 பாசுரங்கள் |
:அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்
- நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே.
—திருப்பாணாழ்வார், அமலனாதிபிரான் 1வது பாசுரம்
9 ஆம் நூற்றாண்டிலிருந்து திருவரங்கம் கோவிலில் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன. சோழ மன்னர்களும் சோழ பெரும்புள்ளிகளும் திருவரங்கம் விண்ணகரத்திற்கு பல கொடைகளும் கைங்கர்யமும் செய்துள்ளதாக கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. 600 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் 9ம் நூற்றாண்டிலிருந்து 20 நூற்றாண்டுவரை உள்ளன. 'கோவில் ஒழுகு' 11ம் நூற்றாண்டு வாக்கில் இயற்றப்பட்ட கோவில் வரலாறு ஆகும். கோவிலொழுகு 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் சில பிரகாரங்களை கட்டச் செய்தார் என கூறுகிறது. கோவிலொழுகு காலப்போக்கில் திருவரங்கம் விண்ணகரத்தில் ஏற்பட்ட சம்பவங்களை தொகுக்கிறது.
105 கல்வெட்டுகள் சோழர் காலத்தவை. இவை முதலாம் பராந்தக சோழன், இரண்டாம் பராந்தகன், இராசராசன், இராசேந்திரன், குலோத்துங்கன், விக்ரம சோழர்களின் கொடைகள் கல்வெட்டிலுள்ளன. பிறகு பாண்டிய மன்னர்களும், ஓய்சாலர்களும் திருவரங்கத்தில் சிரத்தை காட்டினர். பொ.ஊ. 1311இலும், 1323இலும் தில்லி சுல்தானின் தளபதி மாலிக் காபூர் தென்னிந்தியாவை சூரையாடுவதற்கு படையெடுத்தான். அந்த இரண்டு ஆக்கிரமிப்புகளிலும் கோவில் கொள்ளையடிக்கப் பட்டது. 1331 படையெடுப்பின் முன், உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் பிள்ளை லோகாசாரியார் மூலம் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. திருவரங்கத்தின் மீது மதுரை சுல்தானின் ஆதிக்கம் (1331–1371) வீழ்ந்த பின், உற்சவ மூர்த்தி மறுபடியும் எழுந்தருள செய்யப் பட்டது. அது 13 மே 1371 இல் நடந்ததாக கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு விசயநகர அரசர்கள், நாயக்கர்கள், தஞ்சை மன்னர்கள் பெருமளவில் உதவியிருந்தனர்.
இசுலாமியப் படையெடுப்பால் அழிக்கப்பெற்றதற்குப் பதிலாக கருடாழ்வாரின் புதிய செப்புச்சிலை செய்யப்பட்டு வழிபடப்பட்டது. (பொ.ஊ. 1415). 15,16 ஆம் நூற்றாண்டுகளில் பல தெய்வங்களின் சந்நிதிகள் மீண்டும் புதுப்பித்து அமைக்கப்பட்டன. கோபுரங்கள் கட்டப்பட்டன. கோவில் விமானம் மீண்டும் கட்டப்பட்டுப் பொன் வேயப்பட்டது.
திருவரங்கம் விண்ணகரம் பல ஆன்மீக சான்றோர்களையும் ஈர்த்துள்ளது. ஆழ்வார்கள் கால கடைசியில் வந்தவர் கம்பர். அவர் ராமாயணத்தை சாலிவாகன வருடம் அதாவது பொ.ஊ. 14 இல் ராமாயணத்தை திருவரங்கத்தில் கவியரங்கு ஏற்றினார். அம்மண்டபம் இன்றும் ரங்கநாச்சியார் சன்னதி முன்பு காணலாம்.
“ | எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின் மேல் சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன் பண்ணிய இராம காதை பங்குனி உத்த ரத்தில் கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்கு ஏற்றி னானே |
” |
அம்மா மண்டபம்
திருச்சி திருவரங்கம் காவிரி ஆற்றங்கரையில் அம்மா மண்டபம் அமைந்திருக்கிறது. இந்துசமயத்தின் புனிதச் சடங்குகளுள் ஒன்றான நீத்தார் கடன் இப்பகுதியில் அதிகம் நடத்தப் பெறுகின்றன.
விழாக்கள் - வைகுண்ட ஏகாதேசி
மார்கழி மாதத்தின் வளர்பிறை ஏகாதேசியானது 'வைகுண்ட ஏகாதேசி' என்று அழைக்கப்படுகிறது. இந்த விழா திருவரங்கத்தில் 21 நாட்கள் கொண்டாப்படுகின்றன.
பிரமோச்சவம்
இத்தலத்தில் மூன்று பிரமோற்சவங்கள் நடைபெறுகின்றன. ஆதி பிரம்மோட்சவம், பூபதி திருநாள் என்று இந்த பிரமோட்சவங்கள் அழைக்கப்படுகின்றன.
1001 கலச அபிசேகம்
இக்கோயிலில் உலக நன்மைக்காக 57 ஆண்டுகளுக்குப் பிறகு நம்பெருமாள் உபய நாச்சியார்களுக்கு 1001 கலச அபிசேகம் செய்யும் நிகழ்ச்சி 27 ஆகத்து 2014இல் நடைபெற்றது. இதே போன்று இக்கோயிலில் 1957ஆம் ஆண்டு துரைபிரதட்சணம் மண்டபத்தில் 1001 கலசங்கள் வைத்து பூசைகள் நடத்தப்பட்டன. 1001 கலசங்களில் 360 மூலிகை மருந்துகள் சேர்க்கப்பட்டு அபிசேகம் நடைபெறுகிறது. இக்கலசங்கள் 81 கலசங்கள் பிரம்ம பதம் என்றும், 520 கலசங்கள் தேவ பதம் என்றும் 400 கலசங்கள் மானூசு பதம் என்றவாறு அமையும்.[3]
குட முழுக்கு
இக்கோயிலில் 2001ஆம் ஆண்டு மார்ச்சு 15 இல் குட முழுக்கு நடந்தது. 12 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், கடந்த ஆண்டு சூன் 5ம் தேதி முதல் துவங்கியது. சம்பரோட்சணம் எனப்படும் குடமுழுக்கு இரு கட்டங்களில் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் இக்கோயிலில் 43 உபசன்னதிகளுக்கும், 11 கோபுரங்களுக்கும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு அன்று காலை 5.40 மணி முதல் 6.40 மணிக்குள் கும்பாபிசேகம் நடைபெற்றது.[4][5] ரங்கநாதர், ரங்கநாயகி தாயார் உள்ளிட்ட முக்கிய சன்னதிகள் மற்றும் அரசகோபுரம், வெள்ளை கோபுரம் உள்ளிட்டவைகளுக்கு இரண்டாம் கட்டமாக கும்பாபிசேகம் 18 நவம்பர் 2015 அன்று நடைபெற்றது.[6][7]
இயுனெசுகோ விருது
ஆசிய பசிபிக் மண்டலத்தில் உள்ள 10 நாடுகளில் உள்ள கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அமைப்புகள் குறித்த அறிக்கைகளை ஆய்வு செய்த யுனெசுகோ அமைப்பு, திருவரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு கலாச்சார பாரம்பரியம் பாேன்றவற்றை பழமை மாறாமல் பாதுகாத்ததற்கான விருதை 2017ஆம் ஆண்டில் வழங்கி சிறப்பித்தது. தமிழகத்திலேயே முதல் முறையாக இக்கோயிலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.[8]
காண்க
திருவரங்கம் அரங்கநாதரின் (மூலவர்) கண்களில் இருந்த ஒற்லோவ் வைரம்
கருவிநூல்
தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் - v.கந்தசாமி, எம்.ஏ, எம்.எட். - இரண்டாம் பதிப்பு 2006
மேற்கோள்கள்
- ↑ Urwick 2007, ப. 58.
- ↑ "Rajagopuram — pride of Srirangam". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 6 செப்டம்பர் 2014.
- ↑ "ஸ்ரீரங்கம் கோயிலில் உலக நன்மைக்காக 57 ஆண்டுகளுக்குப் பிறகு 1001 கலச அபிஷேகம்". தினமணி. 27 ஆகஸ்டு 2014. http://www.dinamani.com/religion/2014/08/26/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-1001-/article2399641.ece. பார்த்த நாள்: 27 August 2014.
- ↑ உப சன்னதிகள், 11 கோபுரங்களுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் தி இந்து தமிழ் 09 செப்டம்பர் 2015
- ↑ ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 2 கட்டமாக கும்பாபிஷேகம், தமிழ் முரசு, 24 ஆகஸ்டு 2015
- ↑ 43 உபசன்னதிகள், 11 கோபுரங்களுக்கு நடைபெறவுள்ள முதல் கட்ட கும்பாபிஷேகத்துக்கு ஸ்ரீரங்கம் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்: 7-ம் தேதி இரவு யாகசாலை பிரவேசம், தி இந்து, 4 செப்டம்பர் 2015
- ↑ ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம், தினமணி, 18 நவம்பர் 2015
- ↑ எஸ்.கல்யாணசுந்தரம் (5 ஆகத்து 2018). "திருப்பணியால் மீண்ட திருவரங்கம் கோயில்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 6 ஆகத்து 2018.
வெளி இணைப்புக்கள்
Sri Ranganathaswamy Temple (Srirangam)
என்பதின் ஊடகங்கள் Wikimedia-விலும் உள்ளன.
- வேங்கடம் முதல் குமரி வரை 3/தென்னரங்கத்து இன்னமுதன்
- கலாச்சாரத்தின் அடையாளமான கோயில்!
- பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி ஆலயம்
- சிறீரங்கம் கோவில் இணையத்தளம்
- http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=31
- திருவரங்கத்தில் கம்பன்
- [1]
- [2]
- கோவில் வரலாறு உள்ள தளம்
- அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில் தினமலர்
- ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் தினமணி