திருப்பார்த்தன் பள்ளி
திருப்பார்த்தன் பள்ளி | |
---|---|
படிமம்:Thiruparthanpalli1.jpg | |
ஆள்கூறுகள்: | 11°10′11″N 79°47′50″E / 11.16972°N 79.79722°ECoordinates: 11°10′11″N 79°47′50″E / 11.16972°N 79.79722°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | தாமரையாள் கேள்வன் கோயில் |
பெயர்: | திருப்பார்த்தன் பள்ளி |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
அமைவு: | பார்த்தன்பள்ளி, திருநாங்கூருக்கு அருகில் |
கோயில் தகவல்கள் | |
உற்சவர்: | பார்த்தசாரதி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிட கட்டிடக்கலை |
திருப்பார்த்தன் பள்ளி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழிக்கு அருகிலும் திருவெண்காட்டிலிருந்து சுமார் 2 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. திருவெண்காட்டிலிருந்து நடந்தே செல்லலாம். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளில் இதுவும் ஒன்று. பார்த்தனுக்காக (அர்ஜுனன்) உண்டான கோவிலானதால் பார்த்தன் பள்ளியாயிற்று. பார்த்தனாகிய அர்ஜூனனுக்கு இவ்விடத்து ஒரு கோவில் உண்டு. வருணன் இவ்விடத்து திருமாலைக்குறித்து கடுந்தவமியற்றித் தனக்கு பார்த்தசாரதியாக காட்சியளிக்குமாறு வேண்ட அவ்விதமே நடந்தபடியால் பார்த்தசாரதி பள்ளியென வழங்கிப் பிறகு பார்த்தன் பள்ளியாயிற்றென்பர்.[1] திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் இங்கு எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனையும் எடுத்துச் செல்வர்.[1]
விவரம் | பெயர் |
---|---|
இறைவன் | மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தாமரையாள் கேள்வன் |
இறைவி | தாமரை நாயகி, ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் |
தீர்த்தம் | கட்க புஷ்கரணி |
விமானம் | நாராயண விமானம் |
தலவரலாறு
தனியாக யாத்திரை மேற்கொண்ட அர்சுனன் தென்னாட்டில் பூம்புகார் சங்கம முகத்திற்கு நீராட வந்த போது அங்கிருந்த புரசங்காடு எனும் வனப்பகுதியினை அடைந்தார். வனப்பகுதியில் தாகம் எழ, நீர் தேடிச் சென்ற போது அகத்தியர் ஆசிரமம் சேர்ந்து, அவரிடம் தாகம் தீர கமண்டலத்திலிருந்து நீரைப்பருக அளிக்க வேண்ட, அகத்தியரும் தந்தார்.ஆனால் அர்சுனனால் அருந்த இயலாதபடி நீர் மறையவே வருந்தி காரணம் வேண்ட, அகத்தியரும் ஞானதிருஷ்டி மூலம் காரணத்தைக் கண்டு தெரிவித்தார்.
பல்வேறு சோதனையிலும் காத்த கண்ணனை நினையாது என்னிடம் நீர் கேட்டது பொறுக்காததால் கண்ணன் செய்த லீலை இது என்று கூற, அர்சுனன், கண்ணனை நினைத்து வேண்ட, அங்கு தரிசனம் தந்த கண்ணன், அர்சுனனின் கத்தியால் பூமியை கீறச்சொல்ல, அதிலிருந்து நீர் வந்தது. அத்தீர்த்த நீரைப் பருகி தாகம் தீர்ந்தான் அர்சுனன்.
அகத்தியரின் வேண்டுகோளுக்கிணங்க அங்கேயே கண்ணன் தங்கிவிட்ட தலம் பார்த்தன்பள்ளி என்றாயிற்று.[2]
சங்க காலத்தில்
ஆடி அமாவாசை தினத்தில் பூம்புகார் காவிரி சங்கமத்திற்கு எழுந்தருளச் செல்லும் போது அவ்விழாவை சோழ மன்னர்களே முன்னிற்று தீர்த்தவாரி உற்சவத்தை சிறப்பாக நடத்தியது பற்றிய குறிப்பு அடையாறு தமிழாராய்ச்சி நிறுவனம் (International Institute of Tamil Studies) வெளியிட்டுள்ள ’சங்க கால வரலாறு’ நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.[2]
சிதிலமடைதல்
இத்திருக்கோயில் மிகவும் பழுதுபட்டதால், புனர்நிர்மாணக்குழு அமைக்கப்பட்டு சீரமைப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. சீரமைக்க சுமார் ஒரு கோடி ரூபாய் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.[2]
அமைவிடம்
சீர்காழியிலிருந்து 15 கி.மீ தூரத்திலும் திருவெண்காட்டிலிருந்து 4 கி.மீ தொலைவிலும் திருப்பார்த்தன்பள்ளி அமைந்துள்ளது.[2]