பாயிரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழ் இலக்கியத்தில் பாயிரம் என்பது பழங்காலத் தமிழ் நூல்களிலும், தமிழ் மரபைத் தழுவி அமையும் இக்கால நூல்களிலும் அவற்றுக்கான முன்னுரை போல் அமையும் பகுதி ஆகும். இது பாடலாக அமைந்திருப்பதே வழக்கு.

பாயிரம் என்பதற்கு வரலாறு என்பது பொருள். நூலில் பாயும் பொருளைக் கூறுவது பாயிரம். நூலில் பதிந்துள்ள பொருளைக் கூறுவது பதிகம். இரண்டும் பழமையான குறியீடுகள். இரண்டும் ஒரே பொருளை உணர்த்துவன. 10 பாடல்கள் அடங்கிய தொகுப்பை ஐங்குறுநூறு பத்து என்று குறிப்பிடுகிறது[1]. இந்தப் பத்தின் அடுக்கினை ஆழ்வார் பாடல்களின் தொகுப்பு, பத்து என்றே குறிப்பிடுகிறது [2].தேவாரத்தில் வரும் 10 பாடல்களின் தொகுப்பினைப் பதிகம் என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றனர்[3]. பிற்காலத்தில் பதிகம் என்னும் பெயரில் பல நூல்கள் தோன்றின[4]. பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் நூல் வகைகளில் ஒன்று பதிகம்[5]

”முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம்

புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்”நன்னூல்- 1

முகவுரை, பதிகம் என்பவை பாயிரத்துக்கு உரிய வேறு பெயர்களாகும். நூலின் பெருமைகளை அந்நூலுக்கு அணிவித்து விளக்குவது அணிந்துரை எனப்படும். நூலைப்பற்றிப் புனைந்து கூறுவது புனைந்துரை ஆகும். புறவுரை என்பது அந்நூலில் கூறப்படாத பொருளைப்பற்றிக் கூறுவது என்றும் தந்துரை என்பது நூலில் சொல்லப்பட்டுள்ள பொருள் அல்லாதவற்றைத் தந்து விளக்குவது என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

பாயிரம் என்னும் சொல்

பாயிரம் என்னும் சொல் தொல்காப்பியத்தில் இல்லை. சங்க நூல்களிலும் இல்லை. சங்கம் மருவிய காலத்து நூலான 'பழமொழி'யில்தான் பயிலப்பட்டுள்ளது. அடுத்து, பெருங்கதை நூலில் வருகிறது. இராசனை என்பவள் பந்தாடத் தொடங்கும்போது இப்படியெல்லாம் ஆடப்போகிறேன்; கண் இமைக்காமல் எண்ணிக்கொள்ளுங்கள் என்று 'பாயிரம்' கூறிவிட்டுப் பந்தாடத் தொடங்கினாள் என்று வருகிறது. மானனீகை என்பவளும் இப்படிச் சொல்லிவிட்டுப் பந்தாடத் தொடங்கியிருக்கிறாள்.

வகைகள்

பாயிரங்கள் இரண்டு வகைகளாக உள்ளன. இவை,

என்பன. பொதுப் பாயிரம் பொதுவாக எல்லா நூல்களுக்குமே உரிய இலக்கணங்களைக் கூறுவது. சிறப்புப் பாயிரம் அஃது இடம்பெறும் நூலுக்கு உரிய இலக்கணங்களைக் கூறி அமைவது. எல்லா நூல்களிலும் இருவகைப் பாயிரங்களும் இருப்பதில்லை. எடுத்துக்காட்டாகத் தமிழில் இன்று கிடைக்கும் மிகப் பழைய நூலான தொல்காப்பியத்தில் பொதுப் பாயிரம் இல்லை. சிறப்புப் பாயிரம் மட்டுமே உள்ளது. நன்னூலில் இரண்டு வகைப் பாயிரங்களும் காணப்படுகின்றன.

இருநூலுக்கு ஒரு பாயிரம்

சிவஞான சித்தியார் என்னும் நூலின் சுப பக்கம், பர பக்கம் என்னும் இரு பகுதிகளுக்கு ஒரு கோட்டான் இரு செவியன் எனத் தொடங்கும் ஒரே விநாயகர் பாடல் பாயிரமாக அமைந்துள்ளது. அதே போல, தேவி காலோத்தரம், சர்வ ஞானோத்திரம் என்னும் இரண்டு நூல்களுக்கும் ஒரே பாயிரப்பாடல் அமைந்துள்ளது. இப்படி அமையும் மரபினை 'வித்தியாபாதம்' என்று வடமொழியாளரும், ஞானபாதம் என்று தமிழ்நூல் ஆசிரியர்களும் குறிப்பிடுகின்றனர்.[6]

அடிக்குறிப்புகள்

  1. வேட்கைப் பத்து, வேழப் பத்து, களவன் பத்து, தோழிக்குரைத்த பத்து, புலவிப் பத்து, தோழி கூற்றுப் பத்து, கிழத்தி கூற்றுப் பத்து, புனலாட்டுப் பத்து, புலவி விராய பத்து, எருமைப் பத்து என்பன ஐங்குறுநூறு மருதத்திணையில் வரும் 100 பாடல்களின் பத்துப் பிரிவுகளுக்குத் தரப்பட்டுள்ள பெயர்கள்.
  2. 10 பாடல் கொண்டது ஒரு திருமொழி. 10 திருமொழி கொண்டது ஒரு பத்து. இப்படிப் பெரியாழ்வார் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
  3. கோளறு பதிகம், திருநீற்றுப் பதிகம், திருள்ளாறு பதிகம்.
  4. பாய்ச்சலூர்ப் பதிகம், மயிலாப்பூர் பத்தும் பதிகம்,
  5. பன்னிரு பாட்டியல் நூற்பா 312.
  6. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 14ஆம் நூற்றாண்டு, பதிப்பு 2005, பக்கம் 206

இவற்றையும் காண்க

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பாயிரம்&oldid=19805" இருந்து மீள்விக்கப்பட்டது