பன்னிரு பாட்டியல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பன்னிரு பாட்டியல் என்பது ஒரு பாட்டியல் நூலாகும். பல்வேறு பாட்டியல் நூல்களிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு நூலே இது. இந்திரகாளியம், அவிநயம், பரணர் பாட்டியல், பொய்கையார் பாட்டியல், செயிற்றியம் போன்ற முந்திய நூல்களே இதற்கு மூலமாக அமைந்தவை எனத் தெரியவருகிறது. இம்மூல நூல்களை இயற்றியவர்கள் அகத்தியர், அவிநயனார், இந்திரகாளியார், கபிலர், கல்லாடர், கோவூர் கிழார், சீத்தலையார், செயிற்றியனார், சேந்தம் பூதனார், நற்றத்தனார், பரணர், பல்காயனார், பெருங்குன்றூர்க் கிழார், பொய்கையார், மாபூதனார் என 15 புலவர்களின் பெயர்கள் நூலில் காணப்படுகின்றன. எனினும் பன்னிரு பாட்டியல் என்று பெயரிட்டு இந் நூலைத் தொகுத்தவர் யார் என்பது தெரியவில்லை.

இதன் பெயர்க் காரணம் இன்னது எனத் தெரியவரவில்லை. இது மங்கலம், சொல், எழுத்து, தானம், பால், உண்டி, வருணம், நாள், கதி, கணம், கன்னல், புள் என்னும் பன்னிரண்டு பொருத்தங்களைப் பற்றிக் கூறுவதால் பன்னிரு பாட்டியல் என்று பெயர் பெற்றிருக்கக் கூடும் என்பது சிலரது கருத்து. ஆனால் இதனை மறுப்பவர்களும் உளர்[1].

காலம்

இதன் காலம் பற்றித் தெளிவு இல்லை. எனினும் இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது சிலர் கருத்து. வேறு சிலரோ இது 14-ஆம் நூற்றாண்டினது ஆகலாம் என்கின்றனர்[1].

அமைப்பு

பாயிரம் தவிர்ந்த 360 பாக்களைக் கொண்டு இயற்றப்பட்ட இந்நூல் மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை,

  • எழுத்தியல்,
  • சொல்லியல்,
  • இனவியல்

என்பனவாகும். இவற்றில் 96 பாடல்கள் எழுத்தியலிலும், 59 சொல்லியலிலும், 205 இனவியலிலும் அடங்குகின்றன

முதலாம் இயலான எழுத்தியல், எழுத்து, வருணம், கதி, உண்டி, பால், தானம், கன்னல், புள், நாள் என்னும் ஒன்பது பொருத்தங்கள் பற்றிக் கூறுகின்றது. சொல்லியலில், சீர்க்கணம், மங்கலம், சொல் என்னும் மூன்று பொருள்கள் விளக்கப்படுகின்றன. மூன்றாவதான இனவியல் பாக்கள் பற்றியும் பாவினங்கள் பற்றியும் கூறும் பகுதியாகும். மூன்றாம் இயலின் இந்தப் பாவினங்கள் பகுதியிலேயே 68 வகையான சிற்றிலக்கியங்கள் பற்றிய விளக்கங்கள் காணப்படுகின்றன.

குறிப்புகள்

  1. 1.0 1.1 இளங்குமரன், இரா., 2009. பக்.331

உசாத்துணைகள்

  • இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.

இவற்றையும் பார்க்கவும்

தமிழ் இலக்கணப் பட்டியல்

"https://tamilar.wiki/index.php?title=பன்னிரு_பாட்டியல்&oldid=13362" இருந்து மீள்விக்கப்பட்டது