பொதுப் பாயிரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பொதுப் பாயிரம் என்பது நூலாசிரியர் தாம் கூறப்போகும் கருத்துக்களை முன்னுரையாக முதலில் கூறும் பகுதி.

இது ஒரு நூலின் முன்னர் சிறப்புப் பாயிரத்துக்கு அடுத்து இடம்பெறும் ஒரு உறுப்பு ஆகும். இது நூலுக்கு ஒரு முகவுரை போன்றது எனினும், இது குறிப்பிட்ட நூலைப்பற்றி அல்லாமல் பொதுவாக நூல்களைப் பற்றி எடுத்துக்கூறும் ஒரு பகுதி ஆகும். எல்லா நூல்களிலும் பொதுப் பாயிரம் இருப்பதில்லை. எடுத்துக்காட்டாகத் தமிழில் இன்று கிடைக்கும் மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்தில் பொதுப் பாயிரம் காணப்படவில்லை. அத்துடன் நூலிலும் பொதுவாகப் பாயிரம் என்பது பற்றியே குறிப்பிடுகிறது அல்லாமல் அதனைப் பொது, சிறப்பு என இரண்டாகப் பிரித்துக் கூறவில்லை. எனினும் தொல்காப்பிய உரை நூல்கள் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் என்னும் இரண்டு வகைகள் குறித்து விளக்கம் தருகின்றன[1].

பொதுப் பாயிரத்தின் இலக்கணம்

பொதுப் பாயிரத்தின் இலக்கணத்தைக் கூறும் நன்னூல்,

  1. நூல்
  2. நூலைக் கற்பிக்கும் ஆசிரியன்
  3. அவ்வாசிரியன் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லுதல்
  4. மாணாக்கர்
  5. மாணாக்கர் பாடங் கேட்டல்

ஆகிய ஐந்து செய்திகள் தொடர்பானவற்றை எல்லா நூல்களுக்கும் பொருந்தும்படி கூறுவதே பொதுப்பாயிரம் என்கிறது[2].

  • உண்மையில் இது நூலாசிரியர் கூறும் தொகுப்புரை. தொல்காப்பியம் இடையியல் முதலானவற்றில் இத்தகைய தொகுப்புரை உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே 13ஆம் நூற்றாண்டு நன்னூல் நூலின் பகுதி என இரண்டு பாயிர வகைகளைக் காட்டுகிறது.


நூல்

நூல் என்னும் பொருள்பற்றிப் பொதுவாக எடுத்துக்கூறும் பொதுப் பாயிரத்தில் பின்வரும் விடயங்கள் அடங்கியிருப்பது வழக்கம்:

  1. பாயிரமும் அதன் வகைகளும்
  2. நூல்களும் அதன் வகைகளும்
  3. நால்வகைப் பயன்கள்
  4. ஏழு வகைக் கொள்கைகள்
  5. பத்துவகைக் குற்றங்கள்
  6. பத்துவகை அழகுகள்
  7. முப்பத்திரண்டு உத்திகள்
  8. ஒத்து, படலம் ஆகிய இருவகை உறுப்புக்கள்
  9. நூலின் பல்வேறுவகை நடைகள்

குறிப்புக்கள்

  1. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006. பக். 2
  2. இளவரசு, சோம., 2009. பக். 13,14

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணைகள்

  • இளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).
  • தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)
  • பவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.
"https://tamilar.wiki/index.php?title=பொதுப்_பாயிரம்&oldid=20142" இருந்து மீள்விக்கப்பட்டது