மு. அருணாசலம்
மு. அருணாசலம் | |
---|---|
பிறப்பு | திருச்சிற்றம்பலம், தஞ்சாவூர் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம்) | 29 அக்டோபர் 1909
இறப்பு | 23 நவம்பர் 1992 | (அகவை 83)
பணி | தமிழறிஞர் |
பெற்றோர் |
|
மு. அருணாசலம் (Mu. Arunachalam, 29 அக்டோபர் 1909 – 23 நவம்பர் 1992)[1], தமிழுக்கு மிக முக்கியமான பல பங்களிப்புகளைச் செய்த பெரும் தமிழறிஞர். நூற்றாண்டு வாரியாகத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர். தமிழிசை இலக்கிய வரலாறு, தமிழிசை இலக்கண வரலாறு ஆகியவற்றையும் இவர் எழுதியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
நாகை மாவட்டத்தில்(முன்பு தஞ்சை மாவட்டம்) திருச்சிற்றம்பலம் என்னும் சிற்றூரில் 1909-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி முத்தையா பிள்ளைக்கும்-கௌரியம்மாளுக்கும் மூத்த மகனாய்ப் பிறந்தார் மு.அருணாசலம். தொடக்கத்தில் திருச்சிற்றம்பலத்தில் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் அடுத்து, மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் (திருத்துருத்தி) உயர்நிலைப் பள்ளியிலும் அதன்பின் சிதம்பரம் மீனாட்சிக் கல்லூரியிலும் கல்வி கற்று, கணிதத்தில் பட்டம் பெற்றார். சென்னையில் அரசு ஊழியராகப் பணிபுரிந்து, அதனை விடுத்து, காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டுகள் தத்துவப் பேராசிரியராகவும், ராஜா சர் முத்தையா செட்டியார் அமைத்த தமிழ்-வடமொழி நிறுவனத்தின் இயக்குநராகவும் நிறைவாகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதித்துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.
தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்ற அருணாசலம் இலக்கிய, இலக்கண தத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலும், ஓலைச்சுவடிகளைத் தேடிச் சேகரிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். மேலும், கல்வெட்டுகளைப் படிப்பதிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். பிறசமயக் காழ்ப்பற்ற சைவப்பற்று கொண்டவர்.மு. வரதராசனார், கா.சு.பிள்ளை, உ.வே.சாமிநாதன், வையாபுரிப்பிள்ளை, திரு.வி.கலியாணசுந்தரம்., ரசிகமணி டி.கே.சி, வெ.சாமிநாத சர்மா, கல்கி, வ.ரா., கருத்திருமன் போன்ற தம் சமகாலத்திய தமிழறிஞர்களோடும் அரசியல் தலைவர்களோடும் நெருக்கமான பழக்கம் கொண்டிருந்தார்.காசிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது இந்தியக் குடியரசுத் தலைவராகப் பின்னர்ப் பணியேற்ற தத்துவமேதை ராதாகிருஷ்ணனோடும் பழகியுள்ளார்.[2]
இவரைப் பற்றித் திரு.வி.க. தம் வாழ்க்கைக் குறிப்பில் ""அருணாசலனாரின் நீண்ட வடிவம் மலர்ந்த முகமும் தண்மை நோக்கும் எனக்குப் புலனாகும் போதெல்லாம் என் உள்ளம் குளிரும்...அருணாசலனார் தமிழ்நடை இக்காலத்துக்கு உரியது. அஃது இக்காலத் தமிழ்த் தாள்களில் இடம் பெறப் பெற, தமிழ் விடுதலையடைந்து ஆக்கம் பெறும் என்பது எனது உட்கிடக்கை என்று எழுதியுள்ளார். இவர் பத்திரிகையாசிரியப்பணி, கல்வி நிலையங்களை நிறுவிப் பராமரிக்கும் திறமை, தேசியப் பற்று ஆகிய பண்புகளைக் கொண்டவர்.
தமிழ்ப்பற்று
மு.அருணாசலம், கணக்கு பாடத்தை எடுத்துப் படித்துப் பட்டம் பெற்றவராயினும், உ. வே. சாமிநாதையர், ச. வையாபுரிப் பிள்ளை ஆகியவர்களோடு நெருங்கிப் பழகியதால் தமிழ் படித்து எம்.ஏ. பட்டம் பெற்றார். தமிழாராய்ச்சியில் ஈடுபாடு கொண்டார். தமிழ் இலக்கிய வரலாறு குறித்த விரிவான ஆய்வுமுடிவுகள் கொண்ட நூல்களை எழுதினார். அறிஞர்கள் கா. சு. பிள்ளை, தஞ்சை சீனிவாசபிள்ளை ஆகியோர் எழுதிய தமிழிலக்கிய வரலாற்று நூல்களே அத்துறையில் முன்னோடி நூல்களாகும். ஆனால், மு. அருணாசலம் 9-ஆம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டு வரையிலான இலக்கிய வரலாற்றை கால முறைப்படி மிக விளக்கமாக ஆராய்ந்து பதினான்கு தொகுதிகளாக வெளியிட்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றுத் துறையில் முத்திரை பதித்தார். மிக அரியதான பலருக்கும் பெயர்கூடத்தெரியாத தமிழ் நூல்களைப் பற்றியும் தமிழ்ப்புலவர்களைப் பற்றியும் பல தகவல்களை இந்நூலில் காணலாம்.
மு.அருணாசலம் ஆங்கிலத்திலும் குறிப்பிடத்தக்க நூல்களை எழுதியுள்ளார். தம் பட்டறிவால் பழத்தோட்டம், பூந்தோட்டம், வாழைத்தோட்டம், வீட்டுத்தோட்டம், காய்கறித்தோட்டம் போன்ற நூல்களையும், படிப்பறிவால் இலக்கிய வரலாறு, புத்தகமும் வித்தகமும், திவாகரர் போன்ற நூல்களையும் இலக்கிய ஆர்வத்தால் காற்றிலே மிதந்த கவிதை, தாலாட்டு இலக்கியம் போன்ற நாட்டுப்புற இலக்கியத் தொகுப்பு நூல்களையும், சாத்திரப் புலமையால் தத்துவப்பிரகாசம் உரை, திருக்களிற்றுப்படியார் உரை போன்ற உரைநூல்களையும் தந்துள்ளார். அவற்றுள் காய்கறித்தோட்டம் தமிழக அரசின் பரிசு பெற்றது.
உ.வே.சா. உடன் பழகியதால் ஏடு சேகரிக்கும் பழக்கமும் அவருக்கு இருந்தது. அதன் விளைவாக 11-ஆம் திருமுறையில் இடம்பெற்றுள்ள ஈங்கோய்மலை எழுபது என்ற நூல் முழுமையடைந்தது. அவர் சேகரித்த சுவடிகளில் "திருத்துருத்தி ஆபத்தோத்தாரணன் என்பவரால் எழுதப்பட்டது' என்னும் குறிப்போடு கூடிய அழகிய சுவடி வெளியிடப்பட்டது. இஃது இன்றைய கையடக்கப் பதிப்புகளை விடச் சிறிதானதாகும்.[2]
இசை ஆய்வு
மு.அருணாசலனார், இசைத்தமிழ் பற்றிய வரலாறு பற்றிய இரண்டு ஆய்வு நூல்களைமிக விரிவாக எழுதியுள்ளார். தமிழ் இசை இலக்கிய வரலாறு, தமிழ் இசை இலக்கண வரலாறு என்பவையே அவை. மு. அருணாசலனார் இந்த இருநூல்களை எழுதி வெளியிடாமல் கையெழுத்துப் படியாக வைத்தவண்ணம் இயற்கை எய்தினார்.மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் உல.பாலசுப்பிரமணியன் இந்தக் கையெழுத்துப்படிகளை அரிதின் முயன்று வெளிக்கொண்டு வந்துள்ளார்.[3][4] இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழில் இசை வளர்ந்த வரலாற்றை, தக்க ஏற்புடைய சான்றாதாரங்களுடன் விளக்கும் இப்பெரு நூல்கள் தமிழின் இசை தொடர்பான அனைத்தையும் ஆவணப்படுத்துகிற களஞ்சியமாக விளங்குகின்றன. “கருநாடக சங்கீதம் என்ற ஒன்று இல்லை; அந்தப் பெயரால் சொல்வதெல்லாம் தமிழிசை தான். திருவையாற்றில் தியாகையர் பாடியதெல்லாம் தமிழிசையைத் தெலுங்கு மொழியில் பாடிய கீர்த்தனங்கள்’’, என்னும் கருத்தை சான்றாதாரங்களுடன் இவை நிறுவுகின்றன.[5]
இந்நூல்களுள் தெளிவு தர வேண்டுமென்பதற்காகக் கருநாடக சங்கீத மும்மூர்த்திகள் பற்றிய, அடிப்படை வரலாறுகள் தரப்பட்டுள்ளன. தெலுங்கு, சமஸ்கிருத கீர்த்தன இசைகளின் தோற்றம்; வளர்ச்சி பற்றிய விவரங்களையும் அவை எவ்வாறு தமிழிசையினின்று மொழிமாற்றம் பெற்றன என்பதையும் இந்நூல்களில் காணலாம். சமஸ்கிருத இசை இலக்கண நூல்கள் பற்றிய விவரமும் விளக்கமும் இவற்றில் உள்ளன. இவ்வடமொழி குறிப்புகள் முக்கியமானவை. பொதுவாக இந்நூல்கள் தரும் செய்திகள் தமிழிசை வரலாறு பற்றி மட்டும் அமையாமல், தமிழகத்தில் நிகழ்ந்த பொது இசை பற்றிய அனைத்து வரலாறுகளையும் தெரிவிக்கின்றன. கர்நாடக இசை என்பது பழந்தமிழ் இசையே என்பதனைக் காட்டி தமிழிசைச் சிற்பிகளான முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை ஆகியோரின் வரலாற்றை விளக்கி, மூவருமே கருநாடக இசையின் ஆதி மும்மூர்த்திகள் என நிறுவி, உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமையும் அருணாசலனாரையே சாரும்.[5]
தேசப்பற்று
காந்தியடிகளின் ஆதாரக் கல்வி, கிராம நிர்மாணத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு 1946-இல் வார்தா சேவா கிராமத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். அங்கு வினோபா பாவே, ஜே. சி. குமரப்பா, ஜே.பி.கிருபளானி ஆகியவர்களின் நட்புக் கிடைத்தது. அதன் விளைவாகத் தம் சொந்த ஊரில், தம் சொந்த முயற்சியால் காந்தி வித்தியாலயம் என்னும் கல்வி நிறுவனத்தை அமைத்தார்.
தொண்டுள்ளம்
மு. அருணாசலம் தம் ஊரில் தொடக்கப் பள்ளி, மகளிர் உயர்நிலைப் பள்ளி, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, அனாதைக் குழந்தைகள் விடுதி ஆகியவற்றை ஏற்படுத்தினார். அவர் நடத்திய ஆசிரிய ஆதாரப் பயிற்சிப் பள்ளி, பிரிவுபடாத தஞ்சை மாவட்டத்தில் அந்நாளில் எட்டாம் வகுப்புக்கு மேல் கல்வியைத் தொடர முடியாத ஏழை மாணவர்களுக்குத் மிகவும் உதவியாக அமைந்தது. இப்பள்ளியில் கட்டணமேதுமில்லாமலேயே அவர் மாணவர்களைச் சேர்த்துவந்தார்.
சமயம்
தம் பகுதியில் அமைந்திருக்கும் தருமை, திருப்பனந்தாள், திருவாவடுதுறை ஆகிய மூன்று சைவ மடங்களோடும் இணக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தருமை ஆதீனத்தைத் தோற்றுவித்த குருஞானசம்பந்தரின் வாழ்க்கை குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதிய நூல் ஆதீனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. சைவ சித்தாந்த சமாஜம் (இன்று சைவ சித்தாந்தப் பெருமன்றம்) நடத்திவரும் சிந்தாந்தம் தமிழ் - ஆங்கில இதழ்களின் ஆசிரியராக இருந்து பல சமயக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.
சிறப்பு
தமிழ்ப் பல்கலைக்கழகம் 1991 டிசம்பரில் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் அளித்து கௌரவித்தது.
மறைவு
தமிழிலக்கியம், தமிழிலக்கணம், தமிழிசை ஆகியவற்றுக்குத் தொண்டாற்றிய மு. அருணாசலம் 1992-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி மறைந்தார்.
எழுதிய நூல்கள்
இலக்கிய வரலாறு
- தமிழ் இலக்கிய வரலாறு ஒன்பதாம் நூற்றாண்டு பாகம் 1
- தமிழ் இலக்கிய வரலாறு ஒன்பதாம் நூற்றாண்டு பாகம் 2
- தமிழ் இலக்கிய வரலாறு பத்தாம் நூற்றாண்டு
- தமிழ் இலக்கிய வரலாறு பதினோராம் நூற்றாண்டு
- தமிழ் இலக்கிய வரலாறு பன்னிரண்டாம் நூற்றாண்டு பாகம் 1
- தமிழ் இலக்கிய வரலாறு பன்னிரண்டாம் நூற்றாண்டு பாகம் 2
- தமிழ் இலக்கிய வரலாறு பதின்மூன்றாம் நூற்றாண்டு
- தமிழ் இலக்கிய வரலாறு பதினான்காம் நூற்றாண்டு
- தமிழ் இலக்கிய வரலாறு பதினைந்தாம் நூற்றாண்டு
- தமிழ் இலக்கிய வரலாறு பதினாறாம் நூற்றாண்டு பாகம் 1
- தமிழ் இலக்கிய வரலாறு பதினாறாம் நூற்றாண்டு பாகம் 2
- தமிழ் இலக்கிய வரலாறு பதினேழாம் நூற்றாண்டு
ஆய்வு நூல்கள்
- திருவாசக ஆராய்ச்சிக் குறிப்புகள்
- சொற்சுவை
- காசியும் குமரியும்
- இன்றைய தமிழ் வசன நடை
- தமிழ் இசை இலக்கிய வரலாறு
- தமிழ் இசை இலக்கண வரலாறு
நாட்டுப்புறவியல்
- காற்றிலே மிதந்த கவிதை,
- தாலாட்டு இலக்கியம் போன்ற
- நாட்டுப்புற இலக்கியத் தொகுப்பு
தோட்டக்கலை
- பழத்தோட்டம்
- பூந்தோட்டம்
- வாழைத்தோட்டம்
- வீட்டுத்தோட்டம்
- காய்கறித்தோட்டம் (தமிழக அரசின் பரிசு பெற்றது)
சமயம்
- தத்துவப்பிரகாசம் உரை,
- திருக்களிற்றுப்படியார் உரை
- திவாகரர்
- குரு ஞானசம்பந்தர் வரலாறு
பிற
- வால்டேரும் பெரியாரும்
- புத்தகமும் வித்தகமும்
மேற்கோள்கள்
- ↑ "அறிஞர்களின் அறிஞர் மு.அருணாசலம்". தினமணி. http://www.dinamani.com/editorial_articles/article954197.ece?service=print. பார்த்த நாள்: 10 ஏப்ரல் 2015.
- ↑ 2.0 2.1 முனைவர் தெ.ஞானசுந்தரம் (Aug 16, 2009). "அறிஞர்களின் அறிஞர் மு.அருணாசலம்". தினமணி. http://www.dinamani.com/editorial_articles/article954197.ece?service=print. பார்த்த நாள்: 10 ஏப்ரல் 2015.
- ↑ முனைவர் மு.இளங்கோவன் (7 சனவரி 2010). "அறிஞர் மு.அருணாசலம் பிள்ளை நூற்றாண்டு விழா". முனைவர் மு.இளங்கோவன். http://muelangovan.blogspot.in/2010/01/blog-post_07.html. பார்த்த நாள்: 10 ஏப்ரல் 2015.
- ↑ ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி (13 செப்டம்பர் 2012). "அறிஞர்களின் அறிஞர் மு.அருணாசலம்". ஞானாலயா இம் மூலத்தில் இருந்து 2016-01-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160107200310/http://www.gnanalaya-tamil.com/2012/09/blog-post_13.html. பார்த்த நாள்: 10 ஏப்ரல் 2015.
- ↑ 5.0 5.1 தமிழண்ணல் (12 ஜனவரி 2011). "தமிழ்மொழி வழங்கிய இசைச் செல்வம்". கீற்று. http://keetru.com/index.php/2009-10-07-11-03-58/2011/12397-2011-01-12-10-28-09. பார்த்த நாள்: 10 ஏப்ரல் 2015.
வெளி இணைப்புகள்
- நினைவுவிழா
- அறிஞர் மு.அருணாசலம் பிள்ளை நூற்றாண்டு விழா - முனைவர் மு.இளங்கோவன்