போலி
போலி என்பது ஓர் எழுத்து நிற்க வேண்டிய இடத்தில் வேறோர் எழுத்து நின்று அதைப் போலப் பொருள் தரும் சொல் ஆகும். சொற்களில் எழுத்துகள் நிற்கும் இடங்களைப் பொருத்து, முதல் போலி, இடைப்போலி, மொழி இறுதிப் போலி அல்லது கடைப்போலி என்று எழுத்துப் போலியை நன்னூல் மூன்று வகைகளாகப் பிரிக்கிறது.
முதற் போலி
சொல்லுக்கு முதலிலும் நடுவிலும் ச, ஞ, ய என்னும் எழுத்துகளுக்கு முன் வரும் அகரத்துக்குப் பதிலாக ஐகாரம் போலியாக வந்து பொருள் தரும்.[1]
எடுத்துக்காட்டுகள்:-
மஞ்சு - மைஞ்சு, மயல் - மையல், பசல் - பைசல் முதலிய சொற்களில் மொழிக்கு முதலில் ச, ஞ, ய என்னும் எழுத்துகளுக்கு முன் அகரத்திற்குப் போலியாக ஐகாரம் வந்து நிற்கிறது. இது முதற் போலி ஆகும்.
அமச்சு - அமைச்சு, அரயர் - அரையர் முதலிய சொற்களில் மொழிக்கு இடையில் உள்ள ச, ஞ, ய என்னும் எழுத்துகளுக்கு முன் அகரத்திற்குப் போலியாக ஐகாரம் வந்து நிற்கிறது. இது இடைப் போலி ஆகும்.
இடைப் போலி
மொழியிடையில் சில இடங்களில் ஐகாரத்தை அடுத்தும் யகர மெய்யை அடுத்தும் நிற்கும் நகர மெய்க்குப் பதில் ஞகரமெய் எழுத்துப்போலியாக நின்று பொருள் தரும்.[2]
எடுத்துக்காட்டுகள்:-
ஐந்நூறு - ஐஞ்ஞூறு, மைந்நின்ற - மைஞ்ஞின்ற முதலிய சொற்களில் மொழிக்கு இடையில் உள்ள ஐகாரத்திற்குப் பின் ஞகரம் போலியாக வந்து பொருள் தருகிறது.
செய்ந்நின்ற - செய்ஞ்ஞின்ற , சேய்நலூர் - சேய்ஞலூர் முதலிய சொற்களில் மொழிக்கு இடையில் உள்ள நகரத்திற்குப் பின் ஞகரம் நின்று போலியாக வருகிறது.
இறுதிப் போலி
அஃறிணைப் பெயர்களின் இறுதியில் ஈற்றில் நிற்கும் மகரமெய்க்குப் பதிலாக னகரமெய் போலியாக வந்து நின்று பொருள் தரும்.[3]
எடுத்துக்காட்டு:- அகம் - அகன், கலம் - கலன் முதலிய சொற்களில் மொழிக்கு இறுதியில் மகரத்துக்குப் பதிலாக னகரம் போலியாக வந்து பொருள் தருகிறது.