அ
தமிழ் எழுத்துக்கள் | |||||
---|---|---|---|---|---|
அ | ஆ | இ | ஈ | உ | |
ஊ | எ | ஏ | ஐ | ஒ | |
ஓ | ஔ | ஃ | |||
க் | ங் | ச் | ஞ் | ட் | |
ண் | த் | ந் | ப் | ம் | |
ய் | ர் | ல் | வ் | ழ் | |
ள் | ற் | ன் | |||
அ () தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் முதலாவதாக வைக்கப்பட்டுள்ள எழுத்தும் இதுவே. இது மொழியின் ஓர் ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கக்கூடும். இவ்வெழுத்தை "அகரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஆனா" என்பது வழக்கம்.
"அ"- ஒலிக்கும் கால அளவு
தமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் அ உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது குற்றெழுத்து அல்லது குறில் எனப்படுகின்றது. குற்றெழுத்துகள் ஒரு மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் ஒரு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]
தமிழில் உள்ள சுட்டெழுத்துகள் மூன்றில் இதுவும் ஒன்று. இது சேய்மைச் சுட்டைக் குறிக்கப் பயன்படுகின்றது[2]. எடுத்துக்காட்டாக அவன், அது, அங்கே போன்ற சேய்மைச் சுட்டுச் சொற்களில் அ முதல் எழுத்தாக நிற்பதைக் காணலாம். இந்த எடுத்துக் காட்டுக்களில் அ சொல்லின் உள்ளேயே வருவதால் அது அகச் சுட்டு எனப்படுகின்றது. அதாவது சொல்லில் உள்ள 'அ' எழுத்தை நீக்கினால் அச்சொல் பொருள் தராது) அ புறச் சுட்டாகவும் வருவதுண்டு. அவ்வாறு வரும்போது அது சொல்லுக்குப் புறத்தே நிற்கும்.[2] அப்பெண் (அ + பெண்), அம்மனிதன் (அ + மனிதன்) போன்ற சொற்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள்.
இனவெழுத்துகள்
எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன.
- இடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பிரிக்கும்போது அ, ஆ வுக்கு இன எழுத்தாக அமையும்.
- பொருள் அடிப்படையில் ஆ, இ. ஈ என்பவற்றுக்கு அ இன எழுத்தாக அமையும்.
- வடிவ அடிப்படையில், ஆ, உ, ஊ என்பன அ வுக்கு இன எழுத்துகள் எனவும் கூறப்படுகின்றது[3].
எழுத்து முறையில் "அ"
முறை என்பது எழுத்துக்களின் ஒழுங்கு. தமிழ் நெடுங்கணக்கில் அ முதல் எழுத்தாக வைக்கப்பட்டுள்ளது என்று முன்னரே கூறப்பட்டது. அகரம் தானும் இயங்கித் தனி மெய்களையும் இயங்கவைக்கும் சிறப்பால் முதலில் வைக்கப்பட்டது என்று தொல்காப்பிய உரையில் இளம்பூரணர் கூறுகிறார்[4]. உயிரெழுத்துகள் எல்லாமே தாமும் தனித்தியங்கி, மெய்களையும் இயங்கவைப்பதால் உயிர்கள் அனைத்தும் மெய்களுக்கு முன் வைக்கப்பட்டன என்றும், உயிர்களுள்ளும் அ. ஆ என்பன பிற உறுப்புக்களின் முயற்சியின்றிப் பிற உயிர்களிலும் குறைந்த முயற்சியுடன் அங்காந்து கூறுவதனால் மட்டும் உருவாவதால் அவை முன் வைக்கப்பட்டன என்றும், ஆ, அ வின் விகாரமே என்பதால் அ முதலில் வைக்கப்பட்டது என்பதும் நன்னூல் விருத்தியுரையில் தரப்படும் விளக்கம் ஆகும்[5].
"அ" வும் மெய்யெழுத்துக்களும்
அ வுடன் மெய்யெழுத்துகள் சேர்ந்து அகர உயிர்மெய்யெழுத்துகள் உருவாகின்றன. இதனை அகர வரிசை எழுத்துகள் என்பர். மெய்யெழுத்துகள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன. தனி மெய்களை எழுதும்போது அவற்றுக்கு மேல் ஒரு புள்ளியிட்டுக் காட்டப்படுகின்றது[6].
18 மெய்யெழுத்துக்களோடும் அகரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.
மெய்யெழுத்துகள் | சேர்க்கை | உயிர்மெய்கள் | ||
---|---|---|---|---|
வரிவடிவம் | பெயர் | வரிவடிவம் | பெயர் | |
க் | இக்கன்னா | க் + அ | க | கானா |
ங் | இங்ஙன்னா | ங் + அ | ங | ஙானா |
ச் | இச்சன்னா | ச் + அ | ச | சானா |
ஞ் | இஞ்ஞன்னா | ஞ் + அ | ஞ | ஞானா |
ட் | இட்டன்னா | ட் + அ | ட | டானா |
ண் | இண்ணன்னா | ண் + அ | ண | ணானா |
த் | இத்தன்னா | த் + அ | த | தானா |
ந் | இந்தன்னா | ந் + அ | ந | நானா |
ப் | இப்பன்னா | ப் + அ | ப | பானா |
ம் | இம்மன்னா | ம் + அ | ம | மானா |
ய் | இய்யன்னா | ய் + அ | ய | யானா |
ர் | இர்ரன்னா | ர் + அ | ர | ரானா |
ல் | இல்லன்னா | ல் + அ | ல | லானா |
வ் | இவ்வன்னா | வ் + அ | வ | வானா |
ழ் | இழ்ழன்னா | ழ் + அ | ழ | ழானா |
ள் | இள்ளன்னா | ள் + அ | ள | ளானா |
ற் | இற்றன்னா | ற் + அ | ற | றானா |
ன் | இன்னன்னா | ன் + அ | ன | னானா |
சொல்லில் அகரம் வரும் இடங்கள்
சொல்லின் முதலில்
தனி அ சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் அ சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்[7]. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ங, ச, ஞ, ட, ண, ய, ர, ல, ழ, ள ற, ன ஆகிய எழுத்துகள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. ஆனால் நன்னூல், க, ஞ, ச, ங, த, ந, ப, ம, வ, ய ஆகிய 10 அகர உயிர்மெய்களும் சொல்லுக்கு முதலில் வரும் என்கிறது[8]. இதன்படி தொல்காப்பியத்தில் சொல்லப்படாத ங, ஞ, ச, ய என்னும் நான்கு எழுத்துக்களும் கூட சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது நன்னூல்.
சொல்லின் இறுதியில்
அகரம் தனித்து நின்று சொல்லுக்கு இறுதியாக வருவதில்லை. ஆனால் எல்லா மெய்களோடும் சேர்ந்து அகரம் சொல்லுக்கு இறுதியில் வரும். எடுத்துக்காட்டாக: பல, சில என்பன. உயிரளபெடைகளில் சொல்லுக்கு இறுதியில் அ இட்டு எழுதுவது வழக்கு ஆயினும், அது நெட்டுயிர்களின் மாத்திரை மிகுந்து ஒலிப்பதைக் காட்டுவதற்கான ஒரு குறியீடாக எழுதப்படுகிறதே அன்றி அது தனி அகரமாக நிற்பதில்லை.
சொல்லின் இடையில்
அகரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்[9].
அகர ஒலிப்பிறப்பு
தொல்காப்பியம் எல்லா உயிர்களும் தொண்டையில்(மிடறு) இருந்து பிறக்கும் வளியின் மூலம் உருவாகிறது என்றும், அ வெறுமனே வாயைத் திறக்கும் முயற்சியால் உருவாகும் என்றும் கூறுகிறது[10]. இது இன்றைய மொழியியலாளர்களில் கருத்தோடு ஒத்துப் போகிறது. தற்கால மொழியியலின் அடிப்படையில், தொண்டையின் ஊடாக வரும் காற்று, நாக்கு கீழே படிந்திருக்க வாயில் தடையின்றி, வெளியேறும்போது உருவாவதே அகரம் ஆகும்[11][12]
வரிவடிவம்
தமிழில் அகர ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் ஒன்றுபோலவே இருந்ததில்லை. ஏறத்தாழ கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் அகரத்தைக் குறிக்கப் பயன்பட்ட வரிவடிவங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கிமு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழை எழுதுவதற்கு தமிழ்ப் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகிய எழுத்துகள் பயன்பட்டுள்ளன.
தமிழ் மொழி எழுத்துக்களும், தமிழ் வழங்கும் பகுதிகளுக்கு அண்மையில் வழங்கும் பிற மொழிகளின் எழுத்துக்களுக்கும் இடையே அவற்றின் தோற்றம், வளர்ச்சி, தொடர்பில் ஒற்றுமைகள் உள்ளன. தென்னாசியாவிலும், தென்கிழக்காசியாவிலும் காணப்படும் பல மொழிகளின் எழுத்து முறைகள் ஒரு பொது மூலத்தில் இருந்து தோன்றியவை என்ற கருத்து உண்டு. தென்னிந்தியாவில் உருவான கிரந்த எழுத்துக்களுக்கும், தமிழ் எழுத்துக்களுக்கும் இடையிலான தொடர்புகள், வட இந்தியாவில் தோன்றியதாகக் கருதப்படும் பிராமி எழுத்துக்களுக்கும் தமிழ் எழுத்துக்களுக்கும் இடையிலான தொடர்புகள் என்பன பரவலாக ஆய்வுக்கு உட்பட்டுவரும் விடயங்கள். அகரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஒரு ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் அகரத்தின் வரிவடிவம் உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது.
பிரெய்லியில் அகரம்
கண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துக்களை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள "பாரதி பிரெய்லி" தமிழ் எழுத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஒரு எழுத்துக்கான இடம் ஒரு வரிசையில் இரண்டு வீதம் மூன்று வரிசையில் ஆறு புள்ளிகளுக்கான இடங்கள் உள்ளன. இதில் முதல் வரிசையில் இடது பக்கப் புள்ளி மட்டும் புடைத்து இருப்பின் அது அ வைக் குறிக்கும். இதை கீழே உள்ள படம் காட்டுகிறது.
குறிப்புகள்
- ↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 11
- ↑ 2.0 2.1 இளவரசு, சோம., 2009. பக். 42
- ↑ இளவரசு, சோம., 2009. பக். 44
- ↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் – இளம்பூரணர் உரை, 2006 பக். 10
- ↑ நன்னூல் விருத்தியுரை, 2004 பக். 49
- ↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 15
- ↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 33
- ↑ இளவரசு, சோம., 2009. பக். 55
- ↑ இளவரசு, சோம., 2009. பக். 57
- ↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 42
- ↑ சுப்பிரமணியன், சி., 1998 பக். 32
- ↑ வேலுப்பிள்ளை, ஆ., 2002. பக். 43
உசாத்துணைகள்
- இளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).
- சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.
- தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)
- பவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.
- வேலுப்பிள்ளை, ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.