குடவாசல் கோணேசுவரர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற குடவாயில் கோணேசுவரர் திருக்கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 10°51′30″N 79°28′55″E / 10.8582°N 79.4820°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | கதலிவனம், வன்மீகாசலம் |
பெயர்: | குடவாயில் கோணேசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | குடவாசல் |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கோணேசுவரர் |
தாயார்: | பெரியநாயகி |
தல விருட்சம்: | வாழை |
தீர்த்தம்: | அமிர்த தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில் |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
குடவாசல் கோணேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 94ஆவது சிவத்தலமாகும்.
தல வரலாறு
இவ்வூர் திருக்குடவாயில் என்றும் இங்குள்ள கோயில் குடவாயிற்கோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. உயிர்கள் அனைத்தும் அழிந்துவிடக் கூடிய பிரளயம் வந்தபோது "அனைத்து உயிர்களும் அழிந்துவிடக்கூடாதே" என்று சர்வேஸ்வரன் அமிர்தகுடம் ஒன்றைச் செய்து அதில் உயிர்களையும் அமிர்தத்தையும் வைத்து குடத்தின் முகப்பில் சிவலிங்கமாக இருந்து பாதுகாத்து வந்தார். காலங்கள் கடந்தன. குடத்தின் வாயிலில் இருந்த சிவலிங்கத்தைப் புற்று மூடியது. அப்புற்று வளர்ந்து பெரிய மலை போல் ஆனது. புற்றால் மூடப்பட்டிருந்த குடத்தை கருடபகவான் மூக்கினால் கொத்தி பிளந்து சிவலிங்கத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்த இறைவன் வன்மீகாசலேசர், கருடாத்திரி என்று அழைக்கப்படுகிறார். அமிர்த துளி விழுந்த இடம் அமிர்த தலமாயிற்று. அமுத நீர் தேங்கிய இடம் அமிர்த தீர்த்தம் ஆயிற்று. உயிர்களை பலகாலம் காத்து வந்ததால் இறைவன் கோணேசர் ஆனார். தன் மூக்கால் கொத்தி ஈஸ்வரனை வெளிக்கொணர்ந்த கருடன், ஈஸ்வரன் அருளால் இந்த ஆலயத்தைக் கட்டி வழிபட்டார் என்பது புராணம். ஈஸ்வரனால் பாதுகாக்கப்பட்ட அந்த அமிர்த கலசம் தக்க காலம் வந்ததும் மூன்றாக உடைந்தது. முதல் பாகமாகிய அடிப்பாகம் விழுந்த இடம் கும்பகோணமாகவும், ஈசன் ஆதிகும்பேசர் எனவும் அழைக்கப்படலானது. நடுப்பாகம் விழுந்த இடம் கலயநல்லூர் (இன்றைய சாக்கோட்டை) ஆகும். இங்குள்ள ஈசன் அமுதகலசேஸ்வரர் ஆவார். குடத்தின் முகப்பு, அதாவது வாயில் தங்கிய இடமே குடவாயில் (குடவாசல்) ஆயிற்று. இங்குள்ள தலதீர்த்தத்தின் சிறப்பாக தலபுராணத்தில் கூறும்பொழுது, அமிர்த தீர்த்தத்தைத் தொட்டவருக்கு முற்பிறவியில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும். இத்தீர்த்தத்தை அருந்தியவர்கள் புன்ணியவான் ஆகிறார்கள். இதில் ஸ்தானம் செய்ய விரும்பி இது இருக்கும் திசையில் ஓரடி எடுத்து வைத்தாலே கங்கா ஸ்நானம் செய்த பலனும், சிவலோக வாழ்வும் பெற்றவர்கள் ஆகிறார்கள். சிவராத்திரியில் பக்தியுடன் இத்தீர்த்தத்தில் மூழ்கினால், பதினாயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் மூழ்கி ஈசனை தரிசிப்பவர் தேவர் ஆகிறார்கள். இதில் ஸ்நானம் செய்பவர் அனைவரும் அமிர்தமயமான சரீரம் உடையவர்கள் ஆகிறார்கள். இக்கோவிலுக்கு தொழுநோயால் அவதியுற்ற திருணபிந்து என்ற முனிவர் வழிபட, ஈசன் குடமூக்கில் இருந்து வெளிப்பட்டு முனிவருடைய தொழுநோயை தீர்த்ததால் குடவாயில் என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
அமைவிடம்
சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. உலக பிரளய காலத்தில் இறைவன் உயிர்கள் அனைத்தையும் அமிர்த குடம் ஒன்றிலிட்டு அக்குடத்தின் வாயிலில் சிவலிங்கமாக இருந்து காத்த தலம் என்பது தொன்நம்பிக்கை. இத்திருக்கோயில் பெயர் குடவாயிற் கோட்டம் என்பதாகும்.
அமைப்பு
ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் இடது புறத்தில் அனுமதி விநாயகர் சன்னதி உள்ளது. அடுத்து கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. வலது புறம் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது. திருச்சுற்றில் இடும்பன், தண்டபாணி, கலைமகள், கஜலட்சுமி, குடவாயிற்குமரன், பைரவர், சந்திரன், சூரியன், நவக்கிரகங்கள், சூத முனிவர், சனி பகவான் சப்தமாதர், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பரவை நாச்சியார் ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. இடது புறம் நடராஜர் சன்னதி உள்ளது. மூலவர் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, உள்ளார். மாடக்கோயில் அமைப்பில் உள்ள இக்கோயிலின் மேல் தளத்தில் மூலவர் சன்னதிக்கு முன்பாக பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. மூலவருக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் லிங்கத் திருமேனியாக உள்ளார். மூலவர் சன்னதியில் இடது புறம் தான்தோன்றிநாதர் உள்ளார். கோயிலின் முன்பு குளம் உள்ளது.
வழிபட்டோர்
கருடன், சூரியன், தாலப்பிய முனிவர், பிருகு முனிவர் ஆகியோர் இத்தலத்தை வழிபட்டவர்கள் ஆவர்.[1]
கட்டடக்கலை
மேற்கு நோக்கிய இறைவன் சந்நதி, மாடக்கோவில் அமைப்பு. இத்தலத்து சிவபெருமானை தரிசிக்க 24 படிகள் ஏறி மேலே செல்ல வேண்டும்.
மேற்கோள்கள்
- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; பக்கம் 181,182
இவற்றையும் பார்க்க
படத்தொகுப்பு
வெளி இணைப்புகள்
கருவேலி சற்குணேஸ்வரர் கோயில் |
|||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 63 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 63 |
குடவாசல் கோணேஸ்வரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருச்சேறை செந்நெறியப்பர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 94 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 94 |