பாமணி நாகநாதர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
பாதாளேச்சரம் நாகநாதர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):பாதாளேச்சுரம்
பெயர்:பாதாளேச்சரம் நாகநாதர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:பாமணி
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:நாகநாதர், சர்ப்பபுரீசுவரர்
தாயார்:அமிர்த நாயகி
தல விருட்சம்:மாமரம்
தீர்த்தம்:நாகதீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

பாமணி நாகநாதர் கோயில் (பாதாளேச்சுரம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 104ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்

மன்னார்குடியிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள இவ்வூர் அமைந்துள்ளது.[1]சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பாதாளத்திலிருந்து ஆதிசேடன் தோன்றி வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை.

அமைப்பு

கோயிலுக்கு முன்பாக எதிர்புறத்தில் குளம் உள்ளது. கோயிலின் நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம், கொடி மர விநாயகர், பலி பீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. அடுத்து உள்ள நுழைவாயிலின் வலது புறம் விநாயகர் சன்னதியும், இடது புறம் சுப்பிரமணியர் சன்னதியும் உள்ளன. வெளித்திருச்சுற்றில் இடது புறத்தில் வசந்த மண்டபமும் அமிர்தநாயகி அம்மன் சன்னதியும் உள்ளன. அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் சண்டிகேசுவரி உள்ளார். அம்மன் சன்னதியில் திருஞானசம்பந்தரின் திருப்பாதாளீச்சரம் தொடர்பான பதிகம் திருநாவுக்கரசரின் சேத்திரக்கோவை, சுந்தரமூர்த்தி நாயனாரின் திருநாட்டுத்தொகை ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. உள் திருச்சுற்றில் சூரியன், சந்திரன், அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், பைரவர், ஆக்ஞா கணபதி, மூன்று விநாயகர்கள், நாகங்கள், லிங்க பானங்கள் அதன் முன்னர் நந்தி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், துர்க்கை, லட்சுமி, ஞான சரஸ்வதி ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது. கருவறை கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மன், விஷ்ணு துர்க்கை ஆகியோர் உள்ளனர். 30.6.1966 மற்றும் 5.2.2003 (சித்ரபானு, தை 22, புதன் கிழமை) ஆகிய நாள்களில் குடமுழுக்குகள் நடைபெற்றதற்கான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

தலவரலாறு

தனஞ்சயர் வடிவில் ஆதிசேஷன் வந்து தரிசனம் செய்ததால் தனஞ்சயருக்கு சந்நிதி உள்ளது. இறைவனார் காமதேனுவுக்கு அருள்புரிந்த தலம்[2] இத்தலத்தை குரு தோஷ நிவர்த்தி மற்றும் ராகு கேது பரிகாரத்தலமாக அறியப்படுவது தொடர்பாக ஒரு வரலாறு இங்கு பேசப்பட்டு வருகிறது. மக்கள் இந்தத் தலம் கால சர்ப்ப தோஷ பரிகாரத் தலம் என்று கருதுகின்றனர். சுயம்பு மூர்த்தியாய் மண்ணால் ஆன மூலவரான பாமணி நாகநாதர் என்றழைக்கப்படுகின்ற நாகநாதர் என்ற பெயர் கொண்ட லிங்கத் திருமேனியில் அமைந்து அருள் பாலித்து வருகின்ற மூவரான இறைவனுக்கு தினமும் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்தத் தலத்தில் உள்ள இந்த மூலவர் சுவாமியின் மேல் பாம்புகள் அடிக்கடி ஊர்ந்து செல்ல ஆரம்பித்தன. பாம்புகள் ஊர்ந்ததால் அவருக்கு பாம்பை மேலே அணிந்துகொள்பவர் என்னும் வகையில் பொருள்பட பாம்பணி நாதர் என்ற பெயரைக் கொண்டு அழைக்கலாயினர். அதன் காரணமாக இந்த ஊர் பாம்பணி என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் நாளடைவில் அச்சொல்லானது மருவி பாமணி என்ற பெயரைப் பெற்றது. பாம்பணி நாதரை வணங்கும் எண்ணத்தில் ஆதிசேஷன் தனஞ்செய முனிவராய் வடிவத்தினை மேற்கொண்டு இங்கு வந்தார். அவ்வாறு வந்தபோது எங்கும் லிங்கத் திருமேனிகளாய் தோன்ற ஆரம்பித்தன. அவர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்க ஆரம்பித்தார். பின்னர் ஒரு முடிவெடுத்தார். அதன்படி கால் தரையில் படாமல் சுவாமியை தொட்டு வணங்க எண்ணினார். அவ்வாறு வணங்குவதற்கு வசதியாக இடுப்பிற்குக் கீழே பாம்பு வடிவத்தையும், இடுப்புக்கு மேலே மனித வடிவத்தையும் கொண்டு மூலவரை வணங்கினார். அவருடைய இவ்வாறான பக்தி வெளிப்பாட்டை அறிந்த இறைவன் மகிழ்ந்தார். உடனே அவருக்கு வந்து காட்சி கொடுத்தார். அதே உருவத்தில் இருந்து அவருடைய பக்தர்களை ராகு, கேது கால ஸர்ப்ப தோஷ நிவர்த்தி வழங்கும்படி இறைவன் அவருக்குக் கட்டளை இட்டார். அவரும் இறைவன் ஆணையை சிரமேற்கொண்டு அப்பணியைச் செவ்வனே செய்ய ஆரம்பித்தார். அதன் காரணமாக இத்தலத்தில் பரிகாரம் செய்யும்போது சர்ப்ப தோஷம் மறைந்து விடுவதாகவும், தொடர்ந்து யோகம் ஏற்படுவதாகவும் மக்கள் நம்புகின்றனர்.

மேற்கோள்கள்

  1. ஆர்.அனுராதா, பாமணி நாதரும் சிம்ம தட்சிணாமூர்த்தியும், தினமணி, 28 ஆகஸ்டு 2020
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 255

உசாத்துணை

வெளி இணைப்புகள்

அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்

இவற்றையும் பார்க்க

படத்தொகுப்பு

"https://tamilar.wiki/index.php?title=பாமணி_நாகநாதர்_கோயில்&oldid=130976" இருந்து மீள்விக்கப்பட்டது