மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திருவள்ளுவர் கோயில்
சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் திருக்கோயில்
மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் is located in இந்தியா
மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்
இந்தியா-இல் உள்ள இடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
அமைவு:முண்டகக்கண்ணியம்மன் சாலை, மயிலாப்பூர், சென்னை, இந்தியா
ஆள்கூறுகள்:13°02′23″N 80°16′16″E / 13.0398073°N 80.2710717°E / 13.0398073; 80.2710717
கோயில் தகவல்கள்

மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை மூலவராகக் கொண்டு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு இந்துக் கோயிலாகும்.[1][2] ஏகாம்பரேஸ்வரர்–காமாட்சி கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோயில், மயிலாப்பூரில் ஏகாம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது. திருவள்ளுவர் பிறந்த இடமாக மயிலாப்பூர் கருதப்பெறுவதால், அங்கு திருவள்ளுவருக்கென கோயில் அமைக்கப்பெற்றுள்ளது. பொ.ஊ. 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டதாக நம்பப்படும் இக்கோயில் 1970-களில் விரிவாகப் புனரமைக்கப்பட்டது.[3] வள்ளுவரின் பிறப்பிடமாக பாரம்பரியமாக நம்பப்படும் இக்கோயில் வள்ளுவருக்குக் கட்டப்பட்ட மிகப் பழமையான கோயிலாகும். சிலர் இதை வள்ளுவரின் நினைவிடமாகவும் கருதுகின்றனர். தமிழ் மொழி ஆர்வலர்களின் சந்திப்புக்கான இடமாகவும் இக்கோயில் விளங்குகிறது. இக்கோவிலை மயிலாப்பூர் ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயிலின் சார்புக் கோயிலாக இந்து சமய அறநிலையத் துறை பராமரிக்கிறது.

பாரம்பரியமும் வரலாறும்

வள்ளுவரின் பாரம்பரிய சைவசமய ஒவியம்

வள்ளுவர் காலத்திற்கு முன்பு மயிலாப்பூரில் தற்போதைய ஏகாம்பரேஸ்வரர்–வள்ளுவர் கோயில் வளாகத்தில் ஒரு கிராமப்புற சிவன் கோயில் இருந்ததாக நம்பப்படுகிறது.[3] வள்ளுவர் இந்த சிவன் கோயிலின் வளாகத்தில் உள்ள இலுப்பை மரத்தின் கீழ் பிறந்ததாகவும் அங்கு அவர் ஒரு குழந்தையற்ற தம்பதியரால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார் என்றும் பாரம்பரியமாக கருதப்பட்டு வருகிறது.[4] மயிலாப்பூரில் வள்ளுவரின் சீடரும் வணிகருமான ஏலேலசிங்கன் வள்ளுவரின் மரணத்திற்குப் பிறகு வள்ளுவரின் உடலைத் தங்கத் தாழியொன்றிலிட்டு நினைவாலயம் ஒன்றை நிறுவ எண்ணி அதை வள்ளுவரிடம் தெரிவித்ததாகவும் வள்ளுவர் அதை மறுத்து வனவிலங்குகளுக்கு உணவளிக்கும் வண்ணம் தனது சடலத்தை ஊருக்கு வெளியிலுள்ள காட்டுப்பகுதியில் வீசிவிடுமாறு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.[5][6] அவ்வண்ணமே செய்த ஏலேலசிங்கன் வள்ளுவரது சடலத்தை உண்ட காகங்களும் ஏனைய விலங்குகளும் "பொன் போல் மிளிர்ந்ததைக்" கண்டாரென்றும் வள்ளுவர் நினைவாக அக்கோயில் வளாகத்தில் ஒரு சன்னதியை எழுப்பினார் என்றும் கூறப்படுகிறது.[5][7] பொ.ஊ. 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அக்கோயில் இடிபாடுகளில் தற்போதுள்ள கோவில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.[3][8][9] இக்கோயில் வள்ளுவருக்குக் கட்டப்பட்ட மிகப் பழமையான கோயிலாகும்.[10] ஆங்கிலேய அரசாட்சியில் சென்னை மாகாணத்தின் அரசு ஊழியராக இருந்த எல்லீசனார் என்றழைக்கப்படும் பிரான்சிஸ் வைட் எல்லிஸ் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ராயப்பேட்டையில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலில் எழுப்பிய கல்வெட்டில் மயிலாப்பூர் வள்ளுவர் கோயிலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.[11] ஏகாம்பரேஸ்வரர் கோவில் வள்ளுவரின் பிறப்பிடமாக பொதுமக்களாலும் வரலாற்றாசிரியர்களாலும் பரவலாகக் கருதப்படுகிறது.[4][8][11][12][13] சிலர் இக்கோவிலை வள்ளுவரின் நினைவிடமாகவும் கருதுகின்றனர்.[5][8][14] வள்ளுவர் வைகாசி அனுஷத்தில் பிறந்து மாசி உத்திரத்தில் ஜீவமுக்தி அடைந்ததாகக் கருதப்படுகிறது.[15]

கோயில் புனரமைப்புக் கல்வெட்டுகள்

1989-ம் ஆண்டு திருமயிலையின் திருக்கோயில்கள் என்ற தலைப்பில் எஸ். ராஜேந்திரன் எழுதிய நூலில், தற்போதைய கோயில் 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.[3] மயிலாப்பூரில் உள்ள பல்வேறு சிவாலயங்களின் வரலாற்றைக் கூறும் திருமயிலை தலபுராணம் என்ற தனது நூலில் நாதமுனி முதலியார் இக்கோயிலின் வரலாற்றை 54 தமிழ்ப் பாடல்களில் முன்னரே ஆவணப்படுத்தியிருப்பதையும் ராஜேந்திரனின் நூல் குறிப்பிடுகிறது.[3] நாதமுனி முதலியாரது நூலின் திருத்தப்பட்ட பதிப்பு 1929-ல் என். சிங்காரவேலன் முதலியாரால் வெளியிடப்பட்டது.[3] தி டெம்பிள் டைரக்டரி ஆஃப் மெட்ராஸ் சிட்டி என்ற நூலானது வள்ளுவர் கோவில் பெனாரஸ் அரசரால் கட்டப்பட்டது என்று கூறுகிறது.[8] எனினும் அது இக்கோயில் கட்டப்பட்ட சரியான காலத்தைக் குறிப்பிடவில்லை.[8] சிரக்கியூஸ் பல்கலைக்கழகத்தின் சமயவியல் பேராசிரியரான ஜோஅன் பன்ஸோ வாக்ஹார்ன் இந்தக் கூற்றை தனது படைப்பில் மேற்கோள் காட்டுகிறார்.[8] மேலும் 1990-ம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கை வள்ளுவர் கோயில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கூறுகிறது. நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் இணைந்து 1935-ல் இக்கோயிலைப் புனரமைக்கும் பணிகள் சிலவற்றைச் செய்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.[8] பழைய கோவிலின் தலவிருட்சத்தின் எச்சங்கள் 1973 முதல் நினைவுச்சின்னமாக வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.[8] அதே ஆண்டு வள்ளுவரின் பாதகமலங்களுடன் வள்ளுவரின் தந்தை பகவனின் சிலை, குழந்தை வள்ளுவரை ஏந்திய பாணியில் தாய் ஆதியின் சிலை, தியானத்தில் அமர்ந்திருக்கும் நிலையில் வள்ளுவரின் சிலை ஆகிய மூன்று சிலைகளும் அந்த நினைவுப் பீடத்தில் நிறுவப்பட்டன.[13] 20-ம் நூற்றாண்டு தமிழக அரசால் புனரமைக்கப்பட்ட பிறகு, இக்கோயிலில் உள்ள கற்சிலைகளைத் தவிர பண்டைய கோவிலின் வேறெந்தத் தடயங்களும் காணக்கிடைக்காமல் போய்விட்டன.[3] சன்னதியில் உள்ள வள்ளுவர் சிலையும் கோயிலில் பாதுகாக்கப்பட்டுவந்த பல பனையோலைச் சுவடிகளுடன் புனரமைப்பிற்குப் பின்னர் அரசால் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.[3] கோவிலில் உள்ள வெண்கல சிலைகள் 19-ம் நூற்றாண்டில் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.[3] 1973-ஆம் ஆண்டின் குடமுழுக்குக்குப் பிறகு 1985-ஆம் ஆண்டிலும் அதன் பின்னர் 2001-ஆம் ஆண்டிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மிக சமீபத்தில் 2020-ஆம் ஆண்டு இக்கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றது.[16]

வள்ளுவரது பிறந்தநாளை ஆண்டுதோறும் வைகாசி அனுஷத்தில் (மே மாதம்) கொண்டாடும் மரபு 1935 மே மாதம் 18 மற்றும் 19 தேதிகளில் பச்சையப்பன் கல்லூரி அரங்கத்தில் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய கருத்தரங்கில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.[17] வள்ளுவர் ஆண்டும் வள்ளுவர் தின விழாக்களும் அப்போதுதான் முதன்முறையாக அறிவிக்கப்பட்டன.[17] இம்மாநாட்டின் முதல் நாள் கூட்டம் முடிந்ததும் அங்கு திரண்டிருந்தோர் வள்ளுவர் கோவிலுக்கு ஊர்வலமாகத் திரண்டு வந்து வெகுஜன வழிபாடு செய்தனர்.[17] தற்போது மாநில அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோயில் அதற்கு முன் சிவஞான முதலியார் என்பவரின் ஆளுகைக்குள் இருந்து வந்தது.[18] சப்த ஸ்தான சிவாலயங்கள் என்றழைக்கப்படும் காரணீஸ்வரர் கோயில், தீர்தபாலீஸ்வரர் கோயில், வெள்ளீஸ்வரர் கோயில், விரூபாஷீஸ்வரர் கோயில், வாலீஸ்வரர் கோயில், மல்லீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோயில் ஆகிய ஏழு சிவாலயங்களைக் கொண்ட மயிலாப்பூரில் எட்டாவது சிவாலயமாக ஏகாம்பரேசுவரர்–வள்ளுவர் கோயில் சிறப்பு பெற்றுள்ளது.[15]

கோயிலின் அமைப்பு

திருவள்ளுவர் கற்சிலை. கீழே உற்வச சிலைகள்
கோயிலின் உட்பிரகாரத்தின் நுழைவாயில்
வள்ளுவரின் சன்னதி

வள்ளுவர் கோயில் சென்னை மயிலாப்பூரில் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில்[19] அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை ஒட்டிய முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெருவில் தனித்தொரை சந்தைக்கு பின்புறம் அமைந்துள்ளது.[3] இக்கோவிலானது ஏகாம்பரேஸ்வரர் கோவில் வளாகத்திற்குள் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகம் 25 கிரவுண்டு பரப்பளவு கொண்டதாகும்.[12] இக்கோயில் வளாகத்தில் விநாயகர், சுப்ரமணியர், சிவன் (ஏகாம்பரநாதர்), பார்வதி (காமாட்சியம்மன்), திருவள்ளுவர், வாசுகி,[20] துர்கை, நவகிரகங்கள், கருமாரியம்மன் (பார்வதியின் அவதாரம்) எனப் பல்வேறு தெய்வங்களுக்கான தனித்தனி சன்னதிகள் உள்ளன.[8][10][15] கோயில் பிராகாரத்தில் பிரதட்சிணமாகச் செல்லுகையில், விநாயகர், சுப்ரமணியர் ஆகியோருடன் உரைந்த சிவன்–பார்வதியின் சன்னதி முதலில் தோன்றும், அதைத் தொடர்ந்து கருமாரியம்மன், புனித வேப்பமரத்தின் கீழ் நாகக்கற்களுடன் கூடிய நாகராஜான் ஆகியவை கோயில் வளாகத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளன.[3][8] ஏகாம்பரநாதரின் பிரதான சன்னதியில் சிவனையும் பார்வதியையும் வணங்கும் வள்ளுவரின் ஸ்டக்கோ சிலைகள் உள்ளன. உற்சவ மூர்த்திகள் ஓய்வெடுக்கும் பள்ளியறை சிவன் சன்னதிக்குப் பின்னால் உள்ளது.[3]

வள்ளுவரின் சன்னதியானது கோயில் வளாகத்தின் மேற்குப் பகுதியில் எழுப்பப்பட்டுள்ள மகாமண்டபம் எனப்படும் தூண்கள் கொண்ட திறந்த தியான மண்டபத்தில் இரண்டு அறைகளைக் கொண்டு அமைந்துள்ளது.[3] இச்சன்னதியில் கருவறை நுழைவாயிலில் முதல் குறள் எழுதப்பட்டுள்ளது. கருவறையில் பீடமொன்றில் அமர்ந்த கோலத்தில் வள்ளுவரின் பெரிய கற்சிலை ஒன்றும் பீடத்தின் கீழே வாசுகியுடன் திகழும் கோலத்தில் சிறிய வெண்கல சிலைகளும் உள்ளன. கருவறையில் வள்ளுவரின் கற்சிலை சின்முத்திரை (அபயமுத்திரை) தரித்து பத்மாசன கோலத்தில் அமைந்துள்ளது.[18] தொள்ளக்காதுடன் அமைந்துள்ள வள்ளுவர் சிலை ஒரு கையில் ஜெபமணியும், மறு கையில் ஓலைச்சுவடியும், சிரசில் லிங்கம் சூடியவாறும், மார்பில் 'நமசிவாய' எனும் பஞ்சாட்சர மந்திரம் பொறிக்கப்பட்ட யோகப்பட்டையை அணிந்த வண்ணமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.[15] வள்ளுவரின் சன்னதியின் சிகரத்தில் வள்ளுவரின் சிலைகள் பொறிக்கப்பட்டுள்ளன. கோயிலின் வடமேற்கு மூலையில் வள்ளுவர் சன்னதிக்கு அருகில் வாசுகியின் சன்னதி காணப்படுகிறது. கருவறையில் உள்ள வாசுகியின் சிலை இந்து தெய்வமான காமாட்சியின் உருவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.[8] ஏகாம்பரேஸ்வரர், வள்ளுவர், வாசுகி, கருமாரியம்மன் உட்பட அனைத்து முக்கிய தெய்வங்களின் சிலைகளும் கிழக்கு முகமாக அமைக்கப்பட்டுள்ளன.[10] கருவறைக்கு மேலே உள்ள கோபுரத்தில் இந்து சமய தெய்வங்களும் வாழ்வியல் முறைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[8] வள்ளுவர் தனது மனைவி வாசுகிக்கு குறட்பாக்களை ஓதுவது போலான சிலைகளும் காணப்படுகின்றன.[8] கோவிலின் தற்போதைய தலவிருட்சம் வாசுகி சன்னதிக்கு எதிரே தியான மண்டபத்தின் அருகிலும் பாகுகாக்கப்பட்டுள்ள பண்டைய தலவிருட்சத்திற்கு அருகிலும் அமைந்துள்ளது. கோயிலின் சுவர்கள் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை போன்ற தெய்வங்களின் கோஷ்ட உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் அனுமான், சண்டிகேஸ்வரர், பைரவர், சனீஸ்வரர் ஆகியோருக்கு தனிப்பட்ட சிறிய சன்னதிகளும் காணப்படுகின்றன. ஏகாம்பரேஸ்வரரின் உற்சவ சிலைகள் நுழைவாயிலுக்கு அருகிலும் கோயிலின் புனிதத் தீர்த்தமான கிணற்றுக்கு எதிரேயும் உள்ள பெட்டக அறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன.[3] கோயிலின் நந்தவனம் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. கோவிலில் காணப்படும் புனிதக் கிணறு, ஒரு சமயம் வள்ளுவர் வாசுகியை அழைக்க அப்போது கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்த வாசுகி வாளியை அப்படியே போட்டுவிட்டு வள்ளுவர் முன் வந்து நின்ற புராணக் கதையோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.[18] இக்கோயிலில் ஒரே வேரில் முளைத்து பின்னிப் பிணைந்து நிற்கும் வேம்பு, அத்தி, அரச மரங்கள் மும்மூர்த்திகளின் அவதாரமாகக் கொண்டாடப்படுகின்றன.[18] இக்கோயிலின் தலவிருட்சங்களாகத் திகழும் இம்மூன்று மரங்களையும் சங்கரநாராயணர் விருட்சம் என்று அழைக்கின்றனர்.[15]

சன்னதியில் கருவறைச் சிலைகள். இடம்: வள்ளுவரின் சன்னதி. வலம்: வாசுகியின் சன்னதி
கோயிலினுள் நவகிரக சன்னதி

இக்கோயிலின் தலவிருட்சம் (சன்னதி மரம்) இலுப்பை (Madhuca indica) ஆகும்.[4][11][12] இக்கோயிலில் வள்ளுவர் குழந்தையாகக் கண்டெடுக்கப்பட்டதாக மரபுவழிக் கதையாகக் கூறப்பட்டுவரும் பண்டைய இலுப்பை மரத்தின் அருகிலேயே இப்புதிய தலவிருட்சம் வளர்ந்திருக்கிறது.[4][8][11][12] பழைய இலுப்பை மரத்தைச் சுற்றி பீடம் ஒன்று 1935-ல் கட்டப்பட்டது.[11][21][15] அதைச்சுற்றி சிறு மண்டப அறையும் கட்டப்பட்டு[3] அங்கு யோக நிலையில் திருக்குறளின் ஓலைப் பிரதியை ஏந்தியவாறு வள்ளுவரின் சிலையொன்று பீடத்தில் நிறுவப்பட்டுள்ளது.[8] இப்போது அப்பீடத்தில் மரத்தைச் சுற்றி செப்புத்தகடுகள் கட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.[11][21] பீடத்தில் கூடுதலாக கருப்புக் கருங்கல்லால் செய்யப்பட்ட வள்ளுவரின் பாதச் சிலையொன்று உள்ளது.[8][15] மேலும் வள்ளுவரின் பெற்றோர்களாகக் கருதப்படும் ஸ்ரீ ஆதி, ஸ்ரீ பகவன் ஆகியோரின் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தாயாரான ஆதியின் கைகளில் குழந்தை வள்ளுவர் இருப்பதுபோல் இச்சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.[8][11] கோயிலின் புனரமைப்புத் திருப்பணி 27 ஏப்ரல் 1973 அன்று துவங்கியது. கோயிலின் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழா 23 ஜனவரி 2001 அன்று நடைபெற்றது.[21] அருகாமையிலுள்ள முண்டகக்கண்ணியம்மன் கோயிலின் கீழ் இயங்கி வரும் இக்கோயில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது.[21] கோயில் வளாகத்திற்குள் ஒரு நூலகமும் உள்ளது.[21] கோயிலுக்கு அருகில் "வள்ளுவர்–வாசுகி திருமண மண்டபம்" என்ற பெயரில் ஒரு சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது.[21] வள்ளுவர் கோயில் தமிழ் மொழி ஆர்வலர்களின் சந்திப்பு மையமாகவும் திகழ்கிறது.[12] மாலை வேளையில் குழந்தைகளுக்குத் திருக்குறள் வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

ஜெ. எம். நல்லசாமி பிள்ளை 1897-ல் வெளிவந்த தனது புத்தகத்தில் இக்கோவில் பற்றி குறிப்பிட்டுள்ளார்.[a][22]

ஆகமங்களும் திருவிழாக்களும்

பண்டைய இலுப்பை மரத்தின் எச்சங்களுக்கருகில் வளர்ந்துள்ள கோயிலின் தல விருட்சமான இலுப்பை மரம்.

வழக்கில் சைவ சமய நாயன்மார்களின் எண்ணிக்கை அறுபத்துமூன்று தான் என்றாலும், பல்வேறு தென்னிந்திய சமூகங்களால் வள்ளுவர் அறுபத்து நான்காவது நாயன்மாராகப் போற்றப்படுகிறார்.[3] அச்சமூகங்களால் அறுபத்துமூவர் உள்ளிட்ட ஆண்டு விழாக்களில் அறுபத்து நான்காமவராக வள்ளுவரும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறார்.[23] மயிலாப்பூரில் உள்ள வள்ளுவர் கோயிலும் இந்த மரபைப் பின்பற்றுகிறது.[24] ஆண்டுதோறும் மயிலை கபாலீஸ்வரர் கோயிலின் பிரம்மாண்ட விழாவாக நடைபெறும் பங்குனி பிரம்மோத்ஸவத்தின் (மார்ச்-ஏப்ரல்) 8வது நாளான பங்குனி உத்திரத்தில் அறுபத்திமூவர் விழா அப்பிரம்மோத்ஸவ நிகழ்ச்சிகளின் முக்கியமான நாளாகவும் அதிகபட்ச கூட்டம் கூடும் விழாவாகவும் திகழ்கிறது.[25] அந்த நாளில் அறுபத்துமூன்று நாயன்மார்களின் சிலைகளுடன் கூட வள்ளுவரது வெண்கலச் சிலையும் வாசுகியின் வெண்கலச் சிலையும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.[24] இத்திருவிழா பொ.ஊ. 7ம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருவதாக வரலாற்று ஆய்வாளர் வி. ஸ்ரீராம் கூறுகிறார்.[26] இவ்வாறாக, வள்ளுவர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களை சிவனுக்கானவை எனவும் வள்ளுவருக்கானவை எனவும் இருவகைகளாகப் பிரிக்கலாம்.[3] சிவனுக்கு உகந்ததாக அனைத்து திருநாட்களும் வழக்கமான பாணியில் கொண்டாடப்படுகையில்[3] பிரம்மோத்ஸவத்தன்று வள்ளுவர்–வாசுகி சிலைகள் ஒரு பல்லக்கில் வைக்கப்பட்டு கபாலீஸ்வரர் கோவில் திருவிழா நிகழ்வுகளின் ஒரு பகுதியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.[24]

வள்ளுவர் பிறந்த இலுப்பை மரத்தின் அருகில் குழந்தை வள்ளுவரைக் கையில் ஏந்தியவாறு வள்ளுவரது தாய் ஆதி, தந்தை பகவன் ஆகியோரது சிலைகள்

மற்ற இந்துக் கோயில்களைப் போலவே, வள்ளுவர் கோயிலும் வழக்கமான தினசரி ஆகம சடங்குகளைக் கடைபிடிக்கிறது. தினம் இருமுறை அபிஷேகம் (சிலைகளை நீராட்டுதல்) நடைபெற்று அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. காலையில் நைவேத்தியமாக அரிசி சாதம் படைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. வள்ளுவர் சிலைக்கு வெள்ளை நிற வேட்டி அணிவிக்கப்பட்டு நெற்றியில் விபூதி, குங்குமம், சந்தனப் பொட்டு உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.[12] வள்ளுவருக்கும் காலையில் ஒரு கால பூஜையும் ஏகாம்பரநாதருக்கு காலை, மாலை என இருகால பூஜையும் நடத்தப்படுகின்றன.[15][16] இச்சடங்குகள் யாவும் வீரசைவ-லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த அர்ச்சகர்களால் செய்யப்படுகின்றன.[11]

இந்த தினசரி ஆகமங்களைத் தவிர, அறுபதிமூவர் திருவிழா (மார்ச்–ஏப்ரல்), சித்திரை மாதத்தின் இரண்டாம் நாள் (ஏப்ரல்), திருவள்ளுவர் நாள் (தமிழக அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட தை மாதத்தில் [ஜனவரியில்] வரும் நாள்), சித்ரா பௌர்ணமி (மார்ச்–ஏப்ரல்), மாதாந்திர அனுஷ நட்சத்திரம் (வள்ளுவர் பிறந்த நட்சத்திரம்) ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.[12] சித்ரா பௌர்ணமி என்பது வள்ளுவர் வாசுகியை மணம்புரிந்த நாளாகக் கருதப்படுவதால் ஆண்டுதோறும் இந்நாளில் வள்ளுவருக்கும் வாசுகிக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.[3][15] ஆண்டுதோரும் வைகாசி அனுஷம் (ஜூன் மாதத் தொடக்கத்தில்) வள்ளுவர் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.[11][17] வள்ளுவர் முக்தியடைந்த தினமாகக் கருதப்படும் மாசி உத்திரம் (பிப்ரவரி–மார்ச்)[27] இக்கோயிலில் மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்.[11] தை சதயம் அன்று ஏகாம்பரேஸ்வரர்–காமாட்சியம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.[15] மேலும் மாசி மகம், சிவராத்திரி, ஆவணி மூலம் ஆகியவையும் இங்கு சிறப்பு ஆராதனைகளுடன் கொண்டாடப்படுகின்றன.[15]

வள்ளுவர் வாசுகியை மணமுடிக்கும் முன்னர் வாசுகியைச் சோதிக்க எண்ணி ஒரு கையளவு மண்ணை எடுத்துக் கொடுத்து அதை உணவாகச் சமைக்கச் சொன்னார் என்கின்றன மரபுக்கதைகள். வாசுகியும் தட்டாது அவ்வாறே செய்ய அது சாதமாக மாறி சுவைமிக்க உணவாக ஆகியது என்பது ஐதீகம். இதை நினைவுகூரும் வகையில் கருவறையின் முன்பு பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு சித்ரா பௌர்ணமி நாளன்று (ஏப்ரல்) இப்பொங்கல் பானைகளில் சிறிது மண் தெளிக்கப்பட்டு அதன் பின்னர் அரிசி சமைக்கப்படுகிறது.[12] திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கோயிலுக்கு ஆண்டுதோறும் ஊர்வலங்களும் அதைத் தொடர்ந்து அபிஷேக ஆராதனைகளும் நடத்தப்படுகின்றன.[28]

கோயிலின் நிதிவரவு

வள்ளுவர் கோயில் மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ முண்டகக்கண்ணியம்மன் கோயிலின் கீழ் உள்ள கோயில்களின் ஒன்றாகும்.[12] கூடுதலாக இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.[12] சிறிய கோயிலாக இருப்பதால், இக்கோயிலுக்கு நிதிவரவு பெரிய அளவில் இருப்பதில்லை.[12] இதன்காரணமாக பிற கோவில்களின் நிதியைக் கொண்டே பெரும்பாலும் இக்கோயில் பராமரிக்கப்படுகிறது.[12] இக்கோயிலுக்கு தனியாக வேறெந்த சொத்தும் இல்லை என்பதால் இக்கோயில் அருகிலிருக்கும் முண்டகக்கண்ணியம்மன் கோயிலையே முழுமையாகச் சார்ந்திருக்கிறது.[3] இக்கோயிலின் பொரும்பான்மையான வருமானம் இதற்குச் சொந்தமான திருமண மண்டபம், வாகனம் நிறுத்துமிடம், சில சிறுகடைகள் ஆகியவற்றிலிருந்து வருகிறது.[12] கோயிலில் நடைபெரும் அனைத்துத் திருவிழாக்களும் பக்தர்கள் தரும் காணிக்கை நிதியைக் கொண்டே நடத்தப்ப்படுகின்றன.[3] கோயில் நிகழ்வுகளின் ஒரு பகுதிக்கு தமிழ் அறிஞர்களின் வழித்தோன்றல்களான முதலியார் சமூகத்தினரால் நிதியளிக்கப்படுகின்றன.[3] இந்த முதலியார் சமூகத்தினரின் முன்னோர்கள் தான் இக்கோயிலில் காணப்படும் வெண்கலச் சிலைகளை நிறுவியவர்கள் என்று கூறப்படுகிறது.[3]

காட்சிகள்

இவற்றையும் காண்க

குறிப்புகள்

a. ^ தனது 1897-ம் ஆண்டைய நூலில் ஜெ. எம். நல்லசாமி பிள்ளை இக்கோயிலைப் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்: "Those of you, who wish to have our idea of the personal appearance of the sage, may proceed to his shrine at Mylapore, a minute's walk from the Barber's Bridge, and witness the statue of the canonized saint. The folded knot of his lock, the bushy moustache and beard sweeping over his breast, the gravity of the forehead, the broad eyes revealing his noble heart, and the grace of his majestic frame are such as remind one of Plato and Socrates. Add to these, the beads in his right and the moral code in the left hand, the saint in a sitting posture on a raised seat, seeming to impart instruction to his disciples, you will verily believe that he is a Tamil Rishi next to Agasthya. He is in fact said to be the great grandson of Agasthya. At least the genealogy framed by the pandits states so."[22]

ஆதாரங்கள்

  1. பொலிவிழந்து வரும் மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் - தினமணி
  2. பாரதியார் கட்டுரைகள் - தமிழாய்வு
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 3.15 3.16 3.17 3.18 3.19 3.20 3.21 3.22 Chakravarthy and Ramachandran, 2009.
  4. 4.0 4.1 4.2 4.3 Robinson, 2001, ப. 15.
  5. 5.0 5.1 5.2 Robinson, 2001, ப. 32.
  6. Manavalan, 2009, ப. 43.
  7. Kabirdoss and Shankar, The Times of India, 5 November 2019.
  8. 8.00 8.01 8.02 8.03 8.04 8.05 8.06 8.07 8.08 8.09 8.10 8.11 8.12 8.13 8.14 8.15 8.16 Waghorne, 2004, ப. 120–125.
  9. Muthiah, 2014, ப. 232.
  10. 10.0 10.1 10.2 Department of Hindu Religious and Charitable Endowments, 2014, ப. 54.
  11. 11.0 11.1 11.2 11.3 11.4 11.5 11.6 11.7 11.8 11.9 Department of Hindu Religious and Charitable Endowments, 2014, ப. 55.
  12. 12.00 12.01 12.02 12.03 12.04 12.05 12.06 12.07 12.08 12.09 12.10 12.11 12.12 Ramakrishnan, The Hindu, 15 November 2019, ப. 3.
  13. 13.0 13.1 Yogesh Kabirdoss & L. R. Shankar (5 November 2019). "Thiruvalluvar statue in Thanjavur defiled". The Times of India (Chennai: The Times Group). https://timesofindia.indiatimes.com/city/chennai/thiruvalluvar-statue-in-thanjavur-defiled/articleshow/71914171.cms. 
  14. Sugumaran, S. (2021). Titanic Gods of Tamil Nadu, India: A Comparative Mythology of Stories on ... (1 ed.). Chennai: Notion Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-63806-773-3.
  15. 15.00 15.01 15.02 15.03 15.04 15.05 15.06 15.07 15.08 15.09 15.10 Muthukumaran, M. (6 November 2019). "மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் என்ன நடக்கிறது? - ஸ்பாட் விசிட் #Video". Vikatan.com. Vikatan. பார்க்கப்பட்ட நாள் 10 January 2023.
  16. 16.0 16.1 "18 ஆண்டுகள் கழித்து நடக்கிறது மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் ஜனவரியில் கும்பாபிஷேகம்: அறநிலையத்துறை திடீர் முடிவு" (in ta). Dinakaran (Chennai: Dinakaran). 10 November 2019 இம் மூலத்தில் இருந்து 12 ஜனவரி 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230112120956/https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=539799. 
  17. 17.0 17.1 17.2 17.3 Dinamani, 14 April 2012.
  18. 18.0 18.1 18.2 18.3 Shanmugasundaram, The Hindu Tamil, 27 August 2015.
  19. Hindustan Times, 16 January 2020.
  20. Chakravarthy, 2009.
  21. 21.0 21.1 21.2 21.3 21.4 21.5 Dinamani, 20 September 2012.
  22. 22.0 22.1 Manavalan, 2009, ப. 22.
  23. Kannan, The New Indian Express, 11 March 2013.
  24. 24.0 24.1 24.2 Bhatt, 2020.
  25. Swaminathan, The Hindu, 10 March 2014.
  26. Lalithasai, The Hindu, 21 May 2012.
  27. Ramesh, Dinamani, 4 February 2022.
  28. Mylapore Times, 22 January 2023.

மேற்கோள் தரவுகள்

வெளி இணைப்புகள்