கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோவில்
கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோவில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை நகரத்தில் பாரிமுனை பகுதியில் சென்னை மத்திய தொடருந்து நிலையம் அருகில் கந்தகோட்டத்தில் அமைந்துள்ள முருகன் கோயில் ஆகும். மூலவர் பெயர் கந்தசுவாமி. உற்சவர் பெயர் முத்துக்குமாரசுவாமி. அம்மன் பெயர் வள்ளி & தெய்வானை. தீர்த்தம் சரவணப்பொய்கை. இக்கோயில் மூலவரை பாடியவர்கள் இராமலிங்க அடிகள் மற்றும் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள். இக்கோயில் கோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது.[1]
திருவிழாக்கள்
தை மாதம் 18-ஆம் நாள் பிரதான திருவிழா, கந்தசஷ்டி, வைகாசி வசந்த உற்சவம், ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம்.
தல சிறப்பு
உற்சவர் முத்துக்குமாரர் தனிக்கொடிமரத்துடன் உள்ளார். இவர் தனது முகத்தில் புள்ளிகளுடன் மிகவும் அழகு பொருந்தியவராக காட்சி தருகிறார். சிறப்பு நாட்களில் இவருக்கே முதன்மைப் பூஜை நடத்தப்படுகிறது. இங்குள்ள குளக்கரை சித்திபுத்தி விநாயகர் அமர்ந்த கோலத்தில் தனிச்சன்னதியில் உள்ளார். சரவணப்பொய்கையின் கரையிலும் ஒரு விநாயகர் இருக்கிறார். இவருக்கு வலப்புறத்தில் லட்சுமிதேவியும், இடப்புறத்தில் சரஸ்வதி தேவியும் உள்ளனர். தீர்த்தத்தை நம் மீது தெளித்துக்கொண்டு ஒரே சமயத்தில் இம்மூவரையும் வணங்கினால் கல்வி சிறக்கும், செல்வம் பெருகும், ஞானம் கிடைக்கும் என்கின்றனர்
கோயில் நடை திறக்கும் நேரம்
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.
பிரார்த்தனை
பால்குடம், பால்காவடி மற்றும் முடிகாணிக்கை செலுத்துதல். செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பன்னீர் அபிஷேகம் நடக்கும் நேரத்தில் சுவாமியை வழிபட்டால் குடும்பம் சிறக்கும், ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்
பிணிகள், தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பசுவிற்கு பழங்கள், கீரைகள் கொடுத்து வணங்கினால் அவை நீங்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்ற அடிப்படையில், இங்கு கோமாதா பூஜை தினமும் நடத்தப்படுகிறது. தோல் நோய், மற்றும் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சரவணபொய்கை தீர்த்தத்தில் வெல்லம் கரைக்கின்றனர். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பன்னீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்கள் இங்குள்ள சித்திபுத்தி விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட்டால் அது தீரும் என நம்புகின்றனர்.
தலப்பெருமை
சுவாமி இவ்விடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து, தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அளவில் மிகவும் சிறிய மூர்த்தியாக உள்ள இவருக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.