சோமநாதர் கோயில்
சோமநாதபுரம் சிவன் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | சோமநாதபுரம் சிவன் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | பிரபாச பட்டினம் |
மாவட்டம்: | கிர் சோம்நாத் மாவட்டம் |
மாநிலம்: | குஜராத் |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சிவபெருமான் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | சாளுக்கியர் |
வரலாறு | |
நிறுவிய நாள்: | 1995 (இறுதியாக ஏழாவது முறை கட்டப்பட்ட கோயில்) |
வலைதளம்: | http://www.somnath.org/ |
சோமநாதபுரம் கோயில் (Somnath) (குசராத்தி: સોમનાથ મંદિર) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் தென்மேற்குக் கரையில், கிர்சோம்நாத் மாவட்டத்தில், பிரபாச பட்டினக் கடற்கரையில் சோமநாதபுரம் சிவன் கோயில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது.[1]
இங்கு சோதிர் லிங்கத்தின் நேர் பின்புறம் உள்ள சக்தி அம்மன், 51 சக்தி பீடங்களில் தேவியின் வயிற்றுப் பகுதி விழுந்த சக்தி பீடத்திற்குரியதாகும்.
புராணக் கதைகள்
இந்துக்களின் தொன்மையான புராணமான ஸ்கந்த புராணத்தில் ஜோதிர்லிங்க திருத்தலமான சோமநாதர் சிவபெருமான் வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திரன் தனது 27 மனைவியரில் உரோகிணியுடம் மட்டும் அளவு கடந்த அன்பு பாராட்டி மற்ற மனைவியர்களைப் புறக்கணித்தான். தனது 26 மகள்களின் துயரத்தைக் கண்டு சீற்றங்கொண்ட தந்தை தட்சப்பிரசாபதி, சந்திரனுக்கு தொழு நோயால் தேய்ந்து போகக் கடவது என்று சாபமிட்டார். ஒவ்வொரு நாளும் தேய்ந்து வந்த சந்திரன் இறுதியில் சௌராட்டிரத்தின் கடற்கரையில் உள்ள பிரபாச தீர்தத்தில், சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை சரணடைந்து நோய் நீங்கி சுகமடைந்தான். அதன்படி சந்திரன் தேய்ந்து தேய்ந்து வளரும் நிலை ஏற்பட்டது.[2]
ஸ்கந்த புராணத்தில் ப்ரபாச காண்டம் சோமநாதர் திருக்கோயிலின் சிவலிங்கம் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் பூமிக்கடியில் அமைந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.மகாபாரதத்திலும் சந்திரன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டவரலாறு கூறப்படுகின்றது[2]
ஸ்ரீகிருஷ்ணர் தனது அவதார முடிவின் போது இங்குள்ள பிரபாச பட்டினத்திற்கு தங்கியிருந்த காலத்தில், வேடுவனின் கனையால் காலில் தாக்கப்பட்டு இறந்தார் என பாகவத புராணம் கூறுகிறது.
சோமநாதர் ஆலயத்தை இடித்தவர்கள்
உருவ வழிபாட்டினை எதிர்க்கும் இசுலாமிய மன்னர்கள் பல முறை சௌராஷ்ட்டிர பகுதி மீது படையெடுத்து சோமநாதபுரம் கோயிலை ஆறு முறை அடியோடு இடித்து தரை மட்டம் ஆக்கிச் சென்றனர். சோமநாதரின் ஆலயத்தை இடித்த இசுலாமிய மன்னர்கள் பெயர்கள் பின்வருமாறு.
- முதல் முறையாக பொ.ஊ. 725ல் சிந்து மாநில இசுலாமிய அரபு ஆளுனர் ஜூனாயத்தின் (Junayad) கட்டளைப்படி, உருவ வழிபாட்டை எதிர்க்கும் இசுலாமியப் படைகள், சௌராட்டிர தேசத்தை ஆண்டு கொண்டிருந்த, பிரதிஹர குல மன்னான இரண்டாம் நாகபாதர் காலத்தில் சோமநாதபுரம் கோயில் இரண்டாம் முறையாக இடிக்கப்பட்டது.
- பொ.ஊ. 1025, டிசம்பர் மாதம், கஜினி முகமது சோமநாதபுரம் ஆலயத்தை முழுமையாக தரைமட்டம் ஆக்கி, அங்கிருந்த செல்வக்குவியல்களை அள்ளிச்சென்றதுடன், ஐம்பதாயிரம் இந்துக்களை கொன்று, 20,000 இந்துக்களை அடிமைகளாக இழுத்துச் சென்றனர். ஆயிரக்கணக்கான இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். சோமநாதபுரம் ஆலய சிவலிங்கத்தை உடைத்து, அக்கற்களை கஜினியில் உள்ள மசூதியின் படிக்கட்டுகளில் பதித்தார். மேலும் ஆலயத்தின் இரத்தின குவியல்கள், தங்கம், வெள்ளி மற்றும் சந்தன கதவுகளை கஜினி நகருக்கு எடுத்துச் சென்றார்.[3][4][5]
- 24.02.1296-இல் குசராத்தை ஆண்ட இராசா கரன் என்ற மன்னர் காலத்தில், அலாவுதீன் கில்சி சோமநாதபுர ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கினார். பின்னர் காம்பத் ’ நாட்டின் இரண்டாம் கர்ண தேவ வகேலா மன்னரை கொன்று, அவரின் மனைவி கமலாதேவியை மதமாற்றம் செய்து மணந்து கொண்டார். கில்ஜி, 50,000 ஆயிரம் பேரைக் கொன்று, 20,000 பேரை அடிமைகளாக பிடித்துச் சென்றதுடன் ஆயிரக்கணக்கான கால்நடைகளையும் கவர்ந்து சென்றார். இந்த செய்தியை ஹாசன் நிஜாமைச் சேர்ந்த தாஜ்-உல்-மாசிர் என்ற வரலாற்று அறிஞர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
- பொ.ஊ. 1375ல் ஜூனாகாத் சுல்தான், முதலாம் முசாபர் ஷா, உருவ வழிபாட்டினை அவமதிக்கும் பொருட்டு, சோமநாதபுரம் ஆலயத்தை இடித்து தரைமட்டம் ஆக்கினார்.
- பொ.ஊ. 1451ல் ஜூனாகாத் சுல்தானாக இருந்த முகமது பேக்டா என்பவர் சோமநாதரின் ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கினார்.
- பொ.ஊ. 1701ல் அவுரங்கசீப் சோமநாதபுர ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கிச் சென்றார்.
சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் எழுப்பியவர்கள்
- முதல் முறையாக பொ.ஊ. 649ல் சௌராட்டிர தேசத்து வல்லபீபுர யாதவகுல மன்னர், சோமநாதபுர ஆலயத்தை அதே இடத்தில் இரண்டாம் முறையாக சோமநாதரின் ஆலயத்தை சீரமைத்து கட்டினார்.[6]
- மூன்றாம் முறையாக பொ.ஊ. 815 -இல், கூர்சர பிரதிஹர வம்சத்தின், இரண்டாம் நாக பாதர் மன்னர், சோமநாதபுர ஆலயத்தை மறுபடியும் சீரமைத்து கட்டினார்.
- நான்காம் முறையாக மாளவ நாட்டு போஜராஜனும், பட்டான் நாட்டு சோலங்கி மன்னரும் 1042 -இல் சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பினார்கள்.
- ஐந்தாம் முறையாக பொ.ஊ. 1308 -இல் சூதசமா வம்ச அரசன் மகிபாலன் என்பவர் சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டினார். அவர் மகன் கேன்கர் (Khengar) என்பவர் 1326-1351-ஆம் ஆண்டில் கோயிலில் சிவ இலிங்கத்தை பிரதிட்டை செய்தார்.
- ஆறாம் முறையாக 1783 -இல் இந்தூர் நாட்டு அரசி அகல்யாபாய் ஹோல்கர், நாக்பூர் மன்னர் இராஜா போன்ஸ்லே, கோலாப்பூர் மன்னர் சத்ரபதி போன்ஸ்லே மற்றும் குவாலியர் மன்னர் ஸ்ரீமந் பாடில்புவா ஷிண்டே ஆகியோர் ஒன்று சேர்ந்து, சிதைந்த போன பழைய சோமநாதபுரம் கோயில் அருகே புதிய சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பினர்.
- ஏழாம் முறையாகவும், இறுதியாகவும், விடுதலை பெற்ற இந்திய அரசின் உள்துறை அமைச்சரும் துணை பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் படேலும் உணவு அமைச்சராக இருந்த கே. எம். முன்ஷியும் (Kannaiyalal Maaanekial Munshi) இணைந்து பொது மக்களிடம் நிதி திரட்டி, சோமநாதரின் ஆலயத்தை மீண்டும் கட்டத் துவங்கினர். முதலில் பழைய சோமநாதபுரம் கோயில் இடிபாடுகளை அக்டோபர் மாதம்,1950 -இல் அகற்றினர். சோமநாதபுரம் கோயிலை இடித்துக் கட்டிய இடத்தில் இருந்த மசூதியை சில மைல் தூரத்திற்கு அப்பால் இடம் மாற்றி அமைத்தனர். சோமநாதபுர கோயிலைப் மறுநிர்மாணம் செய்ய மே மாதம் 1951ல், இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர். இராசேந்திரப் பிரசாத் தலைமையில், புதிய கோயிலுக்கு அஸ்திவாரக்கல் நடப்படும் விழா நடைபெற்றது. புதிதாக கட்டப்பட்ட சோமநாதரின் ஆலயம் இந்தியக் குடியரசுத் தலைவர், சங்கர் தயாள் சர்மா தலைமையில் சனவரித் திங்கள் 1ஆம் நாள், 1995ஆம் ஆண்டு (01-01-1995) பொது மக்களின் வழிபாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
சந்தனக் கதவுகள்
கஜினி முகமதுவால் ஆப்கானிஸ்தானுக்கு எடுத்துச் செல்லப்பட்ட சோமநாதர் கோயிலின் சந்தனக் கதவுகளை [7] மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவர 1842 ஆம் ஆண்டில் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் லார்டு எல்லன்பரோ (Lord Ellenborough) முயன்றார்.[8] இதனால் ஆங்கிலேயரின் பலவிதமான கண்டனங்களும் தமது தாய்நாட்டின் மதத்திற்கு துரோகம் செய்வதாகவும், சிவலிங்க வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தருவதாகவும் பலவிதமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்.
கோயிலின் கட்டிடக் கலை அம்சங்கள்
சாளுக்கியர் கட்டிடக்கலை வடிவத்தில் இறுதியாக கட்டப்பட்ட சோமநாதர் கோயில் பிரமிடு வடிவத்தில் விசாலமாகக் கட்டப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
- ↑ http://www.britannica.com/EBchecked/topic/554131/Somnath
- ↑ 2.0 2.1 http://www.mahashivratri.org/somnath-temple-gujarat.html
- ↑ http://www.gujaratindia.com/about-gujarat/somnath.htm
- ↑ Elliot, Sir Henry Miers (1952). The history of India, as told by his own historian Beirouni. 11. Elibron.com. p. 98. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-543-94726-0.
- ↑ "இந்திய வரலாற்றில் சோமநாதபுர படையெடுப்பு". Archived from the original on 2012-06-08. பார்க்கப்பட்ட நாள் 2015-10-11.
- ↑ Chaturvedi 2006, pp. 58-72
- ↑ http://www.columbia.edu/itc/mealac/pritchett/00generallinks/macaulay/txt_commons_somnauth_1843.html
- ↑ http://books.google.co.in/books?id=PnBMFaGMabYC&pg=PA163&source=gbs_toc_r&cad=3#v=onepage&q&f=false
உசாத்துணை
- பாகவத புராணம்
- விஷ்ணு புராணம்
- கந்த புராணம்
- Siva Purana, B.K. Chadurvedi, 2006, Publisher=Diamond Pocket Books (P) Ltd., New Delhi
- Somnath: The Many Voices of History, by Romila Thapar, 2004
வெளி இணைப்புகள்
- சோமநாதபுரம் கோயில் இணையதளம் பரணிடப்பட்டது 2011-10-30 at the வந்தவழி இயந்திரம்
- சோமநாதரின் பூசைகள் நேரடி ஒளிபரப்பு பரணிடப்பட்டது 2014-02-04 at the வந்தவழி இயந்திரம்
- http://www.dattapeetham.com/india/tours/2005/gujarat/somanath.htm