சோழர் காலக் கல்வெட்டுகள்
சோழர் காலக் கல்வெட்டுகள் தனித்தன்மை வாய்ந்தவை. கல்வெட்டின் தொடக்கத்தை வைத்தே குறிப்பிட்ட காலத்தை அல்லது குறிப்பிட்ட அரச மரபால் வெட்டப்பட்டது எனக் கூற முடியும். சோழர் காலக் கல்வெட்டுகளில் குறிப்பிடத்தக்கவை மெய்கீர்த்தி என்னும் கல்வெட்டுப் பகுதியாகும். இவை செய்திகளைக் கூறுவதில் ஓர் இலக்கிய வடிவைப் பெற்றுத் திகழ்ந்தன.
சோழர் மெய்கீர்த்திகள்
மெய்கீர்த்திகள் அரசனுடைய உண்மையான புகழை எடுத்துக் கூறுவதோடு அக்கால வரலாற்றையும் தெளிவாக்குகின்றன. மேலும், அரசர் தேவியருடன் வாழ்க என வாழ்த்தியும், இயற்பெயரோடு சிறப்புப் பெயரையும், ஆட்சியாண்டையும் குறிப்பிடுகின்றன. இராசராச சோழனின் மெய்கீர்த்தி சிறந்த இலக்கிய நடையில் அமைக்கப்பட்டுள்ளது. மெய்கீர்த்தியின் தொடக்கத்தை வைத்தே அது எந்த அரசனுடையது என்பதை அறியலாம்.
எடுத்துக்காட்டு
உதாரணமாக, கீழ்க்காணும் தொடக்க வரிகள் தொடர்புடைய மன்னனின் பெயரைக் கண்டறிய உதவுகின்றன.
திருமகள் போல பெருநிலச்செல்வியும் தனக்கேயுரிமை பூண்டமை மணக்கொள - முதலாம் இராசராசன்
காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய, திருமன்னி வளர இருநில மடந்தையும், பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட - முதலாம் இராசேந்திரன்
சோழர் கல்வெட்டின் சிறப்புகள்
சோழர் காலக் கல்வெட்டுகளில் கொடைச் செய்தி மட்டுமின்றி கல்வி, மருத்துவம், நீதி முறை, ஊராட்சி முறை போன்ற செய்திகளும் மிகுதியாகக் காணப்படுகின்றன. முதலாம் இராசேந்திரனுடைய 'எண்ணாயிரம்' என்ற இடத்தில் காணப்படும் கல்வெட்டும், செங்கல்பட்டு வட்டம் திருமுக்கூடலில் காணப்படும் கல்வெட்டும் சோழர் காலக் கல்வி முறையை விளக்குவனவாக உள்ளன.
செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள திருமுக்கூடல் கல்வெட்டு வீரராசேந்திரனுடைய மருத்துவச்சாலை பற்றி குறிப்பிடுகிறது. அதில், மருத்துவச்சாலை "ஆதுரச்சாலை" என்று சுட்டப்படுகிறது. ஊரவையினரைத் தேர்ந்தெடுக்கும் முறை தொண்டை நாட்டு உத்திரமேரூரிலுள்ள ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது.
முதலாம் இராசராசன் தஞ்சாவூரில் இராசராசேச்சுவரம் என்ற கற்கோவில் கட்டி அதற்கு அளித்த கொடைகள் பற்றி இக்கோவில் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன.[1][2]