ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில்
ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி மற்றும் ஸ்ரீ ப்ரம்மராம்பிகை தேவி
பெயர்
புராண பெயர்(கள்):திருப்பருப்பதம்
பெயர்:ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:ஸ்ரீசைலம்
மாவட்டம்:நந்தியால் மாவட்டம்
மாநிலம்:ஆந்திரா
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மல்லிகார்ஜுனர்,(ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்)
தாயார்:பிரமராம்பாள், பருப்பநாயகி
தல விருட்சம்:மருதமரம்
தீர்த்தம்:பாலாநதி
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர், சம்பந்தர், சுந்தரர்
வரலாறு
தொன்மை:புராதனக்கோயில்
வலைதளம்:Official Website

திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம் மல்லிகார்ச்சுனேசுவரர் கோயில்) (Mallikarjuna Jyotirlinga) என்பது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இது சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் ஆந்திர மாநிலத்தின் நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள நல்லமலைக் குன்றில் அமைந்துள்ளது. ஸ்ரீசைலம் என்றும் அழைக்கப்படும் இது கிருஷ்ணா நதியின் கரையில் அமைந்துள்ளது. இது மல்லிகார்ஜுன சுவாமிக்காக அமைக்கப்பட்டது. இத்தலத்தில் நந்தி தேவர் தவம் செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றல் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.[1][2]

மேலும் இங்குள்ள பிரம்மராம்பிகை அம்பாள் சன்னதி 51 சக்தி பீடங்களில் மற்றும் 18 மகா சக்தி பீடங்களில் தேவியின் கழுத்துப் பகுதி விழுந்த பீடமாகவும் போற்றப்படுகிறது.

மல்லிகார்ஜுனர் திருக்கோயில் நுழைவாயில்

தோற்றம்

ஸ்ரீசைலம் மகாபாரதத்திலும், புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கந்த புராணத்தில் சிறீசைல காண்டம் என்னும் அத்தியாயம் ஒன்று உண்டு. இது இக் கோயில் மிகப் பழங்காலத்திலேயே தோன்றியதற்குச் சான்றாக அமைகின்றது. அத்துடன் பொ.ஊ. 7–9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ் நாயன்மார்கள் இக் கோயிலைப் பாடியுள்ளனர். ஆதிசங்கரர் இங்கு வந்ததாகவும் இங்கேயே தனது சிவானந்த லகரி என்னும் சமஸ்கிருத நூலை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது. மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி ஒரு அம்பாள் பக்தர் ஆவார், அம்பிகையை வணங்கி அவரிடம் பெற்ற வாளைக் கொண்டு அவர் எதிரிகளை அழித்து தன் தர்ம ராஜ்ஜியத்தை நிலைநாட்டினார் அதன் நினைவாக பிரம்மராம்பிகை அம்மன் கோவிலின் வடக்குப்புற கோபுரத்தை 1677இல் கட்டினார், எனவே இன்றளவும் அது சிவாஜி கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது. வீர சிவாஜிக்கு பிரம்மராம்பிகை அளித்த வாள் இன்றளவும் பாதுகாக்கப் படுகிறது.

கோயில் அமைப்பு

பொன்வேய்ந்த விமானம்

இக்கோயிலானது 20 அடி உயரமும், 2121 அடி நீளமுடைய கோட்டைச் சுவர் போன்ற திருச்சுற்று மதில்களைக் கொண்டுள்ளது. இந்த மதிற்சுவரின் வெளிப்புறத்தில் நான்குபுறங்களிலும் ஏராளமான புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள், போர்க்காட்சிகள், பார்வதி திருமணம், அர்சுணன் தவம், சந்திரவதி கதை, மார்கண்டேயன் கதை, தட்சனின் யாகம், சிவதாண்டவம், கஜாசுர சம்காரம், சிபிசக்கரவர்த்தி கதை, தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைதல், கண்ணப்பர் கதை, மகேசுவரர் விசுவரூபம், மகிடாசுரமர்தினி போன்ற பல சிற்பங்களைக் கோண்டதாக உள்ளன.

கோயிலின் நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் உள்ளன. கிழக்குப்புறமுள்ள கோபுரம் கிருஷ்ணதேவராயராயரால் கட்டப்பட்டதால் அவர் பெயராலேயே கிருஷ்ணதேவராயர் கோபுரம் என அழைக்கப்படுகிறது. வடக்குப்புற கோபுரமானது சத்ரபதி சிவாஜியால் 1677இல் கட்டப்பட்டதால் சிவாஜி கோபுரம் என அழைக்கப்படுகிறது. மேற்குப்புற கோபுரமானது கோயில் நிர்வாகத்தால் 1966 இல் கட்டப்பட்டு பிரம்மானந்தராயா கோபுரம் என பெயரிடப்பட்டது. இவற்றின் மையத்தில் மல்லிகார்சுனர் கருவறை உள்ளது. இதன்மீது உள்ள விமானமானது காக்கத்திய மன்னரான கணபதியின் சகோதரியான மைலம்மா தேவியால் கட்டப்பட்டதாக அவரது கல்வெட்டின்வாயிலாக அறியப்படுகிறது. மல்லிகார்சுனர் சந்நிதிக்கு மேற்கில் சந்திரமாம்பா சந்நிதியும், கிழக்கே இராசராசேசுவரி சந்நிதிகளும் உள்ளன.

மேற்கோள்கள்

  1. திருக்கோயில், ஸ்ரீசைலம்
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-03-20. பார்க்கப்பட்ட நாள் 2014-11-27.