இறுதிநிலை
இறுதிநிலை என்று மொழிக்கு ஈற்றில் நிற்கும் எழுத்துகள் இவையிவை என நன்னூலின் எழுத்தியலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. உயிரெழுத்துகள் பன்னிரண்டும், மெய்யெழுத்துக்களான ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ் , ழ், ள் ஆகிய பதினொரு எழுத்துக்களும் குற்றியலுகரம் ஒன்றும் என மொத்தம் இருபத்து நான்கு எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வரும்.[1]
- எடுத்துக்காட்டுகள்
உயிர் எழுத்துகள் தனித்து வரும்போது அவை மொழிக்கு இறுதியாய் வரும்.
- அ, ஆ, இ, ஈ
உயிர் எழுத்துகள் ஓரெழுத்து ஒரு மொழியாய் வருமிடங்களில் மொழிக்கு இறுதியில் வரும்.
- ஆ – பசு
- ஊ – இறைச்சி
உயிர் மெய்யோடு சேர்ந்து மொழிக்கு ஈற்றாய் உயிர் எழுத்துகள் வரும்.
- பலா, தை, போ
மெய்யெழுத்துகளில் பதினொன்று மொழிக்கு இறுதியாய் வருமிடங்கள்:
- உரிஞ், கண், பொருந், ஆக்கம், மீத்தேன், பாய், கதிர், தென்றல், தெவ், தமிழ், நாள்
குற்றியலுகரம் மொழிக்கு இறுதியில் வருவது:
- எஃகு
சிறப்பு விதி
அ, இ, உ, எ, ஒ என்ற குறில் எழுத்துகள் அளபெடைகளில் சேர்ந்து வரும்பொழுது மொழிக்கு இறுதியில் நிற்கும். எ – மெய்யெழுத்தோடு சேர்ந்து ஈறாய் வராது. ஒ – நகரமெய் ஒன்றுடன் மட்டும் மொழிக்கு இறுதியில் வரும். ஔ- ககர மெய்யுடனும் வகர மெய்யுடனும் சேர்ந்து மொழிக்கு இறுதியில் வரும்.[2]
எடுத்துக்காட்டுகள்:
பலாஅ, தீஇ, பூஉ, சேஎ, கைஇ, கோஒ, கௌஉ
நொ – ஒகரம் நகரமெய்யுடன் இறுதியாதல் ( துன்பம் என்பது பொருள்)
கௌ, வௌ – ஔகாரம் மொழிக்கு இறுதியாதல் ( கௌ – பற்று, வௌ – கவர்தல் எனபன பொருள்)
மொழிக்கு இறுதியில் உயிர்மெய்
மெய்யெழுத்தின் ஒலி முன்னால் நிற்க உயிர் எழுத்தின் ஒலி பின்னால் தொடரும் என்பதால் உயிரெழுத்துக்கு மெய்யெழுத்து முதலும் உயிரெழுத்து ஈறுமாகும் என்கிறது நன்னூல் விதி.[3]
எடுத்துக்காட்டுகள்:
க = க் + அ , ச = ச் + அ முதலியனவாகும்.