திருவேடகம் ஏடகநாதேசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
திருஏடகம் ஏடகநாதேசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருஏடகம்
பெயர்:திருஏடகம் ஏடகநாதேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருவேடகம், சோழவந்தான்
மாவட்டம்:மதுரை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஏடகநாதர்
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:பிரம தீர்த்தக்குளம், வைகை நதி
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

திருவேடகம் ஏகடநாதேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சம்பந்தர் ஆற்றிலிட்ட தலம் எதிரேறிக் கரையடைந்தது என்பது தொன்நம்பிக்கை.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் எனும் கிராமத்தில் அமைந்துள்ள ஏடகநாதர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் ஏடகநாதேஸ்வரர், தாயார் ஏலவார்குழலி. இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வ மரமும், தலத்தின் தீர்த்தமாக பிரம தீர்த்தக்குளம் மற்றும் வைகை ஆறு ஆகியவை உள்ளன.

திருஞானசம்பந்தர் எழுதிய ’வாழ்க அந்தணர்’ என்ற திருப்பதிகம் எழுதிய ஓலை வைகையாற்று வெள்ளத்தை எதிர்த்து கரையை அடைந்த தலம்.[1]

திருவேடகம்

மதுரையில் இருந்து வடக்கே வைகை நதியின் கரையோரம் அமைந்துள்ள சிவத்தலம் திருவேடகம். இங்கு வைகை நதி தெற்கு வடக்காக ஓடுவதால் காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை, அர்ச்சனை முதலியன செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பிரம்மா, பராசரர், வியாசர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். இக்கோவிலில் உள்ள காலபைரவர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது. தல வரலாறு: மதுரையை அரசாண்டு வந்த கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்தவன். அவன் மனைவி மங்கையர்க்கரசி ஒரு சிறந்த சிவ பக்தை. 63 நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்பவள். சைவத்தைக் காப்பாற்ற மங்கையர்க்கரசி அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தபோது திருநீறு பூசி அரசன் கூன்பாண்டியனின் வெப்ப நோய் நீங்க உதவினார். அங்கிருந்த சமணர்கள் ஆத்திரமுற்று சம்பந்தருடன் அனல் வாதம் புனல் வாதம் புரிந்தனர். சமணர்கள் தங்கள் ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆயிற்று. ஆனால் சம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆகாமல் பச்சையாகவே இருந்தது. பின்பு புணல் வாதத்தின் போது சமணர்கள் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்ட போது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் சம்பந்தர் "வாழ்க அந்தணர் " என்று தொடங்கும் பதிகம் எழுதியிட்ட ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து சென்றது. மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல அது ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற இந்த பாடல் பெற்ற ஸ்தலம்

திருப்பணி

தற்போது (டிசம்பர் 2015) இக்கோயிலில் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

படத்தொகுப்பு

ஆதாரங்கள்

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 331