வரம்
நூலாசிரியர் | இ. தியாகலிங்கம் |
---|---|
பதிப்பாசிரியர் | ச. பொன்னுத்துரை முதற் பதிப்பு |
குரல் கொடுத்தவர் |
பிரிதா |
உண்மையான தலைப்பு |
வரம் |
செயற்பாட்டிலுள்ள தலைப்பு |
வரம் |
நாடு | நோர்வே |
மொழி | தமிழ் |
வெளியீட்டு எண் |
2 |
பொருண்மை | குடும்ப வாழ்க்கை |
வெளியிடப்பட்டது | November 6, 2021 இரண்டாவது பதிப்பு |
ஊடக வகை |
புத்தகம், ஒலிப்புத்தகம் |
பக்கங்கள் | 182 |
பன்னாட்டுத் தரப்புத்தக எண் |
9781471726569 |
முன்னைய நூல் |
பரதேசி |
அடுத்த நூல் |
துருவத் துளிகள் |
இந்த குறுநாவல் தொகுதியில் இடம்பெற்றுள்ள குறுநாவல்களில் முக்கியமானது வரம் எனப்படும் குறுநாவல். அது கருணைக்கொலை பற்றி பேசுகிறது. கொலை என்பதும் வரம் என்பதும் இருக்கும் இடத்தை பொறுத்தது. மனிதம் என்பது? அதைவிட ஐரோப்பியர்களைமட்டுமல்ல ஐரோப்பாவில் பிறந்த எங்கள் பிள்ளைகளையும், எங்களையும் பாதிக்கும் விடயங்கள் பற்றி இந்தக் குறுநாவல் பேசுகிறது.
'வரம்' என்னும் இத்தொகுதியின் கதை கருணைக்கொலை ஒன்றினைப் பற்றிய சிந்தனையை, யதார்த்தச் சூழ்நிலையில் முன்வைக்கிறது. நோர்வேயில் சீக்கயெம் (நர்சிங்ஹோம்) ஒன்றில் சிக்கப்பிளையராக (தாதியாக) பணிபுரியும் வேணியின் பணிகளினூடாகத் தியாகலிங்கம் அதனை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார். கருணைக்கொலை எத்தகைய சாதுரியத்துடனும், அளவு கடந்த மாந்த நேசத்துடனும் கையாளப்படுதல் வேண்டும் என்பது மிக நுட்பமாக 'வரம்' என்கின்ற குறுநாவலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அது தனிப்பட்ட மனித அவலம் பற்றியது. ஆயிரக்கணக்கானோர் கருணைக் கொலை செய்யப்படும், இந்தப் புதிய சாதனை பற்றி இனிப் பிறக்கும் ஓர் இலக்கியப்படைப்பாளிதான் எழுதமுடியும் என்று சமாதானம் அடைவோமாக. சென்ற ஆண்டில் தமது 'பரதேசி' என்னும் நாவலை அச்சிட்டெடுப்பதற்கு தியாகலிங்கம் சென்னை வந்திருந்தார். அப்பொழுது நான் தமிழ் ஈழக் குறுநாவல் தொகை ஒன்றின் தொகுப்புப் பணியினை மேற்பார்வை செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது 'நீங்கள் குறுநாவல் எழுதும் முயற்சியில் ஈடுபட்டதில்லையா?' என்று கேட்டேன். அவர் சிரித்தார். இயல்பாகவே அவர் அதிகம் பேசுவதில்லை. இலக்கியம் குறித்த கலந்துரையாடல்களிலே அவர் ஒதுக்கம் காட்டுபவராகவும் காணப்படுகின்றார். இந்த அமைதியையும் ஒதுக்கத்தையும் அவருடைய பலமாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டுமோ நான் அறியேன். 'பனிகொட்டும் இரவின் தனிமை தரும் வசதியைப் பயனுள்ளதாகப் பயன்படுத்துகிறேன். சின்னதும் பெரியதுமாகக் கதைகள் பலவற்றை என் கணினியில் எழுதி வைத்துள்ளேன். சிறுகதை, குறுநாவல், நாவல் என்று புனைவு இலக்கியத்தின் நீளத்தை வைத்து இலக்கணம் சொல்லும் வித்துவம் எனக்குத் தெரியாது. உங்கள் வாசிப்பிற்காக இரண்டினை அனுப்பி வைக்கிறேன். அதனைக் குறுநாவலாகப் பிரசுரிக்கலாமா என்பது உங்கள் தீர்மானத்தைப் பொறுத்தது' என்றார். நோர்வே சென்றதும் அவர் முதலில் அனுப்பி வைத்ததுதான் வரம் என்கின்ற குறுநாவல். அது குறுநாவல் தொகுதியிலும் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து விளையாட்டு, மாசு, முடங்கள் ஆகிய குறுநாவல்கள் வந்தன. இந்த நூலுக்குத் தியாகலிங்கம் எழுதியுள்ள என்னுரை சுவாரஸ்யமானது. இலக்கியக் கோட்பாடுகளிலே தம்மைப் பிசக்கிக் கொள்ளாத ஒரு பாமரத்தனத்தினை அவர் பயின்றுவருகிறார். இந்தப் பாமரத்தனத்தினை அவர் 'பாவமன்னிப்பு' கோரும் பாங்கிலே பிரசித்தமாக்கியுள்ளார். இந்தச் செயல் அவருடைய இயல்பான அமைதிச் சுபாவத்திற்கு பொருந்துவதே. 'பனிகொட்டும் இரவின் தனிமை தரும் வசதியினால் தாம் எழுதுவதாகத் தியாகலிங்கம் அவையடக்கம் கூறிக் கொண்டாலும், வாஸ்தவத்தில் யதார்த்த வாழ்க்கையில் நிகழும் அவலங்களைச் சமூகக் கடமையுள்ள ஒருவனின் பார்வைக்கு உள்ளாக்குகின்றார். பிரச்சினைகளைக் கருத்தியல் ரீதியான விசாரணைக்கு உட்படுத்துகின்றார். இதனால் அவருடைய ஒவ்வொரு இலக்கியப் புனைவும் சமூக ரீதியான ஒவ்வொரு அக்கறையுடன் இணைந்தே உருவாகியுள்ளதை நாம் அடையாளம் காணலாம்.'