வே
நூலாசிரியர் | இ. தியாகலிங்கம் |
---|---|
பதிப்பாசிரியர் | இ. தியாகலிங்கம் முதற் பதிப்பு 2024 |
உண்மையான தலைப்பு |
வே |
செயற்பாட்டிலுள்ள தலைப்பு |
வே |
நாடு | நோர்வே |
மொழி | தமிழ் |
வெளியீட்டு எண் |
1 |
பொருண்மை | குடும்ப வாழ்க்கையுடன் அரசியல் |
வெளியிடப்பட்டது | May 09, 2024 முதலாவது பதிப்பு |
ஊடக வகை |
புத்தகம் |
பக்கங்கள் | 202 |
பன்னாட்டுத் தரப்புத்தக எண் |
9798894151618 |
முன்னைய நூல் |
கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் (நாடகம்) |
'வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்), உளவு அல்லது உளவு பார்த்தல் என்பது பொருளாகும்.
ஆயுதப் போராட்டத்தால் எமக்கான உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான புவியில் மற்றும் அரசியல் சாதகங்கள் இல்லாமையால் இலங்கை அரசுடன் சேர்ந்தே எமது உரிமைகளைச் சிறிது சிறிதாக வன்முறை பேரழிவுக்குள் அகப்படாமல் பெற வேண்டும் என்றும், நாட்டையும் தமிழ் மக்களையும் பேரழிவிலிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் பலர் பாடுபட்டார்கள். அவர்களைச் சந்தர்ப்ப வாதிகள் என்றும், துரோகிகள் என்றும், சுயநலம் கொண்ட அரசியல்வாதிகள் தூற்றினார்கள். பின்பு வந்த இயக்கங்கள் மேலும் முன்னேறி தமது சுயநலத்திற்காய் அவர்களைக் கொலை செய்தார்கள். அப்படியான தூரநோக்கற்ற குருட்டுச் சுயநல அரசியலே என்மை இந்த நிலைக்குக் கொண்டு வந்தது என்பதைப் பேச முனையும் நாவல் இது. இந்தக் குருட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் அதற்கு விடைகாணப் புறப்பட்ட கதையே இது. இது ஈழ வரலாற்றில் சொல்லப்படாத ஒரு பகுதியைச் சொல்கிறது.
இந்த நாவலுக்கு கிடைத்த விமர்சனத்தில் ஒன்று
வே - நாவல்
ஆசிரியர்: இ. தியாகலிங்கம், Notionpress மற்றும் Amazon-இல் வெளியிடப்பட்டு இருக்கிறது. தியாகலிங்கம் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர், நோர்வேயில் வசிக்கிறார். இவர் பல நாவல்கள், குறு நாவல்கள் மற்றும் சிறுகதைகள் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வே நாவல், மற்றும் கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் என்கின்ற ஹென்ரிக் இப்சனின் தமிழாக்க நாடகம் ஆகியவை தற்செயலாக நண்பர் ஒருவர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டதால் யுஅயணழn-இல் அவற்றை வாசித்தேன். அவரது பல படைப்புகள் அங்கே இருக்கின்றன.
முதலில் வே நாவலைப் பார்ப்போம். ஈழப் பிரச்சனை என்பதால் என்னிடம் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அதைத் தலைகீழாக்கிய உணர்வு நாவலைப் படித்து முடித்தபோது ஏற்பட்டது என்பது உண்மை. யுத்த நாவலாக நேரடி முகம் காட்டாது கிணற்றுக்குள் தேடி எலும்பைக் கண்டு பிடிப்பதான மறக்கப்பட்ட உண்மை தோண்டும் ஒரு முயற்சி. இப்படியான முயற்சிகளும் அவசியம் என்று நான் நினைக்கிறேன்.
ஈழ யுத்தம் தொடங்க முதலே பல கொலைகள் நடந்தன. அவை அப்படியே மறக்கப்பட்டும் விட்டன. ஆனால் அவர்களின் உறவுகளிடம் இருந்து அந்த வலியைக் காலம் அகற்றி இருக்குமா? இல்லை என்பதாக ஆசிரியர் கதையை நகர்த்திச் செல்கிறார். இன்றும் கொல்லப்பட்டவருக்காய் கதறும் உறவுகளைப் பற்றி எனக்குத் தெரியும். அப்போதெல்லாம் ஈழப்போராட்டம் யாரால், எதற்காகத் தொடங்கப்பட்டது என்று நான் என்னைக் கேட்டுக் கொள்வது உண்டு. அதை இங்கே எட்டிப் பார்த்திருக்கிறார் என்பது வித்தியாசமானது. இது உணர்ச்சி தவிர்த்து, உண்மையை உணரப் பார்க்கும் ஒரு முயற்சி என்று எடுத்துக்கொள்ளலாம்.
தமிழர்களின் உரிமைப் பிரச்சனைக்கு ஆயுதப் போராட்டம் சரியான வழியா? இத்தனை அழிவுகளையும் எமது இனத்தின் இடப்பெயர்வுகளையும் தவிர்க்குமாறு ஏன் எமது அரசியல்வாதிகள் சிந்தித்திருக்கக்கூடாது? ஒரு வகையில் ஆசிரியரின் கருத்து போல ஆயுதத்தை வைத்து சுயநல பூச்சாண்டி அரசியல் காட்டப் போய், அதுவே எமது இனத்திற்கு வினையாக முடிந்திருக்கிறது. அந்த தவறு பற்றிய சுய விமர்சனமோ, அதன் பின்பு வந்த பேரழிவுப் போராட்டம் பற்றிய சுய விமர்சனமோ காத்திரமாக எங்கும் வைக்கப்படவில்லை. அதற்கு இன்றும் யாரும் தயாராகவும் இல்லை. இன்றும் நடந்த அநியாயங்களுக்கு நியாயம் கற்பித்து, ஒரு அநியாயத்தை, பேரழிவை, நியாயமாக்க முனையும் படைப்புக்களில் என்ன அறம் அல்லது தார்மீகம் இருக்கிறது? பிழைகளைப் பிழை என்று சொல்லும் ஒரு எழுத்தாளரின் எழுத்தை வாசிப்பதற்குத் தேடினேன். அந்த தன்மையை இந்த நாவலில் கொஞ்சம் பார்க்க முடிந்தது.
தேவையற்ற சொற்கள் எதுவும் இல்லாது நாவல் இறுக்கமாகக் கட்டப்பட்டு இருப்பதோடு, டிலாணி, சோதீஸ் என்கின்ற இருவேறு துருவங்கள் இணையவும் முடியாது, பிரியவும் முடியாது திண்டாடுவதை அழகாகச் சித்தரித்து இருக்கிறார். LAT பற்றி அறிமுகம் செய்கிறார். இவர் அழிவின் அழைப்பிதழ் என்கிற நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர். அதிலேயே தொட முடியாத பல விடயங்களை இவர் தொட்டு இருந்தார். இதில் LAT தொடப்படுகிறது. தமிழ் உலகிற்கு இது மிகவும் புதிதே.
முழுமையான விமர்சனம் எழுதுவது என்றால் அதிக நேரம் தேவைப்படும். அதை விடுத்து சுருக்கமாகச் சொல்வது என்றால். காலத்திற்குத் தேவையான நாவல். புதிய கோணத்திலான பார்வை. நிச்சயமாக வாசிக்க வேண்டிய ஒன்று.
கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் என்கிற இந்த நாடகம்; உலக நாடகங்களின் தந்தை என்று அழைக்கப்படும் ஹென்ரிக் இப்சனால் எழுதப்பட்டது. அதனால் அதன் கலையம்சம், கதையம்சம் பற்றி நான் இங்கே கூறத் தேவையில்லை. மொழி பெயர்ப்பை மட்டும் பார்த்த வகையில் யாரும் இ. தியாகலிங்கத்தை இதற்குப் பாராட்டாமல் கடந்து செல்லமாட்டார்கள் என்றே தோன்றுகிறது.
இந்த நாடகம்; நாடகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம். ஹென்ரிக் இப்சனின் சிறந்த நாடகமாய் ஒரு பொம்மை வீடு கருதப்படுகிறது. கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் அதற்குச் சளைத்தது இல்லை. அத்தோடு தியாகலிங்கத்தின் அழகு தமிழும் சேர்ந்து, வாசிக்கும் கணங்களைத் திரைப்படம் பார்க்க வைப்பது போல் இருக்கிறது.
தமிழில் பல இலக்கியங்கள், சில இலக்கியப் படைப்பாளர்கள், ஏனோ பேசப்படுவதில்லை, கண்டு கொள்ளப் படுவதில்லை. தமிழக இலக்கிய ஜாம்பவான்களிடம் ஓடுவதும், அவர்களை அழைத்து வந்து விருந்தோம்புவதும், அவர்களுக்கு விருது கொடுப்பதும், அதனால் நல் விமர்சனங்களையும், புகழ் மொழியையும், விருதுகளையும் அதற்குக் கையூட்டாக வாங்குவதுமாகத் தமிழ் இலக்கிய உலகு காசடைந்து கிடக்கிறது. அதைவிடப் பல அரசியல்கள். அதனால் பேசப்படாத நல்ல படைப்புக்கள், அவற்றைப் படைத்த எழுத்தாளர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். அப்படி பேசப்படாதவர்களில் ஆளுமையான படைப்பாளிகளும் உண்டு. அவற்றை இனம் காண வேண்டியது தமிழ் இலக்கியத்திற்கு மிகவும் அவசியமாகின்றது. அதில் தியாகலிங்கமும் ஒருவர் என்று நான் எண்ணுகிறேன்.
இளைய சந்திரன்
இத்தாலி