ஊர்வசி புட்டாலியா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஊர்வசி புட்டாலியா
Urvashi Butalia
UrvashiButalia.jpg
2011 இல் ஊர்வசி புட்டாலியா
பிறப்பு1952 (அகவை 71–72)
அம்பாலா, அரியானா
தேசியம்இந்தியர்
பணிவரலாற்றாளர்
பெண்ணியவாதி
வலைத்தளம்
www.zubaanbooks.com

ஊர்வசி புட்டாலியா (Urvashi Butalia, பிறப்பு: 1952) என்பவர் பெண்ணிய எழுத்தாளர், படைப்பாளி, நூலாசிரியர், மற்றும் நூல் வெளியீட்டாளர் ஆவார். காளி பார் விமன் (kali for women) என்ற இந்தியாவின் முதல் பெண்ணியப் பதிப்பகத்தை ரிது மேனனுடன் சேர்ந்து தோற்றுவித்தவர்.[1]

இளமைக் காலம்

ஊர்வசி புட்டாலியா அரியானா மாநிலம் அம்பாலா என்னும் ஊரில் பிறந்தார். 1973 ஆம் ஆண்டில் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களை தில்லிப் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்றார். பின்னர் 1977 இல் இலண்டன் பல்கலைக்கழகத்தில் தென்னாசிய ஆய்வுகள் செய்து முதுகலைப் பட்டம் பெற்றார்.[2]

பதிப்புப் பட்டறிவு

தில்லியில் அமைந்துள்ள ஆக்சுபோர்டு பல்கலைக்கழக பதிப்பகத்தில் பணியில் சேர்ந்து பதிப்பு சம்பந்தமான அனுபவங்களை ஊர்வசி புட்டாலியா பெற்றார்.[2] 1982 இல் இலண்டனில் உள்ள 'செட் புக்ஸ்' அமைப்பில் பெண்ணிய ஆய்வுகளில் ஈடுபட்டார். 1984 ஆம் ஆண்டில் ரிது மேனனுடன் இணைந்து பெண்ணியக் கருத்துகளைப் பரப்பும் நோக்கத்துடன் ஒரு பதிப்பகத்தைத் தோற்றுவித்தார்.[3] 2003 ஆம் ஆண்டில் ரிது மேனனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். அதற்குப் பிறகு 'சுபான் புக்ஸ்' என்னும் பதிப்பகத்தைத் தொடங்கினார். பெண்ணியம் பேசும் நூல்கள் மட்டுமன்றி கதை, புதினம், குழந்தை நூல்கள் பொது நூல்கள் எனப் பல வகை நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டது.

எழுத்துப்பணி

பெண்களுக்கு எதிரான வன்செயல்களைக் கண்டித்தும் எதிர்த்தும் பல செய்தித் தாள்களிலும் இதழ்களிலும் எழுதி வருகிறார். பெண்களின் படைப்பாற்றலை வளர்த்தெடுக்க உதவி வருகிறார். இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்ந்த வன்முறையிலும் போராட்டத்திலும் பாதிக்கப்பட்டு உயிர்ப் பிழைத்தோர் பலரை அணுகி பேட்டி கண்டு அவர்களுடைய அவலங்களையும் அனுபவங்களையும் பதிவு செய்துள்ளார். தி கார்டியன், தி டைம்ஸ் ஆப் இந்தியா, அவுட்லுக், இந்தியா டுடே, தி இந்து போன்ற ஆங்கிலத்தாள்களில் பாலினச் சிக்கல்கள், தீவிரவாதம், அரசியல் போன்ற தளங்களில் தம் கருத்துகளை எழுதுகிறார். ஊர்வசி புட்டாலியா இதுவரை 7 நூல்கள் எழுதி இருக்கிறார். இவரும் ரிது மேனனும் இணைந்து பத்மசிறீ விருதினை 2003-ஆம் ஆண்டில் பெற்றனர்.

மேற்கோள்கள்

  1. Daftuar, Swati (28 அக். 2010). "Identity matters". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article853524.ece. பார்த்த நாள்: 26 ஏப்ரல் 2013. 
  2. 2.0 2.1 "Bio – Butalia". Lettre Ulysses Award for the Art of Reportage. http://www.lettre-ulysses-award.org/jury06/bio_butalia.html. பார்த்த நாள்: 26 ஏப்ரல்l 2013. 
  3. "Urvashi Butalia: I want to prove that feminist publishing can survive commercially". Livemint. 14 சூன் 2013. http://www.livemint.com/Companies/595QfElEltDLfuvgNqTiOI/Urvashi-Butalia--I-want-to-prove-that-feminist-publishing-c.html. பார்த்த நாள்: 16 ஆகத்து 2013. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஊர்வசி_புட்டாலியா&oldid=18752" இருந்து மீள்விக்கப்பட்டது