குன்னக்குடி வைத்தியநாதன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
குன்னக்குடி வைத்தியநாதன் |
---|---|
பிறந்ததிகதி | மார்ச்சு 2, 1935 |
பிறந்தஇடம் | குன்னக்குடி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு |
இறப்பு | செப்டம்பர் 8, 2008 | (அகவை 73)
பணி | இசைக்கலைஞர் |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | வயலின் இசைக்கலைஞர் |
பெற்றோர் | இராமசாமி சாத்திரி மீனாட்சி அம்மையார் |
துணைவர் | பாகீரதி |
குன்னக்குடி வைத்தியநாதன் (மார்ச் 2, 1935 - செப்டம்பர் 8, 2008) இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். குன்னக்குடியில் பிறந்த இவர் இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றவராவார். கருநாடக இசையை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.
நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப் பட்டையும் பெரிய குங்குமப் பொட்டும் அணிந்து காட்சியளித்தவர். வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர் என இவரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.
வாழ்க்கைச் சுருக்கம்
1935 இல் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள குன்றக்குடியில் இராமசாமி சாத்திரி, மீனாட்சி அம்மையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த வைத்தியநாதன் தனது 12 ஆவது அகவையிலிருந்து இசைக் கச்சேரிகளில் பங்கேற்றார்.
ஆரம்பத்தில் செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் சந்தானம், சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து பங்கேற்ற குன்னக்குடி பின்னர் தனிக் குழுவை அமைத்து கச்சேரிகள் நடத்தி வந்தார். தனியாகவும் பின்னர் கச்சேரி செய்ய ஆரம்பித்தார்.
அரியக்குடி இராமானுஜ ஐயங்காருக்கு காரைக்குடியில் நடந்த இசை நிகழ்வொன்றில் பக்க வாத்தியமாக வயலின் வாசித்தமையே வைத்தியநாதனின் வயலின் அரங்கேற்றமாகக் கருதப்படுகின்றது. காலங்காலமாக வயலினுடன் மிருதங்கம் வாசிக்கப்பட்டமையில் மாற்றஞ் செய்து வலயப்பட்டி சுப்பிரமணியம் என்பாரின் தவிலுடன் பெருமளவு வயலின் கச்சேரிகளைச் செய்துள்ளார். கருநாடக இசை, திரைப்பட இசை என்பவற்றோடு பறவைகள், மிருகங்களின் ஓசைகள் போன்ற இயற்கை ஒலிகளையும் வயலினில் வாசித்தார்.
திரைப்பட உலகில்
வா ராஜா வா (1969) என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த வைத்தியநாதனுக்கு திருமலை தென்குமரி (1970) எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்தது. மொத்தம் 22 திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
இசையமைத்த பிற திரைப்படங்கள்
பிற பங்களிப்புகள்
தோடிராகம் (1983) என்னும் திரைப்படத்தைச் சொந்தமாகத் தயாரித்தார். டி. என். சேஷகோபாலன் இதில் முக்கிய பாத்திரமாக நடித்தார். குன்னக்குடி வைத்தியநாதன் சில திரைப்படங்களில் கௌரவ வேடங்களில் நடித்தும் உள்ளார்.
சிறப்புகள்
திருவையாறு தியாக பிரம்ம சபையின் செயலராக 28 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு இயல்இசை நாடக மன்றத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
ராக ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பை நிறுவி இசையால் நோய்களை குணமாக்க முடியுமா என்ற ஆய்விலும் ஈடுபட்டிருந்தார்.
விருதுகள்
- இசைப்பேரறிஞர் விருது, 1989. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[1]
- சங்கீத நாடக அகாதமி விருது, 1993 [2]
- சங்கீத கலாசிகாமணி விருது, 1996; வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
- பத்மஸ்ரீ விருது; வழங்கியது: இந்திய அரசு.
- கலைமாமணி விருது; வழங்கியது: தமிழக அரசு
மறைவு
இவர் 2008, செப்டம்பர் 8 ஆம் நாள் தனது 73 ஆவது வயதில் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இரவு 9மணியளவில் மாரடைப்பால் காலமானார். வைத்தியநாதன் பாகீரதி தம்பதியினருக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
மேற்கோள்கள்
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2012-02-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120212161602/http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 22 டிசம்பர் 2018.
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.
வெளி இணைப்புகள்
- 1935 பிறப்புகள்
- 2008 இறப்புகள்
- இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள்
- இந்திய வயலின் கலைஞர்கள்
- இசைப்பேரறிஞர் விருது பெற்றவர்கள்
- சங்கீத கலாசிகாமணி விருது பெற்றவர்கள்
- கலைமாமணி விருது பெற்றவர்கள்
- பத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள்
- சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்
- தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
- பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்