இரசவாதம் செய்த படலம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்தில் முப்பத்தாறாவது படலமாக இரசவாதஞ் செய்த படலம் (செய்யுள் பத்திகள்: 1856 -1885) உள்ளது[1]. இதில் திருப்பூவணத்து இறைவன் திருமேனியைச் செய்திடத் தேவையான தங்கத்தை இரசவாதம் மூலமாகப் பெற்றிடும் முறையை மதுரை ஈசன் சித்தர் வடிவில் நேரில் வந்து அருளியுள்ளார்.

அன்னமிட்ட கை

முன்பு, திருப்பூவணத்தில் பொன்னனையாள் என்ற சிவபக்தை இருந்தாள். இவள் சிறந்த நடன மாது. நாட்டிய இலக்கணப்படித் தினமும் இறைவன் முன் நடனமாடுவது இவளது வழக்கம். தனக்குக் கிடைக்கும் வருமானத்தை எல்லாம் அன்னதானத்திற்குச் செலவு செய்தாள். தினமும் சிவனடியார் பலரும் வந்து உணவருந்திச் செல்வதைக் கண்டு மகிழ்ந்தாள்.

திருத்தர் பூவண வாணரைச் சேவித்துச் சுத்த
நிருத்த மாடிவந் தடியரைப் பொருளென நினையுங்
கருத்த ளாயருச் சித்தவர் களிப்பவின் சுவையூண்
அருத்தி யெஞ்சிய தருந்துவா ளமஃதவ ணியமம்

அப்படியிருக்கையில் அவளுக்குத் திருப்பூவணம் கோயிலில் வைத்துப் பூசிப்பதற்கு இறைவனின் திருமேனியைத் தங்கத்தில் செய்து கொடுக்க வேண்டும் என்று பேராவல் பூவணநாதரின் அருளாசியினால் உண்டானது. ஆனால் கிடைக்கும் பொருள் எல்லாம் அன்னதானத்திற்கே செலவானது. தங்கத்திற்கு எங்கே போவது. குலபூடண பாண்டியனுக்கு எடுக்க எடுக்கக் குறையாத பொற்கிழியை வழங்கிய மதுரை சோமசுந்தரக் கடவுளை மனதில் நினைந்து வேண்டினாள்.

சித்தர் வடிவில் சிவபெருமான்

இந்த பக்தையின் விருப்பத்தை அறிந்த மதுரை சோமசுந்தரப் பெருமான். அதனைப் பூர்த்தி செய்ய திருவுள்ளம்கொண்டு சித்தர் வடிவில் திருப்பூவணத்தில். பொன்னனையாள் வீட்டிற்கு எழுந்தருளினார்.

அங்கு, அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, தாதியர்கள் உணவு உண்ண வாருங்கள் எனச் சித்தரையும் அழைத்தனர், அதற்கு சித்தர் பெருமான். உங்களது தலைவியை இங்கே அழையுங்கள் எனக் கூறினார், பொன்னனையாள் வந்தாள். சித்தரது பாதங்களில் தனது தலை பதியுமாறு பணிந்து உணவு உண்ண அழைத்தாள், அதற்குச் சித்தர். உனது முகம் வாட்டத்துடன் காணப்படுகின்றதே! உனது மனக் கவலைதான் என்ன? என்று கேட்டார், பொன்னனையாளும், எங்கள் தலைவனாம் திருப்பூவணத்து இறைவனது திருவுருவினைச் செய்வதற்கு உள்ளத்தில் பெருவிருப்பம் கொண்டு மெழுகினால் கருக்கட்டி வைத்துள்ளேன், அதனைப் பொன்னினால் செய்து முடிக்கக் கருதிய எனக்கு நாள்தோறும் கையில் வரும் பொருள் முழுவதும் அடியார்களுக்கு அன்னம் இடுவதிலேயே செலவாகி விடுகின்றது, நான் என்ன செய்வேன்? என்று தனது கவலையை கூறினாள், அதற்குச் சித்தரும். நீ தானத்துள் சிறந்த அன்னதானத்தை நாள்தோறும் செய்து வருகின்றாய், உன் பெயருக்கு ஏற்றவாறு அழிவில்லாத இறைவனின் திருவுருவத்தைத் தங்கத்தினால் செய்யப் பெறுவாயாக என வாழ்த்தினார்.

இரசவாதம்

பின்னர். அனைத்து உலோகப் பாத்திரங்களையும் கொண்டு வரச்செய்து. திருநீற்றினைத் தூவினார், இவற்றைத் தீயிலிட்டுக் காய்ச்சுங்கள் தங்கம் கிடைக்குமெனக் கூறி அருளினார், பொன்னனையாள் அச்சித்தர் சுவாமியை வணங்கி இன்றைய இரவு இங்கேயே தங்கித் திருவமுது செய்து இரசவாதம் செய்து முடித்தபின்னர் அதிகாலை எழுந்து செல்லலாம் என வேண்டினாள், மீனாட்சி அம்மையைப் பிரியாத சோமசுந்தரரே சித்தர் வடிவில் வந்துள்ளதால் அவர் யாம் மதுரையில் விளங்கும் சித்தராவோம் எனக் கூறி மறைந்தார், சித்தர் கூறிய சொற்களும். மறைந்தருளிய தன்மையையும் கண்ட பொன்னனையாள். வந்தவர் மதுரை வெள்ளியம்பலத்தில் கால்மாறி ஆடியருளும் அம்பலவாணரே எனக் கண்டு பக்தியால் நெகிழ்ந்து. தனது கவலையை இறைவனே நேரில் வந்து நீக்கினார் எனக் களிப்புற்றவளாகிச் சித்தர் கூறியபடியே செய்ய உலோகப் பாத்திரங்களைத் தீயிலிட்டுப் புடம் செய்தனள், ஆணவமலம் கெட்டு இறைவனின் திருவடியை அடைந்தவர் சிவமாக விளங்குதல் போல உலோகங்களின் களிம்பு நீங்கிப் பொன்னாக மாறின, அப்பொன்னைக் கொண்டு இறைவனுக்குத் திருவுருவம் வார்ப்பித்தாள்,

இறைவனின் திருமேனியில் தழும்பு உண்டானது

கிடைத்த தங்கத்தைக் கொண்டு வடிவே இல்லாத இறைவனின் திருவுருவத்தைச் செய்திட்டார், இறைவனின் அழகான திருவுருவத்தைக் கண்டு அச்சோ! அழகிய பிரனோ இவன்!! என்று இறைவனின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள், அதனால் இறைவனின் திருமேனியில் தழும்பு உண்டானது, இத் திருவுருவத்தை இன்றும் கோயிலில் தரிசித்திடலாம், பொன்னனையாள் இறைவனின் கன்னத்தைக் கிள்ளுவது போன்ற சிற்பம் கோயில்; மகா மண்டபத்தில் உள்ள கல்தூணில் செதுக்கப்பட்டுள்ளது,

நையுநுண் ணிடையி னாளந் நாயகன் கபோலத் திட்ட
கையுகிர்க் குறியுஞ் சொன்ன காரணக் குறியுங் கொண்டு
வெய்யவெங் கதிர்கால் செம்பொன் மேனிவே றாகிநாலாம்
பொய்யுகத் தவர்க்குத் தக்க பொருந்துரு வாகி மன்னும்

திருப்பூவணம் கோயில் இறைவனின் திருமேனியைச் செய்திட மதுரை ஈசனே நேரில் சித்தர் வடிவில் வந்து. இரசவாதம் செய்து தங்கம் தயாரித்துக் கொடுத்தது இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பாகும்,

இறைவனது திருவுள்ளத்தில். அடியவர்களில் அடிமையென்றும் ஆடிப்பிழைப்பவர் என்றும் பேதங்கள் ஏதும் இருப்பதில்லை, இறைவன் மனம் விரும்புவதெல்லாம் அன்பும். தொண்டும் பக்தியும் தான் என்பதை அறியுமாறு கூறப்பட்டுள்ளது, மேலும் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வதால் நமது பாவங்கள் அனைத்தும் ஒழிந்து நமக்கு இறைவன் நேரில் காட்சி தந்து அருளுவான் என்பதும் கூறப்பட்டுள்ளது,

பொன்னனையாள் தங்கத்தினால் ஆன இறைவனது திருவடிவத்தைப் பிரதிட்டை செய்து தேர்த்திருவிழா முதலியன நடத்தி இனிது வாழ்ந்தாள், சிலகாலம் சென்ற பின்னர் வீடுபேறு அடைந்தாள்,

மதுரையில் திருவிளையாடற் புராணக்கதைத் தொடர்பான விழாக்கள் இன்றும் நடைபெற்று வருகின்றன, அவ்வாறாக நடைபெறும்போது இரசவாதம் செய்த படலம் நடைபெறும் நாளில் சோமசுந்தரக் கடவுள் மதுரையிலிருந்து திருப்பூவணத்திற்கு எழுந்தருளி வந்தார், பல ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு திருப்பூவணம் வந்த சோமசுந்தரக் கடவுளைக் குறிப்பிட்ட நேரத்தில் மீண்டும் மதுரை ஆலயத்திற்குக் கொண்டு சேர்ப்பது முடியாததாகிவிட்டது, இக்காரணத்தினால் அதற்கு அடுத்த ஆண்டுகளில் இத்திருவிளையாடற் தொடர்பான விழாவினை மதுரைக் கோயிலிலேயே வைத்து நடத்தி வருகின்றனர், இப்போது வாகன வசதிகளும். நவீன தொலைத்தொடர்பு வசதிகளும் கூடியுள்ளதால் முன்புபோல் இப்போது காலதாமதம் ஏற்பட வாய்ப்பில்லை, எனவே இரசவாதம் செய்த படலம் தொடர்பான திருவிழாவினை மீண்டும் திருப்பூவணத்தில் நடத்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

36-ஆவது திருவிளையாடற் பாடல்கள்

  • 36-ஆவது திருவிளையாடற் பாடல்கள் (மூலம்) பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம்
  • 36, இரசவாதஞ் செய்த படலம் (கலி நிலைத்துறை)

திருப்பூவணத் தலத்தின் பெருமை

1856 வரதன் மீனவன் படையிடை வந்துநீர்ப் பந்தர்
விரத னாகிநீ ரருத்திய வினையுரை செய்தும்
பரத நூலிய னாடகப் பாவையா ளொருத்திக்
கிரத வாதஞ்செய் தருளிய வாடலை யிசைப்பாம்.

1857 பருங்கை மால்வரைப் பூழியன் பைந்தமிழ் நாட்டின்
இரங்கு தெண்டிரைக் கரங்களா லீர்ம்புனல் வையை
மருங்கின னந்தன மலர்ந்தபன் மலர்க?ய்ப் பணியப்
புரங்க டந்தவ னிருப்பது பூவண நகரம்.

1858 எண்ணி லங்குறை சராசர மிலிங்கமென் றெண்ணி
விண்ணி னாள்களும் கோள்களும் விலங்குவ தியாக்கைக்
கண்ணி னான்கதிர் முதற்பல கடவுளர் பூசை
பண்ணி வேண்டிய நல்வர மடைந்ததப் பதியில்.

பொன்னனையாளின் தன்மை

1859 கிளியு ளார்பொழிற் பூவணக் கிழவர்தங் கோயில்
றளியு ளார்தவப் பேறனா டாதுகு பூந்தார்
அளியு ளார்குழ லணங்கனா ளந்தரத் தவர்க்குங்
களியு ளார்தர மயக்குறு}உங் கடலமு தனையாள்.

1860 நரம்பி னேழிசை யாழிசைப் பாடலு நடநூல்
நிரம்பு மாடலும் பெண்ணல நீர்மையும் பிறவும்
அரம்பை மாதரை யொத்தன ளறனெறி யொழுகும்
வரம்பி னாலவர் தமக்குமே லாயினாண் மன்னோ.

1861 ஆய மாதர்பேர் பொன்னனை யாளென்ப வவடன்
நேய வாயமோ டிரவிரு ணீங்குமு னெழுந்து
தூய நீர்குடைந் துயிர்புரை சுடர்மதிக் கண்ணி
நாய னாரடி யருச்சனை நியமமு நடாத்தி.

1862 திருத்தர் பூவண வாணவரைச் சேவித்துச் சுத்த
நிருத்த மாடிவந் தடியரைப் பொருளென நினையுங்
கருத்த ளாயருச் சித்தவர் களிப்பவின் சுவையூண்
அருத்தி யெஞ்சிய தருந்துவா ளமூதவ ணியமம்.

1863 மாத ரிந்நெறி வழங்குநாண் மற்றவ ளன்பைப்
பூத லத்திடைத் தெருட்டுவான் பொன்மலை வல்லி
காத னாயகன் றிருவுருக் காணிய வுள்ளத்
தாத ரங்கொடுத் தருளினார் பூவணத் தையர்.

1864 ஐயர் தந்தபே ரன்புரு வாயினாண் மழுமான்
கையர் தந்திரு வுருவினைக் கருவினாற் கண்டு
மைய கண்ணினாள் வைகலும் வருபொரு ளெல்லாம்
பொய்யி ;லன்புகொண் டன்பர்தம் பூசையி னேர்வாள்.

1865 அடியர் பூசனைக் கன்றியெஞ் சாமையா லடிகள்
வடிவு காண்பதெப் படியென்று மடியிலச் செழியற்
கொடிவில் பொற்கிழி நல்கிய வள்ளலை யுன்னிப்
பிடிய னாளிருந் தாளமூ தறிந்தனன் பெருமான்.

சிவபெருமான் சித்தர் வடிவம் கொண்டு வருதல்

1866 துய்ய நீறணி மெய்யினர் கட்டங்கந் தொட்ட
கையர் யோகபட் டத்திடைக் கட்டினர் பூதிப்
பையர் கோவண மிசையசை யுடையினர் பவளச்
செய்ய வேணிய ரங்கொரு சித்தராய் வருவார்

1867 வந்து பொன்னனை யாண்மணி மாளிகை குறுகி
அந்த மின்றிவந் தமுதுசெய் வாரொடு மணுகிச்
சிந்தை வேறுகொண் டடைந்தவர் திருவமு தருந்தா
துந்து மாளிகைப் புறங்கடை யொருசிறை யிருந்தார்

1868 அமுது செய்தருந் தவரெல்லா மகலவே றிருந்த
அமுத வாரியை யடிபணிந் தடிச்சிய ரைய
அமுது செய்வதற் குள்ளெழுந் தருள்கென வுங்கள்
அமுத னாளையிங் கழைமினென் றருளலு மனையார்

1869 முத்த ராமுகிழ் வாணகை யல்குலாய் முக்கண்
அத்த ரானவர் தமரெலா மமுசெய் தகன்றார்
சித்த ராயொரு தம்பிரான் சிறுநகை யினராய்
இத்த ராதலத் தரியரா யிருக்கின்றா ரென்றார்

சித்தமூர்த்தி பொன்னனையாளை மெலிந்த காரணம் யாதெனல்

1870 நவம ணிக்கலன் பூத்தபூங் கொம்பாp னடந்து
துவரி தழ்க்கனி வாயினாள் சுவாகதங் கிலாவன்
றுவமை யற்றவர்க் கருக்கிய மாசன முதவிப்
பவம கற்றிய வடிமலர் முடியுறப் பணிந்தாள்

1871 எத்த வஞ்செய்தே னிங்கெழுந் தருளுதற் கென்னாச்
சித்தர் மேனியும் படிவெழிற் செல்வமு நோக்கி
முத்த வாணகை யரும்பநின் றஞ்சலி முகிழ்ப்ப
அத்தர் நோக்கினா ரருட்கணா லருள்வலைப் பட்டாள்

1872 ஐய உள்ளெழுந் தருளுக வடிகணீர் ரடியேன்
உய்ய வேண்டிய பணிதிரு வுளத்தினுக் கிசையச்
செய்ய வல்லனென் றஞ்சலி செய்யவுண் ணகையா
மைய னோக்கியை நோக்கிமீ னோக்கிதன் மணாளன்

1873 வடியை நேர்விழி யாய்பெரு வனப்பினை சிறிதுன்
கொடியை நேரிடை யெனவிளைத் தனையெனக் கொன்றை
முடியி னானடி யாரமென் முகிழ்முலைக் கொடிதாழ்ந்
தடிய னேற்குவே றாயொரு மெலிவிலை யையா

1874 எங்க ணாயகர் திருவுருக் காண்பதற் கிதயந்
தங்கு மாசையாற் கருவுருச் சமைத்தனன் முடிப்பேற்கு
கிங்கு நாடொறு மென்கையில் வரும்பொரு ளெல்லாம்
உங்கள் பூசைக்கே யல்லதை யொழிந்தில வென்றாள்

சித்த மூர்த்திகள் சிவனடியார் பெருமை கூறல்

1875 அருந்து நல்லமு தனையவ ளன்புதித் திக்கத்
திருந்து தேனென விரங்குசொற் செவிமடுத் தையர்
முருந்து மூரலாய் செல்வமெய் யிளமைநீர் மொக்குள்
இருந்த வெல்லையு நிலையில வென்பது துணிந்தாய்

1876 அதிக நல்லற நிற்பதென் றாpந்தனை யறத்துள்
அதிக மாஞ்சிவ புண்ணியஞ் சிவார்ச்சனை யவற்றுள்
அதிக மாஞ்சிவ பூசையு ளடியவர் பூசை
அதிக மென்றாpந் தன்பரை யருச்சனை செய்வாய்

1877 உறுதி யெய்தினை யிருமையு முன்பெயர்க் கேற்ப
இறுதி யில்லவன் றிருவுரு வீகையாற் காணப்
பெறுதி யாகநின் மனைக்கிடைப் பித்தளை யீயம்
அறுதி யானபல் கலன்களுங் கொணர்தியென் றறைந்தார்

1878 ஈயஞ் செம்பிரும் பிரசிதங் மென்பவும் புணர்ப்பாற்
றோயம் பித்தளை வெண்கலந் தராமுதற் றெhடக்கத்
தாயும் பல்வகை யுலோகமுங் கல்லென வலம்பத்
தேயுஞ் சிற்றிடை கொண்டுபோய்ச் சித்தர்முன் வைத்தாள்

சித்தமூர்த்திகள் இரசவாதம் புரிதல்

1879 வைத்த வேறுவே றுலோகமு மழுவுழை கரந்த
சித்த சாமிக ணீற்றினைச் சிதறினர் பாவித்
தித்தை நீயிரா வொpயிலிட் டெடுக்கினன் பொன்னாம்
அத்தை நாயகன் றிருவுருக் கொள்கென வறைந்தார்

1880 மங்கை பாகரை மடந்தையு மிங்குநீர் வதிந்து
கங்குல் வாயமு தருந்தியிக் காரிய முடித்துப்
பொங்கு காரிருள் புலருமுன் போமெனப் புகன்றாள்
அங்க யற்கணா டனைப்பிரி யாரதற் கிசையார்

1881 சிறந்த மாடநீண் மதுரையிற் சித்தர்யா மென்று
மறைந்து போயினார் மறைந்தபின் சித்தராய் வந்தார்
அறைந்த வார்கழ லலம்பிட வெள்ளிமன் றாடி
நிறைந்த பேரொளி யாயுறை நிருத்தரென்று அறிந்தாள்

பொன்னனையாள் உலோகங்களைத் தீயிலிட்டுப் பொன்னாதல்

1882 மறைந்து போயினா ரெனச்சிறி தயர்ச்சியு மனத்தில்
நிறைந்த தோர்பெருங் கவற்சியை நீக்கினா ரென்னச்
சிறந்த தோர்பெரு மகிழ்ச்சியு முடையளாய்ச் சித்தர்
அறைந்த வாறுதீப் பெய்தன ளுலோகங்க ளனைத்தும்

1883 அழல டைந்தபி னிருண்மல வலிதிரிந் தரன்றாள்
நிழல டைந்தவர் காட்சிபோ னீப்பருங் களங்கங்
கழல வாடக மானதா லதுகொண்டு கனிந்த
மழலை யீர்ஞ்சொலாள் கண்டனள் வடிவிலான் வடிவம்

1884 மழவிடை யுடையான் மேனி வனப்பினை நோக்கி யச்சோ
அழகிய பிரானோ வென்னா வள்ளிமுத் தங்கொண் டன்பிற்
பழகிய பிரானை யானாப் பாpவினாற் பதிட்டை செய்து
விழவுதேர் நடாத்திச் சின்னாள் கழிந்தபின் வீடு பெற்றாள்

1885 நையநு[ண் ணிடையி னாளந் நாயகன் கபோலத் திட்ட
கையுகிர்க் குறியுஞ் சொன்ன காரணக் குறியுங் கொண்டு
வெய்யவெங் கதிர்கால் செம்பொன் மேனிவே றாகி நாலாம்
பொய்யுகத் தவர்க்குத் தக்க பொருந்துரு வாகி மன்னும்

இரசவாதம் செய்த படலம் முற்றிற்று,

திருவிளையாடற் புராணம். கழுவேறிய திருவிளையாடல்

வேசமுற விருந்த கழு திரைமுடிந்த வடமின்றும் பூசுரர்கள் பணிந்தேத்தும் பூவணநன்னகர் மருங்கிற் காசின் மேல் விளங்கியது கழுவர் படைவீடெனவே - செல்லிநகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பி. திருவாலவாயுடையார் - பாடல் எண்,50

திருவிளையாடற் பயகரமாலை

இரசவாதம் செய்த திருவிளையாடற் புராண வரலாறு. திருவிளையாடற்பயகர மாலையில்.

மணிதிகழ் மாடமலிமது ராபுரி வாழ்சித்தரேந்
துணிவுட னின்னன்பு கேட்டணைந் தோமென்று சொல்லிப் பின்ன
ரணிதிகழ் பூவணப் பொன்னனை யாளுக்கன் றாணிப் பொன்னைப்
பணிவிடைக் கீந்தசொக் கேபர தேசி பயகரனே

(திருவிளையாடற் பயகரமாலை. பாடல் எண் 45) என்று பாடப்பெற்றுள்ளது,

கடம்பவன புராணம்

பொன்னனையாளுக்கு அருள் புரிந்த திருவிளையாடல் கடம்பவன புராணத்திலும்

பூவணத்திற் பொன்னனையாள் பதியி லாண்முன்
புனிதனுருக் கும்பிடு வாள் மெழுகு சாத்தி.
மேவணநற் பொருள்பெறாள் சொக்குண டென்று
மிகவருந்துங் காற்சித்த ராச்சென் றாண்டு.
மாவணவல் லிரும்புதரச் சொல்லித் தீயின்
மாட்டென்று பாpசனஞ்செய் தொளிந்தான் றந்து
பாவணத்தாள் சொலிச் செய்நிறை யுருக்கண்டான்
மெய்ப் பத்தியெழில் கண்டள்ளி முத்தங் கொண்டாள்

(கடம்பவன புராணம். இரவாதஞ் செய்த படலம். பாடல் எண் - 39 ) என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறாக திருப்பூவணத் தலபுராணம். திருவிளையாடற் புராணம். திருவிளையாடற் பயகரமாலை. கடம்பவன புராணம். பெரியபுராணம் ஆகிய புராணங்களில் திருப்பூவணத்திருத் தலத்தின் பெருமைகள் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன.

ஆதாரங்கள்

  • திருவிளையாடற் புராணம் (36ஆவது புராணம்)
  • இரசவாதம் ​செய்த படலம் (உரைச் சுருக்கமும் மூலமும்)

மேற்கோள்கள்

  1. "பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் (திருவாலவாய் மான்மியம்) இரண்டாவது - கூடற் காண்டம் - பாகம் 2 ( படலம் 35-42): 36. இரச வாதம் செய்த படலம் (1856 -1885)". மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம். 1998–2014. பார்க்கப்பட்ட நாள் 11 செப்டம்பர் 2016.{{cite web}}: CS1 maint: date format (link)
"https://tamilar.wiki/index.php?title=இரசவாதம்_செய்த_படலம்&oldid=18394" இருந்து மீள்விக்கப்பட்டது