வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்
வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் திருவிளையாடற் புராணத்தில் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற பதினெட்டாவது படலமாகும். இப்படலத்தில் சிவன் பேரூழிக்காலம் போல் பொங்கி வந்த கடலை மேகங்களால் வாரி உறிஞ்சி வற்றச் செய்த திருவிளையாடல் கூறப்படுகிறது.
திருவிளையாடல்
அபிடேக பாண்டியன் சித்திரை மாதத்து சித்திரை நட்சத்திரத்திலே சோமசுந்தரப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு புரிந்து வந்தான். இதன் காரணமாக இந்திரனது சிவபூசை சற்றுக் கால தாமதமானது. இதனால் மனம் வருந்திய இந்திரன் தேவலோகத்திற்குத் திரும்பினான். இந்திரனது கவலையை அறிந்த வருணன் அது அத்துணை சிறப்பு பொருந்திய சிவலிங்கமா? எனது வயிற்றுவலியைக் கூட போக்கவல்லதா? என வினவினான். இந்திரன் அதன் சிறப்பை எடுத்துக் கூறி வேண்டுமாயின் சிவன் திருவிளையாடலை சோதித்துப் பார் என்றான்.
வருணன் தன் வயிற்று நோயைத் தீர்க்கக் கருதி கடலை அழைத்து மதுரை நகர் மீது பெருக்கெடுக்கச் செய்தான்.பேரூழிக் காலம் போல் பெருக்கெடுத்த கடலைக் கண்டு மக்கள் அபிடேக பாண்டியனிடம் முறையிட்டார்கள். பாண்டியனின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து இறைவன் தனது திருச்சடையில் இருந்த நான்கு மேகங்களையும் அனுப்பி கடலை உறுஞ்சி வற்றச் செய்தார்.