திருவாலவாயான படலம்
திருவிளையாடற் புராணத்தில் 49 வது படலமாக திருவாலவாயான படலம் உள்ளது. இப்படலத்தில் நான்மாடக் கூடலான மதுரையைத் திருவாலவாய் ஆக்கிய திருவிளையாடல் கூறப்பட்டுள்ளது. திருப்பூவணத்தில் கோட்டை என்ற பகுதியில் தான் திருக்கோயில் அமைந்துள்ளது, இங்கு தொன்மைக்காலங்களில் உயரமான மதில்களாலான கோட்டை இருந்திருக்கிறது, இதனைப் "பொன்மதில் சூழாலயஞ் சேர் பூவணத்தின் வளம் யாவர் புகலற்பாலார்" என்று கந்தசாமிப்புலவர் பாடியுள்ளார்.
திருவாலவாய் ஆக்கிய திருவிளையாடல்
அதுலகீர்த்திப் பாண்டியனுக்கு மகனான கீர்த்தி பூசண பாண்டியன் மதுரையை ஆட்சி செய்யும்போது ஏழுகடல்களும் தமக்குக் காவலாக விளங்கும் கரையைக் கடந்து பொங்கி எழுந்தது. இதனால் எல்லா உலகங்களும் நீரில் மூழ்கின, ஆயினும் மீனாட்சியம்மை திருக்கோயிலின் இந்திரவிமானம். பொற்றாமரைக்குளம் மற்றும் சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடலில் தோன்றிய இடபமலை, பசுமலை, யானைமலை, நாகமலை, பன்றிமலை என்பன அழியாது விளங்கின.
ஈசன் பிரளயம் வற்றிய பின்னர் மீண்டும் உலகங்களும் உயிர்களும் உண்டாகுமாறு செய்தார், அப்போது சந்திரனது குலத்தில் பாண்டியர்களைத் தோற்றுவித்தார். அப் பாண்டியவம்சத்தில் வங்கிய சேகர பாண்டியன் தோன்றினான், ஒருசமயம். வங்கிய சேகர பாண்டிய மன்னன் "மதுரை மக்களெல்லாம் வசிக்கத்தக்க தகுதியுடையதாக நகரினை உண்டாக்க வேண்டுமென விருப்பமுற்று. மதுரை நகரின் பழைய எல்லைகளை வரையறுத்துத் தரவேண்டும்" என இறைவனிடம் வேண்டி நின்றான்.
2338:கறையணி கண்டனைத் தாழ்ந்து கைதொழு
- திறையவ நின்னருள் வலியி னிந்நிலப்
- பொறையது வாற்றுவேற்கு ஈண்டிப் போதொரு
- குறையதுண் டாயினது என்று கூறுவான்
2339:இத்தனை மாக்களும் இருக்கத் தக்கதாப்
- பத்தனங் காணவிப் பதிக்க ணாதியே
- வைத்தறை செய்திடும் வரம்பு காண்கிலேன்
- அத்தமற் றதனையின் றாpயக் காட்டென்றான்
2340:நுண்ணிய பொருளினு நுண்ணி தாயவர்
- விண்ணிழி விமானநின் றெழுந்து மீனவன்
- திண்ணிய வன்பினுக் கௌpய சித்தராய்ப்
- புண்ணிய அருட்கடல் ஆகிப் போதுவார்
சித்தர் வடிவில் சிவபெருமான் அருள் செய்தல்
மன்னனது விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்டு வானில் இருந்து ஒரு விமானத்தில் இறங்கிய சோமசுந்தரக்கடவுள் ஒரு சித்தமூர்த்தியாகி அற அருட்கடலாகித் தோன்றினார். பாம்பினால் அரைஞாணும் கோவணமும் அணிந்திருந்தார். பிளவுடைய நாக்கையுடைய பாம்பினையும் குழையும் குண்டலமும், காலில் சதங்கை கோர்த்த கயிறும் கை வளையும் உடையவராகத் திகழ்ந்தார். அவ்வாறு வந்த சித்தமூர்த்தியானவர் தனது கையில் கட்டியிருந்த நஞ்சுடைய பாம்பை ஏவி நீ, இம் மன்னனுக்கு மதுரையின் எல்லைகளைக் காட்டு எனக் கட்டளையிட்டார்.
2341:பாம்பி னாற்கடி சூத்திரங் கோவணம் பசுந்தாட்
- பாம்பி னாற்புரி நூல்சன்ன வீரம்வெம் பகுவாய்ப்
- பாம்பி னாற்குழை குண்டலம் பாதகிண் கிணிநாண்
- பாம்பி னாற்கர கங்கணம் பாpந்தனர் வந்தார்
2342:வந்த யோகர்மா மண்டப மருங்குநின் றங்கைப்
- பந்த வாலவா யரவினைப் பார்த்துநீ யிவனுக்
- கிந்த மாநக ரெல்லையை யளந்துகாட்டு என்றார்
- அந்த வாளரா வடிபணிந் தடிகளை வேண்டும்
2343:பெரும விந்நகர் அடியனேன் பெயாpனால் விளங்கக்
- கருணை செய்தியென் றிரந்திடக் கருணையங் கடலும்
- அருண யந்துநேர்ந்து அனையதே யாகெனப் பணித்தான்
- உருகெ ழுஞ்சின வுரகமும் ஒல்லெனச் செல்லா
பாம்பு எல்லையைக் காட்டுதல்
கண்டவர்களுக்கு அச்சத்தினை உண்டாக்கும் படியான அப்பாம்பும் விரைந்து சென்றது, கிழக்குத் திசையில் திருப்பூவணம் சென்று வாலை நீட்டிப் பெரிய அம்மாநகர்க்கு வலமாக நிலத்தில் படிந்து உடலை வளைத்து. வாலைத் தன் வாயில் வைத்துப் பெரிய வளையமாக்கி அதன் உட்புறப் பகுதியே மதுரை நகரின் பழைய எல்லையென பாண்டிய மன்னனுக்குக் காட்டியது. சித்தமூர்த்தியானவர் தம்முடைய திருக்கோயிலில் எழுந்தருளினார். பாண்டிய மன்னன், பாம்பு வளைத்து எல்லையை வரையறுத்துக் காட்டியபடி மதில் சுவர் உண்டாக்க எண்ணினான்.
2344:கீட்டி சைத்தலைச் சென்றுதன் கேழ்கிளர் வாலை
- நீட்டி மாநகர் வலம்பட நிலம்படிந் துடலைக்
- கோட்டி வாலைவாய் வைத்துவேற் கொற்றவற்கு எல்லை
- காட்டி மீண்டரன் கங்கண் மானது கரத்தில்
ஆலவாய் மதில்
கோட்டை வாயில் அமைத்தல் கிழக்கு எல்லைகாட்டிய இடத்தில் மன்னன் இவ் எல்லையின் வாயிலில் சக்கரவாள மலையை அடியோடு தோண்டி எடுத்து வைத்தது போன்று முகில் தவழும்படியான பெரிய மதிலை அமைத்தான். மதுரைக்குக் கிழக்கில் சோலைகள் சூழ்ந்த திருப்பூவண நகரானது எல்லையாக இருக்கும்படி அம்மதில்களை அமைத்தான். அந்த உயரமான நீண்ட மதிலை ஆலவாய் மதில் என்று கூறுவர். நான்கு பெரிய வாயில்களுக்கும், தெற்கில் திருப்பரங்குன்றமும், வடக்கில் ஆனைமலையும், மேற்கில் திருவேடகமும், கிழக்கில் சோலைகள் சூழ்ந்த பூவண நகரம் எல்லைகளாக இருக்கும்படி அம்மதில்களை அமைத்தான். ஆலத்தை தனது வாயிற் கொண்ட அந்தப் பாம்பு, சித்தர் வடிவில் தோன்றிய இறைவனின் பாதங்களை வணங்கி இனி இந்த நகரமானது தன்னுடைய பெயரால் "ஆலவாய்" என்று விளங்கவேண்டுமென விண்ணப்பஞ் செய்தது. சித்தராய்த் தோன்றிய இறைவனும் "அவ்வாறே ஆகுக" என்று வரமருளினார். இதனால் மதுரை மாநகரம் "திருவாலவாய்" என்ற பெயரால் விளங்குவதாயிற்று. பின்னர் அப்பாம்பானது இறைவனுடைய திருக்கரத்தில் கங்கணம் ஆனது, இவ்வாறு திருப்பூவணத்தில் மதுரைமாநகரக் கிழக்கு வாயிலாகக் கோட்டை அமைக்கப்பட்டது. அன்று கோட்டை இருந்த இடமே இன்று பெயரளவில் கோட்டை என்று அழைக்கப்படுகின்ற பகுதியாகும். இதனால் திருப்பூவணம் என்பது மதுரை நகர் புனர்நிர்மாணிக்கப்படுவதற்கு முன்பே சிறப்புடன் விளங்கி வந்துள்ளமை தெளிவாகிறது. இதனால் திருப்பூவணத்தின் பழைமை நன்கு விளங்கப்பெறுகிறது.
2345:சித்தர் தஞ்சின கரத்தெழுந் தருளினார் செழியன்
- பைத்த வாலவாய் கோலிய படிசுவர் எடுத்துச்
- சுத்த நேமிமால் வரையினைத் தொட்டகழ்ந் தெடுத்து
- வைத்த தாமென வகுத்தனன் மஞ்சுசூ ழிஞ்சி
2346:தென்றி சைப்பரங் குன்றமும் வடதிசை இடபக்
- குன்ற முங்குடக்கு ஏடக நகரமுங் குணபாற்
- பொன்ற லங்கிழித் தெழுபொழிற் பூவண நகரும்
- என்ற நாற்பெரு வாயில்கட்கு எல்லையா வகுத்தான்
2347:அனைய நீண்மதில் ஆலவாய் மதிலென அறைவர்
- நனைய வார்பொழில் நகரமு மாலவாய் நாமம்
- புனைய லாயதெப் போதுமப் பொன்னகர் தன்னைக்
- கனைய வார்கழற் காலினான் பண்டுபோற் கண்டான்
2348:கொடிகள் நீண்மதின் மண்டபங் கோபுரம் வீதி
- கடிகொள் பூம்பொழில் இன்னவும் புதியவாக் கண்டு
- நெடிய கோளகை கிரிடம்வா ணிழன்மணி யாற்செய்
- தடிகள் சாத்திய கலன்களும் வேறுவே றமைத்தான்
2349:பல்வ கைப்பெருங் குடிகளின் பரப்பெலா நிரப்பிச்
- செல்வ வானவர் புரந்தரன் புரத்தினுஞ் சிறப்ப
- மல்லல் மாநகர் பெருவளந் துளும்பிட வளர்த்தான்
- தொல்லை நாட்குல சேகரன் போல்வரு தோன்றல்