திருவாலங்காட்டுத் திருப்பதிகம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திருவாலங்காட்டில் சிவபெருமான் நடனமாடுவதைக் கண்டு காரைக்கால் அம்மையார் பாடிய பாடல்கள் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் ஆகும். [1] பதிக முறையில் பாடப்பெற்ற முதல் பாடல்கள் என்பதால் இதனை ஆதிப்பதிகம் என்றும் அழைப்பர். முதன் முறையாக இறைவனை இசையால் பாடியதால் காரைக்கால் அம்மையாருக்கு தமிழிசையின் தாய் என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது. அம்மையாரைப் பின்பற்றியே இறைவனை இசையால் பாடி தேவாரம் பாடியுள்ளார்கள் தேவார மூவர்.

இந்நூல் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்றான பதிகம் முறையில் பாடப்பெற்றது. திருவாலங்காடு என்னும் ஊர்க் கோயிலில் குடிகொண்டுள்ள சிவபெருமான்மீது பாடப்பட்ட நூல் இது. இதனைப் பாடியவர் காரைக்கால் அம்மையார். இவர் காலம் 3ஆம் நூற்றாண்டின் பிற்பாதி. இந்த நூலில் 10 பாடல்கள் உள்ளன. 11ஆம் பாடலாக அடைவுப்பாடல் ஒன்றும் உள்ளது.

ஆதிப்பதிகம்

பதிகம் என்றால் பத்து பாடல்களின் தொகுப்பாகும். இதன் இறுதியில் திருக்கடைகாப்பு எனும் பதிகத்தினைப் பாடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கூறப்படும். காரைக்கால் அம்மையார் இரண்டு பதிகங்களைப் பாடியுள்ளார். [1] காரைக்கால் அம்மையார் பாடிய இந்த பதிக முறையே முதன் முதலாகப் பாடப்பெற்றதாகும்.[1] அதனால் இவை மூத்த பதிகங்கள் என்றும், இறைவனை பதிக முறையில் பாடியமையால் திருப்பதிகம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவாலங்காட்டில் இறைவன் ஆடியதை பாடியமையால், இவை அனைத்தும் சேர்த்து திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் என்று அழைக்கப்படுகிறது.[1]

அம்மையாருக்குச் சிறப்பு

இப்பதிகங்களில் புனிதவதி என்று தன்னுடையப் பெயரைக் குறிப்பிடாமல் காரைக்கால் பேய் என்றே அம்மையார் குறிப்பிட்டுள்ளார். [1]முதற்பதிகத்தில் நைவளம் எனும் பண்ணில் காரைக்கால் அம்மையார் பாடியுள்ளார். இரண்டாம் பதிகம் இந்தளம் எனும் பண்ணில் பாடப்பெற்றதாகும். இசையோடு இறைவனைப் பாடும் மரபு இந்த மூத்த திருப்பதிக பாடல்களிலிருந்தே தோன்றியதாகும்.[1] அதனால் காரைக்கால் அம்மையாரை தமிழிசையின் தாய் என்று போற்றுகின்றனர்.

தேவாரத்திற்கு மூத்தது

கொங்கை திரங்கி, எட்டி இலவம் ஆகியவற்றில் தொடங்கும் பதிகங்கள் மூத்த திருப்பதிகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இறைவனை பத்துப் பாடல்களைக் கொண்ட தொகுதியால் போற்றுவதை பதிகம் என்கின்றனர். இந்த முறையைப் பின்பற்றியே தேவார மூவரும் பாடியுள்ளனர்.

“செடித்தலைக் காரைக்கால் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவரே” என்று இந்த அடைவுப்பாடல் குறிப்பிடுகிறது.

“ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடே” என்னும் தொடரோடு 10 பாடல்களும் முடிகின்றன.

ஆதாரங்கள்

காலம் கணித்த கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005