சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை என்னும் இந்த நூல் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று.

96 வகையான சிற்றிலக்கியங்களில் இரட்டைமணிமாலை என்பதும் ஒன்று.

10ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த கபிலதேவ நாயனார் என்னும் புலவர் இதன் ஆசிரியர்.

கடலில் பிறக்கும் முத்தும் பவளமும் இரண்டு மணிகள். இந்த இரண்டு மணிகளும் அடுத்தடுத்து மாறி மாறி வரும்படி மாலையாகக் கோக்கப்பட்டது இரட்டைமணிமாலை. இந்த மாலை போல இந்த நூலில் வெண்பா, கட்டளைக்கலித்துறை ஆகிய இரு பாடல்களைக் கோத்து அமைத்துப் பாடப்பட்டது இந்த நூல்.

சிவபெருமானைப் போற்றிப் பாடிய 37 பாடல்கள் இதில் உள்ள.

பாடல்

அந்தி மதிமுகிழான் அந்தியஞ் செந்நிறத்தான்
அந்தியே போலும் அவிர்சடையான் – அந்தியில்
தூங்கிருள் யாமமே போலும் சுடுநீற்றான்
வீங்கிருள்சேர் நீலம் மிடறு. [1]

என்பது இந்நூலின் முதல் வெண்பாப்பாடல்.

தாமரைக் கோவுநன் மாலும் வணங்கத் தலைப்பிடத்துத்
தாமரைக் கோவணத் தோடிரந் துண்ணினும் சார்ந்தவர்க்குத்
தாமரைக் கோமளத் தோடுல காளத் தருவர்கண்டீர்
தாமரைக் கோமளக் கைத்தவ ளப்பொடி சங்கரரே.

என்பது இந்நூலில் ஆறாம் பாடலாக அமைந்துள்ள கட்டளைக்கலித்துறைப் பாடல். இந்தப் பாடலில் மடக்கு என்னும் அணிநலம் காணப்படுகிறது. அந்த மடக்குகளில் பிரித்துப் பொருள் காணவேண்டிய பொதுமொழித் தொடர்கள் உள்ளன. [2]

காலம் கணித்த கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. இருள் போல் நீலநிறம் கொண்ட மிடறு
  2. தாமரைக்கோ பிரமனும், திருமாலும் வணங்குகையில், தாம் மட்டும் அரைக் கோமணத்தோடு இரந்து உண்டாலும், தன்னைச் சார்ந்தவர்களுக்கு தாமரைக் கோமகளாகிய திருமகளோடு உலகாளும் பேற்றினைத் தருவான். அவனது தாமரைக் கோமளக் கையில் தவள்வது பொடியாகிய சாம்பல். அவன் சங்கரன்.