அண்ணாமலையார் கோயில்
தேவார பாடல் பெற்ற அருள்மிகு உண்ணாமுலையம்மை உடனமர் திருவண்ணாமலையார் திருக்கோயில் | |
---|---|
படிமம்:Thiruvannamalai, Arunachalesvara Temple, Annamalaiyar Temple, Panoramic view, India.jpg | |
ஆள்கூறுகள்: | 12°13′53.76″N 79°4′1.92″E / 12.2316000°N 79.0672000°ECoordinates: 12°13′53.76″N 79°4′1.92″E / 12.2316000°N 79.0672000°E |
பெயர் | |
பெயர்: | அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் |
சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு: | அருணாச்சலேசுவரர் |
தமிழ்: | திருஅண்ணாமலையார் திருக்கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருவண்ணாமலை மாவட்டம் |
அமைவு: | திருவண்ணாமலை |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அண்ணாமலையார் (சிவன்) |
தாயார்: | உண்ணாமுலையாள் (பார்வதி) |
சிறப்பு திருவிழாக்கள்: | கார்த்திகை தீபம், கிரிவலம், சிவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | தென்னிந்திய கட்டிடக்கலை |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டு |
அமைத்தவர்: | பல்லவர், சோழர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள் |
திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.[1] திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.[2] இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார்.
பிரம்மாவிற்கும் திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் எழ, இடையில் நெருப்புப் பிழம்பு தோன்ற 'நம்மில் யார் இதன் அடியையும் முடியையும் கண்டறிபவரே, நம்மில் பெரியவர்' என உரைத்தனர். அதன் அடியைக் காண, திருமால் வராக வடிவெடுத்து நிலத்தினைக் குடைந்து சென்று பல ஆண்டுகள் பயணம் செய்தும் அடியைக் காண இயலாமல் திருமால் திரும்ப, அன்ன வடிவமெடுத்து முடியைக் காணச்சென்ற பிரம்மர், வானிலிருந்து கீழே வரும் தாழம்பூவிடம் இது யாதென வினவ அதற்கு இது சிவபெருமானெனவும், நான் சிவனாரின் தலையிலிருந்து பல ஆண்டுகளாக விழுந்துக் கொண்டிருக்கிறேன் என உரைத்த தாழம்பூவிடம் நீ திருமாலிடம், நான் இந்த நெருப்புப் பிழம்பாக நின்ற சிவனின் முடியைக் கண்டுவிட்டேன் எனக் கூறும்படி கேட்டார் பிரம்மர். தன்னால் அடியைக் கண்டறிந்தளக்க முடியாததை ஒப்புக் கொண்ட திருமாலிடம், பிரம்மன் நான் பகிரதனுக்காக ஆகாயகங்கையைத் தனது செஞ்சடையில்தாங்கி சிவகங்கை எனப் பெயர்மாற்றிய சிவபெருமானின் முடியைக் கண்டுவிட்டதாகவும், அதற்கு இந்தத் தாழம்பூவே சாட்சி என உரைத்தும் நீ எனக்கு ஒரு குழந்தைக்கு ஒப்பானவனெனக் கூறி எள்ளிநகையாடியதால், ஆத்திரமுற்ற சிவன், பத்மகற்பத்தில் பிரம்மன் திருமாலின் உந்தி கமலத்தில் தோன்றுவாரெனவும், தாழம்பூ சிவபூசையில் இனிமேல் பயன்படாதெனவும் உரைத்தார். தாழம்பூ, தன்னிடம் மன்னிப்பு கேட்டதற்கிணங்கிய சிவன் நான் புவியில் எனது பக்தைக்காகக் குழந்தையாக அவதரித்த உத்திர கோசமங்கையெனும் திருத்தலத்தில் மட்டும் பயன்படுவாயெனவும் அருளினார். திருமாலால் தன்னை அளக்க இயலாததால் திருமாலை சிறியவரென உரைப்பார்களெனவும், பிரம்மா கேட்ட மன்னிப்பினால் அவருக்கு வழிபாடு நிகழவேண்டி சிவபெருமான் சிவலிங்கத்தின் அடிப்பாகத்தில் பிரம்மர், நடுப்பாகத்தில் திருமால், மேல்பாகத்தில் சிவனும் நின்று சிவலிங்கமாகத் தோன்றினர். தன்னை நோக்கித் தவமியற்றிய பார்வதியைத் தன்னுடைய இடப்பாகத்தினிலமர்த்தி அர்த்தநாரீஸ்வரராய் (கருவறையின் பின் புறம் ஐம்பொன் சிலை உள்ளது) நின்ற பெருமைக்கு உரிய தலம் இத்தலம் ஆகும். "திருஅண்ணாமலையை நினைக்க முக்தி" என்று பக்தர்களால் போற்றப்படும் சிறப்பு வாய்ந்த தலம் இது.
இத்தலத்தினை நால்வர் என்று அழைக்கப்படும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம் பதிகங்களைப் பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் சிவபெருமான் என்றாலும், இங்குள்ள முருகன் மீது அருணகிரி நாதர் பாடல்களைப் பாடியுள்ளார். இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். இதனால் இம்மலையை வலம் வருதலைக் கடைபிடிக்கின்றனர். இவ்வாறு மலையை வலம் வருதல் கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது.
பல்வேறு நகரங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இந்நகருக்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள். அவர்களில் ரமணர், சேசாத்திரி சாமிகள், விசிறி சாமிகள், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் சமாதிகள் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளன.
முக்தி தரும் தலங்களில் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும்.
சொல்லிலக்கணம்
- திருவண்ணாமலை -
- அருணாச்சலம் -
- அண்ணாமலை - அண்ணா என்ற சொல்லுக்கு நெருங்க இயலாதது என்று பொருளாகும். பிரம்மாவினாலும் திருமாலினாலும் சிவபெருமானின் அடியையும், முடியையும் நெருங்க இயலாததால் இம்மலையை அண்ணாமலை என்று அழைக்கின்றனர்.[3]
காலம்
திருவண்ணாமலையிலுள்ள மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.[4] சைவர்களின் நம்பிக்கைப்படி இம்மலையானது கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், தற்போது நடைபெறும் கலி யுகத்தில் கல் மலையாகவும் இருக்கிறது.
பால் பிரண்டன் எனும் ஆய்வாளார் தனது மெசேஜ் பிரம் அருணாச்சலா எனும் நூலில் "லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை" எனக் கூறியுள்ளார்.[5]
தல வரலாறு
இலிங்கோத்பவர்
படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய திருமாலும், தங்களில் யார் பெரியவரெனப் பூசலெழ, நடுவில் ஔிப்பிழம்பு தோன்ற, அந்த ஔிப்பிழம்பின் அடியையும், முடியையும் யார் கண்டு முதலில்வருகின்றனரோ, அவரே நம்மில் பெரியவர் எனக் கூறினர். இதனால் திருமால், வராக ( பன்றி) அவதாரம் எடுத்து, அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றும், அடியைக் கண்டறிய இயலவில்லை. அன்னவடிவமெடுத்து முடியைக் காணப் புறப்பட்ட பிரம்மா, தாழம்பூ கீழே வருவதைக் கண்டு, அதனிடம் இந்த நெருப்புப் பிழம்பு யாதென வினவ, அதற்கு இது சிவனாரெனவும், நான் அவரின் சடையிலிருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாகக் கீழ் நோக்கி வந்து கொண்டு இருக்கிறேன் என்றும் கூற, பிரம்மன் முடியைக் காணும் முயற்சியை விடுத்து, தாழம்பூவிடம், நெருப்புப்பிழம்பான இந்த சிவனின் முடியை நான் கண்டேனெனத் திருமாலிடம் பொய் சொல்லும்படி கேட்க, அதன்படியே தாழம்பூவும் கூறியது. தன்னால் கண்டறிய இயலவில்லையென பிரம்மரிடம் கூறிய திருமாலிடம், நீ எனக்கு ஒரு குழந்தைக்கு ஒப்பானவனெனக் கூறி எள்ளி நகையாட, இதனால் ருத்திரமுற்ற சிவன், பிரம்மரிடம், பத்மகற்பத்தில் நீ திருமாலின் உந்திகமலத்தில் பிறப்பாயெனவும், உனக்குப் புவியில் தனி ஆலயம் அமையாது எனவும், பொய்சாட்சி கூறிய தாழம்பூவிடம், நீ இனி எனது வழிபாட்டில் பயன்படமாட்டாயெனவும் உரைத்தார். தன் தவறினை உணர்ந்து மன்னிப்பு கேட்ட தாழம்பூவிடம், நான் எனது பக்தைக்காகப் புவியில் குழந்தையாக அவதரித்த உத்திர கோசமங்கை எனும் திருத்தலத்தில் மட்டுமே பயன்படுவாயெனவும் உரைத்தார். பிரம்மர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதால், அவருக்கு வழிபாடு நிகழ்வதற்காகவும், திருமாலால் தனது அடியைக் கண்டறிய இயலாததால், திருமாலை சிறியவரென உரைப்பார்களென்பதால், கருணாமூர்த்தியான சிவன், உடனே நாம் மூவரும் ஒருங்கிணைந்து, சிவலிங்கமாகலாமென உரைத்தார். அதன்படியே அடிப்பாகம் பிரம்மராகவும், நடுப்பாகம் திருமாலாகவும், மேல்பாகம் சிவனாகவும் மாறி வேதங்கள் புகழும் சிவலிங்கம் தோன்றிய நாளே மகா சிவராத்திரி நாளாகும்.
மலை வலம்
திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோயிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் வழமை இங்குள்ளது. மலையைச் சுற்றிவர இரு வழிகள் உள்ளன. மலையை ஒட்டிச் செல்லும் வழியில் பாறைகள், முட்கள் மிகுந்த கடின பாதையாக அமைந்துள்ளது
பொதுவாக மக்கள் வலம் வரும் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், வருண லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்களும், ரமணமகரிசி, சேசாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் போன்றோர் சமாதிகள் அமைந்துள்ளன.
எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் முழு நிலவு நாளில் வலம் வருதல் சிறப்பாகக் கருதப்படுகிறது.
இம்மலையானது யுகங்களின் அழிவுகளிலும் அழியாமல் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறியிருப்பதாக நம்பப்படுகிறது.
எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் , வருண லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது. இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு.
மலையை வலம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம். கிரிவலம் செல்லும்போது பஞ்சாச்சர நாமத்தையோ (நமசிவாய, சிவாயநம) அல்லது திருமுறைகளையோ (தேவாரம், திருவாசம்) உச்சரிக்க வேண்டும். அதைத் தவிர்த்து வேறு எதையும் பேசக்கூடாது. கிரிவலம் செல்லும்போது நிதானமாக நடக்க வேண்டும், அவசரமாகவோ வேகமாகவோ மற்றவர்களை இடித்துக் கொண்டோ செல்லக் கூடாது.
கோயில் அமைப்பு
24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில் 6 பிரகாரங்களையும் 9 ராஜகோபுரங்களையும் கொண்டதாகும். இக்கோயில் மலையடிவாரத்தில் இருப்பது சிறப்பு. இச்சிவாலயத்தில் 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதன் அருகே பாதள லிங்கம், 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்பம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.[6]
கோபுரங்கள்
அண்ணாமலையார் கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. அவைகளில் ராஜ கோபுரம், பேகோபுரம், அம்மணியம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம், வல்லாள மகாராஜா கோபுரம் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். தெற்கு கட்டை கோபுரம், வடக்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம் ஆகிய கோபுரங்கள் உள்ளன.
மண்டபங்கள்
இச்சிவாலயத்தில் 306 மண்டபங்கள் உள்ளன. அவற்றில் ஆயிரம் கால் மண்டபம், தீப தரிசன மண்டபம், 16 கால் மண்டபம், புரவி மண்டபம், ஏழாம் திருநாள் மண்டபம் ஆகியவை உள்ளன.
சந்நிதிகள்
சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இத்தலத்தில் உள்ள மலையே சிவலிங்கம் என்பது நம்பிக்கை. அம்மன் உண்ணாமலையம்மை ஆவார். முருகன், விநாயகர், அர்த்தநாரீசுவரர், பெருமாள், பைரவர், பிரம்மலிங்கம், பாதாளலிங்கம் ஆகிய சன்னதிகள் உள்ளன.
தீர்த்தங்கள்
- சிவகங்கை தீர்த்தம்
- பிரம்ம தீர்த்தம்
வழிபாடு
இக்கோவிலில் ஆறுகால பூசை தினமும் நடைபெறுகிறது. பஞ்ச பருவ பூசைகளும், சுக்ரவாரம் மற்றும் சோமவார பூசைகளும் நடைபெறுகின்றன. பஞ்ச பருவ பூசைகள் என்று அழைக்கப்படுபவை, அமாவாசை, கிருத்திகை, பிரதோசம், பௌர்ணமி, சதுர்த்தி பூசைகளாகும்.[7]
கரும்புத் தொட்டில்
குழந்தையில்லாதவர் திருவண்ணாமலையைக் கிரிவலம் வந்து தங்களுக்குக் குழந்தை பிறக்க அண்ணாமலையை வேண்டுகின்றார்கள். அவ்வாறு குழந்தை பிறந்தால் கரும்புத் தொட்டிலினை இட்டு மீண்டும் கிரிவலம் வந்து வேண்டிக் கொள்கின்றார்கள். இவ்வாறு கரும்புத் தொட்டியலிடுவது இக்கோவிலின் முக்கிய நேர்த்திக் கடன்களில் ஒன்றாகும்.[3]
விழாக்கள்
பிரம்மோற்சவம்
அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நான்கு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.
ஆனி மாத பிரம்மோற்சவம்
ஆனி மாத பிரம்மோற்சவம் என்பது தட்சணாயன பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா, அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்குச் சிறப்பு அபிசேக ஆராதனையும் பராசக்தியம்மன், விநாயகர், சந்திரசேகரர் சாமிகளுக்குப் பூசைகள் செய்யப்படுகின்றன.
விநாயகர் மற்றும் சின்னநாயகர் அம்மன், சந்திரசேகரர் வீதியுலா, ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளுதல், ஆனி திருமஞ்சனம் ஆகியவை நடைபெறுகின்றன.
மாசி மகம் தீர்த்தவாரி
வள்ளாள ராஜாவின் மகனாகச் சிவபெருமானே பிறந்ததாக ஒரு தொன்மக் கதையுண்டு. இதன் காரணமாக வள்ளாள மகாராஜாவின் திதியைச் சிவபெருமானே அளிக்கின்றார். இந்நிகழ்வினை மாசி மகம் தீர்த்தவாரி என்றழைக்கின்றனர்.
கார்த்திகை தீபம்
கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது. இதில் பத்து நாட்கள் உற்றவர்களின் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்துச் சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது.
சிவன், கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாகக் காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூசைசெய்வர். பின்பு அந்தத் தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’ தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும்.
பரணி தீபம்
பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.
பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சந்நிதியில் வைக்கின்றனர்.
மகாதீபம்
மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. இம்மலை 2,668 அடி உயரமானதாகும்.
மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீசுவரர் உற்சவ கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.[8]
இந்த மகாதீபத்தினைப் பக்தர்கள் மலையின் மீது ஏறிப் பார்க்கின்றனர்.
பாடல் பெற்ற தலம்
திருமுறைப் பாடல் பெற்ற 275 திருத்தலங்கள் (சிவன் கோயில்கள்) திருமுறைத்தலங்கள் எனப் போற்றப்படுகின்றன. இவற்றில் 22 திருத்தலங்கள் நடுநாட்டில் (தமிழ்நாட்டின் ஒரு பகுதி) அமைந்துள்ளன. இந்த 22 தலங்களில் மிகவும் சிறப்புடையது திருவண்ணாமலை ஆகும்.
நால்வர்
திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலானோர் அண்ணாமலையாரை வந்து தரிசித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள். மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து (வைணவத்தில் மார்கழி மாதத்திற்கு திருப்பாவை இருப்பது போல) சைவத்திற்கு மார்கழியில் "திருவெம்பாவை" (20) பாடல்களையும், திருவம்மானை பதிகங்களையும் இயற்றி உள்ளார். கிரிவலப்பாதையில் அடியண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் இருப்பதை இன்றும் காணலாம்.
அருணகிரி நாதர்
அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் பிறந்தவர்.[9][10] இங்குள்ள இறைவன் முருகன் மீது பாடல்களைப் பாடியுள்ளார். அவர் கோபுரத்தில் கிளியாக மாறிப் பாடியமையால் அக்கோபுரத்தினை கிளிக்கோபுரம் என்று அழைக்கின்றார்கள்.
நூல்கள்
இத்தலத்தில் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.[11]
- சைவ எல்லப்ப நாவலர் எழுதிய அருணாசல புராணம், அருணைக் கலம்பகம்
- குருநமச்சிவாயர் எழுதிய அண்ணாமலை வெண்பா [12]
தேவாரம், திருவாசகம், பதினொராந்திருமுறை, பெரியபுராணம், கந்தபுராணம், திருப்புகழ், சோனசைலமாலை, திருவருணைக்கலம்பகம், அருணாசல புராணம், அருணாசல மகாத்மிய வசனம், அருணகிரி அந்தாதி, அண்ணாமலை வெண்பா, திருவருணை அந்தாதி, அண்ணாமலை சகதம், சாரப்பிரபந்தம், கார்த்திகை தீப வெண்பா, சோணாசல வெண்பா, சோணாசல சதகம், திருவருணைக்கலிவெண்பா, திருவருட்பதிகம், அருணாசலேசுவரர் பதிகம் -1, அருணாசலேசுவரர் பதிகம் - 2, உண்ணாமுலையம்மன் சதகம், அருணாசலேசர் நவகாரிகை மாலை, உண்ணாமுலையம்மன் வருகைப்பதிகம், அருணாசல சதகம், அருணாசல அட்சரமாலை, அண்ணாமலையார் வண்ணம், திருவண்ணாமலைப் பதிகங்கள், அண்ணாமலைப் பஞ்ச ரத்னம், திருவருணைத் தனி வெண்பா, அட்சரப் பாமாலை, அருணாச்சலேசுவரர் உயிர் வருக்கம் படைத்தற் பாமாலை, அருணசல அட்சரமாலை, அருணாசலநவ மணிமாலை, அருணாசல பதிகம், அருணாசல அஷ்டகம், அருணாசல பஞ்சபத்தனம் ஆகியவை இச்சிவாலயத்தின் புகழைப் பாடுகின்ற நூல்களாகும்.[13]
தல சிறப்பு
- இத்தலம் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும்.
- நினைத்தாலே முக்தி தலமென சிவபுராணம் குறிப்படுகிறது.
- காமதகனம் நிகழ்வு இத்தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது.
- ஆடிப்பூரத்தன்று மாலையில் உண்ணாமுலையம்மன் சந்நிதி முன் தீமிதி திருவிழா நடைபெறுகிறது. இவ்வாறு தீமிதி திருவிழா நடைபெறும் சிவாலயம் இதுவே.
- அருணகிரி நாதருக்கு விழா எடுக்கப்படுகிறது.
ஞானிகளும் துறவிகளும்
இத்தலம் சித்தர்களின் சரணாலயமாகவும் விளங்குகிறது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டுச் சித்தர் இத்தலத்திற்கு உரியவராக விளங்குகிறார்.
அண்ணாமலை சுவாமிகள், அப்பைய தீட்சிதர், அம்மணி அம்மாள், அருணகிரிநாதர் சுவாமிகள், அழகானந்த அடிகள், ஆதி சிவ பிரகாச சாமிகள், இசக்கி சாமியார், இடைக்காட்டுச் சித்தர், இரமண மகரிசி, இறை சுவாமிகள், ஈசான்ய ஞானதேசிகர், கண்ணாடி சாமியார், காவ்யகண்ட கணபதி சாத்திரி, குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர், குருசாமி பண்டாரம், சடைச் சாமிகள், சடைச்சி அம்மாள், சற்குரு சுவாமிகள், சேசாத்திரி சாமிகள், சைவ எல்லாப்ப நாவலர், சோணாசலத் தேவர், ஞான தேசிகர், தட்சிணாமூர்த்தி சாமிகள், தம்பிரான் சுவாமிகள், தெய்வசிகாமணி சித்தர், பத்ராச்சல சுவாமி, பழனி சுவாமிகள், பாணி பத்தர், மங்கையர்கரசியார், ராதாபாய் அம்மை, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், விசிறி சாமியார், விருபாட்சி முனிவர், வீரவைராக்கிய மூர்த்தி சாமிகள், ஶ்ரீலஶ்ரீ இராஜ யோகி மூக்குப்பொடிச் சித்தர் ஆகிய சித்தர்கள் அண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களாவார்கள். இவர்களில் பலர் அண்ணாமலையிலேயே ஜீவசமாதி அடைந்துள்ளார்கள். சில சித்தர்களின் ஆசிரமம் திருவண்ணமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது.
தற்போதும் பல்வேறு சித்தர்கள் திருவண்ணாமலையில் வாழ்ந்து வருவதாக சைவர்கள் நம்புகிறார்கள்.
போக்குவரத்து
இத்திருத்தலம் விழுப்புரம் காட்பாடி ரயில் மார்கத்தில் விழுப்புரத்திலிருந்து 65 கி.மீ, தூரத்திலும் காட்பாடியிலிருந்து 90 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து வந்து செல்வதற்கு பேருந்து வசதிகளை இத்திருத்தலம் கொண்டுள்ளது. ஒரு வழித்தடம் செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், செஞ்சி வழியாகவும் மற்றொறு வழித்தடம் திருபெரும்புதூர், காஞ்சிபுரம், ஆற்காடு, ஆரணி, போளூர் வழியாகவும் செல்லலாம்.
இத்திருத்தலம் வேலூரிலிருந்து 70 கி.மீ. தொலைவிலும், திண்டிவனத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், கிருட்டிணகிரியிலிருந்து 100 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
இத்திருத்தலத்தில் கிரிவலப்பாதையருகே உலங்குவானூர்தி இறங்குதளம் ஒன்று உள்ளது. இதன் மூலம் மிக முக்கிய பிரமுகர்கள் சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து வந்துச் செல்ல முடியும்.
சேவார்த்திகளின் வசதிக்காக குறைந்த வாடகையில் தங்குமிடங்களை திருக்கோயில் நிர்வாகம் ஏற்படுத்தித் தந்துள்ளது. இதைத்தவிர தனியாருக்குச் சொந்தமான விடுதிகளும் திருக்கோயிலைச்சுற்றி உள்ளன.
ஊடகங்களில்
சொ.மணியன், நா.மோகன கிருஷ்ணன் என்ற எழுத்தாளர்கள் திருவண்ணாமலை கிரிவலம் எனும் நூலை எழுதியுள்ளார்கள். திருவண்ணாமலையின் பெருமையும் அங்கு சுற்றி இருக்கும் முக்கிய இடங்கள் பற்றிய தொகுப்பு இதில் இடம்பெற்றுள்ளது. தங்கத் தாமரை பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
- ↑ வீ. ஜெயபால், சைவ புலவர் நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், திருவாசகத் தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28, அம்மையப்பா இல்லம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014, ப.10
- ↑ 3.0 3.1 உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை! தினமலர் கோயில்கள் தளம்
- ↑ "உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை!".
- ↑ "ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்! - திருவண்ணாமலை".
- ↑ http://temple.dinamalar.com/New.php?id=22
- ↑ "திருக்கோயிலின் தினசரி பூஜை விவரங்கள்- திருவண்ணாமலை தளம்". Archived from the original on 2015-01-02. பார்க்கப்பட்ட நாள் 2015-03-13.
- ↑ http://www.dailythanthi.com/Others/Devotional/2015/11/26022250/Arunacalesvarar-Thiruvannamalai-temple-festival-karttikaitipa.vpf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-11-22. பார்க்கப்பட்ட நாள் 2016-07-27.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-07-27.
- ↑ "அண்ணாமலை அற்புதங்கள் - ராதா பாய் நக்கீரன் இணையதளம் 17-11-2013". Archived from the original on 2014-01-05. பார்க்கப்பட்ட நாள் 2015-03-14.
- ↑ "திருவண்ணாமலை தலபுராணம் - Thiruvannamalai Temple sthala puranam". Archived from the original on 2015-03-18. பார்க்கப்பட்ட நாள் 2015-03-13.
- ↑ திருவண்ணாமலை திருத்தல விளக்கம் - மு.சீனிவாசவரதன், அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் - திருவண்ணாமலை வெளியீடு