திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | கடைஞாழல், கூடலூர் புதுநகரம் |
அமைவிடம் | |
ஊர்: | திருப்பாதிரிப்புலியூர் |
மாவட்டம்: | கடலூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பாடலேசுவரர், கன்னிவனநாதன், தோன்றாத்துணைநாதன், கடைஞாழலுடையபெருமான், சிவக்கொழுந்தீசன், உத்தாரேசன், பாடலநாதன், கறையேற்றும்பிரான் |
தாயார்: | பெரியநாயகி, தோகையம்பிகை, அருந்தவநாயகி, பிரஹந்நாயகி |
தல விருட்சம்: | பாதிரிமரம் |
தீர்த்தம்: | சிவகரை, பிரம்மதீர்த்தம், (கடல்)சிவகரதீர்த்தம், (திருக்குளம்) பாலோடை, கெடிலநதி, தென்பெண்ணையாறு |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள், நாட்டுக்கோட்டை நகரத்தார்[1] |
திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் நகரில் திருப்பாதிரிப்புலியூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள, சம்பந்தர், அப்பர் போன்றோரால் பாடல் பெற்ற தலமாகும். 274 சிவாலயங்களில் இது 229 வது தேவாரத்தலம் ஆகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.[2]
அமைவிடம்
இத்தலம் திருப்பாதிரிப்புலியூர் புகையிரத நிலையத்தில் இருந்து 0.5 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இது பல்லவ, சோழ காலங்களில் கட்டப்பட்டுள்ளது.
தொன்னம்பிக்கை
இங்கு சிவன் தாந்தோன்றியாய் சுயம்பு மூர்த்தியாக தோன்றுகிறார் என்று நம்பப்படுகின்றது. அப்பரைக் கல்லிலே கட்டி கடலிலே விட அது மிதந்து இத்தலத்தின் பக்கத்தில் கரைசேர்ந்தது என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). பாதிரி மரத்தின் வடமொழிப்பெயர் பாடலம் என்பதாகும்.
தலப் பெருமை
- மகேந்திரவர்ம மன்னன் திருநாவுக்கரசரை கல்லில் கட்டிக் கடலில் போட்ட போது கல் தெப்பமாக மாறி திருப்பாதிரிப்புலியூரிலேயே கரை சேர்ந்ததாகக் கூறப்படுகின்றது. இதன் காரணத்தால் இவ்விடம்கரையேறவிட்ட குப்பம் எனவும் அழைக்கப்படுகின்றது. "ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய்" எனும் பதிகத்தை திருநாவுக்கரசர் இங்கு பாடினார்.
- அகத்தியர், வியாக்ரபாதர், மங்கணமுனிவர் , உபமன்னியர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம் ஆகும்.
- காசியில் உள்ள இறைவனை 16 முறை வணங்குவதும் இத்தலத்தில் ஒரு முறை வணங்குவது இணையானது அதாவது சமனானது எனும் ஒருவித நம்பிக்கை இங்கு காணப்படுகின்றது.
- திருவண்ணாமலையில் 08 முறை வணங்குவதும் சிதம்பரத்தில் 03 முறை வணங்குவதும் இங்கு ஒருமுறை வணங்குவதற்குச் சமனாகும்.
- தமிழ்நாட்டில் ஆகம விதிப்படி நிறுவப்பட்ட சிறந்த சிற்பக்கலை நுணுக்கங்களை இக்கோயில் கொண்டுள்ளது.
- பள்ளியறை சுவாமி கோயிலில் உள்ளது. இறைவி, பள்ளியறைக்கு எழுந்தருளுவது இங்குள்ள தனிச்சிறப்பாகும்.[2]
வழிபட்டோர்
இத்திருகோவில் வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர், திருநாவுக்கரசர் போன்றவர்கள் வழிபட்ட திருத்தலம் என்று கூறப்படுகின்றது. புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்றதாக நம்பப்படுகின்றது. இதன் காரணமாகவே இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.