திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 11°45′50″N 79°33′43″E / 11.7640°N 79.5620°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | அதிகாபுரி, திருஅதிகை வீரட்டானம் |
பெயர்: | திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவதிகை |
மாவட்டம்: | கடலூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வீரட்டானம் |
தாயார்: | பெரியநாயகி |
தல விருட்சம்: | சரங்கொன்றை |
தீர்த்தம்: | சூலத்தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | நாவுக்கரசர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் |
வரலாறு | |
நிறுவிய நாள்: | பொ.ஊ. 7ம் நூற்றாண்டுக்கு முன் |
திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோயில் ஆகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.[1]
அமைவிடம்
இது பண்ருட்டியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று. இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இதுவென்பது தொன்மநம்பிக்கை (ஐதிகம்).
தல விநாயகர்
இத்தல விநாயகர் சித்தி விநாயகர் ஆவார். வயிற்று வலி (வயிற்றுப் புண்) உபாதைகள் சூலைத் தீர்த்தம் உட்கொண்டால் உடனடியாக தீர்ந்து விடும் என்றும் எதிரிகள் தொல்லை நீங்குதல், வர்க்க சாப தோச நிவர்த்தி, முன்னோர் செய்த பாவங்கள் இங்கு வழிபட்டால் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.
திருநாவுக்கரசர்
சைவத்துக்குத், திருத்தொண்டுக்கு உறைப்பான திருநாவுக்கரசரை வழங்கியருளிய பெருமைமிகு தலமிதுவே.இவர் முதன்முதலில் தேவாரப்பாடல் பாட ஆரம்பித்த தலம். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. திரிபுரத்தை எரித்த வீரச் செயல் நிகழ்ந்த தலம். ஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலம். அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலம்.திலகவதியார் தன் தம்பியாகிய (அப்பர்) மருள்நீக்கியாரை நல்வழிப்படுத்துமாறு இறைவனை வேண்ட, இறைவன் "சூலை தந்து ஆட்கொள்வோம்" என்று பதிலுறைத்த பதி.
சூலை நோயின் துன்பம் தாளப்பெறாத அப்பர் பெருமான், யாருமறியாமல் பாடலிபுத்திரத்தை (திருப்பாதிரிப்புலியூர்) விட்டு நீங்கி, இங்கு வந்து, தமக்கையாரைக் கண்டு, தொழுது, திருவாளன் திருநீறு தரப் பெருவாழ்வு வந்ததென்று பணிந்து ஏற்று, உருவார அணிந்து, அவர்பின் சென்று, அதிகைப் பிரான் அடிமலர் வீழ்ந்து வணங்கி, "ஆற்றேன் அடியேன்" என்று "கூற்றாயினவாறு" பதிகம் பாடிச் சூலை நீங்கப்பெற்ற அற்புதத்தலம்.
சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான 'உண்மை விளக்கம்' நூலை அருளிய 'மனவாசகங்கடந்தாரின்' அவதாரத் தலம்.இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் தங்கியதும் - திருவடி தீட்சை பெற்றதும் இத்தலமே.
ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோயில்
இத்தலத்திலிருந்து 1 கி.மீ. தொலைவு சென்றால் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோயில் உள்ளது; இதுவே சித்த வட மடம் ஆகும். இப்பகுதி புதுப்பேட்டை என்று வழங்குகிறது. (சித்வடமடத்தைப் பிற்காலத்தில் சித்தாண்டிமடம், சித்தாத்த மடம் என்றெல்லாம் வழங்கினர். இப்போது இப்பகுதி கோடாலம்பாக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.)
வழிபட்டவர்கள்
இந்திரன், பிரம்மன், திருமால், பாண்டவர்கள், சப்தரிஷிகள், வாயு, வருணன், யமன் முதலானோர். இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.இத்திருக்கோயிலின் கர்ப்ப கிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலை கட்டினான். திருவதிகை கோயிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் கட்டப்பட்டுள்ளது.
புத்தமதம்
இப்பகுதியில் புத்தமதம் சிறப்பாக ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்தது என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இத்திருக்கோயில் வளாகத்தில் உள்ள புத்தர் சிலை கோயிலுக்கு வரும் சிவபக்தர்களால் இன்றளவும் வழிபடப்படுகிறது.[2] இந்த புத்தர் சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. தமிழகத்தில் அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலைகளே அதிகமாக உள்ளன. நின்ற நிலையிலான புத்தர் சிலைகள் மிகக்குறைந்த அளவில் உள்ளன. புன்னகை தவழும் முகம், புன்னகை சிந்தும் உதடுகள், சற்றே மூடிய நிலையிலான கண்கள், நீண்டு வளர்ந்த காதுகள் போன்ற கூறுகளுடன் மேலாடையுடன் இச்சிலை உள்ளது. இவ்வாறே திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு வரை நின்ற நிலையிலான புத்தர் சிலை ஒன்று இருந்துள்ளது. தற்போது அச்சிலை சென்னை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றையும் பார்க்க
ஆதாரங்கள்
- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
- ↑ http://www.dinamani.com/tamilnadu/article1227058.ece