கே. வி. நாராயணசுவாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கே. வி. நாராயணசுவாமி
கே. வி. நாராயணசுவாமி
இயற்பெயர்/
அறியும் பெயர்
கே. வி. நாராயணசுவாமி
பிறந்ததிகதி 15 நவம்பர் 1923
பிறந்தஇடம் பாலக்காடு
இறப்பு 1 ஏப்பிரல் 2002
(அகவை 78)
பணி கருநாடக இசை
அறியப்படுவது கருநாடக இசை
வாய்ப்பாட்டு கலைஞர்
குறிப்பிடத்தக்க செயற்பாடு சங்கீத நாடக
அகாதமி விருது,
கலைகளுக்கான பத்மசிறீ,
Fulbright Scholarship

கே. வி. நாராயணசுவாமி (K. V. Narayanaswamy பி: நவம்பர் 15, 1923 - இ: ஏப்பிரல் 1, 2002) என பரவலாக அறியப்படும் பாலக்காடு கொல்லெங்கொட விசுவநாத நாராயணசுவாமி தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு கருநாடக இசை வாய்ப்பாட்டு கலைஞர்.

இள வயதில்

தற்போது கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் கொல்லெங்கொட விசுவநாத பாகவதருக்கும் முத்துலட்சுமிக்கும் மகனாகப் பிறந்தார். இவரது தந்தை விசுவநாத பாகவதர் ஒரு வயலின் வித்துவான். இவரது பாட்டனார் நாராயண பாகவதரும் கொள்ளூப்பாட்டனார் விசுவம் பாகவதரும் கேரளாவில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் ஆட்டத்தில் பாடகர்களாக இருந்தார்கள். விசுவம் பாகவதர் திருவாங்கூர் சமஸ்தானத்தை 1860 தொடக்கம் 1880 வரை ஆட்சி செய்த ஆயிலியம் திருநாள் மகாராஜாவால் கௌரவிக்கப் பட்டவர்.
இவர் பிற்காலத்தில் இசைத் துறையில் ஒளிர வேண்டுமென அப்போதே தீர்மானிக்கப்பட்டுவிட்ட படியால் இவரது பள்ளிப் படிப்பு ஏழாவது வகுப்புடன் நிறுத்தப் பட்டது. [1]

இசைப் பயிற்சி

தொடக்கத்தில் தனது தந்தையிடமும் பாட்டனிடமும் இசை கற்றுக் கொண்டார். குடும்ப நண்பரான பாலக்காடு மணி ஐயர் இவரை தனது மாணவனாக ஏற்றுக் கொண்டார். மணி ஐயரிடம் நிரவலும் ஸ்வரம் பாடுதலும் கற்றுக் கொண்டார். இதனால் சிறு வயதிலேயே லய கட்டுப்பாடு அவர் உள்ளத்தில் பதிந்தது. மணி ஐயரின் ஆலோசனைப்படி இடையில் சில காலம் கல்பாத்தியில் இருந்த சி. எஸ். கிருஷ்ண ஐயரிடமும் இசை கற்றார்.
1941ல் சென்னைக்கு வந்து பாப்பா கே. எஸ். வெங்கடராமையாவிடம் இசை கற்கத் தொடங்கினார். பின்னர் 1942 தொடக்கம் அரியக்குடி iராமானுஜ ஐயங்காரிடம் குருகுல வாச முறையில் இசைப் பயிற்சி பெற்றார். அரியக்குடியாரின் கச்சேரிகளில் தம்பூரா மீட்டும் பொறுப்பு இவருக்கு கொடுக்கப் பட்டதால் கூடவே பாடி பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது. குருகுல வாசத்தின் போது பி. ராஜம் ஐயர், மதுரை கிருஷ்ணன் ஆகியோரும் இவருடன் கூட இருந்தனர்.
டி. பாலசரஸ்வதியின் தாயாராகிய ஜயம்மாளிடம் பதம், ஜாவளி என்பனவற்றைக் கற்றுக் கொண்டார்.[1]

இசைக்கச்சேரிகள்

சிறு கச்சேரிகள் செய்து வந்தவருக்கு 1947 டிசம்பர் சீசனில் சென்னை மியூசிக் அகாதமியில் கச்சேரி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. மியூசிக் அகாதமியில் இவரது குருவின் கச்சேரி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஆயினும் ஏதோ காரணத்தால் அவர் அன்று கச்சேரிக்கு வரவில்லை. மணி ஐயரின் உந்துதலுடன் இவர் அன்று கச்சேரி செய்தார். சென்னையில் அவரது பெரிய கச்சேரி 1954ல் இடம்பெற்றது.
அரியக்குடி பாணியை இவர் பின்பற்றி வந்தாலும் அவரது மத்திம கதியைப் போல் அல்லாது நாராயணசுவாமி விளம்பகாலம் எனப்படும் மந்தகதியில் பாடுவார். இந்த விடயத்தில் அவர் முசிரி சுப்பிரமணிய ஐயர் பாணியை பின்பற்றினார் என்று சொல்லலாம்.
பலவித பயிற்சிகளைப் பெற்றதன் காரணமாக இவரின் கச்சேரிகள் சாதகமான எல்லா அம்சங்களையும் கொண்டிருந்தன. கச்சேரியின் கட்டமைப்பு அரியக்குடி பாணியிலேயே இருக்கும். வர்ணத்தில் தொடங்கி கீர்த்தனைகளை ஒவ்வொன்றாக பாடுவார். ஆனால் அரியக்குடியார் போல இல்லாது சற்று மந்த கதியில் பாடுவார்.
தென்னிந்திய மொழிகள் பலவும் அவருக்குத் தெரிந்திருந்ததால் ஒவ்வொரு பாடலையும் பொருள் உணர்ந்து அவற்றின் நயம் வெளிப்படும் வகையில் பாடுவார். அவரது நிரவல்கள் பாவங்களுடன் அற்புதமாக இருக்கும். கச்சேரியின் இறுதிப் பகுதியில் கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரத்தில் வரும் வருகலாமோ ஐயா என்ற பாடல் காலத்தால் நிலைத்து நிற்கும் ஒரு பாடலாகும்.
சுமார் 60 ஆண்டுகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இசைக் கச்சேரிகள் செய்துள்ளார். அவரது முதலாவது பெரிய வெளிநாட்டுக் கச்சேரி 1965ல் எடின்பர்க் (Edinburgh) நகரில் நடந்த இசை விழாவில் இடம் பெற்றது.[1]

இசை ஆசிரியராக

1962ல் சென்னையில் இருந்த கருநாடக இசைக்கான மத்திய கல்லூரியில் (தற்போதைய இசைக் கல்லூரி) ஆசிரியராக சேர்ந்து பின் அதன் முதல்வராகி 1982ல் ஓய்வு பெற்றார். இடையில் 1965ல் அமெரிக்கா வெஸ்லியன் பல்கலைக் கழகத்தில் இரண்டு ஆண்டுகள் இசை ஆசிரியராக பணியாற்றினார்[1].

விருதுகள்

வாழ்க்கை சரிதம்

பாலக்காடு கே. வி. நாரயணசுவாமியின் வாழ்க்கை சரிதையை பிரபல ஊடகவியலாளரும் இசைப் பிரியருமான நீலம் புத்தகமாக எழுதி 2001ல் வெளியிட்டுள்ளார். இந்த நூல் அதே ஆண்டில் நீதிபதி வி. ஆர். கிருஷ்ணையரால் ஆங்கிலத்தில் எழுதி வெளியிடப்பட்டது.[3]

மறைவு

பாலக்காடு கே. வி. நாராயணசுவாமி ஏப்பிரல் 1, 2002ல் காலமானார்.[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கே._வி._நாராயணசுவாமி&oldid=7317" இருந்து மீள்விக்கப்பட்டது