யொகான்னசு வி. யென்சென்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
யொகான்னசு வி. யென்சென்
Johannes V. Jensen
Johannes Vilhelm Jensen 1944.jpg
பிறப்புயொகான்னசு வில்லெம் யென்சென்
(1873-01-20)20 சனவரி 1873
பார்சோ, யுட்லண்ட், டென்மார்க்
இறப்பு25 நவம்பர் 1950(1950-11-25) (அகவை 77)
கோபனாவன், டென்மார்க்கு
தேசியம்தானியர்
பணிஎழுத்தாளர்
விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு
1944

யொகான்னசு வி. யென்சென் எனப் பொதுவாக அழைக்கப்படும் யொகான்னசு வில்லெம் யென்சென் (Johannes Vilhelm Jensen, 20 சனவரி 1873 – 25 நவம்பர் 1950) 20-ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற டென்மார்க் எழுத்தாளராக கருதப்படுகிறார். இவருக்கு 1944 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரது சகோதரிகளில் ஒருவரரான திட் யென்சன் என்பவரும், நன்கு அறியப்பட்ட ஒரு எழுத்தாளர் மற்றும் குரல் வளமிக்கவரும், சில நேரங்களில் சர்ச்சைக்குரிய பெண்ணியவாதியாகவும் அறியப்பட்டவர்.

தொடக்கக் காலம்

டென்மார்க்கின் வடக்கு யூட்லேண்டில் உள்ள கிராமத்தில் இவர் பிறந்தார்.. இவருடைய தந்தை மாவட்ட கால்நடை அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றினார்.[1] 11 வயது வரை வீட்டிலேயே இவரது அம்மா மகனுக்குக் கல்வி கற்பித்தார். அதன் பிறகு கெதாட்டிரல் ஸ்கூல் ஆஃப் விபோர்க்கில் பயின்றார். 1893-ல் பட்டப் படிப்பை முடித்தார். கோபன்ஹாகன் பல்கலைக்கழகத்தில் அறிவியலின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். மூன்று ஆண்டுகள் பயின்றார். நான்காவது ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயத்தில் இவரது ஆர்வம் படைப்புக் களத்தில் திரும்பியது. எழுதத் தொடங்கி, அதில் வருமானம் ஈட்டவும் ஆரம்பித்தப் பிறகு படிப்பைப் தொடர்வதா அல்லது எழுத்தாளராக மாறுவதா என்ற குழப்பம் ஏற்பட்டது. இறுதியில் எழுத்தாளரே வென்றார். டாக்டாவதைவிட எழுத்தாளராவதையே இவர் தேர்ந்தெடுத்தார்.

இலக்கியப் பணிகள்

இந்தக் காலகட்டத்தில் 1896-ல் டான்கெரே மற்றும் எய்னர் எல்க்ஜெஸர் என்ற இரண்டு நாவல்களை எழுதினார். இவர் பிறந்த ஹிம்மர்லான்ட் பகுதிதான் இவரது ஆரம்பகால படைப்புகளின் கதைக்களமாக இருந்தது. ஆரம்பத்தில் ரொமான்டிக் கதைகளை எழுதி வந்த இவர், பின்னர் துப்பறியும் நாவல்களையும் எழுதினார். முதன் முதலாக 1898 முதல் 1910 வரையில் வெளிவந்த ஹிம்மல்லான்ட் ஸ்டோரிஸ் என்ற கதைத் தொடர் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் தூரக் கிழக்கு நாடுகள் என ஏராளமான பயணங்களை மேற்கொண்டார். அறிவியலைர் போலவே பயணங்களும் இவரது படைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தின. பல ஆண்டுகள் பத்திரிகையாளராகவும் பணிபுரிந்துள்ளார். எந்தப் பத்திரிகையையும் சாராமல் தனிப்பட்ட முறையில் ஏராளமான கட்டுரைகளும், தொடர்களையும் பல பத்திரிகைகளுக்கு தினமும் எழுதி வந்தார். 1898-ல் ஸ்பானிய அமெரிக்கப் போர் நடைபெற்ற சமயத்தில் போர் செய்தியாளராகவும் செயல்பட்டார். 1900-ல் தொடங்கி ஓராண்டு காலம் இவர் எழுதிய கொங்கென்ஸ் ஃபால்ட் என்ற வரலாற்று நாவல் இவரது மாஸ்டர் பீசாக கருதப்படுகிறது. இது 1933-ல் தி ஃபால் ஆஃப் தி கிங் என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. டென்மார்க்கின் குறிப்பிடத்தக்க வரலாற்று நாவல் என்றும் போற்றப்பட்டது. 1906-ல் வெளிவந்த இவரது கவிதைத் தொகுப்பான டிக்டெ 1906 (கவிதைகள் 1906) டென்மார்க் இலக்கியத்திற்கு முதன் முதலாக உரைநடை கவிதையை அறிமுகம் செய்து வைத்தது. கதைகள், கவிதைகள், சில நாடகங்கள் தவிர ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது கட்டுரைகள் பெரும்பாலும் அறிவியல், மானுடவியல் மற்றும் பரிணாம வளர்ச்சித் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டவை. பரிணாம வளர்ச்சிக் குறித்து ஆராய்ந்து அவற்றுக்கான கோட்பாடுகளை உருவாக்கினார். மேடம் டியோரா, ஹெஜ்லெட் உள்ளிட்ட பல படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. தனது கோட்பாடுகளின் அடிப்படையில் 1908 முதல் 1922 வரை டென் லாங்கெ ரெஜ்சி என்ற தலைப்பில் ஆறு நூல்களாக எழுதினார். இவை தி லாங் ஜர்னி என்ற பெயரில் 1923-1924-ல் மொழிபெயர்க்கப்பட்டன. இது இரண்டு தொகுதிகளாக 1938-ல் வெளியிடப்பட்டது. இது இவரது உரைநடை படைப்புகளில் மிக முக்கியமானதாக கருதப்பட்டது. 1944-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். ஒரு காலகட்டத்தில் இவர் தனது சொந்த படைப்புகளில் நாட்டம் கொள்ளாமல் உயிரியியல் மற்றும் விலங்கியல் ஆய்வுகளில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். மேலும் மரபு சார்ந்த கவிதைகளை புதுப்பிக்கும் எண்ணமும் கொண்டிருந்தார். இவரது வெளிப்படையான, நேர்மையான மொழிப் பயன்பாட்டினாலும் உரைநடைக் கவிதை அறிமுகம் செய்தவர் என்ற முறையிலும் இன்று டென்மார்க் இலக்கியத்தின், குறிப்பாக கவிதைகள் களத்தில் நவீனத்துவத்தின் தந்தை என்று கருதப்படுகிறார். 1999-ல் தி ஃபால் ஆஃப் தி கிங் என்ற இவரது நாவல் 20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த டென்மார்க் நாவல் என்று பத்திரிகைகளால் பாராட்டப்பட்டது. படைப்பாற்றல் மிக்க இவர், கதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என இவரது படைப்புகள் ஏறக்குறைய 60 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. படைப்பின் மீதிருந்த ஆர்வத்தால் மருத்துவப் படிப்பைத் துறந்து இறுதிவரைத் தொடர்ந்து எழுதி வந்தவரும் டென்மார்க் இலக்கியத்தின் முக்கியத் தூணாக கருதப்படுபவருமான ஜொஹான்னஸ் வில்ஹெம் ஜென்சன் 1950-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 77-ம் வயதில் காலமானார்.

மேற்கோள்கள்

  1. Jensen, Johannes V. (c. 1945). "Johannes V. Jensen – Autobiography". The Official Web Site of the Nobel Foundation (Sweden: Nobel Web AB) இம் மூலத்தில் இருந்து 17 டிசம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6CyPJ6VgH?url=http://www.nobelprize.org/nobel_prizes/literature/laureates/1944/jensen-autobio.html. பார்த்த நாள்: 24 November 2009. 
"https://tamilar.wiki/index.php?title=யொகான்னசு_வி._யென்சென்&oldid=19629" இருந்து மீள்விக்கப்பட்டது