ஈரோடு மாவட்டம்

ஈரோடு மாவட்டம்
மாவட்டம்
Bhavani-Kaveri-Sangamam.JPG
பவானி மற்றும் காவேரி நதிகளின்
சங்கமிக்கும் இடம்
Erode in Tamil Nadu (India).svg.png
ஈரோடு மாவட்டம்:அமைந்துள்ள இடம்
நாடு  இந்தியா
மாநிலம் TamilNadu Logo.svg.png தமிழ்நாடு
தலைநகரம் ஈரோடு
பகுதி மேற்கு மாவட்டம்
ஆட்சியர்
திரு.
ராஜ கோபால் சுன்கரா,
இ.ஆ.ப.
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

G.ஜவஹர், இ.கா.ப
மாநகராட்சி 1
நகராட்சிகள் 4
வருவாய் கோட்டங்கள் 2
வட்டங்கள் 10
பேரூராட்சிகள் 42
ஊராட்சி ஒன்றியங்கள் 14
ஊராட்சிகள் 225
வருவாய் கிராமங்கள் 375
சட்டமன்றத் தொகுதிகள் 8
மக்களவைத் தொகுதிகள் 1
பரப்பளவு மொத்தம்: 5722 ச.கி.மீ.
ஊரகம்: 5031.36 ச.கி.மீ.
நகர்ப்புறம்: 690.64 ச.கி.மீ.
மக்கள் தொகை
(2011)
மொத்தம்: 22,51,744
ஆண்கள்: 11,29,868
பெண்கள்: 11,21,876
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இ.சீ.நே.
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
638 xxx
தொலைபேசிக்
குறியீடு

0424 (ஈரோடு)
04204 (கொடுமுடி)
04294 (பெருந்துறை)
04256 (பவானி)
04285 (கோபிசெட்டிபாளையம்)
04295 (சத்தியமங்கலம்)
வாகனப் பதிவு
TN 33 (ஈரோடு கிழக்கு)
TN 36 (கோபிசெட்டிபாளையம்)
TN 56 (பெருந்துறை)
TN 86 (ஈரோடு மேற்கு)
பாலின விகிதம்
ஆ-51%/பெ-49% /
கல்வியறிவு
72.58%
சராசரி கோடை
வெப்பநிலை

35 °C (95 °F)
சராசரி குளிர்கால
வெப்பநிலை

18 °C (64 °F)
இணையதளம் erode

ஈரோடு மாவட்டம் (English: Erode district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஈரோடு ஆகும். இது தமிழ்நாட்டின், மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாவட்டம் 5,722 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.

இதன் வடக்கில் கர்நாடக மாநிலம், தெற்கில் திருப்பூர் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டங்கள், கிழக்கில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்கள், மேற்கில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் அமைந்துள்ளன. காவிரி, பவானி, மற்றும் நொய்யல் ஆகிய ஆறுகள் ஈரோடு மாவட்டத்தின் வழியாகப் பாய்கின்றன. 1996-ஆம் ஆண்டுவரை, இது பெரியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது.

பெயர்க் காரணம்

பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இவ்வூரை ஈரோடை (இரண்டு ஓடை) என்னும் பெயரால் அழைக்கின்றனர். இங்குள்ள கடவுளுக்கு, கபாலீசுவரர் என்ற பெயர். அதனை ஒட்டி ஈர ஓடு என்னும் பெயர் ஏற்பட்டு நாளடைவில் ஈரோடு என்று மாறியதாகவும் கூறுவர்.

வரலாறு

இலக்கியப் புகழும், வரலாற்று பெருமையும், தொல்பொருள் சிறப்பும் மிக்க ஈரோடு மாவட்டம், தமிழகத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. அப்போதைய கோயமுத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ஈரோடு நகரம், 3000 வீடுகளைக்கொண்டு முக்கிய வணிக ஊராகத்திகழ்ந்தது. பல அன்னியப்படைகள் தாக்கி அழித்தன, அனைத்து செல்வங்களும் கொள்ளையடித்து கொண்டு போகப்பட்டன. அதனால் 1792 ஆம் ஆண்டில் ஈரோடு நகரம் வெறும் 400 இடிந்த வீடுகளையும் 3000 மக்களையும் மட்டுமே கொண்டிருந்தது.

பின்பு 4-3-1799இல் திப்பு சுல்தான் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தப்பகுதி முழுவதும் கும்பினியர் வசமானது. அப்பொழுது நொய்யல் ஆற்றை மையமாக வைத்து நொய்யல் வடக்கு மாவட்டம் மற்றும் நொய்யல் தெற்கு மாவட்டம் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு முறையே பவானியும், தாராபுரமும் தலைநகரங்களாயின. நொய்யல் வடக்கு மாவட்டத்தில் கோயமுத்தூர், ஈரோடு, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளும், நொய்யல் தெற்கு மாவட்டத்தில் கரூர், பொள்ளாச்சி, தாராபுரம் போன்ற பகுதிகளும் அடங்கியிருந்தன.

பின்னர் ஏற்பட்ட நிர்வாக மாற்றத்தால், 1804 ஆம் ஆண்டு கோயம்புத்தூரை தலைநகராகக்கொண்டு மாவட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. அப்போது அதில் இருந்த ஈரோடு தாலுகாவை, பெருந்துறை தாலுகாவுடன் இணைத்து ஈரோட்டை துணை தாலுகாவாக மாற்றினர். அதேபோல், காங்கேயம் தாலுகாவை, தாராபுரத்துடன் இணைத்தனர், மேலும் சத்தியமங்கலம் தாலுகா தலைமையகத்தை கோபிசெட்டிபாளையத்துக்கு மாற்றினர்.

பின்னர் 1868 ஆம் ஆண்டில் ஈரோடு மீண்டும் தாலுக்கா அந்தஸ்த்து பெற்றபோது தனி தாலுகாவாக இருந்த பெருந்துறை, ஈரோடு தாலுகாவுடன் இணைக்கப்பட்டது.

அதன்பின், 24-9-1979-இல் மாநில நிர்வாக சீர்திருத்தக்குழுவின் பரிந்துரைப்படி ஈரோடு நகரைத் தலைமையிடமாகக்கொண்டு தனி மாவட்டம் உருவாக்கவும், மேலும் தாராபுரம் தாலுகாவைப் பிரித்து காங்கேயம் தாலுகாவும், ஈரோடு தாலுகாவைப் பிரித்து பெருந்துறை தாலுகாவும் மற்றும் கோபிச்செட்டிபாளையத்தை தலைமையிடமாகக்கொண்டிருந்த சத்தியமங்கலம் தாலுகாவை பிரித்து கோபிச்செட்டிபாளையம், சத்தியமங்கலம் என இரண்டாகப் பிரித்தும் மொத்தம் மூன்று புதிய தாலுகாகளை உருவாக்கவும் உத்தேசிக்கப்பட்டது. அதன்படி கோயமுத்தூர் மாவட்டத்திலிருந்த ஈரோடு, பெருந்துறை, பவானி, காங்கேயம், கோபிச்செட்டிபாளையம் தாலுகாக்களையும், சேலம் மாவட்டத்திலிருந்த சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு தாலுகாக்களையும் இணைத்து ஈரோடு மாவட்டம் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போதைய சேலம் மாவட்ட ஆட்சியாளர்கள், திருச்செங்கோட்டையும், சங்ககிரியையும் ஈரோட்டுடன் இணைத்தால் சேலம் மாவட்டத்தின் வருவாய் கடுமையாக பாதிக்கும் என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி தாலுகாக்களைத் தவிர்த்து அதற்கு மாற்றாக சத்தியமங்கலம் மற்றும் தாராபுரத்தை சேர்த்து, ஏனைய ஐந்து தாலுகாகளையும் உள்ளடக்கி மொத்தம் ஏழு தாலுகாகளுடன் புதிய மாவட்டம் உருவானது. 1997ஆம் ஆண்டு வரை பெரியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் மாவட்டத் தலைநகரான ஈரோடு நகரின் பெயராலேயே ஈரோடு மாவட்டம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

2008 ஆம் ஆண்டில், திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, ஈரோடு மாவட்டத்திலிருந்த தாராபுரம் மற்றும் காங்கேயம் தாலுகாக்கள் முழுமையாகவும், பெருந்துறை தாலுகாவிலிருந்த ஒரு பகுதியும் (ஊத்துக்குளி மற்றும் குன்னத்தூர் ஒன்றியப்பகுதிகள்) பிரிக்கப்பட்டு திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.

வரலாற்றுச் சிறப்பு

பழங்கால கொங்கு மண்டலத்தில் மேல்கொங்கு மண்டலமாக ஈரோடு மாவட்டம் விளங்குகிறது. கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களையும், கரூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியையும், திண்டுக்கல் மாவட்டத்தின் வடக்குப் பகுதியையும் உள்ளடக்கி இருப்பதே கொங்கு நாடு ஆகும். இப்பகுதிகளை கொங்கர் ஆண்டு வந்தனர். இங்குள்ள தாராபுரத்தில் உரோம நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உரோம பேரரசுக்கும் இம்மாவட்ட வணிகர்களுக்கும் வணிகம் நடந்திருக்க வேண்டும் என்பது வரலாற்று அறிஞர்களின் கணிப்பு.

இதுபோலவே நொய்யல் ஆற்றின் கரையில் சென்னிமலைக்கு அருகே உள்ள 'கொடுமணல் நாகரிகம்' 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு பல வண்ண மணிகள், ஓடுகள் கிடைத்துள்ளன. சங்க காலத்திற்கு பின்னர் கங்கர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். அவர்களை சோழர்கள் 9 ஆம் நூற்றாண்டில் முறியடித்து கொங்கு மண்டலத்தை ஆளத் தலைப்பட்டனர். சோழர் ஆட்சியில் கொங்கு மண்டலம் 'அதிராசராச மண்டலம்' என்று அழைக்கப்பட்டது. இக்காலத்தில் கொங்குவேளிர் பெருங்கதையையும்; பவணந்தி நன்னூலையும்; அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்திற்கு உரையையும் எழுதியுள்ளனர்.

சோழர்களுக்குப் பிறகு பாண்டியர்கள், ஹோய்சாளர்கள், விஜயநகர மன்னர்கள், மைசூர் உடையார்கள், திப்பு சுல்தான் முதலியோர் இப்பகுதியை ஆண்டிருக்கின்றனர். இக்காலங்களில் பட்டக்காரர் வசம் வரிவசூலிப்பு இருந்திருக்கிறது.

மாவட்ட வருவாய் நிர்வாகம்

ஈரோடு மாவட்டமானது, ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், பத்து வருவாய் வட்டங்களும் (தாலுகாக்கள்), 35 உள்வட்டங்களும், 375 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.[1]

ஈரோடு வருவாய் கோட்டம்

கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டம்

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்

இம்மாவட்டம் ஒரு மாநகராட்சியும், 4 நகராட்சியும், 42 பேரூராட்சிகளும் கொண்டுள்ளது.[2]

மாநகராட்சி மற்றும் நகராட்சிகள்

  1. ஈரோடு மாநகராட்சி
  2. கோபிச்செட்டிப்பாளையம் தேர்வு நிலை நகராட்சி
  3. சத்தியமங்கலம் முதல் நிலை நகராட்சி
  4. பவானி இரண்டாம் நிலை நகராட்சி
  5. புன்செய்ப்புளியம்பட்டி இரண்டாம் நிலை நகராட்சி

பேரூராட்சிகள்

ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகள்

இம்மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்களையும்[3], 225 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.[4]

ஊராட்சி ஒன்றியங்கள்

மக்கள் வகைப்பாடு

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.ஆ. ±%
19016,29,892—    
19116,67,968+0.59%
19217,25,434+0.83%
19317,69,455+0.59%
19418,86,108+1.42%
195110,10,616+1.32%
196111,06,528+0.91%
197113,56,092+2.05%
198115,87,604+1.59%
199118,02,939+1.28%
200120,16,582+1.13%
201122,51,744+1.11%
சான்று:[5]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,251,744 மக்கள் இம்மாவட்டத்தில் வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். இம்மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 72.58% ஆகும்.

சமயம்


 

மதவாரியான கணக்கீடு (2011)

  மற்றவை (0.01%)

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 2,115,455 (93.95 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 76,098 (3.38 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 55,899 (2.48 %) ஆகவும், சீக்கிய மக்கள்தொகை 435 (0.02 %) ஆகவும், பௌத்த சமய மக்கள்தொகை 148 (0.01 %) ஆகவும், சைன சமய மக்கள்தொகை 639 (0.03 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 157 (0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 2,913 (0.13 %) ஆகவும் உள்ளது.

அரசியல்

 
ஈரோடு மக்களவைத் தொகுதி

சட்டமன்றம்

இம்மாவட்டம் 8 சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது.

வ. எண் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1 ஈரோடு கிழக்கு ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் இந்திய தேசிய காங்கிரசு
2 ஈரோடு மேற்கு எஸ். முத்துசாமி திமுக
3 மொடக்குறிச்சி சி. கே. சரஸ்வதி பாஜக
4 பெருந்துறை சி. ஜெயக்குமார் அதிமுக
5 பவானி கே. சி. கருப்பண்ணன் அதிமுக
6 அந்தியூர் ஏ. ஜி. வெங்கடாசலம் திமுக
7 கோபிச்செட்டிப்பாளையம் கே. ஏ. செங்கோட்டையன் அதிமுக
8 பவானிசாகர் அ. பண்ணாரி அதிமுக

மக்களவை

இம்மாவட்டம் ஒரு மக்களவைத் தொகுதியை கொண்டுள்ளது.

வ. எண் மக்களவைத் தொகுதி மக்களவை உறுப்பினர் கட்சி
1 ஈரோடு அ. கணேசமூர்த்தி திமுக

மாவட்டக் காவல்துறை அமைப்பு

தமிழ்நாடு காவல்துறையின் மாவட்டக் காவல் அமைப்பான, ஈரோடு மாவட்டக் காவல் பிரிவில் உள்ளடங்கியது. ஈரோடு மாநகரில், 8 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களும், ஒரு குற்றப் பிரிவு காவல் நிலையமும் இரண்டு போக்குவரத்துக் காவல் நிலையங்களும் உள்ளன.

பொருளாதாரம்

 
இம்மாவட்டம் இந்திய சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மஞ்சளுக்கான முக்கிய சந்தையாகும்.

ஈரோட்டில் வேளாண்மைக் கருவிகள், இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில், தமிழ்நாடு சிறுதொழில் துறையினரால் நடத்தப்படுகிறது. இவை தவிர எண்ணெய், தோல், பருத்தி ஆலைத் தொழில் சிறப்பாக நடை பெறுகிறது. இதன் அருகில் முட்டையைப் பொடியாக்கி பொதி செய்யும் தொழில் ஏற்றுமதியில் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. பாத்திரத் தொழிலும் நடந்து வருகிறது. ஈரோடு துணி மார்க்கெட் இந்திய அளவில் 5ஆம் இடம் பெறுகிறது. சிறு சேமிப்பு திட்டத்தில் 33.65 கோடி ரூபாயில் இம்மக்கள் முதலீடு செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் மஞ்சள், சமையலில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்களுக்கான முக்கிய சந்தையாகும். மஞ்சளானது துணிகளுக்கு சாயமாகவும் பயன்படுத்தப் படுகிறது. மஞ்சளானது ஈரோடு மற்றும் கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து வருகிறது. ஊத்துக்குளி வெண்ணெய் புகழ் பெற்றது.

 
கோபிசெட்டிபாளையத்தில் ஒரு விவசாய நிலம்

விவசாயம்

மொத்த விவசாய பரப்பு 9 இலட்சம் ஏக்கர்; முக்கிய விளை பொருட்கள்: நெல், நிலக்கடலை, மஞ்சள், கரும்பு, சோளம், பருத்தி, புகையிலை, எள். விவசாயத் தொழிலாளர்கள்: 10,78,256 பேர்கள். மஞ்சள் சந்தை தமிழகத்திலேயே ஈரோட்டில்தான் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் நெல் உற்பத்தியில் சென்ற ஆண்டு ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்றது.[6] தேங்காய் மற்றும் வாழை உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது ஈரோடு மாவட்டம்.

தொழில்கள்

பெருந்தொழில் நிறுவனங்கள் - 2; சிறு தொழிற்சாலைகள் 7,249. மற்றும் 1301 குடிசைத் தொழில்கள் நடைபெறுகின்றன.

  • உணவுபொருள்-தமிழகத்தில் உணவு பொருள் தயாரிப்பில் ஈரோடு முன்னிலை வகிக்கிறது. ஈரோட்டை தொடர்ந்து கோவை,திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் அதிக அளவு உணவு பொருள் தயாரிப்பு மேற்கொள்ள படுகிறது
  • கைத்தறி - நெசவுத் தொழில் பெருந்துறை, தாராபுரம், ஈரோடு, பவானி ஆகிய இடங்களில் நடக்கிறது. அந்தியூரில் மட்டும் 3000 விசைத்தறிகள் உள்ளன. இவற்றில் 5000 பேர் பணியாற்றுகின்றனர். இங்கு டையிங் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. சென்னிமலையில் ஜமக்காளம் மற்றும் போர்வைகள், பவானியில் பவானி கைத்தறி ஜமக்காளம், படுக்கை விரிப்புகளுக்கு புகழ்பெற்றது. ஈரோடு மாவட்டம் இங்கு தயாரிக்கப்படும் கைத்தறி மற்றும் விசைத்தறி துணிகளுக்கு பெயர்பெற்றது. இங்கு பருத்திப் புடவைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கி, வேட்டிகள் ஆகியன தயாரிக்கப் படுகின்றன.
  • பட்டு - கோபிச்செட்டிப்பாளையம், தாளவாடி, சத்தியமங்கலத்தில் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவின் முதல் தானியங்கி பட்டு நூற்கும் இயந்திரம் கோபிசெட்டிப்பாளையத்தில் நிறுவப்பட்டுள்ளது.
  • சர்க்கரை - சத்திநகர், சித்தோடு, பெருந்துறை, கவுந்தப்பாடி முதலிய இடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • மரம் அறுப்பு - சத்தியமங்கலம், கோபிசெட்டிப்பாளையத்தில் மரம் அறுக்கும் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
  • மீன்பிடிப்பு - ஈரோடு மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடிப்பே நடந்து வருகிறது. காவிரி, பவானி, நொய்யல், அமராவதி ஆகிய ஆறுகளில் அதிக அளவில் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. தாலக்குளத்தில் மீன் குஞ்சுகள் விற்கப்படுகின்றன. பவானிசாகர் அணையிலும், உப்பாறு அணையிலும் மீன்பிடிப்பு சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு பிடிக்கப்படும் மீனுக்கு 'பவானிகெண்டை' என்றே பெயர் உள்ளது. ஏரி மீன்பிடிப்பில் ஓடத்துறை ஏரி, தலைக்குளம் ஏரியில் மீன்பிடிப்பு நடக்கிறது. இங்கு இறால் மீன் பக்குவப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப் படுகிறது. செம்படவ பாளையத்தில் கையினால் மீன்வலை பின்னும் நிலையம் ஒன்று உள்ளது.
  • எண்ணெய் - எண்ணெய் சந்தையைப் பொறுத்த அளவில் கேரளாவில் உள்ள கொச்சிக்கு அடுத்த படியாக, இங்குள்ள காங்கேயம் தான் பெரிய சந்தையாக திகழ்கிறது.
  • கால்நடை வளர்ப்பு - ஈரோடு மாவட்டத்தில் பாரம்பரியமாகவே கால்நடை வளர்ப்பு சிறந்த முறையில் நடந்து வருகிறது. தமிழக மாடு வகையில் 'காங்கேயம்' உலகப் புகழ்பெற்றது. இது போலவே பர்கூர் இனக் காளைகளும் தற்போது அதிகமாக வளர்க்கப்படுகின்றன. தாளவாடி, பர்கூர், அந்தியூர் பகுதிகளில் குறும்பை ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் பரவலாக வளர்க்கப்பட்டு வருகின்றன. கண்ணபுரத்தில் பெரிய மாட்டுச் சந்தையும்; அந்தியூரில் குதிரைச் சந்தையும் ஆண்டுதோறும் கூடுகின்றன.

எல்லைகள்

ஈரோடு மாவட்டத்தின் இயற்கை எல்லைகளாக வடக்கில் மேற்குத்தொடர்ச்சி மலைகளும், கிழக்கில் காவிரி ஆறும், தெற்கில் நொய்யல் ஆறும் அமைந்திருக்கின்றன.

தெற்கில் திருப்பூர் மாவட்டமும், கிழக்கில் சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களும், வடக்கில் கர்நாடக மாநிலமும், மேற்கில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களும், ஈரோடு மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.

புவியியல் - மழைப்பொழிவு

பொதுவாக இம்மாவட்டம், குறைந்த மழைப்பொழிவுயும், வறண்ட காலநிலையினையும் கொண்ட மாவட்டம் ஆகும்.[7] அதிக மழைப்பொழிவு கோபிசெட்டிபாளையத்திலும், பவானி வட்டங்களிலும் நிலவுகிறது. கோயமுத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பாலக்காடு கணவாய் வழியாக கிடைக்கும், குளிர்ந்த காலநிலை, இம்மாவட்டத்தில் நிலவும் வறண்ட காலநிலையினை குறைப்பதற்கு கிடைப்பதில்லை. பாலகாடு கணவாய் வழியாக, வரும் குளிர்ந்த காற்று, ஈரோடு மாவட்டத்தினை அடையும் போது பெரும்பாலும் வறண்டே வரப்பெறுகிறது. அதனால் கோயமுத்தூர் மாவட்டத்தில் நிலவும் காலநிலைக் குளிர்ச்சியும், இதமும், ஈரோடு மாவட்டத்தினருக்குக் கிடைப்பதில்லை. பருவமழைக் காலத்தில் மட்டுமே, ஈரோடு மாவட்டப் பகுதிகளில் குளிர்ந்த காலநிலை காணப்படுகின்றன. பொதுவாக சனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டும், காலநிலை குளிர்ந்தும், இதமாகவும் இருக்கும். மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை கோடை வெயில் மிகவும் அதிகமாகக் காணப்படும். அவ்வப்போது இக்கோடைக்காலத்தில் பெய்யும் மழையால், இம்மாவட்டத்தின் கடுமையான சூடுத் தணிவதில்லை. சூன் தொடங்கி ஆகத்து வரையுள்ள பருவமழைக் காலத்திற்கு முன்னர் மாதங்களில் வெயிலின் வெப்பம், சற்று குறைவாகக் காணப்படுகிறது. செப்படம்பர் மாதத்தில், வானம் மேகமூட்டமாக இருந்தாலும், மழைபொழிவு குறைவாகவே காணப்படும். வடகிழக்குப் பருவகாலங்களான அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரையுள்ள மாதங்களில் அதிகமாகப் மழைப் பொழிவு காணப்படுகிறது. இப்பருவத்தில் மட்டுமே கோவை மாவட்ட சூழ்நிலை இதம், இம்மாவட்டத்தில் நிலவுகிறது.

ஆறுகள்

 
ஈரோடில் ஓடும் காவேரி ஆறு

பவானி, காவேரி, பாலாறு, உப்பாறு, நொய்யல், மோயாறு ஆகியன ஈரோடு மாவட்டத்தில் பாயும் முக்கியமான ஆறுகளாகும்.[8] வடக்கில், பாலாறு ஈரோடு மாவட்டத்திற்கும் கருநாடக மாநிலத்திற்கும்எல்லையாக அமைந்துள்ளது. மேற்கூறிய ஆறுகளும், பவானிசாகர் அணையில் இருந்து வரும், கீழ்பவானித் திட்ட முக்கிய கால்வாய்களும் இம்மாவட்டத்தில், முறையான பாசனத்திற்கு பாசனத்திற்கு பயன்படுகின்றன. பவானி ஆறு, கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதி, அமைதிப் பள்ளத்தாக்கு என்னுமிடத்தில் உற்பத்தியாகி, சிறுவாணி என்ற ஓடை, குந்தா ஆறு ஆகியவற்றுடன் இணைந்து, இந்த் மாவட்டத்தின் சத்தியமங்கலம் வட்டத்தினை அடைகிறது. பவானி ஆறு வற்றாத ஆறாகவும், தென் மேற்கு பருவமழைக் காலத்தில் அதிக அளவு மழைநீரையும், வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஓரளவு மழைநீரையும் பெறும் ஆறாகவும் உள்ளது. இந்த ஆறு சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி ஆகிய வட்டங்களில் நுறு கி.மீட்டர்கள் பாய்ந்து வளப்படுத்துகின்றன. பவானிசாகர் என்ற அணைக்கு நீரை வழங்கும் முக்கிய ஆறாக, இந்த பவானி ஆறு உள்ளது.இந்த ஆற்றின் கிழக்கு நோக்கி சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி வட்டங்களில் ஓடி, காவேரி ஆற்றில் கலக்கிறது. காவேரி ஆறு மேற்கு தொடார்ச்சி மலைகளில் அமைந்துள்ள, கர்நாடக மாநிலத்தில் உள்ள தலைக்காவிரி, குடகு என்ற இடத்தில் தோன்றுகிறது. கபினியும், வேறு பல சிறிய ஆறுகள் காவேரியுடன் கலந்து கிழக்கு திசையில் கார்நாடகத்தில் பாய்ந்து வளப்படுத்துகிறது. ஹெகேனக்கல் என்ற இடத்தில் தென்திசை நோக்கி திரும்பி பாய்கிறது. இந்த இடத்தில் இருந்து தென் கிழக்கு திசையில் பாய்ந்து ஈரோடு மாவட்த்தில் உள்ள பவானி வட்டத்திற்கும், திருச்செங்கோடு வட்டத்திற்கும் எல்லைகளாக அமைந்து இந்த ஆறு ஓடுகிறது. காவேரியாற்றுடன், பவானி ஆறும் இணைந்த பின்னர், காவிரி ஆறு தொடர்ந்து, தென்கிழக்கு திசையில் ஓடி, ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு வட்டத்திற்கும், நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு வட்டத்திற்கும் எல்லையாகப் அமைகிறது. நொய்யல் ஆற்றில் தீடீர் என்று வெள்ளம் ஏற்படும் தொடர்ந்து ஏற்படும் இயற்கை நிகழ்வாகும். தென்மேற்கு பருவ மழைக் காலங்களில், இந்த வெள்ளப் பெருக்கு ஏற்படுவது இயற்கையாகும். இந்த ஆற்றின் நீரால், கோவை மாவட்டத்தின் பல்லடம், திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் வட்டங்களில் குறிப்பிடத்தகுந்த அளவு வேளாண் நிலங்கள் பாசனவசதிப் பெறுகிறது.

அணைக்கட்டுகள்

 
பவானி ஆற்றின் குறுக்கே உள்ள பவானிசாகர் அணை

பவானி சாகர், வறட்டுப்பள்ளம், கொடிவேரி, ஒரத்துப்பாளையம், காளிங்கராயன் அணை. குண்டேரிப்பள்ளம் அணை, பெரும்பள்ளம் அணை,

பாசன வாய்க்கால்

இம்மாவட்டமானது இரண்டு வாய்க்கால்களால் பயன்பெறுகிறது. காளிங்கராயன் வாய்க்கால், 90 கிமீ நீளமுடைய இதன் மூலம் 15,743 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கீழ் பவானி திட்ட கால்வாய் இதன் மூலம் 2 இலட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

மலைவளம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைகள்: தாளவாடி மலை, திம்பம் மலை, தலமலை, தவளகிரி மலை, பவள மலை, பச்சை மலை,பெருமாள் மலை, பருவாச்சி மலை, பூனாச்சி மலை, அந்தியூர் மலை,வட்டமலை, சென்னிமலை,மலைப்பாளையம்மன் மலை, எழுமாத்துர் மலை, எட்டிமலை, அருள்மலை, சிவகிரி மலை, அறச்சலுர் நாக மலை, அரசனா மலை, திண்டல்மலை, விசயகிரி மலை, ஊராட்சி கோட்டை மலை ஆகியவையாகும்.

 
மேற்கு தொடர்ச்சி மலை, கோபிசெட்டிபாளையம்

இம்மாவட்டத்தின் வடக்குப் பகுதி கர்நாடக பீடபூமியின் தொடர்ச்சியாயுள்ளது. இங்கு 900 மீ. முதல் 1700 மீ. உயரம் உள்ள மலைகள் காணப்படுகின்றன. இங்கு வரட்டுப்பள்ளம், வழுக்குப் பாறைப் பள்ளம், தென்வாரிப் பள்ளம், கோரைப் பள்ளம் போன்ற பல பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

காட்டுவளம்

 
சத்தியமங்கலம் காடு

இம்மாவட்டத்தில் காடுகள் நிறைந்து காணப்படுகின்றன. காட்டின் மொத்தப் பரப்பளவு 2,42,953.28 ஹெக்டேர்களாகும். தமிழ்நாட்டிலுள்ள வனக் கோட்டங்களில் ஈரோடு மாவட்ட வனக் கோட்டமே மிகப் பெரியது. இவற்றை 4 ஆக பிரித்துள்ளனர். அவை: சத்தியமங்கலம் சரகம், தலமலை சரகம், பர்கூர் சரகம், அந்தியூர் சரகம் ஆகியவையாகும். தமிழகத்தின் மொத்த சந்தனத்தில் மூன்றில் ஒரு பகுதி ஈரோடு மாவட்டத்திலிருந்து கிடைக்கிறது. சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு அரசின் சந்தன மரக்கிடங்கு ஒன்று உள்ளது. மேட்டூர் சந்தன எண்ணெய்த் தொழிற்சாலைக்கு இங்கிருந்தே மரங்கள் செல்கின்றன. அந்தியூர், பர்கூர் மலைப் பகுதிகளில் தேக்கு மரங்களும், சத்தியமங்கலம், கோபிசெட்டிப்பாளையம், அந்தியூர்ப் பகுதிகளில் மூங்கில் மரமும் அதிகமாக வளர்கின்றன. இவை காகிதத் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இம்மாவட்டத்திலுள்ள காடுகளில் வேங்கை (மரம்), கருங்காலி. ஈட்டி, மருது போன்ற பல்வேறு மரங்களும் காணப்படுகின்றன.

விலங்குகள்

பவானிசாகர் அணை, தெங்குமரஹாடா, மோயாறு, பண்ணாரி ,ஆசனுர் காட்டுப் பகுதிகளில் யானைகள் அதிகமாக வாழ்கின்றன. இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக கூறுகின்றனர். தலமலைப் பகுதிகளில் புலிகள் வசிக்கின்றன. இப்பகுதியில் காட்டெருமை, முள்ளம் பன்றி, மான்கள் அதிகமாக உள்ளன.

காடுபடு பொருள்கள்

குங்கிலியம், மட்டிப்பால், சிகைக்காய், தேன், கொம்பரக்கு, பட்டை வகைகளும், கடுக்காய், புங்கம் விதை, ஆவாரம்பட்டை, கொன்னைப் பட்டை ஆகியவையும், எருமை, மான் கொம்புகளும், யானைத் தந்தங்களும் சேகரிக்கப்படுகின்றன.

கனிம வளம்

ஈரோடு மாவட்டத்தில், மற்ற மாவட்டங்களை விட கனிமங்கள் குறைவாகவே உள்ளன. இருப்பினும் இம்மாவடத்தின் சில வகை கனிமங்கள் உள்ளன.[9] ஈரோடு வட்டத்தில், ஒளிபுகா மற்றும் கசியும் தண்மை கொண்ட பெல்ட்ஸ்பார் வகை கனிங்கள் உள்ளன. மைக்கா பவானி வட்டத்தில் உள்ள வைரமங்கலம் என்ற இடத்திலும், ஏரப்ப நாயக்கன் பாளையத்திலும், சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள புஞ்சை புளியம்பட்டியில் “மஸ்குாவைட்” வகை கனிங்களும் கிடைக்கின்றன. அஸ்பெஸ்டாஸ் கனிங்கள், பவானி, பெருந்துறை வட்டங்களில் சில இடங்களிலும், பருகூரிலும் கிடைக்கின்றன. இரும்பு அதிகம் உள்ள இரும்புத் தாது வகை, தொட்டன்கோம்பை வனப்பகுதியிலும், கீழ்பவானி அணை, தொப்பம்பாளையம், கரிதொட்டம் பாளையம், பங்களாபுதுர் பகுதியின் வடக்கு மலைப்பகுதியில் கிடைக்கிறது பகுதிகளிலும் கிடைக்கின்றன. தங்கம் இருப்பதற்கான சுவடுகள் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் சில இடங்களிலும், எக்காத்துர், ஊதியூர், எழுமாத்தூர் ஊர்களிலும் காணப்படுகின்றன. கருங்கற்கள் - பவானி பாலமலைப் பகுதி. இவை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஜிப்சம் - தாராபுரம். படியூரில் பெரில்ஸ் என்னும் கடல்நிற வைரக்கற்களும், சிவன்மலை, சலங்கிப் பாளையம், சின்ன தாராபுரம் பகுதியில் உயர்தரக் கற்கள் கிடைக்கின்றன. குவார்ட்ஸ் எனப்படும் வெள்ளைக் கல்லும், பெல்ஸ்பர் என்ற சிவப்புக் கல்லும் இம்மாவட்டத்தில் கிடைக்கிறது.

போக்குவரத்து

ஈரோடு போக்குவரத்து ஈரோடு மாவட்டத்தின் தொழில் முயற்சிகளுக்குப் பெரிதும் துணையாக இருப்பது போக்குவரத்து; ஈரோட்டிலிருந்து தமிழகத்தின் எல்லா மாவட்டத் தலைநகர்களுக்கும், சென்னைக்கும் சாலை போக்குவரத்து உள்ளது. நேர்விரைவுப் பேருந்து சென்று வருகிறது. இம்மாவட்டத்தின் மொத்த சாலைகளின் நீளம் 9194 கி.மீ. உள்ளதாம்.

இருப்புப் பாதை

முக்கிய தொடர்வண்டி நிலையங்கள்: ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம் , பெருந்துறை தொடருந்து நிலையம், ஊஞ்சலுர் தொடருந்து நிலையம், கொடுமுடி தொடருந்து நிலையம், பாசூர் தொடருந்து நிலையம், ஈங்கூர் தொடருந்து நிலையம். இம்மாவட்டத்தில் உள்ள தொடருந்து பாதை அகன்ற இருப்புப் பாதையாகும். ஈரோடு-கோவை இருப்புப்பாதை ஓர் இரட்டைப் பாதையாகும்.

நீர்வழி

காவிரியாற்றின் போக்கை ஒட்டி சிறிய அளவிலான படகுப் போக்குவரத்து இங்கு நடைபெறுகிறது.

வழிபாட்டு தலங்கள்

 
பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில்

பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், பண்ணாரி மாரியம்மன் கோயில், ஒத்தகுதிரை கள்ளியங்காட்டு மாரியம்மன் கோவில்,காட்டு பண்ணாரி , பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில், சென்னிமலை முருகன் திருக்கோயில், கோபி பச்சைமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், கொடுமுடி வீரநாராயணப் பெருமாள் கோவில்,அருள்மிகு பொன்மலை ஆன்டவர் திருக்கோயில் கொன்டையம்பாளையம், சிவன்மலை முருகன் திருக்கோயில்,கந்தசாமிபாளையம் அருள்மிகு சடையப்பசாமி திருக்கோயில் ஈரோடு பெரிய மாரியம்மன் திருக்கோயில், திண்டல்மலை முருகன் கோவில் முதலியன.

விழாக்கள்

பாரியூர் கொண்டத்துகாளியம்மன் குண்டம் மற்றும் தேர் திருவிழா, ஒத்தகுதிரை கள்ளியங்காட்டு மாரியம்மன் கோவில் திருவிழா,கொன்டையம்பாளையம் தைபுச தேர் திருவிழா, ஈரோடு மாரியம்மன் பண்டிகை, பண்ணாரி மாரியம்மன் பண்டிகை, புஞ்சைபுளியம்பட்டி அம்புசேர்வை திருவிழா, அந்தியூர் குருநாதசாமி தேர்த்திருவிழா, சென்னிமலை தைபூசத் திருவிழா, சிவன்மலை தேரோட்டம், பவானி கூடுதுறை ஆடிப் பெருக்கு.

தொல்லியற் களம்

கல்வி - பள்ளிகள்

  • தொடக்கப்பள்ளிகள் - 455
  • நடுநிலைப்பள்ளிகள் - 185
  • உயர்நிலைப்பள்ளிகள் - 77
  • மேல்நிலைப்பள்ளிகள் - 52
  • கல்லூரிகள் - 8
  • தொழிற்கல்வி நிறுவனங்கள் - 9
  • தொழிற்பயிற்சி நிறுவனங்கள் - 1

சுற்றுலாத் தலங்கள்

பவானி சாகர் அணைக்கட்டு, கூடுதுறை, குண்டேரிபள்ளம் அணை, பெரும்பள்ளம் அணை, கொடிவேரி அணைக்கட்டு, தாளவாடி மலை. வரலாற்று சுற்றுலா தலங்கள்: அரச்சலுர் - கல்வெட்டுகள்; பெருந்துறை- விஜயமங்கலம்; கொடுமணல் தொல்லிற்களம் புதைபொருள் ஆய்வு இடம்.

சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம் மற்றும் புலிகள் காப்பகம்

15.3.2013 ஆம் ஆண்டிலிருந்து சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாளவாடி மலை இம்மாவட்டத்தின் மலைப் பிரதேசமாகும். இயற்கை எழில் போலவே வனவிலங்குகளும் இங்கு நிறைந்துள்ளன. யானை, கரடி, செந்நாய், மான், கருங்குரங்கு, சிறுத்தை போன்றவை இங்கு உண்டு.

கொடிவேரி மற்றும் பவானிசாகர் அணை மற்றும் குண்டேரிப்பள்ளம் அணை

குண்டேரிப்பள்ளம் அணை ஆனது கோபிச்செட்டிபாளையத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இயற்கை எழில் மிகுந்த இந்த அணைக்கு மலைகளில் இருந்து வரும் நீர் நிலைகள் மட்டும் தேங்குவதால் இங்கே மீன்கள் அதிக சுவை உடையவை, மாலை நேரங்களில் யானைகள் மான்கள் காட்டு எருமைகளை காணலாம். கொடிவேரி அணை கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள பெரியகொடிவேரி எனும் ஊரில் அமைந்துள்ளது. பவானி ஆறு மேல் உள்ள பவானிசாகர் அணை மற்றொரு முக்கிய அணை ஆகும். இது கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 35 கி.மீ. மற்றும் சத்தியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளதாகும்.

பாரியூர் அம்மன் கோவில்

இங்கு உள்ள பல முக்கிய கோவில்களில் சிறப்பானது, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் ஆகும். கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் சவண்டப்பூர் மற்றும் கூகலூர் வழியாக அந்தியூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. மேலும் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட அமரபணீஸ்வரர் திருக்கோயில் மற்றும் ஆதி நாராயண பெருமாள் திருக்கோயில் விசேஷம் வாய்ந்தவை. மேலும் இது பாரி வள்ளலால் போற்ற பெற்ற தலமாகும். அம்மன் தங்க தேரில் தினமும் உலா வந்து காட்சி அளிப்பார். இங்கு மார்கழி மாதத்தில் குண்டம் மற்றும் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். மூன்று வாரங்கள் நடைபெறும் இந்த திரு விழாவில் கலந்து கொள்ள லட்சக் கணக்கில் பக்தர்கள் குவிவது வழக்கம்.

பச்சைமலை மற்றும் பவளமலை

முருகப்பெருமான் கோவில்களான பச்சைமலை மற்றும் பவளமலை கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. மலை மீது ஏறிச் செல்வதற்கு படிக்கட்டுப் பாதை மற்றும் சாலை வசதிகளும் உண்டு. தைப்பூசத் திருவிழா மற்றும் பங்குனி உத்திரம் இங்கு நடைபெறும் பெரிய திருவிழாக்கள் ஆகும். பச்சைமலையில் தங்க தேர் மற்றும் பெரிய முருகர் சிலை ஆகியவை கவனத்தை ஈர்க்க கூடியவை.

பண்ணாரி

 
பண்ணாரியம்மன் கோவில்

ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது பண்ணாரியம்மன் கோவில். சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். கொத்த மங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும். பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் துண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. வனத்தின் மேற்கே சுமார் 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தின் அடியில் மாதேசுரசாமிக் கோவிலும், தீர்த்தக் கிணறும் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பெரிய திருவிழா நடைபெறுகிறது.

பவானி முக்கூடல்

காவிரியும், பவானியும் கலக்கும் இடத்திற்கு தட்சிண பிரயாகை (தென்னாட்டு பிரயாகை) என்று பெயர். வடநாட்டில், கங்கையும் யமுனையும் பிரயாகை என்ற இடத்தில் கூடும்போது சரஸ்வதி அடியில் வந்து கலப்பது போல, இங்கு அமுதநதி அடியில் வந்து கலப்பதாக ஐதீகம். இரண்டு நதிகளும் கூடும் இடத்தில் சங்கமேசுவரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் ஈரோட்டிலிருந்து 12 கி.மீ. துரத்தில் இருக்கிறது. தேவார காலத்தில் இவ்வூரை திருநணா என்றுஅழைக்கப்பட்டிருப்பதை சம்பந்தர் தேவாரத்தால் அறியலாம்.இக்கோவிலுக்கு இரண்டு வாயில்கள். வடக்கு நோக்கிய முக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால் சிறிய பிள்ளையார் கோயில் உள்ளது. கிழக்கு வாயிலுக்கு எதிரேதான் கொடிமரம், பலிபீடம்,விளக்கேற்றும் கற்துண் ஆகியவையெல்லாம் உள்ளன. கிழக்கு வாயில் வழியாக கூடுதுறைக்குச் செல்லலாம். நீராடுவதற்கு வசதியாக படித்துறைகள் அமைந்துள்ளன. கூடுதுறையிலே ஒரு தீர்த்தக் கட்டம் உள்ளது. இதனை 'காயத்திரிமடு' என்றும் கூறுகின்றனர். இதன் கரையில் காயத்திரி லிங்கம், அமுதலிங்கம் என்று இருக்கின்றன. திருக்கோவிலைச் சுற்றி அந்நாளில் கோட்டை இருந்திருக்கிறது.தற்போது இடிந்த சிதைந்த சில பகுதிகளைக் காணலாம். இக்கோவில் தற்போது புதிய திருப்பணியைக் கண்டுள்ளது. இங்கு மகாமண்டபம், இப்பகுதிகளை ஆண்ட இம்மடி கெட்டி முதலியார் என்பவர் காலத்தில் கட்டப்பட்டது. இங்குள்ள இரு பெண்களின் சிற்பம் பார்க்கத்தக்கது.இக்கோவிலுள்ளே பெருமாளுக்கும் ஒரு சந்நிதி உண்டு.

சென்னிமலைக் கோவில்

சென்னிமலைக்கு போவதற்கு ஈரோட்டிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. சென்னிமலையின் அடிவாரத்தில் ஊர் உள்ளது. ஊரின் பெயரும் சென்னிமலைதான். சென்னிமலை அடுக்கடுக்காக உயர்ந்து செல்கிறது. மலை மீது ஏறிச் செல்வதற்கு படிக்கட்டுப் பாதை உண்டு. அடிவாரத்தில் காவல் தெய்வமாக இடும்பன் காட்சி யளிக்கின்றார். இம்மலைத் தலத்தில் சில தீர்த்தங்கள் உள்ளன. மலையின் தென்மேற்குச் சரிவில் மாமங்க தீர்த்தம் உள்ளது. மற்றும் காணாச்சுனை என்னும் தீர்த்தமும், சுப்பிரமணிய தீர்த்தமும் உள்ளன. மலையின் வடபக்கத்தில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. சுப்பிரமணிய தீர்த்தத்திலிருந்து குழாய்கள் மூலம் மலையுச்சி வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மலை கடல் மட்டத்திலிருந்து 1279 அடி உயரத்தில் உள்ளது. எனவே களைப்பாறிச் செல்ல மண்டபங்கள் இருக்கின்றன. திருக்கோபுரவாயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பிரகாரத்தில் விசுவநாதர், விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன. முருகக் கடவுளின் பெயர்: சென்னிமலை நாதர்; மூலவருக்கருகிலேயே மார்க்கண்டேசுவரரும், இமயவல்லியும் உள்ளனர். அருகிலேயே வள்ளி, தெய்வானைக்குத் தனிக்கோவில் உள்ளது. இங்குள்ள சுயம்பு லிங்கத்தை 'அகத்தியர்' என்கின்றனர். இக்கோவிலின் மகாமண்டபத் தூண்களில் 7ஆம் நுற்றாண்டில் திருப்பணி செய்த முத்துவசவய்யன் மற்றும் மைசூர்மன்னர் தேவராச உடையார், மனைவி ஆகியோர் உருவச்சிலைகள் காணப்படுகின்றன. இங்கிருந்து செல்லும் ஒற்றையடிப் பாதையில் சென்றால் ஒரு குகை காணப்படுகிறது. அதன் அருகில் சமாதி ஒன்றும் காணப்படுகிறது. இக்குகையை 'சன்னியாசி குகை' என்று மக்கள் அழைக்கின்றனர்.

சிவன் மலைக் கோவில்

காங்கேயத்திலிருந்து திருப்பூர் செல்லும் பாதையில் 5 கி.மீ. தொலைவில் சிவன்மலை அமைந்துள்ளது. இம்மலையைப் பொதுமக்கள் வலம் வருவது உண்டு. பாதி வழியில் பரமேஸ்வரன் கோவிலும் உண்டு. இங்கு அனுமார் சந்நிதியும் உண்டு. மலையில் படிக்கட்டுகள் உண்டு. இளைப்பாறும் மண்டபமும் காணப்படுகிறது. மலைமீது குமரனுக்கும் தனிக் கோவில் காணப்படுகிறது. தொட்டில் மரம் அருகே நஞ்சுண்டேசுவரரும், பர்வதவர்த்தியும் காட்சி தருகின்றனர். திருச்சந்நிதியில் முருகப்பெருமான், வள்ளி நாச்சியாரோடு காணப்படுகிறார். நான்கு கரங்களுடன் 3 அடி உயரத்தில் அமைந்துள்ளார். தைப்பூசத் திருவிழா - இங்கு நடைபெறும் பெரிய திருவிழா ஆகும். இத்திருக்கோயிலின் கும்பாபிஷேகம் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 04-07-2014 அன்று நடைபெற்றது. இதற்கு ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவப்பட்டன.

தொண்டீசுவரக் கோவில்

ஈரோடு நகரத்திலே உள்ளது. மூலவர் திருநாமம் ஈரோடையப்பர். இறைவி: வாரணியம்மை. 12-ஆம் நுற்றாண்டில் கொங்குச் சோழன் கரிகாலன் காலத்தில் கட்டப்பட்டது. ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுரம். சுற்றுப் பிரகாரத்தில் அறுபத்து மூவர் நாயன் மார்களுக்கும் மண்டபம் அமைந்துள்ளது. 63க்கும் சிலைகள் இருக்கின்றன. ஒவ்வொருவருடைய குலம், நட்சத்திரம், காலம், ஊர், பெயர் விவரங்களில் தனித்தனியே எழுதப்பட்டுள்ளன. தட்சிணா மூர்த்தி சிலை காணத்தக்கது. பஞ்சபூத தலங்களின் சித்திரங்கள் அழகு மிளிர வரையப் பெற்றுள்ளன. இதில் தெய்வயானையுடன் முருகப் பெருமான் காட்சி தருகிறார். கருவறையிலுள்ள சிவலிங்கத்தை, கதிரவன் மாசி மாதத்தில் 25,26,27 நாட்களில் தன் ஒளிக்கரத்தால் திருமேனியைத் தொட்டுப் பார்க்கிறான். வன்னிமரத்தின் அடியில் வாரணியம்மையின் பழைய உரு காணப்படுகிறது. வைகாசி விசாகத்தில் இறைவனுக்கு பத்து நாட்கள் பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோவில் திருமுறை விழா, திருவாசக விழாவும் நடைபெறுகின்றன.

மகிமாலீசுவரர் கோவில்

பல்லவர் காலக் கோவில். மகிமாலீசுவரர் கோவில். இது நகரின் நடுவேயுள்ள பழைய மருத்துவமனையையொட்டி உள்ளது. ஆறடி விட்டமுள்ள ஆவுடையாரில் மூன்றடி உயரமுள்ள சிவலிங்கம் பெரிய அளவில் காட்சியளிக்கிறது. வாயிற்காப்போர் சிலையும், கோபுரமும் பல்லவர் காலத்தவையேயாகும். துண் ஒன்றில் சுந்தரர் தாடியுடன் பரவை, சங்கிலியாருடன் காட்சியளிக்கிறார். இவருக்குச் சேரமான் கவரி வீசுகிறார். அருகில் மெய்க்காவலர் வில்லேந்தி நிற்கிறான்.

கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோவில்

ஈரோட்டிலே கஸ்தூரி ரங்கப்பெருமாள் கோவில் உள்ளது. கோபுரம் இல்லை. திருமாலின் பள்ளி கொண்ட கோலத்தை சிற்ப உருவில் வடித்துள்ளனர். இங்கு திருவேங்கடமுடையான் திருச்சந்நிதி உள்ளது. இச்சந்நிதி நிலைப்படியில் தயாகு சாத்தன் சேவித்த நினைவு எனப் பொறிக்கப்பட்டுள்ளது. தாயாரின் திருநாமமே கமலவல்லி நாச்சியார். மூலவரும், உச்சவரும் அருகருகே உள்ளனர். இந்த திருக்கோலத்தில் நாற்கரங்களுடன் உள்ளது. பிரகாரத்தில் விஸ்வத்சேனர் திருப்பாதம் உள்ளது. ஆழ்வார்கள் மண்டபம் காணப்படுகிறது. அனுமார் சந்நிதி உள்ளது. 4 அடி குங்கிலியத்தால் அழகு செய்யப்பட்டுள்ளது. மூலவர் 14 அடி இருப்பார். பள்ளி கொண்ட நாதர்தான் கஸ்தூரி ரங்கப் பெருமாள். வைகாசி விசாகத்தையொட்டி பிரம்மோச்சவமும், தேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது. இக்கோவில் மண்டபங்களை 150 ஆண்டுக்கு முன்பு திருப்பணி செய்தோர்: கொண்டமல்லி சங்கய்யா நாயக்கர் மகன் சின்ன முராரி நாயக்கர், லக்காபுரம் முத்துக் குமரக் கவுண்டர். இக்கோவிலில் இன்னொரு சிறு திருப்பணியை செய்தவர்: பெரியார் ஈ.வே.ரா.வின் தாயார். வெளிப்பிரகாரத்தில் உள்ள குத்துக்கல் தெரிவிக்கும் செய்தி: "ஈ வேங்கடாசல நாயக்கர் மனைவியார் சின்னத்தாயம்மாள் தன் சிறுவாட்டுப் பணத்தால் கடப்பைக் கல் பாவிய" என்ற செய்தி வெட்டப்பட்டுள்ளது.

பெரும்பள்ளம்

பெரும்பள்ளம் அணை, தூக்கநாயக்கன்பாளையத்தில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கிடையே எழிலுடன் அமைந்துள்ளது.

புகழ் பெற்றவர்கள்

மேற்கோள்கள்

  1. ERODE DISTRICT - Revenue Administration
  2. Local Bodies Administration
  3. "ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". Archived from the original on 2015-07-08. பார்க்கப்பட்ட நாள் 2018-09-16.
  4. ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும் கிராம ஊராட்சிகளும்
  5. Decadal Variation In Population Since 1901
  6. "நெல் உற்பத்தியில் ஈரோடு மாவட்டம் முதலிடம்". வெப்துனியா. 21 நவம்பர் 2007. http://tamil.webdunia.com/newsworld/finance/agriculture/0711/21/1071121026_1.htm. பார்த்த நாள்: 2007-12-05. 
  7. http://www.tnenvis.nic.in/WriteReadData/UserFiles/file/11_ERODE_TEMPERATURE.pdf
  8. https://www.mapsofindia.com/maps/tamilnadu/rivers/erode.html
  9. https://erode.nic.in/mines/

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஈரோடு_மாவட்டம்&oldid=54192" இருந்து மீள்விக்கப்பட்டது