தி. க. சிவசங்கரன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
தி. க. சிவசங்கரன் |
---|---|
பிறப்புபெயர் | திருநெல்வேலி கணபதி சிவசங்கரன் |
பிறந்ததிகதி | 30 மார்ச்சு 1925 |
பிறந்தஇடம் | திருநெல்வேலி, தமிழ்நாடு |
இறப்பு | 25 மார்ச்சு 2014 | (அகவை 88)
பணி | இதழாசிரியர் |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
பிள்ளைகள் | வண்ணதாசன் |
தி. க. சிவசங்கரன் (Thi. Ka. Sivasankaran, 30 மார்ச் 1925 – 25 மார்ச் 2014),[1][2][3] மார்க்சிய திறனாய்வாளர். திருநெல்வேலி நகரில் பிறந்தவர். சிறு வயதிலேயே இவரது இளமைப் பருவ நண்பரான வல்லிக்கண்ணனுடன் இணைந்து முற்போக்கு இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். ப.ஜீவானந்தத்தால் இலக்கிய வழிகாட்டுதல் பெற்றார். இந்திய பொதுவுடமைக் கட்சி இலக்கிய இதழான தாமரையில் 1960 முதல் 1964 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். 1964ல் சோவியத்து கலாச்சார நிலையத்தில் செய்தித் துறையில் சென்னையில் பணியாற்றி 1990ல் ஓய்வுபெற்றார். தி.க.சிவசங்கரனின் மகன் வண்ணதாசன் என்ற கல்யாணசுந்தரம் எழுத்தாளரும், தமிழில் முக்கியமான சிறுகதையாசிரியரும் ஆவார்.
திறனாய்வாளர்
நா. வானமாமலை, தொ. மு. சி. ரகுநாதன் ஆகியோரிடம் தொடர்பு கொண்டிருந்த தி.க.சிவசங்கரன் உறுதியான கட்சிப் பிடிப்புக் கொண்டவர். கட்சி எடுக்கும் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை ஒட்டித் திறனாய்வுகள் செய்வார். கடுமையான விமரிசனங்களை முன்வைத்து விவாதிப்பவர். புதுமைப்பித்தனை ஒரு இலக்கிய முன்னுதாரணமாக க. நா. சுப்ரமண்யம் முன்வைத்தபோது புதுமைப்பித்தன் ஒரு பிற்போக்குத்தனமான கலாச்சார நசிவு சக்தி என்று அடையாளம் காட்டி "அதில் புதுமையும் உண்டு, பித்தமும் உண்டு" என்று அவர் எழுதிய சாடல் கட்டுரை பெரிய விவாதத்தை உருவாக்கியது. அதன் பிறகு அக்கருத்துக்களை மாற்றிக் கொண்டார்.
இதழாசிரியர் பணி
டிசம்பர் 14,1964இல் வங்கி வேலையை ராஜினாமா செய்து விட்டு, தோழர்.ஏ.எஸ்.மூர்த்தியின் பரிந்துரையின் பேரில், சோவியத் செய்திதுறை ஆசிரியர் குழுவில் இணைந்தார். இங்கு பணியாற்றிய காலத்திலேயே, 'தாமரை'யின் பொறுப்பாசிரியராக கடமையாற்றும் பேறையும் அவர் பெற்றார். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சோவியத் செய்தித்துறையிலும், மாலை வேளைகளில் ‘தாமரை’யின் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார்.
1965 முதல் 1972 வரை 'தாமரை'யின் நூறு இதழ்களுக்கு ஆசிரியராக திகழ்ந்து, நசிவு இலக்கியங்களுக்கு எதிரான இயக்கத்தை தோற்றுவித்தார். 'வியட்நாம் போராட்டச் சிறப்பிதழ், சிறுகதை சிறப்பிதழ், கரிசல் சிறப்பிதழ், மொழிபெயர்ப்பு சிறப்பிதழ்' என பல சிறப்பிதழ்களை கொண்டு வந்தார். அதே போல், சோவியத் செய்தித்துறையில் தொடர்ந்து 25 ஆண்டுகள் பணிபுரிந்து 1990இல் ஒய்வு பெற்றார்.
இளம் எழுத்தாளர் அறிமுகம்
தாமரை இதழில் பணியாற்றிய போது பல இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தார். இளம் எழுத்தாளர்களுக்கு கார்டுகளில் கடிதங்கள் எழுதுவது, இதழ்களில் வாசகர் கடிதங்கள் எழுதுவது அவரது முக்கியமான இலக்கியச் செயல்பாடுகளாக இருந்தன. இதனால் தமிழ்நாட்டில் பல புதிய எழுத்தாளர்கள் தோன்ற காரணமாக இருந்தார்.
சாகித்ய அகாதமி விருது
'விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்' நூலுக்காக 2000 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.
நூற்பட்டியல்
மொழிபெயர்ப்பு நூல்கள் :
காரல் மார்க்சின் இல்வாழ்க்கை - உண்மைப் பிரசுரம் , 1951
வசந்த காலத்திலே - (ரஷ்ய நாவல்) - தமிழ்ப் புத்தகாலயம் , 1951
எது நாகரீகம் ? கலாசாரத்தைப் பற்றி ( மாக்சிம் கார்க்கி கட்டுரைகள் ) - தமிழ்ப் புத்தகாலயம் , 1951
சீனத்துப் பாடகன் (சீன நாவல்) - தமிழ்ப் புத்தகாலயம் , 1951
போர்வீரன் காதல் (சீன நாவல்) - தமிழ்ப் புத்தகாலயம் , 1951
குடியரசுக் கோமான் (மாக்சிம் கார்க்கி கட்டுரை) - ரவி பிரசுரம், 1952
திறனாய்வு நூல்கள் :
தி.க.சி.யின் திறனாய்வுகள் - கிறிஸ்துவ இலக்கியச் சங்கம் , 1993
விமர்சனத் தமிழ் - அன்னம், சிவகங்கை , 1993
விமர்சனங்கள் , பேட்டிகள், மதிப்புரைகள் - விஜயா பதிப்பகம் , 1994
மனக்குகை ஓவியங்கள் - பூங்கொடி பதிப்பகம் . 1999
தமிழில் விமர்சனத்துறை -சில போக்குகள்' (டிசம்பர் 2001)
கடல் படு மணல் - நிவேதிதா புத்தகப் பூங்கா - 2010
காலத்தின் குரல் - ஆவாரம்பூ வெளியீடு , 2012
இதர நூல்கள் :
தி..க.சி என்னுமொரு திறனாய்வுத் தென்றல் - மு. பரமசிவம் - நர்மதா பதிப்பகம் - 1999
தி.க.சி என்றொரு மனிதன் - (தொ.ஆ)- அ .நா .பாலகிருஷ்ணன் - ஞானியாரடிகள் மன்றம் , 2004
தி.க.சி நேர்காணல்கள் - (தொ.ஆ ) - வே.முத்துக்குமார் , உயிர் எழுத்து , 2011
பிரிய சகோதர - (தொ .ஆ ) சுகதேவ் & சீனி குலசேகரன் - கலைஞன் பதிப்பகம் , 2012
தந்தமைத் தவழும் வளவு வீடு - தி. சுபாஷினி , மித்ராஸ், 2012
நிழல் விடுத்து நிஜத்திற்கு (கடிதத் தொகுப்பு) குள்ளக்காளிப்பாளையம் கே . பாலசுப்பிரமணியம் , ஆவாரம்பூ வெளியீடு, 2013
தி.க.சி நாட்குறிப்புகள் - (தொ.ஆ ) - வே.முத்துக்குமார், சந்தியா பதிப்பகம், 2014
தி.க.சி என்றொரு தோழமை - (தொ.ஆ ) - கழனியூரன், காவ்யா பதிப்பகம், 2014
தி.க.சி எனும் ஆளுமை - (தொ.ஆ ) - புதுகை.மு,.தருமராசன் / பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், 2014
தி.க.சி நாடகங்கள் - (தொ.ஆ ) - வே.முத்துக்குமார், ஆவாரம்பூ வெளியீடு, 2017
தி.க.சி திரைவிமர்சனங்கள் - (தொ.ஆ ) - வே.முத்துக்குமார், ஆவாரம்பூ வெளியீடு, 2017
தி.க.சி கவிதைகள் - (தொ.ஆ ) - வே.முத்துக்குமார், ஆவாரம்பூ வெளியீடு, 2017
நினைவோடைக் குறிப்புகள் - (தொ.ஆ ) - வே.முத்துக்குமார், சந்தியா பதிப்பகம், 2018
தி.க.சி மொழிபெயர்ப்புகள் - (தொ.ஆ ) - வே.முத்துக்குமார், சந்தியா பதிப்பகம், 2019
ஆவணப்படம்
தி.க.சி.யின் வாழ்க்கை குறித்தும்-எழுத்துலகம் குறித்தும் 2007-ஆம் ஆண்டு சென்னையில் இயங்கி வரும் தமிழ்க்கூடம் என்ற கலை-இலக்கிய அமைப்பு ஒரு ஆவணப் படத்தை உருவாக்கியது. ”21-இ,சுடலை மாடன் தெரு,திருநெல்வேலி டவுன்” என்று பெயர் சூட்டப்பட்ட இப்படத்தை எழுத்தாளரும் இயக்குநருமான எஸ். ராஜகுமாரன் எழுதி-இயக்கியுள்ளார். திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் 2008-க்கான சிறந்த ஆவணப்பட விருது மற்றும் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கத்தின் சிறந்த ஆவணப்பட விருது-2008 ஆகிய விருதுகள் இந்த ஆவணப்படத்திற்கு கிடைத்தன.
மறைவு
சிவசங்கரன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், 2014 மார்ச் 25 இரவு 11.30 மணியளவில் காலமானார்.[4] மறைந்த தி.க.சிவசங்கரனுக்கு 3 மகள்கள் மற்றும் எழுத்தாளர் வண்ணதாசன் உள்பட 3 மகன்கள் உள்ளனர்.[5]
மேற்கோள்கள்
- ↑ "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தமிழை வாழவைக்கவா? தற்பெருமையைப் பறைசாற்றவா?". கீற்று. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5869:2010-04-16-04-59-45&catid=1020:10&Itemid=287. பார்த்த நாள்: 30 சூலை 2010.
- ↑ "நெல்லையில் மார்ச் 21-ல் தி.க.சி. பிறந்த நாள் விழா". தினமணி. 18 மார்ச் 2010 இம் மூலத்தில் இருந்து 14 ஆகஸ்ட் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110814162529/http://dinamani.co.in/edition/print.aspx?artid=213082. பார்த்த நாள்: 30 July 2010.
- ↑ "Literary Critic Ti. Ka. Si passes away". தி இந்து. http://www.thehindu.com/news/national/tamil-nadu/literary-critic-ti-ka-si-passes-away/article5832016. பார்த்த நாள்: 26 மார்ச் 2014.
- ↑ "சாகித்ய அகாடமி விருது பெற்ற தி க சிவசங்கரன் மரணம்". ஓன் இந்தியா. 26 மார்ச் 2014. http://tamil.oneindia.in/news/tamilnadu/writer-t-k-sivasankaran-dies-196481.html. பார்த்த நாள்: 26 மார்ச் 2014.
- ↑ "இலக்கிய திறனாய்வாளர் தி.க.சிவசங்கரன் காலமானார்". தி இந்து. 26 மார்ச் 2014. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article5833905.ece. பார்த்த நாள்: 26 மார்ச் 2014.
வெளி இணைப்புகள்
- விமர்சனமும் கரிசனமும்
- தினமணி நாளிதழ் செய்தி பரணிடப்பட்டது 2011-10-02 at the வந்தவழி இயந்திரம்