நா. வானமாமலை
நா. வானமாமலை | |
---|---|
பாளையங்கோட்டை நகராட்சி உறுப்பினர் | |
பதவியில் 1959–1965 | |
தொகுதி | கோட்டம் 1 |
மாநிலத் தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் | |
இந்திய பொதுவுடமைக் கட்சியின் மாநிலக் கல்விப் பிரிவு பொறுப்பாளர் | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 7 திசம்பர் 1917 நாங்குநேரி, திருநெல்வேலி மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | பெப்ரவரி 2, 1980 கோர்பா, பிலாஸ்பூர் மாவட்டம், மத்தியப் பிரதேசம் (தற்போது கோர்பா மாவட்டம், சத்தீஸ்கர்-இல்), இந்தியா | (அகவை 62)
குடியுரிமை | இந்தியர் |
தேசியம் | தமிழர் |
வாழ்க்கை துணைவர்(கள்) | சீதையம்மாள் (இறப்பு: >1948) பத்மாவதி (1948-இறப்பு வரை) |
பிள்ளைகள் | கிருஷ்ணமூர்த்தி நாராயணமூர்த்தி ராமமூர்த்தி கலாவதி அருணா அம்மணி |
பெற்றோர் | திருவேங்கடத்தம்மாள் (தாய்) நாராயணன் தாதர் (தந்தை) |
படித்த கல்வி நிறுவனங்கள் | மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி அமெரிக்கன் கல்லூரி, மதுரை |
பணி | எழுத்தாளர் |
பட்டப்பெயர்(கள்) | நா.வா. |
நா. வானமாமலை (Na.Vanamamalai, 7 டிசம்பர் 1917 - 2 பெப்ரவரி 1980) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞர், மானிடவியல் ஆய்வாளர், சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் அரசியலர் ஆவார். தமிழர் நாட்டார் வழக்காற்றியலின் முதன்மை ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான இவர், நாட்டார் பாடல்கள், கதைகள், பழமொழிகள், வழக்கங்கள் ஆகியவற்றைச் சேகரித்துப் பதிப்பித்தார். நாட்டார் வழக்காற்றியலுக்குத் தமிழ்க் கல்விப்புலத்தில் உரிய அறிந்தேற்பைப் பெற்றுத்தந்தவர்.[1]
தமிழில் ஆய்வுக் களத்தை விரிவாக்குவதற்காக ஆராய்ச்சி என்னும் ஆய்விதழைத் தொடங்கினார்.[1] தமிழ்மொழி, இலக்கிய ஆய்வுகளை வரலாறு, தொல்லியல், மானிடவியல், சமூகவியல், பண்பாட்டியல் போன்ற பிற துறைகளுடன் இணைந்த பல்துறை கூட்டாய்வுகளாக - தமிழியலாக வளர்த்தெடுத்ததில் பெரும் பங்காற்றினார். வரலாறு, பண்பாடு, தத்துவம், இலக்கிய ஆராய்ச்சி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவர், மார்க்சியம் கல்விப்புலத்தில் ஒருமுறையியலாகவும், அணுகுமுறையாகவும் இன்று நிலைபெற்றிருப்பதற்கு வித்திட்டவர்.[1]
பிறப்பு
தற்போதைய திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் திருவேங்கடத்தம்மாள்-நாராயணன் தாதர் இணையருக்கு மகனாக 7 திசம்பர் 1917 அன்று மூத்த மகனாகப் பிறந்தார் வானமாமலை. இவருக்கு வேங்கடம் என்ற சகோதரியும், ஆழ்வான் என்ற சகோதரனும் உண்டு. இவரது முன்னோர்கள் நாங்குநேரியில் கிராம நீதிபதியாக (முன்சீப்) வேலை பார்த்தனர். அதனால் வசதியான வாழ்க்கை அவருடைய இளமைக் காலத்தில் வாய்த்திருந்தது.[2]
கல்வி
நா.வானமாமலை ஆரம்பக் கல்வியை ஏர்வாடியிலும் நாங்குனேரியில் உள்ள மாவட்ட உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.[2] திருநெல்வேலியிலுள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரியில் புகுமுகப் படிப்பை முடித்தார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்றார். சென்னை சைதாப்பேட்டையிலுள்ள ஆசிரியர் கல்லூரியில் இளங்கலை கல்வியியல் பட்டமும் பெற்றார். பின் மீண்டும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை தமிழ் பயில வேண்டிச் சேர்ந்த அவர், அங்கு ஆசிரியராகப் பணியாற்றிய ஆ. கார்மேகக் கோனார் அளித்த ஊக்கத்தால் சங்க இலக்கியங்களையும் காப்பியங்களையும் கற்றுத் தேர்ந்தார். மேலும் வில்லியம் ஷேக்ஸ்பியர், ஜார்ஜ் கோர்டன் பைரன், பெர்சி ஷெல்லி, விக்டர் ஹியூகோ, சார்லஸ் டிக்கின்ஸ், வால்ட் விட்மன், மாக்சிம் கார்க்கி போன்ற அயல்நாட்டு எழுத்தாளர்களையும் கற்றார்.[3]
ஆசிரியப்பணி
1942 தொடங்கி மதுராந்தகத்திலும் அதன்பின் மாவட்ட உயர்நிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் காணப்பட்ட மிதமிஞ்சிய ஆங்கில நாட்டத்தை விரும்பாமலும் இயக்க அரசியலில் ஈடுபட விரும்பியும் அப்பணியிலிருந்து விலகினார்.[3] இடைநிலை வகுப்புகளில் தோல்வியுற்ற முதல் தலைமுறை மாணவர்களுக்குத் தனிப்பயிற்சி நிலையங்களே துணைநிற்பதை அறிந்து பாளையங்கோட்டையில் அவர் தங்கியிருந்த வீட்டிலேயே ‘ஸ்டூடன்ஸ் டுடோரியல் இன்ஸ்டிடியூட்’ என்ற பெயரில் தனிப் பயிற்சி வகுப்புகளை 1948-இல் நடத்தினார்.[1] பின்பு இந்நிறுவனம் வானமாமலை டுடோரியல் கல்லூரி என்று தனிப் பயிற்சிக் கல்லூரியாக வளர்ச்சியடைந்தது. திருச்சிராப்பள்ளி, நாகர்கோவில், தூத்துக்குடி, தக்கலை ஆகிய இடங்களில் இதன் கிளைகள் செயல்பட்டன. மகளிருக்கும் தனியாகக் கிளைகள் தொடங்கி நடத்தினார்.[2]
இயக்க/அரசியல் செயல்பாடுகள்
1935 வாக்கில் ப. ஜீவானந்தம், ப. ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ் போன்றோரின் உரைகளால் கவரப்பட்ட வானமாமலை, மார்க்சியத்திலும் லெனினியத்திலும் பெரும் ஈடுபாடு கொண்டார். தன் சொந்த ஊரான நாங்குநேரி வட்டாரத்தின் விவசாயிகள் இயக்கத்திலும், நெல்லை மாவட்டத் தொழிலாளர் இயக்கத்திலும் நேரடியாகச் செயலாற்றி வந்தார். கோயில் நுழைவு, சாதிக் கொடுமைகள் எதிர்ப்பு, நில மீட்புப் போராட்டங்கள் ஆகியவற்றில் முன்னின்று போராடினார். தன் இயக்கச் செயல்பாடுகளுக்காக 1948-இல் சிறைசென்றார்.
1950-ம் ஆண்டு பொதுவுடமைக் கட்சியினர் மீது தொடுக்கப்பட்ட அடக்குமுறைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் ஒரு சரக்குத் தொடரி கவிழ்க்கப்பட்டது. இந்நிகழ்வு, ‘நெல்லை சதி வழக்கு’ என அழைக்கப்படுகிறது. பொதுவுடமைக் கட்சியின் மூத்த தலைவர் கா. பாலதண்டாயுதம் போன்றவர்கள் இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டனர். இந்தச் சதி வழக்கில் வானமாமலை, விசாரணைக்காகக் கைதுசெய்யப்பட்டார்.
நில மீட்சிப் போராட்டத்தில் (1970) கலந்துகொண்டு ஒரு மாதத்துக்கு மேல் சிறையில் இருந்தார்.[4] அக் காலத்தில் எஸ். ஏ. டாங்கே எழுதிய காந்தியும் லெனினும் நூலைப் படித்து உந்துதல் பெற்றார். மேலும் இந்திய மன்னராட்சி அரசர்களைப் பற்றி திவான் ஜர்மனி தாஸ் என்பவர் எழுதிய Maharaja என்ற நூலை மொழிபெயர்த்தார்.[4]
பாளையங்கோட்டை நகராட்சி உறுப்பினராகவும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலத் தலைவராகவும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலக் கல்விப் பிரிவுப் பொறுப்பாளராகவும் செயல்பட்டார்.
இலக்கியப்பணி
1947-இல் தொ. மு. சி. ரகுநாதன், தி. க. சிவசங்கரன், சிந்துபூந்துறை சண்முகம் ஆகியோரை இணைத்து நெல்லை இலக்கியச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார் வானமாமலை.[3]
அடிப்படையான அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார் வானமாமலை. பல எளிமையான அறிவியல் கட்டுரைகளை இயற்றினார். சிறுவர்களுக்கென 'காகிதத்தின் கதை', 'இரும்பின் கதை', 'ரப்பரின் கதை', 'பெட்ரோலின் கதை' முதலிய நூல்களை எழுதினார். 'விண்வெளி ரசாயனம்', 'விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சியும் அதன் விளைவுகளும்' போன்ற இவரின் அறிவியல் நூல்கள் முதன்மையானவை.[1] அறிவியல் உண்மைகளைத் தமிழில் எழுத வேண்டுமென்ற எண்ணம் எளிய முறையில் ஜே. பி. எஸ். ஹால்டேன் எழுதி வந்த கட்டுரைகளைப் படித்த பொழுது அவருக்குத் தோன்றியது. ஹால்டேனின் கட்டுரைகள் சிலவற்றை மொழிபெயர்த்து சக்தி இதழில் வெளியிட்டார்.[5]
தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக 'அனைத்தும் ஆங்கிலம்' என மாறிய சூழலில் சி. சுப்பிரமணியம், மோகன் குமாரமங்கலம் போன்றோர் தமிழில் அறிவியல் பாடநூல்களை வெளியிடுவது குறித்து அக்கறை கொண்டனர். அச்சமயத்தில் கல்லூரியில் தமிழைப் பயிற்று மொழியாக்குவது இயலக்கூடியதுதான் என்பதை உணர்த்தும் வகையில் 'தமிழில் முடியும்' (1965) என்னும் தொகுப்பு நூல் ஒன்றை வானமாமலை வெளிக்கொணர்ந்தார்.[1][2]
தற்காலத்தில் முதன்மையான தமிழ் ஆய்வாளர்களான ஆ. சிவசுப்பிரமணியன், அ. கா. பெருமாள் போன்ற பலருக்கும் வானமாமலை வழிகாட்டியாக விளங்கி ஊக்கமளித்துவந்தார்.[4]
நாட்டார் வழக்காற்றியல்
சிப்பாய் எழுச்சியின் நூற்றாண்டு விழா 1957-இல் கொண்டாடப்பட்டபோது பொதுவுடமைத் தலைவர் பி.சி.ஜோஷி நாட்டுப்புற இலக்கியங்களைச் சேகரிக்கும் பணியை ஒழுங்கமைத்தார். அவரின் ஊக்கத்தால் வானமாமலை நாட்டுப்புறப் பாடல்கள் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டார். அவர் தலைமையில் தமிழ்நாட்டில் பரவலாக நாட்டுப்புறப் பாடல்கள் சேகரிக்கப்பட்டன. அதற்கு முன்னர் தி.நா.சுப்பிரமணியன், கி. வா. ஜகந்நாதன், செ.அன்னகாமு, பெ. தூரன் போன்றோர் இத்துறையில் ஈடுபட்டிருந்தனர். முதல் முறையாக வானமாமலை, நாட்டுப்புறப் பாடல்களைப் பொருண்மை, நிலவியல், மற்றும் சூழல் அடிப்படையில் வகை தொகைப்படுத்தினார். மேலும் பாடியோர், வழங்கும் இடம், சேகரித்தோர் பெயர் விவரங்களையும் குறிப்பிட்டார். இந்தப் புதிய முறையோடு 'தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்'(1960), 'தமிழர் நாட்டுப் பாடல்கள்'(1964) ஆகிய தொகுப்புகள் வெளிவந்தன.[1] பட்டவராயன், சின்னத்தம்பி ஆகிய கதைப்படல்களையும் பதிப்பித்தார்.[6]
'Folklore' என்பது குறித்து தமிழ்ச் சூழலில் பெரும் விவாதம் நடைபெற்றது. 'நாட்டுப்புறவியல்' என்ற கலைச் சொல் உருவானது. வானமாமலை, 'நாட்டார் வழக்காற்றியல்' என்றார். இந்த இரு சொற்களும் இன்றும் தொடர்கின்றன. நாட்டார் வழக்காற்றியல், மானிடவியல், அடித்தள மக்கள் ஆய்வு போன்ற எதுவுமே முறையாக அறிமுகமாகாத தமிழ்ச்சூழலில் வானமாமலை இப்புலத்தில் செயல்பட்டார். நாட்டார் கதைகள், பாடல்களைத் தொகுத்து வெளியிடுவதோடு பலர் நிற்க, இவர் அவற்றின் சமூகப் பெறுமானங்களையும் கவனித்தார். வரலாறு, சமூகவியல், மானிடவியல் ஆகியவற்றின் துணைகொண்டு, ஆய்வுகளை நடத்தினார்.[1]
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்த தெ. பொ. மீனாட்சிசுந்தரம், வானமாமலையின் கட்டபொம்மன் கதைப்பாடல், கட்டபொம்மன் கூத்து, கான்சாகிபு சண்டை, முத்துப்பட்டன் கதை, ஐவர் ராசாக்கள் கதை, காத்தவராயன் கதைப்பாடல் ஆகிய ஆறு கதைப்பாடல் தொகுப்புகளை, நூலாக வெளியிட ஆவன செய்தார்.இவற்றுக்கு நா.வா. எழுதிய ஆய்வு முன்னுரைகள் நாட்டாரியல் ஆய்வுகளுக்கு வழிகாட்டுவனவாகத் திகழ்கின்றன.[3]
நெல்லை ஆய்வுக் குழு
1967-ல் 'நெல்லை ஆய்வுக் குழு' என்னும் அமைப்பை உருவாக்கிய வானமாமலை, அதன் ஆய்வுக் குழுக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். பத்து பேரைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, நாளடைவில் பாளையங்கோட்டை மட்டுமின்றி, தென்மாவட்டங்களிலும் பரவலாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தியது. பல துறைகள் சார்ந்து கட்டுரைகள் எழுதப்படுவதும், புதிய அறிவுத் துறை வரவுகள் குறித்த அறிமுகமும் இக்கூட்டங்களில் நடந்தேறின.[1]
'ஆராய்ச்சி' இதழ்
ஆய்வுக் குழுவில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை வெளியிடவும், தமிழில் ஆய்வுக் களத்தை விரிவாக்கவும் 1969-ல் 'ஆராய்ச்சி' என்னும் ஆய்விதழைத் தொடங்கினார். பண்பாடு, தத்துவம், மானுடவியல், நாட்டார் வழக்காறுகள், மொழிபெயர்ப்பு போன்ற பல்துறைக் கட்டுரைகளுடன் ஆராய்ச்சிக் குழுவினரின் கட்டுரைகளும் இந்த இதழில் வெளிவந்தன. க. கைலாசபதி, கார்த்திகேசு சிவத்தம்பி போன்ற மார்க்சிய அறிஞர்கள் இவ்விதழைப் பாராட்டினர்.[3] பொருள் நெருக்கடியிலும் இறக்கும் வரை அதனை நடத்தினார். இதன் பின்னரே 1980களில் சமூக, அரசியல், பொருளாதார, ஆய்விதழ்கள் பல வெளிவரத் தொடங்கின. தற்போதும் வானமாமலையின் 'புதிய ஆராய்ச்சி'யாக அது வெளிவருகிறது.[1]
பேராய்வாளர்
வானமாமலையின் தமிழ்ப்பணியைப் பாராட்டிய வ. அய். சுப்பிரமணியம், அவரை கர்நாடகா பல்கலைக்கழகத்திலுள்ள திராவிட மொழியியல் கழகத்தின் சார்பில் ஓராண்டுக்கு (1975-76) பேராய்வாளர் பணியில் அமர்த்தினார்.[3]
பிற்காலம்
இவர் இயற்றிய Interpretation of Tamil Folk Creations ("தமிழ் நாட்டுப்புறப் படைப்புகளின் விளக்கம்") எனும் ஆய்வு நூல் இவர் மறைவுக்குப்பின் 1981-இல் வெளியானது. இந்நூலும் இன்னும் பல கட்டுரைகளும் இன்னமும் தமிழில் வரவில்லை.[1]
தனி வாழ்க்கை
நா.வானமாமலை தமது சொந்த அத்தை மகளான சீதையம்மாள் என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டார். அவர் மறைவுக்குப்பின் சென்னையைச் சேர்ந்த பத்மாவதி என்பவரை 1948 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவ்விணையருக்கு கிருஷ்ணமூர்த்தி, நாராயணமூர்த்தி, ராமமூர்த்தி என்ற மூன்று மகன்களும் கலாவதி, அருணா அம்மணி என்ற மகள்களும் பிறந்தனர்.[2]
மறைவு
அன்றைய பிரிக்கப்படாத மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்த (தற்போது சத்தீஸ்கர் மாநிலம்) கோர்பா எனும் ஊரில், தன் மூத்த மகள் கலாவதி வீட்டில் தங்கியிருந்த வானமாமலை, 2 பிப்ரவரி 1980 அன்று தன் 62-ஆம் அகவையில் மறைந்தார்.
புகழ்
வானமாமலை ஒரு தொழில்முறைப் பேராசிரியராக இல்லாதபோதிலும், கல்விப்புலத்துக்கு வெளியே ஒரு சிந்தனைப் பள்ளியை அவரால் உருவாக்க முடிந்தமையால், 'பேராசிரியர்' என்றே கொண்டாடப்பட்டார்.[1]
"நா.வானமாமலையின் தமிழ்ப்பணி, அநேக ஏட்டுப்பிரதிகளை அச்சேற்றி , அவற்றிற்குச் சாகாவரம் அளித்த டாக்டர் உ.வே. சாமிநாதய்யரின் தமிழ்ப்பணிக்கு அடுத்தபடியாகச் சொல்லத்தக்கது" எனப் பாராட்டினார் கு. அழகிரிசாமி.
வானமாமலை மறைந்து ஏழு மாதங்களுக்குப் பின் 13 செப்டம்பர் 1980 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், அவருக்கு '‘இலக்கிய கலாநிதி' (முனைவர்) பட்டம் வழங்கியது.[3][4]
"'வானமாமலையின் மீது சாகித்திய அகாடமியின் பார்வை படாதது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. அதற்கவர் இடதுசாரி சிந்தனைகள் காரணமாக இருக்கலாம் என்றால், அந்த ஆச்சர்யம் வெறுப்பாக மாறுகிறது" என எழுதினார் சுஜாதா.[3]
வானமாமலையின் 22 நூல்கள் 2008-09 காலகட்டத்தில் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரது மரபுரிமையாளர்களுக்குப் பரிசுத்தொகையாக 5 இலட்சம் ரூபாய் தமிழ்நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டது.[7]
நூல் பட்டியல்
(நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புகள் தடித்த எழுத்துகளில்)[8]
ஆண்டு | தலைப்பு | வகை | பதிப்பகம் |
---|---|---|---|
1942 | இருளின் வலிமை | மொழிபெயர்ப்பு
(முதல்நூற்கள்: ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் இயற்றிய
|
சக்தி காரியாலயம் |
? | குரூயிட்ஸர் சொனோடா | ||
? | குடும்ப இன்பம் | ||
? | உயிருள்ள பிணம் | ||
? | முதலும் முடிவும்[5] | மொழிபெயர்ப்பு
(முதல்நூல்: பிரித்தானிய எழுத்தாளர் ஜான் கால்ஸ்வர்தி இயற்றிய The First and the Last) |
? |
1946 (?) | ஒப்பில்லாத சமுதாயம் | மொழிபெயர்ப்பு
(முதல்நூல்: பிரித்தானிய சமய வல்லுநர் ஹியூலட் ஜான்சன் இயற்றிய |
|
1951 | நிலா இல்லாத இரவு | கார்த்திகேயினி பிரசுரம் | |
1957 | உயிரின் தோற்றம் | மொழிபெயர்ப்பு
(முதல்நூல்: சோவியத் எழுத்தாளர் ஏ.ஐ. ஓபாரின் இயற்றிய (Proiskhozhdenie zhizni) |
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் |
1960 | தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் | கதைப் பாடல்கள் | |
விண்யுகம் | மொழிபெயர்ப்பு
(முதல்நூல்: ஜெர்மானிய எழுத்தாளர் ஸ்டீபன் ஹெய்ம் இயற்றிய The Cosmic Age)[11] |
நெல்லை பப்ளிஷிங் ஹவுஸ் | |
1964 | தமிழர் நாட்டுப் பாடல்கள் | கதைப் பாடல் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் |
1965 | தமிழில் முடியும் | தொகுப்பு நூல் | |
1966 | தமிழர் வரலாறும் பண்பாடும் : ஆராய்ச்சிக் கட்டுரைகள் | கட்டுரைத் தொகுப்பு | |
1967 | வீணாதிவீணன் கதை:
மறந்துபோன கிராமிய கதைப் பாடல் |
கதைப் பாடல் | |
இலக்கிய உலகம் எதிர்பார்ப்பது என்ன? | ஆய்வு நூல் | தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் | |
1969 | Studies in Tamil Folk Literature | கட்டுரைத் தொகுப்பு | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் |
1970 | கான்சாகிபு சண்டை | கதைப்பாடல் | மதுரைப் பல்கலைக்கழகம் |
1971 | காத்தவராயன் கதைப்பாடல் | ||
முத்துப்பட்டன் கதை | |||
வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் | |||
1972 | கட்டபொம்மு கூத்து | ||
1974 | ஐவர் ராசாக்கள் கதை | கதைத் தொகுப்பு | |
1975 | புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும் | ஆய்வு நூல் | மக்கள் வெளியீடு |
மக்களும் மரபுகளும் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் | ||
1976 | மார்க்ஸீய சமூக இயல் கொள்கை | ||
1977 | தமிழ் நாவல்கள்: ஒரு மதிப்பீடு | ||
1978 | இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் | ||
தமிழர் பண்பாடும் தத்துவமும் (1973?) | |||
மார்க்சீயத் தத்துவம் - மார்க்சீய அறிவுத் தோற்றவியல் | |||
உரைநடை வளர்ச்சி | மக்கள் வெளியீடு | ||
மார்க்சீய அழகியல் | |||
1980 | வ.உ.சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி | ||
பழங்கதைகளும் பழமொழிகளும் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் | ||
தமிழ் நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள் | மக்கள் வெளியீடு | ||
1981 | Interpretation of Tamil Folk Creations
("தமிழ் நாட்டுப்புறப் படைப்புகளின் விளக்கம்") |
Dravidian Linguistics Association (Trivandrum) | |
1983 | விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சி | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் | |
1995 | பண்டைய வேத தத்துவங்களும் வேத மறுப்பும் | மக்கள் வெளியீடு | |
1999 | இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் |
மேற்கோள்கள்
- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 "மக்களின் பேராசிரியர் நா.வானமாமலை". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-06-14.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Duriarasanblogpsot.com (செவ்வாய், 8 ஏப்ரல், 2008). "முனைவர் க.துரையரசன்: நா.வானமாமலையின் வாழ்வும் பணியும்". முனைவர் க.துரையரசன். பார்க்கப்பட்ட நாள் 2022-10-05.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 "மறைந்தும் மறையாத மலை - வானமாமலை". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-10-01.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "About". பேராசிரியர் நா. வானமாமலை நாட்டார் வழக்காற்றியலின் தந்தை (in English). 2016-09-29. பார்க்கப்பட்ட நாள் 2022-10-01.
- ↑ 5.0 5.1 நா.வானமாமலை. "லாபக் கணக்குப் பார்க்காமல் தமிழ்த் தொண்டை முதன்மையாகக் கருதி நூல் வெளியிட்டவர்கள் நியூ செஞ்சுரி பதிப்பகத்தார்". keetru.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-06.
- ↑ "நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-10-05.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-09. பார்க்கப்பட்ட நாள் 2013-11-28.
- ↑ www.tamilvu.org https://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-84.htm. பார்க்கப்பட்ட நாள் 2022-10-05.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ ப.மாணிக்கம். "நா.வா. பணியும் பண்பும்". www.keetru.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-06.
- ↑ ஆர்.நல்லகண்ணு. "காம்ரேட் என்.வி". www.keetru.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-06.
- ↑ "Welcome To TamilAuthors.com". www.tamilauthors.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-05.
வெளி இணைப்பு
- விக்கிமூலத்தில் நா. வானமாமலை புத்தகங்கள்
- இலக்கிய கலாநிதி நா.வானமாமலை - முனைவர் இரா.காமராசு
- தமிழகம்.வலை தளத்தில், நா. வானமாமலை எழுதிய நூல்கள் பரணிடப்பட்டது 2012-06-30 at the வந்தவழி இயந்திரம்