செகுட்டையனார் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

செகுட்டையனார் கோயில் (ஆங்கிலம்:Seguttaiyanar Temple, Sevittaiyanar Temple; 'செவிட்டையனார் கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது) சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மு. சூரக்குடி கோவில்பட்டியில் அமைந்துள்ள பழமையான ஐயனார் கோவிலாகும். இந்த கோயிலானது ஏறக்குறைய 1 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுற்றிலும் செடி, கொடிகளால் மூடப்பட்ட இயற்கையான சூழ்நிலையில் செகுட்டையனார் வீற்றிருக்கிறார். [1][2]

செகுட்டையனார் கோயில் முகப்பு வாயில்

[3]

மரபு வரலாறு

முன்பொரு காலத்தில் இக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த காடாக இருந்தன. காட்டில் நிறைய மான், முயல், கீரிப்பிள்ளைகள் இருந்ததால் அவ்வப்போது வேட்டை நடைபெற்றது அப்படி ஒருநாள் வேட்டை நடந்தபோது, மானை நோக்கி வேல்கம்பு எறியப்பட்டது. வேல்கம்பானது குறி தவறி அருகில் இருந்த புதரில் சிக்கிகொண்டது. வேல்கம்பை எடுப்பதற்காக சிலர் புதரின் அருகில் சென்று பார்த்தனர். அப்போது, வேல்கம்பு ஒரு வள்ளிக்கிழங்கில் குத்தி நிலை கொண்டிருந்தது. வேல் கம்பை எடுத்தபோது, வள்ளிக்கிழங்கில் இருந்து இரத்தம் பீறிட்டு வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், வள்ளிக்கிழங்கை மேலும் தோண்டியபோது உள்ளே ஐயனார் சிலை இருந்தது. வேல்கம்பு தாக்கியதால் ஐயனாரின் காது பாதிக்கப்பட்டு, ஐயனார் செவிடானதாக மரபுவழிக் கதை உண்டு.

ஐயனார் கோயில் சுற்றுப்புறத்தில் வைக்கப்பட்டிருக்கும் நேர்த்திக்கடன் குதிரைகள்

காது வளர்க்கும் ஊர் மக்கள்

செகுட்டு ஐயனார் கோயில் அமைந்திருக்கும் மு. சூரக்குடி கோவில்பட்டியில், ஏறத்தாழ 400 முத்தரையர் குடும்பங்களை சேர்ந்த 3000 பேர் வசிக்கின்றனர். ஐயனார் செவிடான மரபு வழிக் கதையை நிரூபிக்கும் வகையில் இவ்வூரில் ஒரு வினோதமான பழக்கம் பல வருடங்களாகத் தொடர்கிறது. ஐயனார் செவிடானதால் தாங்கள் தெய்வ குற்றம் செய்ததாக உணர்ந்த மக்கள், "உன் காதை ஊனமாக்கிய நாங்களும் எங்கள் சந்ததியினரும் காதை ஊனமாக்கி கொள்கிறோம்" என வேண்டியுள்ளனர். அதன்படி, அன்றிலிருந்து இன்று வரை இவ்வூர் மக்கள் காது வளர்ப்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர். குழந்தை பிறந்த 3 மாதங்களில் காதில் கத்தியால் துளையிட்டு வளையத்தை மாட்டி தொங்க விடுவர். வளையத்தின் எடை தாங்காமல் காது சில நாட்களில் கீழ் நோக்கி இழுபடத் தொடங்கும். இவ்வாறு மக்கள் தங்களது காதை வளர்த்துக் கொள்கின்றனர். இதில் ஆண், பெண் என வேறுபாடு இல்லை. திருமண வயதில் உள்ள சில பெண்கள் வளர்ந்த தங்கள் காதை வெட்டி, மீண்டும் ஒட்ட வைத்துக் கொள்வதும் நடந்துள்ளது. நாகரீகம் கருதியும், திருமணம் தடைபடுவதைக் கருத்தில் கொண்டும் தற்போது பெண்களுக்கு மட்டும் காது வளர்ப்பதில் விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னர், காது வளர்க்க மறுத்த சிலருக்கு காது செவிடாதல், உடல் ஊனமாதல் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டதாகவும் இவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீ செகுட்டையனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா

ஸ்ரீ செகுட்டையனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவில் அரண்மனைப் புரவி

செகுட்டையனார் கோயில் புரவியெடுப்பு திருவிழா சிவகங்கை மாவட்டத்தின் குறிப்பிடத்தகுந்த விழாக்களில் ஒன்றாகும். ஐயனார் சுவாமியின் வாகனம் வெள்ளைக் குதிரை என புராணங்கள் கூறுகின்றன. அதன்படி, மண்ணால் ஆன புரவிகள் (குதிரைகள்) செய்து ஐயனார் கோவிலில் வைத்து வழிபடுவதை இவ்வூர் மக்கள் வருடந்தோறும் திருவிழாவாக கொண்டாடுகின்றனர். மு. சூரக்குடி கிராமத்தில் குதிரைகள் செய்து அவற்றை ஊர்வலமாக கொண்டு சென்று கோவில்பட்டி கிராமத்தில் உள்ள கோயிலில் வைப்பர். திருவிழாவிற்கான ஏற்பாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக மு. சூரக்குடி கிராம ஊர்ப் பெரியவர்களால் செய்யப்படுகிறது. மண் குதிரைகள் செய்யும் பணிகள் திருவிழாவிற்கு சில நாட்களுக்கு முன்னர் துவங்கி வைக்கப்படுகிறது. இந்நிகழ்வு ‘பிடிமண் கொடுத்தல்' என அழைக்கப்படுகிறது. புரவிகள் செய்யும் பொறுப்பு வேளாளர் சமுதாயத்தினைச் சேர்ந்தவருக்கு வழங்கப்படும். புரவிகள் செய்யத் தேவையான களிமண் தஞ்சாவூர் பகுதியில் இருந்து பெறப்படுகிறது. முதலில் மண் புரவிகள் செய்து, சில நாட்கள் வெயிலில் காய வைத்து பின்பு சூளை வைக்கப்படும். திருவிழா அன்று குதிரைகளுக்கு வர்ணம் பூசுவர்.

கோயில் புரவி எடுப்பு விழாவையொட்டி, கிராமத்தின் சார்பில் இரண்டு பெரிய அரண்மனைப் புரவிகள் செய்யப்படும். அரண்மனைப் புரவியில் ஒன்று ஸ்ரீ செகுட்டையனார் கோயிலிலும், மற்றொன்று ஸ்ரீ சிறைமீட்ட ஐயனார் கோயிலிலும் வைக்கப்படும். ஸ்ரீ சிறைமீட்ட ஐயனார், செகுட்டையனாரின் சகோதரனாகப் பாவிக்கப்படுகிறார். கோயில் விழாவில் அரண்மனைப் புரவிகள் மட்டுமின்றி, நேர்த்திக் கடனுக்காக நூற்றுக்கணக்கான சிறிய புரவிகளும் செய்யப்படும்.

இத்திருவிழா மொத்தம் இரண்டு நாட்கள் நடைபெறும். வருடந்தோறும் ஜூன் மாதத்தில் நடத்தப்படுகிறது. முதல்நாள் மாலை, மு. சூரக்குடி கிராம புரவித் திடலில் வைக்கப்பட்டிருக்கும் புரவிகள் அனைத்தும் கச்சேரித் திடலுக்குக் கொண்டு வரப்படுகிறது. பிறகு, அங்கு இரண்டு அரண்மனைப் புரவிகளுக்கும் கிராமத்தின் சார்பில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மாலைகள் அணிவிக்கப்படும். இந்த இரண்டு நாட்களும் சாமியாட்டம் நடைபெறும். மறுநாள் மாலை புரவிகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஊரிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீ செகுட்டையனார் மற்றும் ஸ்ரீ சிறைமீட்டையனார் கோயில்களில் வைக்கப்படுவதோடு திருவிழா நிறைவடைகிறது.

மேற்கோள்கள்

  1. "மு. சூரக்குடி செகுட்டையனார் கோயில் புரவி எடுப்பு விழா". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 22 நவம்பர் 2013.
  2. "சிங்கம்புணரி அருகே செகுட்டையனார் கோயில் மஞ்சுவிரட்டு நடைபெறாததால் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 22 நவம்பர் 2013.
  3. "Aiyanar Horse". NathanthePhoenix via Scribd. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2013.
"https://tamilar.wiki/index.php?title=செகுட்டையனார்_கோயில்&oldid=142477" இருந்து மீள்விக்கப்பட்டது