திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
திருப்புவனம் புஷ்பவனேசுவரர் திருக்கோயில்[1]
பெயர்
புராண பெயர்(கள்):திருப்பூவணம்
பெயர்:திருப்புவனம் புஷ்பவனேசுவரர் திருக்கோயில்[1]
அமைவிடம்
ஊர்:திருப்புவனம்
மாவட்டம்:சிவகங்கை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர்
தாயார்:சௌந்தரநாயகி, மின்னனையாள்
தல விருட்சம்:பலா
தீர்த்தம்:வைகை, மணிறகர்ணிகை
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்
திருப்புவனம் அழகியநாயகி உடனுறை பூவணர் திருக்கோயில்

புஷ்பவனேஸ்வரர் கோயில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் என்னும் ஊரில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மேலும், திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். [2] இங்கு அழகியநாயகி உடனுறை பூவணர் கோயில் கொண்டுள்ளார். இவரை வடமொழியில் புஷ்பவனேஸ்வரர் எனவும் இறைவியை சௌந்தரநாயகி எனவும் அழைப்பர். இத்தலத்தின் வழிபடுமரம் (தலவிருட்சம்) பலா மரம் ஆகும்.

திருப்பூவணர் கோயிலின் முன்புறத் தோற்றம்

பெயர்க்காரணம்

திருப்புவனம் என்பது உச்சரிப்பில் திரிபு ஏற்பட்ட பெயராகும். "திருப்பூவணம்" என்பது திரிந்து திருப்புவனம் ஆகியது. இங்கு பாரிசாதப் பூவின் படிமம் சிவலிங்கமாக உள்ளது. எனவே சிவலிங்கத்தின் பெயர் "பூவணன்" என்பதாகும். இதன் காரணமாக இந்த ஊருக்குத் திருப்பூவணம் என்ற பெயர் உண்டானது. பாண்டிய நாட்டுத் தலங்களில் மூவர் பாடலும் பெற்ற தலம் இது ஒன்றே. 36ஆவது "திருவிளையாடல்" நடைபெற்ற தலம். எலும்பு பூவாக மாறிய தலம், காசிக்கு வீசம் கூட எனப் புகழ் பெற்ற தலம்[3].

மதுரையின் கிழக்கு வாயில்

பண்டைய பாண்டிய நாட்டின் தலைநகராக விளங்கிய மதுரைக்குக் கிழக்கு வாயிலாக இத்தலம் இருந்துள்ளது. திருஞானசம்பந்தர் சமணர்களை வெற்றி கொள்ள மதுரை செல்லும் போது மதுரையின் கிழக்கு வாயில் வழியாக உள்ளே செல்ல வேண்டும் என்று விரும்பினார். எனவே மதுரையின் கிழக்கு வாயிலாக விளங்கிய திருப்பூவணத்தை வந்து அடைந்தார்.பிற்கால பாண்டியர்களால் இக்கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.. பின்னர் விஜயநகர பேரரசின் மதுரை நாயக்க மன்னர் திருமலை நாயக்கரால் அர்த்த மண்டபம் மகாமண்டபம் இராஜ கோபுரம் கட்டப்பட்டதாக அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது..

பார்வதி தேவியார் தவம் செய்த இடம்

வைகை ஆற்றின் தென் கரையில் திருப்பூவணம் உள்ளது. திருக்கோயிலுக்கு நேர் எதிரே வைகைஆற்றின் வடகரையில் பார்வதி தேவியார் தவம் செய்த இடம் உள்ளது, இங்கே வந்த திருஞானசம்பந்தர் வைகை ஆற்றைக் கடக்க முயன்ற போது ஆற்று மணல்கள் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சியளித்தன.

திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகத்தைப் பாடி வணங்கினார்

எனவே திருஞானசம்பந்தர் அங்கிருந்தபடியே தென்திருப்பூவணமேஎன்று முடியும் தேவாரப் பதிகத்தைப் பாடி வணங்கினார், திருப்பூவணநாதர் நந்தியை சாய்ந்திருக்கச் சொல்லி காட்சி அருளினார்.

இவரைப் பின்பற்றி இத்தலத்தில் சுந்தரர்(8 பாடல்கள்), அப்பர் (11 பாடல்கள்), மாணிக்கவாசகர் (பாடல் கிடைக்கப் பெறவில்லை), கரூர்தேவர்(8 பாடல்கள்), அருணகிரிநாதர் (3 பாடல்கள்), குமரகுருபரர் (பாடல் கிடைக்கப் பெற வில்லை) இவர்களும் வைகை ஆற்றின் வட(மறு) கரையிலிருந்தே இறைவனை வழிபட்டுள்ளனர்.

36ஆவது திருவிளையாடல் நடைபெற்ற திருத்தலம்

இது "36ஆவது திருவிளையாடல்" நடைபெற்ற திருத்தலம். மதுரை அருள் மிகு சோமசுந்தரேசுவரர் சித்தராக வந்து இரசவாதம் செய்து தங்கம் தயாரித்துக் கொடுத்த திருத்தலம், இத்தங்கத்தைக் கொண்டே திருப்பூவணத்தில் உற்சவர் (அழகிய பிரான்) செய்யப்பட்டுள்ளார், இதனால் மதுரை அருள் மிகு சோமசுந்தரேசுவரரால் திருப்பணி செய்யப்பெற்ற திருத்தலம் என்ற பெருமை உடையது இத் திருத்தலம்.

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

  1. திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோவில்
  2. வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016
  3. திருப்பூவணம் புராணம், திருப்பூவணக் காசி, புவனம் போற்றும் பூவணம், நூல்கள். ஆசிரியர்: முனைவர். கி.காளைராசன்

வெளி இணைப்புகள்

அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்