ஆத்தங்குடி தரைக் கற்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆத்தங்குடி தரைக் கற்கள் பதித்த ஆத்தங்குடி அரண்மனை
செட்டிநாட்டுக் கட்டடக் கலை
செட்டிநாட்டு வீடு: வளைவு (முற்றம்)

ஆத்தங்குடி தரைக் கற்கள் (Aththangudi Floor Tiles) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரை அடுத்து அமைந்துள்ள ஆத்தங்குடி என்னும் செட்டிநாட்டுக் கிராமத்திலிருந்து தயாராகும் அழகிய பூவேலை நிறைந்த தரைக் கற்கள் ஆகும்.

தரைக் கற்கள் தயாரிப்பு ஒரு குடிசைத் தொழில்

ஆத்தங்குடி எனும் இந்த சிற்றூரில் பாரம்பரியமிக்க பூவேலை மிக்க தரைக் கற்கள் தயாரிப்பு ஒரு குடிசைத் தொழிலாக நடைபெற்று வருவது வியப்புக்குரிய செய்தி. சுமார் 35க்கும் அதிகமான தயாரிப்பாளர்கள் தங்கள் குடும்ப பரம்பரைத் தொழிலாக (மூன்று தலைமுறைகள்) பூக்கற்களைத் தயாரித்து தென்னிந்திய நகரங்களுக்கும், பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, மியான்மர், இலங்கை போன்ற நாடுகளுக்கும் அனுப்பி வருகின்றனர்.[1][2]ஆத்தங்குடி தரை ஓடுகளுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.[3]

தரைக் கற்கள் பதித்த செட்டிநாட்டு வீடுகள்

தமிழகத்தைப் பொறுத்தவரை 20 ஆம் நூற்றாண்டில் செட்டிநாட்டில்தான் கட்டடக்கலை பெரிய அளவில் உண்மையான கலைக் கண்ணோட்டத்தில் வளர்க்கப்பட்டது எனலாம். இதற்கு இப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு விசாலமாகக் கட்டப்பட்டு இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளைக் கடந்து இன்றும் கண்ணைக் கவரும் வேலைப்பாடுகளுடன் புதுப் பொலிவு மாறாமல் விளங்கும் செட்டிநாட்டு வீடுகளே சாட்சி. செட்டிநாட்டில் ஆத்தங்குடி, அரிமளம், கண்டனூர், காரைக்குடி, கடியாபட்டி, கானாடுகாத்தான், கோட்டையூர், கோனாபட்டு, சிறுகூடல்பட்டி, தேவகோட்டை, பள்ளத்தூர், புதுவயல், ராங்கியம், ராயவரம், வலையபட்டி போன்ற ஊர்களில் கட்டப்பட்டுள்ள அழகிய வேலைப்பாடமைந்த வீடுகளில் இந்த ஆத்தங்குடி தரைக் கற்கள் மட்டுமே பதிக்கப்படுவது வழக்கம். இந்த வகை கற்கள் எட்டு சதுர அங்குலம், பத்து சதுர அங்குலம், பனிரெண்டு சதுர அங்குலம் என்ற மூன்று அளவுகளில் தயாரிக்கப்படுவதாகத் தெரிகிறது.

தரைக் கற்கள் சிறப்பு

இத்தனை சிறப்பு இந்த தரைக் கற்களுக்கு எப்படிக் கிடைத்தது? கோடையில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் சிறிது கதகதப்பையும் அளிக்கும் கிரானைட் கற்கள் மிக விலை அதிகம். பளிங்குக் கற்களைப் (மார்பிள்) பதித்த தரைகள், குளிர் காலத்தில் மிகவும் குளிர்ச்சியாய் உள்ளன. பழங்காலம் தொட்டு ஆத்தங்குடியில் தயாரிக்கப்படும் கற்களுக்கு இப்பகுதியில் கிடைக்கும் ஒருவகை வாரிமண் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள். அடுத்து கண்ணைக்கவரும் 4,000க்கும் மேற்பட்ட பூ வடிவங்கள் தரைக் கற்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை மெருகூட்டத் தேவை இல்லை. நீண்ட நாள் உழைப்பு, மிதமான குளிர்ச்சி மற்றும் நிறம் மங்காத சாயங்களின் பயன்பாடு போன்றவை நுகர்வோரைப் பெரிதும் கவர்கின்றன[4][5][6].

ஆத்தங்குடி தரை ஓடுகள் மீது அவதூறு

விஜய் தொலைக்காட்சியின் 2024ஆம் ஆண்டின் பிக்பாஸ் போட்டியின் போது, ஒரு போட்டியாளர் ஆத்தங்குடி தரை ஓடுகள் குறித்து அவதூறாக பேசியமைக்கு, நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி மீது, ஆத்தங்குடி தரை ஓடுகள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் 16 டிசம்பர் 2024 அன்று காரைக்குடி காவல் நிலையத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ளனர்.[7][8]

வெளி இணைப்புகள்

  1. சவுந்தர்யம் மிளிரும் ஆத்தங்குடி டைல்ஸ்
  2. athangudi tiles.DAT (Video)
  3. Aura of Athangudi tiles The Hindu Saturday, Feb 02, 2008 பரணிடப்பட்டது 2008-02-07 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

  1. வெளிநாட்டிற்கு செல்லும் ஆத்தங்குடி "டைல்ஸ்' மூன்று தலைமுறை தயாரிப்பிலும் "மவுசு' தினமலர் ஜூலை 01,2011
  2. Legacy of Athangudi tiles பரணிடப்பட்டது 2012-06-18 at the வந்தவழி இயந்திரம் Life & Style. The Hindu June 15, 2012
  3. புவிசார் குறியீடு அங்கீகாரத்துக்குக் காத்திருக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்
  4. [http://www.dinamalar.com/News_detail.asp?Id=365207&Print=1 அறிவியல் ஆயிரம் ஆத்தங்குடி கற்கள்] தினமலர் டிசம்பர் 10,2011
  5. சுற்றுலாத் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு[தொடர்பிழந்த இணைப்பு] தினமலர் 28 Jul 2011
  6. For a historic ambience Property Plus. The Hindu June 23, 2012
  7. ஆத்தங்குடி டைல்ஸ் மீது தவறான கருத்து பதிவிட்டதாக புகார்
  8. பிக்பாஸில் சர்ச்சை கருத்து! நடிகர் விஜய் சேதுபதி மீது காரைக்குடி போலீஸில் புகார்