ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | உமாப்புலியூர், திருவோமாம் புலியூர் |
பெயர்: | ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | ஓமாம்புலியூர் |
மாவட்டம்: | கடலூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் (துயர்தீர்த்த நாதர்) |
தாயார்: | பூங்கொடிநாயகி |
தல விருட்சம்: | இலந்தை |
தீர்த்தம்: | கொள்ளிடம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கல்வெட்டுகள்: | சோழர் மற்றும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் |
வரலாறு | |
தொன்மை: | புராதனக்கோயில் |
அமைத்தவர்: | சோழர்கள் |
ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில் சம்பந்தர், அப்பர் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 31ஆவது தலமாகும். [1]
அமைவிடம்
பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுன்ற இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்கோயிலில்லிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது. இக்கோயிலுக்கு சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்குடியிலிருந்தும் போகலாம்.
தொன்நம்பிக்கை
இறைவன் தட்சணாமூர்த்தியாக இருந்து இறைவிக்குப் பிரணவப் பொருளை உபதேசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
இறைவன், இறைவி
இத்தலத்திலுள்ள இறைவன் பிரணவ வியாக்ர புரீஸ்வரர், துயர்தீர்த்தநாதர், பிரணவபுரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இறைவி புஷ்பலதாம்பிகை, பூங்கொடி நாயகி என்றழைக்கப்படுகிறார். இத்தலத் தீர்த்தம் கொள்ளிடம் மற்றும் கௌரி தீர்த்தமாகும். இத்தலத்தின் மரம் வதரி (இலந்தை) ஆகும்.
வழிபட்டோர்
வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்), அம்பிகை முதலியோர்
தல வரலாறு
புலிக்கால் முனிவரால் (வியாக்ரபாதர்) பூசிக்கப்பெற்றதால் புலியூர் என்றும், வேத ஓமங்களில் (வேள்விகளில்) சிறப்புற்றதால் ஓமம் புலியூர் எனப் பெயர் பெற்றது. இவ்வூர் பிற புலியூர்களிலிருந்து வேறுபாடறியும் பொருட்டு ஓமம் ஆம்புலியூர் = ஓமமாம்புலியூர் எனப்பட்டது. (சம்பந்தர் பாடலில் ஓமமாம்புலியூர் என்றே வருகிறது. ஆனால் அப்பர் பாடலில் ஓமாம்புலியூர் என்று வருகிறது. இக்கோயில் வடதளி என்றும் பாடல்களில் குறிக்கப்பட்டுள்ளது.) இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து உமாதேவிக்கு பிரணவப் பொருளை உபதேசித்தத் தலம். ஓமம் - வேள்வி, வேள்விச்சிறப்புடைய ஊர். பிரணவப் பொருளுபதேசம் நடந்த தலமாதலின் ஓம்-ஆம்-புலியூர் = ஓமாம்புலியூர் என்றாயிற்று என்றும் கூறுவர்.
சிறப்புகள்
மூலவர் சுயம்பு மூர்த்தியாக சதுர பீடத்தில் உயர்ந்த பாணத்துடன் காட்சித் தருகிறார். இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி சிறப்புடையது; குருமூர்த்தத் தலம். உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி கோயிலுக்குள்ளேயே மூலமூர்த்தியாக உயர்ந்த பீடத்தில் சிலாரூபத்தில் காட்சி தருகிறார். சந்நிதியின் ஒருபுறம் சலந்தரனை அழிக்கத் திருமாலுக்குச் சக்கரம் வழங்கிய சிற்பமும்; மறுபுறம் ஐந்து புலியூர்களில் வழிபடப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் செதுக்கப்பட்டுள்ளன. சோழர் காலக் கல்வெட்டு ஒன்றும், பல்லவர்கள் காலத்தவை ஐந்தும் ஆக ஆறு கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன. மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் 'வடகரை விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டுப் பிரமதேயம் ஓமாம்புலியூராகிய உலகளந்த சோழசதுர்வேத மங்கலம் ' என்றும்; இறைவன் பெயர் 'வடதளி உடையார் ' என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
புலியூர்கள்
புலியூர் என்ற பெயரில் உள்ள ஐந்து ஊர்கள் பெரும்பற்றப்புலியூர், பெரும்புலியூர், ஓமாம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர், திருஎருக்கத்தம்புலியூர் என்பனவாகும்.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: பழமண்ணிப்படிக்கரை |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 31 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 31 |