மூன்றாம் குலோத்துங்க சோழன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இரண்டாம் இராஜாதிராஜன் கல்வெட்டுகளில் கடைசியாகச் சொல்லப்பட்டிருக்கும் ஆட்சி ஆண்டு பதினாறு. எனவே அவனுடைய ஆட்சி ஆண்டு பொ.ஊ. 11ல் தொடங்கியிருப்பின் அது, 1179வரையில் நீடித்திருக வேண்டும். அவன் ஆட்சிக்கு வந்ததே பொ.ஊ. 1166ல் என்று வைத்துக் கொண்டால், 1182வரை ஆண்டிருக்க வேண்டும். மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டுக்களைப் பார்த்தால் பொ.ஊ. 1178ல் ஜூலை மாதம் 6 தேதிக்கும் 8 தேதிக்குமிடையே அவனுடைய ஆட்சி ஆரம்பமானதாகத் தெரிகிறது. எனவே அடுத்து பட்டத்திற்கு வந்து, ஆட்சி செய்யும் மன்னனாக மூன்றாம் குலோத்துங்கன் இராஜாதிராஜன் மரணத்திற்கு முன்னமே ஏற்றுக் கொள்ளப்பட்டான் என்று தெளிவாகத் தெரிகிறது.

குழப்பம்

இரண்டாம் இராஜராஜன் இறந்தபோது அவனுடைய பச்சிளம் பிள்ளைகளை பல்லவராயர் பாதுகாத்துவந்தார். அந்த பச்சிளம் பாலகர்களுள் ஒருவராகக் குலோத்துங்கன் இருந்திருக்க முடியாது என்பதும் வரலாற்றின் படி அறியக்கூடியதாயிருக்கிறது. குலோத்துங்கன் என்பதுவும் இரண்டாம் இராஜாதிராஜனின் கல்வெட்டுக்களில் சொல்லப்பட்டிருக்கும் குமார குலோத்துங்கன் என்பவனும் ஒருவனா என்ற குழப்பம் இருக்கிறது. ஒருவனே ஆயின் தன் முன்னவனைப் போல இவனும் சோழப் பேரரசர்களின் நேர் உரிமையாளன் அல்ல என்ற முடிவு ஏற்பட்டுவிடும். குமார குலோத்துங்கனின் வம்சாவழியை 'குலோத்துங்கன் கோவை' பின்வருமாறு தெரிவிக்கிறது.

சங்கம ராஜா -- நல்லமன் & குமார குலோத்துங்கன் & சங்கரச் சோழன்

'சங்கரச் சோழன் உலா', சங்கரச் சோழனுடைய அண்ணனைக் குமாரமகீதரன் என்ற சற்று மாறுபட்ட பெயரில் சொல்லுகிறது. ஆனால் கோவையோ, உலாவோ மூன்றாம் குலோத்துங்கனுடைய கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்ட வரலாற்று நிகழ்ச்சிகளைச் சொல்லாததால், இந்த அரசன் தா இலக்கியங்களில் சொல்லப்பட்ட குமார குலோத்துங்கனா? என்ற ஐயம் ஏற்படுகிறது. சங்கமராஜா சோழ வம்சத்திற்கு என்ன உறவு? என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள எந்த விதமான ஆதாரங்களும் இப்போது கிடைக்கவில்லை.

முதலாம் பாண்டியப் போர்

ராஜாதி ராஜனின் துணையால் பாண்டிய நாட்டினை அடைந்த வீர பாண்டியன், சோழர்கள் செய்த உதவியை மறந்து சிங்களர்களுடன் இணைந்து சோழர்களை துன்புறுத்த ஆரம்பித்தான். குலசேகர பாண்டியனின் மைந்தன் விக்கிரம பாண்டியன் மூன்றாம் குலோதுங்கனிடம் சரண் அடைந்து, தனக்கு பாண்டிய தேசத்தை பெற்று தருமாறு கேட்டுக் கொண்டான். சோழர்களுக்கு தீமை செய்யும் வீர பாண்டியனை எதிர்க்க இன்னொரு காரணமும் கிடைக்க, போர் தினவேடுத்திருந்த குலோத்துங்கன் சோழப் படையை பாண்டிய தேசம் நோக்கி நகர்த்தினான். சோழர்கள் படையை இவனே தலைமை தாங்கி போர் நிலத்தில் வாளேந்தி நின்றான் அந்த வாலிப வீரன்.

எழகப் படை, மறவர் படை, ஈழப் படை ஆகியவை சோழனுக்கு ஈடுக் கொடுக்க முடியாமல் புறம் கண்டோடினர். போரினை வென்ற சோழன் தன் பால் அடைக்கலம் கண்ட விக்கிரம பாண்டியநிடத்தே பாண்டிய தேசத்தை ஒப்படைத்து கப்பம் கட்டுமாறு பணிவித்தான்.

இரண்டாம் பாண்டிய போர்

போரினால் துவண்ட வீரப் பாண்டியன், சேர தேசத்தை அடைந்து வீர கேரளன் உதவியை கோரினான். சேரப் படையுடன் தனது படையையும் இணைத்து, சோழனை எதிர்த்தான் வீரப் பாண்டியன். தனது பாண்டிய தேசத்தை அடையும் பொருட்டு அவன் மதுரை மாநகர் நோக்கி தனது படையை நகர்த்தினான் வீர பாண்டியன். இதனை அறிந்த சோழன் மதுரைக்கு கிழக்கே உள்ள நெட்டூரில் பாண்டிய படைகளை சந்தித்தான். அங்கே ஏறுப் பெரும்படைகளுக்கும் நடுவே மிகப் பயங்கரப் போர் நிகழ்ந்ததாக அறியப் படுகின்றது. இந்தப் போரிலும் வீர பாண்டியன் தோல்வியையே சந்தித்தான்.

தோல்விக்கு பின் பாண்டியன் சேர தேசம் சென்று வீர கேரளனிடம் சரண் அடைந்தான். இரண்டாம் பாண்டிய போரில் குலோத்துங்கனின் ஆற்றலை அறிந்த வீர கேரளன், பாண்டியனிற்கு அடைக்கலம் கொடுத்தால் சோழன் தன்னையும் எதிர்த்து வருவான் என்பதை அறிந்து அவன் மேல் கொண்ட மதிப்பால் பாண்டியனை சோழனிடமே அடைக்கலம் அனுப்பி வைத்தான். அடைக்கலம் புகுந்த பாண்டியனை அனுசரனயுடன் அணைத்தான் சோழன். அவனுக்கு பாண்டிய தேசத்தின் ஒரு பகுதியை பிரித்து அரசாள கொடுத்தான்.

ஈழப் போர்

சோழர்கள் சிறப்புற ஆட்சி புரிவதனை விரும்பாத சிங்களர்கள் எப்பொழுதுமே சோழர்களுக்கு தொந்தரவு கொடுத்த வண்ணம் இருந்தனர். அது மட்டும் இல்லாமல் பாண்டிய மன்னர்களை தூண்டி விட்டு சோழ தேசத்தில் குழப்பம் ஏற்படுத்தி வந்தனர். இதனால் கடும் சினம் கொண்ட குலோத்துங்கன் தனது சோழப் படைதனை இலங்கை தேசம் நோக்கி அனுப்பி வைத்தான். இதனை அடுத்து சோழ தேசத்திற்கும் ஈழ தேசத்திற்கும் பெரும் போர் நிகழ்ந்தது. புலனருவா பகுதி, யாழ் ஆகிய இடங்களை சோழ தேசம் கவர்ந்தது. குலோத்துங்கன் காலத்தில் நிகழ்ந்த இந்தப் போர்கள் எந்த மன்னன் காலத்தில் நிகழ்ந்தது என்பது அறியப் படவில்லை. பராக்கிரம பாகு காலம் அல்லது அவனுக்கு அடுத்த மன்னன் காலத்திலோ சோழன் ஈழ தேசத்தில் பற்பல பகுதிகளை கவர்ந்து இருந்தான்.

கொங்கு நாட்டுப் போர்

ஈழ தேசத்தில் போர் புரிந்த காலத்திலேயே சோழன் கொங்கு தேசத்திலும் போர் புரிந்ததாக அறியப் படுகின்றது. ராஜாதி ராஜன் காலத்தில் ஆட்சி புரிந்து வந்த கொங்கு மன்னர்கள், சோழர்களுக்கு கப்பம் செலுத்துவதை நிறுத்தி விட்டு சுயேச்சை மன்னர்களாக தங்களை அறிவித்துக் கொண்டனர். இதனால் வீறுக் கொண்டு எழுந்த குலோத்துங்கன், பாண்டிய தேசத்தினை கைப் பற்றியவுடன் தனது படைகளை சன்னத்தமாக வைத்திருந்து கொங்கு தேசம் மீது பாய்ந்தான். சோழர்களுக்கு ஈடு கொடுக்க இயலாத கொங்கு தேசத்தவர்கள் (இவர்கள் சேர மன்னர்கள் கிளை வம்சத்தவர்களாக அறியப் படுகின்றனர்) சோழர்களிடம் சரண் அடைந்தனர். இதனை அடுத்து தன்னிடம் அடைந்த கொங்கு மன்னனிர்கே அவனது தேசத்தினை அளித்து, தனக்கு அடங்கி கப்பம் கட்டுகின்ற ஒரு சிறிய அரசனாக அறிவித்தான்.

வடநாட்டுப் போர்

காகதீயா அரசு தனது விச்தரிப்பினை ஆரம்பித்த காலம் மூன்றாம் குலோத்துங்கனின் காலம் தான். அது மட்டும் இல்லாமல் பாண்டியர்கள், ஹோய்சாளர்கள் தங்களது அரசுகளை விஸ்தரிக்கும் எண்ணங்களை தங்கள்ளுக்குள் விதைத்த காலமும் குலோத்துங்கனின் காலம் தான். பாண்டியர்களை நசுக்கி, ஹோய்சாளர்களை திருமண உறவின் மூலம் வலுப் படுத்தி சோழ அரசினை வியாபித்தான் சோழன். அப்போது காகதீய மன்னன் சோழனின் சிற்றரசர்களை தூண்டி விட்டு கலகம் செய்வித்தான். காஞ்சிபுரத்தினை ஆண்டு வந்த வீர நல்ல சித்தன்ன தேவ சோழன் என்கிற சிற்றரசன் குலோத்துங்கனுக்கு அடிபணியாமல் கப்பம் கட்டுவதை நிறுத்தினான். இவனுக்கு துணையாய் காகதீய மன்னன் இருந்தான். இதனால் வெகுண்ட சோழன், தனது படையுடன் சென்று சித்தன்ன தேவனை அடிப் பணிய வைத்து, காகதீய மன்னனை சோழ தேசம் பக்கம் நெருங்க விடாமல் செய்தான்.

மூன்றாம் பாண்டியப் போர்

விக்கிரம பாண்டியனின் இயற்கையான மறைவுக்கு பிறகு குலசேகர பாண்டியன் என்பவன் அரியணை ஏறினான். இவன் குலோத்துங்கன் பாண்டியர்களுக்கு செய்த உதவியை மறந்து, ஈழ அரசுடன் உடன்படிக்கை செய்தான். சோழ அமைச்சர்களை நாடு கடத்தினான், இதன் பொருட்டு மூன்றாம் பாண்டியப் போர் நிகழ்ந்தது.

குலசேகர பாண்டியன் தனது மறப் படையும் எழகப் படைதனையும் திரட்டிக் கொண்டு குலோத்துங்கனை எதிர்த்து காவிரி நதிக் கரை அருகே மட்டியூர் என்ற இடத்திற்கு அருகே சந்தித்தான். பாண்டியனுக்கும் சோழனுக்கும் நடந்த இப்போர் பல நாட்கள் நடந்ததாகவும் போருக்கு பின் மதுரை நகரினில் இருந்த பாண்டிய கோட்டைகளை தகர்த்தெறிந்தான். பாண்டியனோ போரினால் பின் வாங்கி தன் மக்களை காப்பாற்றிக் கொண்டு ஈழ தேசத்தில் அடைக்கலம் புகுந்தான்.

இந்த வெற்றிக்கு பின்பு சோழன் பாண்டிய தலைநகரத்தில் சோழ பாண்டியன் என்று வெற்றி மகுடம் புனைந்துக் கொண்டான்.

குலோத்துங்கனின் சிறப்பு பணிகள்

மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தில் பற்பல சிறந்த பணிகள் தமிழகத்தே நிகழ்ந்தன.

  1. திருபுவனம் கோவில்
  2. மதுரை ஆலவாய் அழகனுக்கு பணிகள் நடந்தன
  3. திருவாரூர் அம்பலத்தானுக்கு பொன் வேய்ந்தான். ( 'நம் தோழர்' என்று குறிப்பிடப் படுகின்றான்)
  4. சேக்கிழாரின் திருத் தொண்டர் புராணம்
  5. நேமிநாதம், வச்சணந்தி மாலை, வெண்பாப் பாட்டியல் : இலக்கண நூல்கள்
  6. மல்லன் வத்சராசன் மாகபாரததினை தமிழில் மொழி பெயற்றியது
  7. பவனந்தியின் நன்னூல்
  8. களிப்பொருபது பலர் எழுதிய இந்நூல் மூன்றாம் குலோத்துங்கச் சோழனால் தொகுக்கப்பட்டது.[1]

குறிப்புகள்

  1. காஞ்சி சிறீ நாகலிங்க முனிவர் தொகுத்த செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, 1926