நீலகிரி மாவட்டம்

நீலகிரி
மாவட்டம்
Nilgiris Tea Plantation.jpg
நீலகிரி தேயிலை தோட்டம்
Nilgiris in Tamil Nadu (India).svg.png
நீலகிரி மாவட்டம்: அமைந்துள்ள இடம்
நாடு  இந்தியா
மாநிலம் TamilNadu Logo.svg.png தமிழ்நாடு
தலைநகரம் உதகமண்டலம்
பகுதி மேற்கு மாவட்டம்
ஆட்சியர்
திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

Ms. N.S. நிஷா
இ.கா.ப.
நகராட்சிகள் 4
வருவாய் கோட்டங்கள் 3
வட்டங்கள் 6
பேரூராட்சிகள் 11
ஊராட்சி ஒன்றியங்கள் 4
ஊராட்சிகள் 35
வருவாய் கிராமங்கள் 88
சட்டமன்றத் தொகுதிகள் 3
மக்களவைத் தொகுதிகள் 1
பரப்பளவு 2545 ச.கி.மீ.
மக்கள் தொகை
7,35,394 (2011)
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இ.சீ.நே.
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
643 001
தொலைபேசிக்
குறியீடு

0423
வாகனப் பதிவு
TN-43
பாலின விகிதம்
ஆண்-49.6%/பெண்-50.4% /
கல்வியறிவு
85.20%
சராசரி ஆண்டு கோடை
வெப்பநிலை

15 °C (59 °F)
சராசரி கோடை
வெப்பநிலை

20 °C (68 °F)
சராசரி குளிர்கால
வெப்பநிலை

10 °C (50 °F)
இணையதளம் nilgiris

நீலகிரி மாவட்டம் (The Nilgiris district)[1] இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரில் உள்ள நீலகிரி என்னும் மலையாலேயே இம்மாவட்டம் இப்பெயர் பெற்றது. இதன் தலைநகர் உதகமண்டலம் ஆகும். இங்குள்ள உயரமான மலைமுடி தொட்டபெட்டா ஆகும். குன்னூர், கோத்தகிரி, கூடலூர், அரவங்காடு ஆகியன இம்மாவட்டத்தில் உள்ள நகரங்கள் ஆகும். இம்மாவட்டத்தில் வெல்லிங்டன் பாசறை நகரம் உள்ளது. நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், உயிர்க்கோள் காப்பகமாக நீலகிரி பகுதியை ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ (UNESCO) அறிவித்துள்ளமை நீலகிரிக்குப் பெருமை சேர்க்கிறது. இது இந்தியாவின் முதல் உயிர்க்கோள் காப்பகமாகும்.

புவியிடம்

நீலகிரி ஆனது கடல் மட்டத்திற்கு 900 முதல் 2636 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதன் அட்சரேகை மற்றும் நீள அளவுகள் 185 கி.மீ. (அட்சரேகை: 76.0 E முதல் 77.15 E வரை) 130 கி.மீ (அட்சரேகை: 10 – 38 WP 11-49N). நீலகிரி மாவட்டம் ஆனது வடக்கே கர்நாடகா மாநிலமும், கிழக்கே கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டமும், தெற்கே கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் கேரளா மாநிலமும், மேற்கே கேரளா மாநிலமும் எல்லைகளாக கொண்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நிலப்பகுதி ஆனது உருளும் மற்றும் செங்குத்தானது. 60% பயிரிடக்கூடிய நிலப்பகுதியில் 16% முதல் 35% வரை சரிவுகளில் உள்ளது.[2]

வரலாறு

மலைகளும், மலை சார்ந்த இடங்களும் கொண்ட பழங்குடியினரின் வசிப்பிடம் நீலகிரி. நீலகிரி மலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த குறியீடு,[3] உலகம் முழுக்கவும் இருக்கின்ற பல தொன்மையான வரலாற்றுக்கு முந்தைய நாகரீகங்களிலும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது எத்தியோபியாவில் ஆட்சி செய்த பேரரசி ஷோபாவைப் பற்றிய குறிப்புகளிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து இப்பகுதிகளை கங்கர்கள், கடம்பர்கள், ஹொரளர்கள், நாயக்கர்கள், மைசூர் அரசர்கள், கேரளவர்மா முதலியோர் இப்பகுதிகளை ஆண்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.[சான்று தேவை] ஹொரள மன்னன் தன்னாயகா நீலகிரி கொண்டான் என்ற சிறப்புப் பெயரோடு ஆண்டதாக கூறப்படுகிறது.[சான்று தேவை] பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் சிலப்பதிகாரத்தில் நீலகிரியை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் அதாவது சேரர், சோழர்கள், பாண்டியர்கள், ராஷ்டிரகூடர், கங்கர்கள், பல்லவர்கள், கடம்பர்கள் காலத்தில் நீலகிரிக்கு ராஜாக்கள் வந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.[சான்று தேவை] விஷ்ணுவர்தனா காலத்தில் (பொ.ஊ. 1111–1141) ராஜாக்கள் ‘நிலா மலைகள்’ என அழைத்துள்ளனர். 1336 முதல் 1565 வரை விஜயநகர பேரரசின் ஒரு பகுதியாக நீலகிரி இருந்துள்ளது. 1565 இல் அதன் வீழ்ச்சிக்கு பின்னர் மைசூர் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்கு நீலகிரி சென்றது. பின்னர் அது ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் (1760 முதல் 1799 வரை) ஆட்சியின் கீழ் வந்தது. ஒரு ஒப்பந்தம் மூலம் 1799ல் கிழக்கு இந்திய வணிகக் குழுவிற்கு விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அழகான மலைப்பகுதி 1818 வரை ஆங்கிலேயரால் அறியப்படாமல் இருந்துள்ளது. இதன்பிறகு கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான் சல்லிவன், நீலகிரியை உலகுக்கே அறிமுகம் செய்து வைக்க காரணமானார். 1819 ஆம் ஆண்டு கோவை ஆட்சியராக இருந்த ஜான் சல்லிவன்[4] கோத்தகிரி வழியாக நீலகிரிக்கு வந்தார். தற்போதைய கன்னேரிமுக்கு பகுதியில் இவரது இல்லம் நினைவு சின்னமாக மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் இப்பகுதிகளை ஆளத் தொடங்கிய பின்னரே பல நகரங்களும் வசதிகளும் பெருக ஆரம்பித்தன. ஆங்கிலேய கவர்னர் 1829 இல் உதகைக்கு விஜயம் செய்தார். அவர் வருகைக்கு முன்பே சல்லிவன் என்பவர் முயற்சியில் கூடலூர் பகுதி வளர்ச்சியடைந்திருந்தது. 1830இல் ஜேம்ஸ் தாமஸ் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்தபொழுது, நீலகிரி மாவட்ட மலைகளில் பெரும்பகுதி, கோத்தகிரியை தவிர்த்து, மலபாரில் இணைக்கப்பட்டன. 1831–32இல் அவலாஞ்சி, சிஸ்பாரா, குந்தா, பகுதிகளில் சாலைகள் கேப்டன் முர்ரே என்பவரின் தலைமையில் போடப்பட்டன. 1832ல் சர்ச் மிஷனரி ஒன்றை தோற்றுவித்து ஆங்கிலேயப் பள்ளி ஒன்றும் கட்டப்பட்டது. 1868 ஆம் ஆண்டுச் சட்டம், நீலகிரி மாவட்டத்திற்கு தனி மாவட்ட ஆட்சியரை நியமிக்கும் அதிகாரத்தை வழங்கியது.1893இல் ஆக்டர்லோனி பள்ளத்தாக்கும், 1877இல் வயநாடு பகுதியில் தென்கிழக்குப் பகுதியிலும் நீலகிரி மாவட்டத்துடன் இணைந்தன.

மக்கள் தொகை

கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள்:

2001 2011
மக்கள் தொகை 7,62,411 7,35,071
கல்வியறிவு % 81.44 85.20

2011 இல் நகரத்தில் 2,99,06 மக்களும், கிராமத்தில் 4,36,010 மக்களும் உள்ளன்ர். நீலகிரி மாவட்டத்தில்தான் ஆண் - பெண் விகிதம் 1000 - 1041 என்ற வீதத்தில் தமிழ்நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. கிராமப் புறங்களின் மக்கள் தொகையில் 1000 - 1055 என்ற வீதத்தில் முதல் இடத்தில் உள்ளது. கல்வியறிவில் நீலகிரி, மாநிலத்திலேயே நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஒரு சதுரகிலோ மீட்டருக்கு 287 பேர் உள்ளனர். நீலகிரியில் பேசும் மொழிகளில் தமிழ், படுகு, மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட பல மொழி இனத்தவர்களும் வசிக்கின்றனர். வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பவர்கள். இம்மாவட்டத்தில் பல பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர். தோடர் இவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்கள். இவர்கள் தவிர பணியர்கள், குறும்பர், பெட்ட குறும்பர், கசவர் ஆகியோரும் உள்ளனர். கோத்தகிரிப் பகுதிகளில் கோத்தர் எனும் பழங்குடியினர் வாழ்கின்றனர். இருளர்கள் கீழ்பில்லூர் பகுதியில் வாழ்கிறார்கள்.

பழங்குடியினர்

நீலகிரி மாவட்டத்தில் மலைவாழ் மக்களின் தொகை கணிசமாகக் காணப்படுகிறது. பாரம்பரியமாக இருந்து வரும் பழங்குடியினர் இருளர், குரும்பர், பனியர், தொதவர் எனப்படும் தோடர், கோத்தர், நாயக்கர் போன்ற பழங்குடியினர் உள்ளனர். இவர்களில் பழமையான இனத்தவர் தோடர். இப்பழங்குடிகளில் இருளரே கடுமையான உழைப்பாளிகள். வேளாண்மையிலும் ஈடுபடுகின்றனர். தொதவர் வாழும் இடம் மந்து எனப்படும். அதுபோல கோத்தர் வாழிடம் கோக்கால் என அழைக்கப்படுகிறது. குறும்பர் பேசும் மொழியில் நல்ல தமிழ்ச் சொற்கள் இடம் பெறுகின்றன. குறும்பரில் பல வகையுண்டு. அதில் பெட்ட குறும்பர் 28 சந்ததிகளாகப் பிரிந்துள்ளனர். இவர்களைத் தவிர கசவர் என்ற பழங்குடிகள் நீலகிரி மாவட்டத்தில் சில ஊர்களில் வசிக்கின்றனர். பழங்குடி மக்களிடத்தில் அடிப்படை தேவையை நிறைவு செய்துகொள்ளும் மனப்பான்மையே காணப்படுகிறது. மற்ற மாநில பழங்குடிகளோடு ஒப்பிடும்போது நீலகிரிப் பழங்குடியினர் நல்ல நாகரீகம் பெற்றவர் என்றே சொல்லலாம். 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தின் மக்கள்தொகை 7,62,141. இதில் பழங்குடியின மக்கள்தொகை 3.7 சதவீதம். உதகை நகராட்சி - 394, குன்னூர் நகராட்சி - 122, உதகை வட்டம் - 4,329, குன்னூர் வட்டம் 2,397, கோத்தகிரி வட்டம் 6,197, கூடலூர் வட்டம் 15,450 என 28,889 பேர் வசிக்கின்றனர். இவர்களின் கல்வி அறிவு (சதவீதத்தில்) தோடர் - 29.52, கோத்தர் - 32.71, குரும்பர் - 18.13, முள்ளுக்குரும்பர் - 38.15, இருளர் - 21.78, பனியர் - 11.27, காட்டு நாயக்கர் - 9.03.இந்த ஆறு பழங்குடியின மக்களில், தோடர் மற்றும் கோத்தர் இன மக்களிடம் நிலங்கள், வேலை வாய்ப்புகள் உள்ளதால் இவர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆனால் இருளர், பனியர், குரும்பர், காட்டு நாயக்கர் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரம், சுதந்திரத்திற்குப் பின்னும் முன்னேற்றம் அடையவில்லை. கூடலூரில் வசிக்கும் பனியர், இருளர், குரும்பர், காட்டு நாயக்கர் இன மக்கள் இன்றும் விவசாய கூலிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.[5]

குழந்தைகள் இல்லங்கள்

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 25 குழந்தை இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. 24 குழந்தை இல்லங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கீழும், 1 அரசு குழந்தைகள் இல்லமும் செயல்பட்டு வருகின்றன. அனைத்து குழந்தை இல்லங்களும் இளைஞர் நீதிச்சட்டம் 2015 கீழ் பதிவு பெற்றுள்ளன. இப்பதிவு செய்தல்களும், அதற்குரிய கண்காணிப்புகளும் அரசின் நிதிஆதரவுடன் தொடர்ந்து பராமரிப்புத்திட்டங்களினால் வளர்ந்து பேணப்படுகின்றன.[6] குழந்தைகள் பெற்றோரின் பராமரிப்பில் வளர்வதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும். அதற்காக குழந்தைகள் கைவிடப்படுவதை தடுத்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், குழந்தைகள் கல்வியைத் தொடர்வதை உறுதி செய்தல், வளர்ப்பு பராமரிப்பு குழந்தைகளுக்கு தொடர்ந்து நிதி ஆதரவு அளித்து கண்காணித்தல், குடும்ப சூழலுடனான பராமரிப்பை குழந்தைகளுக்கு வழங்குதல், குடும்பங்களை காத்தல் மற்றும் பெற்றோர் தங்கள் கடமையை செய்வதை ஊக்குவித்தல் போன்ற மிக அடிப்படையான செயல்முறைகள் அரசாலும், தனியார் தொண்டு நிறுவனங்களாலும் பேணப்படுகின்றன.[6]

மாவட்ட நிர்வாகம் - மாவட்ட வருவாய் நிர்வாகம்

இம்மாவட்டம் 3 உதகமண்டலம், குன்னூர், கூடலூர் என 3 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 15 உள்வட்டங்களும், 88 வருவாய் கிராமங்களும் கொண்டது.[7]

வருவாய் மாவட்டகள்

  1. உதகமண்டலம் வட்டம்
  2. குந்தா வட்டம்
  3. பந்தலூர் வட்டம்
  4. குன்னூர் வட்டம்
  5. கூடலூர் வட்டம்
  6. கோத்தகிரி வட்டம்

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்

இம்மாவட்டத்தில் 4 நகராட்சிகளும், 11 பேரூராட்சிகளும், 4 ஊராட்சி ஒன்றியகளும்[8][9], 35 கிராம ஊராட்சிகளும்[10] உள்ளது.

நகராட்சிகள்

  1. உதகமண்டலம் நகராட்சி
  2. கூடலூர் நகராட்சி
  3. குன்னூர் நகராட்சி
  4. நெல்லியாளம் நகராட்சி[11]

பேரூராட்சிகள்

  1. கோத்தகிரி
  2. தேவர்சோலா
  3. சோளூர்
  4. ஜெகதலா
  5. கேத்தி
  6. ஹுலிக்கல்
  7. கீழ்குந்தா
  8. அதிகரட்டி
  9. நடுவட்டம்
  10. பிக்கட்டி
  11. ஓ' வேலி

ஊராட்சி ஒன்றியங்கள்

  1. உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியம்
  2. கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம்
  3. குன்னூர் ஊராட்சி ஒன்றியம்
  4. கூடலூர் ஊராட்சி ஒன்றியம்

மாவட்டத்திலுள்ள அருவிகள்

மாவட்டத்திலுள்ள அணைகள்

சுற்றுலா

தொழில்

நீலகிரியில் முக்கிய தொழிலாக இருப்பது தேயிலை உற்பத்தி. கூடலூர் பகுதியில் குறுமிளகு, ஏலக்காய், இஞ்சி மற்றும் காப்பித் தோட்டங்களும் அமைந்துள்ளன. இதுமட்டுமின்றி சுற்றுலாவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பெரிய தொழிற்சாலைகள் 126; சிறிய தொழிற்சாலைகள்-105; தேயிலை தொழிற்சாலைகள் 167; பிர்லா தொழில் நிறுவனத்தை சார்ந்த மஞ்சுஸ்ரீ தேயிலைத் தோட்டங்கள் கூடலூர் வட்டத்தின் ஓ'வேலி பகுதியில் அமைந்துள்ளன.

மிதமான கால நிலை நிலவுவதால் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி அதிகம் உள்ளன. புகைப்படச் சுருள் (இந்து) தயாரிப்பு; துப்பாக்கி மருந்து தொழிற்சாலை போன்றவை. இதில் புகைப்படச் சுருள் தயாரிப்பு நிறுவனம் (இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை) நலிவடைந்த நிலையில் உள்ளது.

யூகலிப்டஸ் எண்ணெய்: இம்மாவட்டத்தில் அதிகமாக வளர்ந்துள்ள யூகலிப்டஸ் மரங்களின் இலைகளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. யூகலிப்டஸ் எனப்படும் தைலத்தொழில் நலிவடைந்து வருகிறது.

கொய்னா உற்பத்தி: நீலகிரியில் நடுவட்டம் அருகில் அரசு சின்கோனா தோட்டத்தில் 2,500 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் சின்கோனா மரங்கள் உள்ளன. கொய்னா மருந்து சின்கோனா மரப்பட்டைகளிலிருந்து எடுக்கப் படுகின்றது. இது மலேரியா காய்ச்சலுக்கு ஏற்ற மருந்து.

வாட்டில் பட்டை உற்பத்தி நிலையம்: 1948-49 இல் சுமார் 8300 வாட்டில் மரப்பதியங்கள் விநியோகிக்கப்பட்டு இன்று சுமார் 6000 ஏக்கர் நிலத்தில் பயிராகிறது. இப்பட்டையிலிருந்து தைலம் இறக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பைரோடை எண்ணெய்: ‘பைரீத்ரம் டேரியின்’ பூவிலிருந்து பைரோடை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது ஈ கொசு போன்றவற்றைத் தடுக்கும் பூச்சிக் கொல்லி மருந்து. இது இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

காளான் தொழிற்சாலை: நீலகிரி மாவட்டத்தின் இதமான காலநிலை காளான் உற்பத்திக்கு ஏற்றதாக விளங்குகின்றது. உதகமண்டலம் வட்டத்தில் கேத்தி கிராமத்தில் பாண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் காளான் தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது.

ஊசி தயாரிக்கும் தொழிற்சாலை: உதகையிலுள்ள கேத்தியில் தையல் ஊசிகள் கிராமஃபோன் ஊசிகள், கொக்கிகள் போன்ற 300 விதமான ஊசிகள் செய்யப்பட்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது ஒரு தனியார் தொழிற்சாலை ஆகும்.

வெடி மருந்து தொழில்: மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலை அருவங்காட்டில் அமைந்துள்ளது. இங்கு அக்கினி திராவகம், கந்தக திராவகம், துப்பாக்கி மருந்து போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. நவீன ஆயுதங்களின் வரவால் தற்போது ராணுவத்திற்கான வெடிமருந்து தேவை குறைந்துள்ளது. எனவே மாற்றுத் திட்டமாக இத்தொழிற்சாலையின் ஒரு பகுதியில் ஜெரோனியம் என்ற தாவர வாசனை திரவிய உற்பத்தி பிரிவொன்றும் தற்போது துவங்கப் பட்டுள்ளது.

கச்சா பிலிம் தொழிற்சாலை: 1967ஆம் ஆண்டில் 14 கோடி முதலீட்டில் இந்துஸ்தான் போட்டோ பிலிம் உற்பத்தி நிறுவனம், மத்திய அரசினால் தொடங்கப்பட்டது. ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும் சாலையில் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இத்தொழிற்சாலை அமைந்துள்ளது. ஆண்டுக்கு சுமார் 50,000 ச.மீ. பிலிம் சுருள் தயாரானது. 2000 க்கும் மேற்பட்டோர் பணியாற்றிய இந்நிறுவனம் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வருகிறது.

கூட்டுறவு பால் உற்பத்தி: 1946 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு நாள் ஒன்றுக்கு 14,679 லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் மூலம் 6890 கால்நடை வளர்ப்போர் பயனடைந்து வருகின்றனர். தீவிர பால் பெருக்குத் திட்டத்தின்படி 59,000 லிட்டராக உயர்ந்துள்ளது.

உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கு உற்பத்தியில் 6 கோடி ரூபாய்க்கும் மேலாக விற்பனை நடந்து வருகிறது. சுமார் 75 இலட்சம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிஃபிளவர், பீன்ஸ், டர்னிப் போன்ற காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. புரோட்டின் தயாரிப்பு தொழிற்சாலை (பி.பி.ஐ., எனப்படும் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம்) போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. இத்தொழிற்சாலை கூடலூர் செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஜெரோனியம், ஃபினாயில் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன.

காட்டுவளம்

1948 அக்டோபர் முதல் மரம் நடுவிழா தொடங்கியது. 20 ஆண்டு திட்டம் வகுக்கப்பட்டு 3000 ச.மைல் பரப்புக்கு காடுகளைக் கையகப்படுத்தி சவுக்கு, நீலகிரித் தைலம் (Eucalyptus oil) வாட்டில் பட்டை மரங்களாகவும் ஏராளமாக நட்டு வளர்க்கப்பட்டன. இதன் மூலம் பல விரிந்த காடுகள் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பரவியுள்ளன. தேக்கும், ரப்பரும் அதிகளவு வளர்ந்துள்ளன. இக்காடுகளில் உள்ள மூலிகைகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சித் துறையால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நன்கு பராமரிக்கப்படுகின்றன. இதன் மூலம் பல அரிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு உதவுகின்றன.

நீலகிரி மாவட்டம் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் மழை பெறுவதால் நீர்வளம் மிகுந்து காணப்படுகின்றது.

வேளாண்மை

நீலகிரி மாவட்டத்தில் 2019 – 20 ஆண்டு கணக்கின்படி 73406.00 ஹெக்டர் பரப்பளவில் 83,125 விவசாயிகள் வேளாண்மை மேற்கொண்டு வருகின்றனர். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வாயிலாக நீலகிரி மாவட்ட விவசாயிகள் பயனடையும் பொருட்டு, ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கம் (MIDH), பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம் (PMKSY), கூட்டுப் பண்ணையம் திட்டம் (Collective farming), சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம் (SADP), பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY), சிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் (NADP) ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.[12]

பழச்சாகுபடி

1946 ஆம் ஆண்டிலிருந்து பழங்களைப் பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதன்படி நீலகிரியில் குன்னூர், பர்லியார், கல்லார் ஆகிய இடங்களில் ஆய்வு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 6000 அடி, 2,500 அடி, 1500 அடி உயரங்களில் சாகுபடி செய்யக்கூடிய பழ இனங்களைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு தோட்டக்கலை துறையின் கீழ் செயல்படும் பின்வரும் தோட்டக்கலை பண்ணைகளில் நாற்றுகள் சாகுபடி செய்யப்படுகின்றன.

கல்லாறு தோட்டக்கலைப் பண்ணை: தரமான மிளகு, சில்வர் ஓக், பாக்கு, காபி, பலா, குரோட்டன்ஸ், மலேயன் ஆப்பிள், ஜாதிக்காய், லிச்சி நாற்றுகள்.பர்லியார் பண்ணை: கிராம்பு, ஜாதிக்காய், ரோஸ் ஆப்பிள், பாக்கு, மணிபிளாண்ட், குரோட்டன்ஸ், சில்வர் ஓக், காபி, துரியன், லவங்கப் பட்டை நாற்றுகள்.

காட்டேரி பண்ணை: ரோஸ்மேரி, ரோஜா மொட்டு செடிகள், அழகு தாவரங்கள், எலுமிச்சை நாற்றுகள், சில்வர் ஓக், மரக்கன்றுகள்.

குன்னூர் பழவியல் நிலையம்: பிளம், பேரி, ஆப்பிள், மாதுளம் பழ நாற்றுக்கள்.குன்னூர் சிம்ஸ்பூங்கா: மரக்கன்றுகள், சாம்பிராணி, போடோகார்பஸ் போன்ற மரக்கன்றுகள், அழகு தாவரங்கள், மலர் விதைகள்.

அரசு தாவரவியல் பூங்கா: ரோஜா செடிகள், அழகு தாவரங்கள், கேக்டஸ் ரகங்கள், மலர் விதைகள்.ரோஜாப் பூங்கா: ரோஜா கன்றுகள், சாம்பிராணி மரக்கன்றுகள், மருத்துவச் செடிகள்.

தொட்டபெட்டா பண்ணை: தேயிலை நாற்றுகள்.தும்மனட்டி பண்ணை: தரமான அர்கா கோமல் பீன்ஸ் விதைகள்.நஞ்சநாடு பண்ணை: உருளைக்கிழங்கு விதைகள்.கோல்கிரேன் பண்ணை: உருளைக்கிழங்கு, தேயிலை நாற்றுகள்.

தேவாலா பண்ணை: சில்வர் ஓக் நாற்றுகள், காபி, பாக்கு, தேயிலை மற்றும் மிளகு நாற்றுகள்.குன்னூர் பழம் பதனிடும் நிலையம், அரசு தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, கல்லாறு, பர்லியார், சேரிங்கிராஸ் தோட்டக்கலை வணிக வளாகம் மற்றும் ரோஜா பூங்காக்களில், குன்னூரில் உற்பத்தி செய்யப்பட்ட ஜாம், ஜெல்லி, பழரசம், ஊறுகாய் விற்பனை செய்யப்படுகின்றன.

தோட்டக்கலை

தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி மாவட்டமானது ஒரு பிரதான தோட்டக்கலை மாவட்டமாகும். மேலும் இங்கு மலைகளின் உயரத்திற்கு ஏற்றவகையில் மலைப்பயிர்களும் விளைவிக்கப் படுகின்றன. பயிர் சாகுபடியிலும், சீதோசண நிலையிலும் அண்டைய மாவட்டங்களைக் காட்டிலும் பெருமளவு வேறுபட்டது. மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 2545 சதுர கிலோ மீட்டராகும் இம்மாவட்டத்தில் 6 வருவாய் வட்டம் உள்ளது, மேலும் நீலகிரி மாவட்டத்தின் தனிச் சிறப்பு மொத்த பரப்பளவில் 56மூ காடுகளை கொண்டதாகும் கடல் மட்டத்திலிருந்து 900 – 2636 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் சராசரி மழையளவு ஆண்டொன்றிற்கு 1522.7 மி.மீ ஆகும். நீலகிரி மாவட்டத்தில் நிலவக்கூடிய தட்பவெட்ப நிலை பல்வேறு பயிர்கள் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது, முறையே காய்கறிகள், பழங்கள், வாசனை திரவிய பயிர்கள், மலர்கள், மருத்துவ தாவரங்கள் மற்றும் மலைத்தோட்ட பயிர்கள் ஆகியவை படிமட்டங்கள் (Terrace cultivation) மற்றும் சில கிராமங்களில் குறுகிய சரிவான பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தின் உயரத்தை பொருத்து, குளிர்கால பயிர்கள் (Temperate Crops), மிதவெப்ப மண்டல பயிர்கள் (Sub -Tropical Crops), வெப்ப மண்டல பயிர்கள் என மூன்று விதமான நிலைகளில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.[13] மலையின் உயரமான பரப்பில் உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், பிளம், பீச், பேரி, மற்றும் இதர வகைபயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மலையின் இடைப்பட்ட பகுதிகளில் கமலாஆரஞ்சு, காப்பி சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்த உயரப்பகுதிகளில் கிராம்பு, ஜாதிக்காய், மிளகு, இஞ்சி மற்றும் துரியன், லிச்சி, ரம்பூட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்கள் பயிரிடப்பட்டு வருகிறது. தோட்டக்கலை பயிரான காய்கறிகள் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டிற்கு, நீர்போகம், கார்போகம் (Main Season), கடைபோகம் (Autumn Season) என மூன்று பருவங்களாக சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவையாவன

உள் கட்டமைப்பு

நீலகிரி மாவட்டத்திற்கு நல்ல சாலை வசதி உள்ளது. மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலம் வரை தொடர்வண்டிப் பாதையும் உள்ளது. பற்சக்கர முறையில் இருப்புப்பாதை அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு. ஐ.நா கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக நீலகிரி மலை இரயில் பாதை அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாட்டத்தில் எட்டு இடங்களில் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

  1. குந்தா நீர்மின்னாக்கத் திட்டம்
  2. பைக்காரா ஆறு
  3. சிங்காரா
  4. மாயார் ஆகியன இவற்றுள் குறிப்பிடத்தகுந்தன.

கோவில்கள்

பிரசித்தி பெற்ற கோவில்கள்: ஊட்டியில் சந்தைக்கடை மாரியம்மன் கோவில் என அழைக்கப்படும் ஊட்டி மாரியம்மன் கோவில் [14], மஞ்சக்கம்பையில் நாகராஜர் ஹெத்தையம்மன் கோவில், பொக்காபுரம் மாரியம்மன் கோவில், காந்தள் பகுதியில் விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் கோவில், திருமான்குன்றமத்தில் ஜலகண்டேஸ்வரி உடனமர் ஜலகண்டேஸ்வரர் மற்றும் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், வேணுகோபாலசுவாமி கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில், பெருமாள் கோவில் ஆகியன உள்ளன.

கூடலூர் வட்டத்தில் சந்தன மலை முருகன் கோவில், மேல் கூடலூர் மாரியம்மன் கோவில், நம்பாலக் கோட்டை சிவன் கோவில், வனதுர்கா கோவில் ஆகியன உள்ளன.

அரசியல்

இம்மாவட்டம் நீலகிரி மக்களவைத் தொகுதி மற்றும் உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி), கூடலூர் (சட்டமன்றத் தொகுதி) (தனி) மற்றும் குன்னூர் (சட்டமன்றத் தொகுதி) என மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது.[15]

மேற்கோள்கள்

  1. Revenue Administration
  2. https://nilgiris.nic.in/about-district/
  3. "Labyrinth in the Nilgiri Hills".
  4. "Kennedy, Dane The Magic Mountains; Hill Stations and the British Raj". Berkeley; University of California Press, c1996 1996.
  5. ஆர். டி. சிவசங்கர் (22 நவம்பர் 2013). "நீலகிரி : சுதந்திரத்துக்கு முன் மன்றாடி.. சுதந்திரத்துக்குப் பின் நாடோடி." பார்க்கப்பட்ட நாள் 25 நவம்பர் 2013.
  6. 6.0 6.1 https://simplicity.in/news-detail.php?nid=19145&isnotify=n
  7. நீலகிரி மாவட்ட வருவாய் நிர்வாகம்
  8. "நீலகிரி மாவட்டத்தின் 4 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". Archived from the original on 2015-07-08. பார்க்கப்பட்ட நாள் 2019-02-08.
  9. நீலகிரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்
  10. நீலகிரி மாவட்ட ஊராட்சி அமைப்புகள்
  11. நெல்லியாளம் நகராட்சி[தொடர்பிழந்த இணைப்பு]
  12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2018-11-23. பார்க்கப்பட்ட நாள் 2019-11-02.
  13. https://nilgiris.nic.in/departments/department-of-horticulture-and-plantation-crops/
  14. "ஊட்டி மாரியம்மன் கோவில்". Archived from the original on 2014-04-28. பார்க்கப்பட்ட நாள் 2014-02-04.
  15. நீலகிரி மாவட்ட மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நீலகிரி_மாவட்டம்&oldid=41634" இருந்து மீள்விக்கப்பட்டது