கேத்தி
கேத்தி Ketti | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 11°24′N 76°42′E / 11.40°N 76.70°ECoordinates: 11°24′N 76°42′E / 11.40°N 76.70°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நீலகிரி மாவட்டம் |
மொழிகள் | |
• அதிகாரப்புர்வம் | தமிழ், படுகா |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எண் | 643 215 |
தொலைபேசி குறியீடு | 0423 |
வாகனப் பதிவு | த.நா.43 |
கேத்தி (Ketti) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள நீலகிரி மாவட்டத்தில் காணப்படும் கேத்தி பள்ளத்தாக்கில் உள்ள சிறிய கிராமம் ஆகும். குன்னூர் தாலுக்காவில் உள்ள ஒரு வருவாய் கிராமம் என்றும் வகைப்படுத்தப்படுகிறது. மேல் கேத்தி என்ற பெயரில் மற்றொரு கிராமம் குன்னூர் ஊட்டி சாலையில் இருக்கிறது. மேல் கேத்தியை எல்லனகள்ளி என்ற பெயராலும் அழைக்கிறார்கள்.
அமைவிடம்
குன்னூர் வட்டத்தில் அமைந்த கேத்தி பேரூராட்சி, உதகமண்டலத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு கேத்தி தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே ஜெகதலா பேரூராட்சி 5 கிமீ; அதிகரட்டி பேரூராட்சி 18 கிமீ; நஞ்சநாடு ஊராட்சி 18 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
19.20 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 68 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
வருவாய்
கேத்தியிலுள்ள பெரும்பாலான மக்கள் உடலுழைப்புத் தொழிலாளர்கள் ஆவர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, கட்டுமானத் தொழில், சுற்றியுள்ள ஊசித் தொழிற்சாலைகள், காளான் தொழிற்சாலைகள், பூந்தோட்டம் போன்ற இடங்களில் பணிபுரிதல் போன்றவை இவர்களுக்கு வருவாய் கிடைக்கும் வழிகளாகும்.
பள்ளத்தாக்கு
குன்னூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் கேத்தி பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.
கலாச்சாரம்
தமிழ்நாடு, கேரளா,கர்நாடகா மற்றும் இலங்கை போன்ற பகுதிகளிலிருந்து குடியேறிய படுகர்களும் தமிழர்களும் இக்கிராமத்தில் வாழ்கின்றனர். படுக மொழியும் தமிழ் மொழியும் இங்குள்ளவர்களால் பேசப்படுகிறது. ஆங்கிலம், மலையாளம் கன்னடம் மொழிகளை மக்கள் புரிந்து கொள்கிறார்கள். பெரும்பாலான மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர்.
பயண வழி
பேருந்து அல்லது தொடருந்து மூலம் கேத்தி கிராமத்தைச் சென்றடைய முடியும். சென்னையிலிருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையம் வரை இரயிலில் பயணித்து பின்னர் நீலகிரி மலை இரயில் மூலம் ஊட்டிக்குச் சென்று பின்னர் கேத்தி கிராமத்திற்குச் செல்ல முடியும்.
மக்கள்தொகை
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி [2] கேத்தி கிராமத்தின் மக்கள் தொகை 23,229 ஆக இருந்தது. இவர்களில் 11476 பேர் ஆண்கள், 11753 பேர் பெண்கள் ஆவார்கள். கேத்தி மக்களின் சராசரி கல்வியறிவு 88.43 ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.41%, பெண்களின் கல்வியறிவு 82.61% ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகம் ஆகும். கிராமத்தின் மக்கள் தொகையில் 1757 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இது கேத்தியின் மொத்த மக்கள் தொகையில் 7.56% ஆகும்.