வா. செ. குழந்தைசாமி
வா. செ. குழந்தைசாமி | |
---|---|
முதல் துணைவேந்தர் தமிழ் இணையக் கல்விக்கழகம் | |
பதவியில் 2001–2016 | |
துணைவேந்தர் அண்ணா பல்கலைக்கழகம் | |
பதவியில் 1981–1990 | |
துணைவேந்தர் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் | |
பதவியில் 1990–1994 | |
முன்னவர் | ஜி. எம். ரெட்டி |
பின்வந்தவர் | ராம் ஜி. தக்வாலே |
துணைத் தலைவர் ஆசிய கல்வி நிறுவனம் | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | வாங்கலாம்பாளையம், கரூர், தமிழ்நாடு, இந்தியா | 14 சூலை 1929
இறப்பு | திசம்பர் 10, 2016 | (அகவை 87)
தேசியம் | இந்தியர் |
பணி | பேராசிரியர் |
இணையம் | kulandaiswamy |
வா. செ. குழந்தைசாமி (V. C. Kulandaiswamy, சூலை 14, 1929 - திசம்பர் 10, 2016[1]) இந்திய பொறியியல் (நீரியல்துறை) அறிஞரும், கல்வியாளரும் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவராகப் பணியாற்றியவர்.[2] [3]
கல்வி
குழந்தைசாமி இன்றைய கரூர் மாவட்டத்திலுள்ள வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கரக்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தொழில்நுட்பத்தில் முதுநிலைப் பட்டம் பெற்ற இவர், ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் உயர்படிப்பைத் தொடர்ந்தார். இவரது ஆய்விற்காக இல்லினாயிசு பல்கலைக்கழகத்திடமிருந்து நீரியலில் முனைவர் பட்டம் பெற்றார். நீர்வளத்துறை இலக்கியத்தில் இவரது கண்டுபிடிப்பு குழந்தைசாமி மாதிரியம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.
வகித்த பதவிகள்
இவர் உலக அளவில் நீர்வளத்துறையில் பல குறிப்பிடத்தக்க பதவிகள் வகித்துள்ளார். பல ஆய்வுக்குழுக்களிலும், திட்டக்குழுக்களிலும் பங்கேற்றுள்ளார். பொறியியல் கல்வியில் ஆர்வம் கொண்ட இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகவும் பதவி வகித்துள்ளார்.
எழுத்துக்கள்
இவர் குலோத்துங்கன் என்ற புனைப்பெயரில் பல கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவைதவிர ஆங்கிலத்திலும், தமிழிலும், பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
இவரது ஆறு கவிதைத் தொகுப்புகள் மற்றும் ஏழு கட்டுரைகளுக்காக 1999-ம் ஆண்டு தமிழக அரசின் திருவள்ளுவர் விருது பெற்றார். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவியோடு சென்னை ஆசியக் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இவர் பணியாற்றினார்.
விருதுகள்
தமிழ் இலக்கியத்திற்கு இவரது பங்களிப்புகளைப் பாராட்டி சாகித்ய அகாடமி விருது வழங்கியுள்ளது. மேலும், கல்வி மற்றும் அறிவியல் துறைகளில் இவரது பங்களிப்பிற்காக பத்மசிறீ விருது 1992-ம் ஆண்டும், பத்மபூசண் விருது, 2002-ம் ஆண்டும் வழங்கப்பட்டது.[4] இவரது தமிழ்ப் படைப்புகளுக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு 1980-ம் ஆண்டு கௌரவ முனைவர் பட்டமளித்தது.
நீர்வளத்துறையில் இவருடைய கண்டுபிடிப்பை குழந்தைசாமி மாதிரியம் என அழைக்கிறார்கள்.[5]
இவரைப் பற்றிய ஆய்வு
இவரைப் பற்றி அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் திரு. ஆ. ஜான்சன் கென்னடி "முனைவர் வா.செ.குழந்தை சாமியின் தமிழியற்பணி-ஓர் ஆய்வு" என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவரைப் பற்றிய படமும் செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது.[6]
மறைவு
தமிழறிஞர் என்று அறியப்பட்ட பேராசிரியர் வா. செ. குழந்தைசாமி (வா.செ.கு.) 2016ஆம் ஆண்டு திசம்பர் 10ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை மறைந்தார்.[7]
மேற்கோள்கள்
- ↑ மணிவண்ணன், மணி (10 திசம்பர் 2016). "பன்முக ஆளுமை வா.செ.குழந்தைசாமி மறைந்தார்". பிபிசி தமிழ். http://www.bbc.com/tamil/india-38274721. பார்த்த நாள்: 10 திசம்பர் 2016.
- ↑ தமிழ் இணையப் பல்கலைக்கழக இணையதளத்தில் இவரது வாழ்க்கைக்குறிப்பு பரணிடப்பட்டது 2006-07-05 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ "தமிழ் இணையக் கல்விக்கழக தலைவர்களின் பட்டியல்". http://www.tamilvu.org/ta/content/%E0%AE%A4%E0%AE%87%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.
- ↑ சென்னை ஆன்லைன் தளத்தில் இவரைப்பற்றிய குறிப்பு பரணிடப்பட்டது 2007-03-11 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ http://tamil.thehindu.com/tamilnadu/முன்னாள்-துணைவேந்தர்-வாசெகுழந்தைசாமி-காலமானார்/article9421799.ece
- ↑ இவரைப் பற்றிய ஆவணப் படமும் செய்தியும்
- ↑ "பன்முக ஆளுமை வா.செ.குழந்தைசாமி மறைந்தார்" (in ta). https://www.bbc.com/tamil/india-38274721.